ஞான ஆலயம் அக்டோபர் 2009 இதழில் வெளியானது
நம் காலில் சிறு முள் குத்தினால்
கூட நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தை “அம்மா...” என்பதே. தேவியாகிய பராசக்தியே
உலகிற்கெல்லாம், அண்ட சராசரங்களுக்கெல்லாம் அன்பான தாயாக நிற்கிறாள். அந்த தேவியை
ஒன்பது நாட்கள் சிறப்பாக, இறை சிந்தனையோடு நாம் வழிபடுவதே நவராத்திரி.
ரிக் வேதம் தேவியை ‘அண்ட
சராசரத்தின் பேரரசி’ என வர்ணிக்கிறது. கேனோபநிஷதம் தேவியின் பெருமையை அழகாக
எடுத்துரைக்கிறது. குப்தர் ஆட்சியில் புகழோடு விளங்கிய அன்னை வழிபாடு, சீனா,
ஜப்பான், சுமேரியா, கிரீஸ் போன்ற நாடுகளுக்கும் பரவியது.
தந்திர சாஸ்திரத்தில் பராசக்தியின்
பத்து வடிவங்கள் ‘தசமஹாவித்யா’ என சிறப்பித்துப் பேசப்படுகின்றன. காளி, தாரா,
திரிபுரசுந்தரி, புவனேசுவரி, திரிபுரசுந்தரி, சின்னமஸ்தா, தூமவதி, பகுளாமுகி,
மாதங்கி, கமலாத்மிகா எங்கிற இந்த பத்து சக்தி வடிவங்களில் இருந்தே விஷ்ணுவின்
தசாவதாரங்களும் தோன்றினவாம். ‘கராங்குளி நகோத்பன்ன நாராயண தசாக்ருத்யை’ எங்கிறது
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்.
நவராத்திரியில் தேவியை எப்படி
வழிபட வேண்டும் என்பதை தேவி பாகவதம் கூறுகிறது. துர்காதேவி நவராத்திரி சமயம் ஊசி
முனையில் நின்று தவம் செய்ததாக புராணங்கள் உரைக்கின்றன. நவராத்திரி நாட்களில்
தினமும் தேவி வழிபாடும், தேவி மஹாத்மியம் படிப்பதும் அளவற்ற நன்மைகளைத் தரும் என்கிறது
தேவி பாகவதம். துர்கா சப்தசதி எனும் இந்நூலில் எழுநூறு சுலோகங்கள் உள்ளன. பதினான்கு
அத்தியாயங்கள் உள்ளன.
எழுநூறு மந்திரங்களைக் கொண்ட
ஸ்ரீசப்தசதி பாராயணம், நவராத்திரியில் செய்வது அளவிடற்கரிய நன்மைகளைத் தரும்.
இம்மையில் மட்டுமன்றி, மறுமையில் மோட்சத்திற்கும் வழிகிட்டும் என்கிறது தேவி பாகவதம்.
நேரமிருப்பவர்கள் தேவி மஹாத்மிய பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள் எளிய தேவியின்
துதிகளை, ஒன்பது நாட்களும் சொல்லி, அவளின் திருவடி பணிந்து நிவேதனம் செய்து,
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், அலங்காரப்
பொருட்கள், வஸ்திரம் வைத்துக் கொடுத்தால் பல மடங்கு பயனைப் பெறலாம். ஒன்றுக்கு
ஒன்பதாகப் பலன் தரும் தேவியை நவராத்திரி நன்னாளில் வழிபட்டு பலன் பெறுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக