தீபம்
ஏப்ரல் 5, 2017 இதழில் வெளியான கட்டுரை
காலாராம் ஆலயம்..
பஞ்சவடி...நாசிக்...மகாராஷ்டிரா
அம்பும், வில்லும்
இல்லாத அழகிய ராமர்...
காலாராமர் |
ஒக
மாட, ஒக பாண, ஒக பத்னி’
என்று (ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்) போற்றப்பட்ட ஒரே கடவுள் ஸ்ரீராமச்சந்திர
மூர்த்தி. ஏனைய கடவுளர் தத்தம் மனைவியருடன் மட்டுமே காட்சி தரும்போது, ஸ்ரீராமன் மட்டுமே, தன் தம்பி, தன் தொண்டன் ஹனுமான் என்று அனைவரையும் தன்னுடன் இணைத்து நிற்பவர்.
ஸ்ரீராமனை
எண்ணும்போதே நமக்கு முதலில் நினைவு வருவது அவரது 14 ஆண்டு கால வனவாசம். அதில் பெரும்பகுதியை அவர்கள் நாசிக்கிலுள்ள
பஞ்சவடியில்தான் வாழ்ந்ததாக வரலாறு
கூறுகிறது. கோதாவரியின் கரையில் அமைந்துள்ள நாசிக்கில் பல இடங்கள் ராமாயணத்தின் நிகழ்ச்சிகளை நம் கண்
முன் கொண்டு வருகின்றன.
இங்குள்ள
சீதா குகையில் சீதையின் சமையலறை உள்ளது. இங்கிருந்துதான் சீதையை ராவணன்
அபகரித்துச் சென்றான். லக்ஷ்மணர் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததால் இவ்விடம்
நாசிகா (மூக்கு) எனப்பட்டு 'நாசிக்'காக மாறியது.
கோதாவரி
நதி மிகவும் புனிதமான நதியாகும். இங்கு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை
கும்பமேளா நடைபெறுகிறது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது இந்நதியில் சில துளிகள் அமிர்தம்
விழுந்ததாம். இதில் ஒருமுறை நீராடினால் கங்கையில் 60000 முறை
நீராடிய புண்ணியம் கிடைக்கும் எனப்படுகிறது. கோதாவரி நதிக்கரையிலுள்ள ஆலயங்கள்
ஒவ்வொன்றும் ஒரு அழகு.
பஞ்சவடியில்
முக்கியமான அழகும், கம்பீரமும் கலைத் திறனும்
கொண்டு விளங்கும் 'காலாராம் ஆலயம்', 83
அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. 1788ம்
ஆண்டு ரங்கராவ் ஓடேகர் என்பவரால்
கட்டப்பட்டது. அவரது கனவில் தோன்றிய ராமர் தன்னை கோதாவரி நதியிலிருந்து
கொண்டு வந்து ஆலயம் கட்டுமாறு கூற, மூன்று சிலைகளும்
நதியிலிருந்து கொண்டு வரப்பட்டு ஆலயம் உருவாக்கப்பட்டது. அருகிலுள்ள 'ராம்ஷேஜ்' என்ற மலைச் சுரங்கங்களிலிருந்து வெட்டிக்
கொண்டு வரப்பட்ட உயர் ரக கருநிறக் கல்லால், 2000 பேர்கள் 12 ஆண்டுகள் உருவாக்கிய இவ்வாலயத்திற்கு 23 லட்சம்
ரூபாய் செலவானதாம். கோபுர உச்சியிலுள்ள கலசம் 32 டன்
தங்கத்தால் உருவாக்கப்பட்டது. சிறந்த கலையழகுடன் உருவாக்கப்பட்ட இவ்வாலயத்தில் 96
தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன.
காலாராம் கோவில் கோபுரம் |
ஆலயத் தோற்றம் |
கர்ப்பக்
கிரஹம் அழகிய அலங்காரங்களுடன் காட்சியளிக்கிறது. வெள்ளியாலான திருவாசியின் உச்சியில்
ஆதிசேஷன் காட்சி தருகிறார். அழகிய வெள்ளிக் குடைகளின் கீழ் ராமன், லட்சுமணன், சீதை மூவரும் வித்தியாசமான நிலைகளில் காட்சி
தருகின்றனர். ராமனின் வலக்கரம் அவரது இதயத்திலும், இடக்கரம்
அவரது பாதத்தை நோக்கியும் உள்ளது. 'என் காலைப் பிடித்தவர்களை
நான் கைவிட மாட்டேன்' என்று உணர்த்தும் இத்தோற்றம் மிக
விசேஷமானது. சீதையாகிய மகாலட்சுமியின் இரு கைகளுமே கீழ் நோக்கி, 'என்னை சரணடைந்தால் எல்லாம் பெறலாம்' என்பது
போலுள்ளது. ராம, லட்சுமணர்களிடம் அம்பும், வில்லும் இல்லாததுடன், ஹனுமனும் இல்லை!
பஞ்சவடியிலிருந்து சென்றபின்தானே ஹனுமனின் நட்பு கிடைக்கிறது! ராமருடன் இல்லையெனினும், நுழைவாயிலில் கருநிறக் கல்லிலான ஹனுமான் சிலை மிக அழகாகக்
காட்சி தருகிறது.
காலாராமர் |
இம்மூன்று
விக்ரகங்களும் பஞ்சவடியில் கிடைத்ததாகவும், காலத்தால்
மதிப்பிட முடியாத அளவு பழமையான சுயம்பு என்றும் ஆலயத்தார் கூறினர். வேண்டியோர்க்கு
வேண்டுவன தரும் வரப்பிரசாதியாம் இம்மூவரும்! சொக்க வைக்கும் அழகில் தம்பியுடனும்,
தாரத்துடனும் காட்சி தரும் சுந்தரராமனின் சன்னிதியை விட்டு நகரவே
மனமில்லை. இவ்வாலயத்தில் ராமநவமி, தசரா, சித்திரை வருடப் பிறப்பு இவை
மிகப் பெரிய விழாக்களாகக்
கொண்டாடப்படுகின்றன.
நம்
வாழ்வில் ஒருமுறை அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புதமான ஆலயம் காலாராமர் ஆலயம்.
மும்பையிலிருந்து
நாசிக்கிற்கு விமானம்,பேருந்து மற்றும்
புகைவண்டியில் செல்லலாம்.
ஆலய நேரம் ...காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை
தொலைபேசி....0253 2621730
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக