Thanjai

Thanjai

ஞாயிறு, 5 மார்ச், 2017

என் கோபத்தின் காதலர்

தி இந்து, தமிழ் நாளிதழின் இணைப்பான “பெண் இன்று’, மார்ச் 5, 2017 இதழில் வெளியான என் எண்ணங்கள்

நேரடியாக இணைய தளத்தில் செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும்




நான் எழுதிய கட்டுரையின் முழு வடிவம்

திருமணத்தில் கூறப்படும் சப்தபதி மந்திரத்தில் ஏழாவது அடியில் வரும் மந்திரம் 'கணவனும், மனைவியும் வாழ்நாள் முழுதும் உற்ற தோழர்களாக இருப்போம்' என்று உரைக்கிறது.

கணவரும், மனைவியும் அடுத்தவர் குறைகளை பெரிது படுத்தாமல், அதிக எதிர்பார்ப்புகள் இன்றி, நிறைகளைப்  போன்றே குறைகளையும் ரசித்து குடும்பம் நடத்தினால் வாழ்க்கை என்றுமே இன்பமயம்தான்! 

எனக்கு 19 வயதில் திருமணமாகி, உடன் குழந்தைகள் பிறந்துவிட, வாழ்க்கையின் சிரமங்கள்  என்னை தடுமாறச் செய்தன. வங்கி அதிகாரியாகப் பணியாற்றிய என் கணவர், என்னிடம் அதிகாரம் காட்டியது கிடையாது. சற்றும் கோபப்படாது எனக்குத் தெரியாத விஷயங்களை எடுத்துக் கூறிய ஆசைக் கணவர்! 

திருமணமானதும் வடக்கே மாற்றலாகிவிட, 'ஹிந்தி' என்றால் சொல்ல மட்டுமே தெரிந்த எனக்கு பொறுமையாக சொல்லிக் கொடுத்த ஆசான்! 

குழந்தைகளின் பள்ளி, கணவருக்கு அலுவலகம் என்று அனைவரையும் காலை வேளைகளில் தயார் செய்ய நான் மிகவும் சிரமப்பட்டபோது, குழந்தைகளின்  வேலைகளைத் தன்வசம் எடுத்துக் கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அன்புத் தோழன்! 

கம்ப்யூட்டர் அறிமுகமான புதிதில் எனக்கு அருகில் அமர்ந்து, இயக்கும் முறையை புரியும்படி விளக்கமாக எடுத்துச் சொன்ன ஆசிரியர்! 

எனக்கு வயிற்றிலும்,காலிலும் அறுவை சிகிச்சைகள் நடந்தபோது எனக்கு வேண்டிய அத்தனை வேலைகளும் செய்து, ஒவ்வொரு வேளையும் கையில் மாத்திரையும்,  தண்ணீருமாக என்முன் நிற்கும்போது என்னைக் கண்கலங்க வைத்த தாயுமானவர்! 


நான் ஒரு எழுத்தாளர். ஆலயங்கள்  பற்றியும், பயணக் கட்டுரைகளும் நிறைய எழுதுவேன். எந்தக் கோயிலுக்கு சென்றாலும் 'என் மனைவி எழுத்தாளர்' என்று பெருமையோடு சொல்லி,அங்குள்ள ஸ்பெஷல் பற்றியெல்லாம் கேட்டு எனக்கு சொல்லி எழுத உதவும் என் காரியதரிசி! 

எங்களுக்கு எதிலும் ஒளிவு, மறைவு கிடையாது. எந்த விஷயமானாலும் இருவரும் கலந்து பேசி முடிவெடுப்போம்.பணி ஒய்வு பெற்றபின் இன்று நாங்கள் தனிக்குடித்தனம் நடத்தும் இந்த நேரத்திலும், நான் செய்யும் அத்தனை வேலைகளிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் நல்ல துணைவர்! 

எனக்கு சில சமயங்களில் கோபம் வந்து ஏதாவது சொன்னாலும் அதை இலகுவாக எடுத்துக் கொள்வார். 'உங்களுக்கு என்மேல் கோபம் வரவில்லையா' என்றால், 'உன்னை என்று மணந்து கொண்டேனோ, அன்றிலிருந்து உன் கோபத்தையும் சேர்த்து காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.உன் கோபத்துக்கும் நான் அடிமை' என்று வசனம் பேசி என்னை சிரிக்க வைக்கும் அழகிய காதலர்! 

அன்றும், இன்றும், என்றும் என் கணவர்....என் ஆருயிர்த் தோழர்! 


13-03-2017 பெண் இன்று விமரிசன பகுதியில் வெளியான விமர்சனம்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக