‘என்னை நோக்கி நீ ஒரு அடி எடுத்து வைத்தால் நான் உன்னை நோக்கி பத்தடி வைத்து வருவேன்’ என்ற சத்ய சாய்பாபாவின் வாக்கு எனக்குப் பல நேரங்களில் உண்மையாகியுள்ளது.
இரண்டு வருடம் முன்பு என் மகள் +2
பரீட்சை எழுதியிருந்ததால், அவளுக்கு எம்.பி.பி.எஸ் படிக்க மிக விருப்பம். அதுவரை
நுழைவுத் தேர்வு இல்லாமலிருந்த மகாராஷ்டிராவில் அவ்வருட முதல் நுழைவுத் தேர்வு
ஆரம்பிக்கப் போவதாக திடீர் அறிவிப்பு வந்தது. 15 நாளில் நுழைவுத் தேர்வு என்று அறிவித்த
அரசு, விண்ணப்ப பாரங்களையும் கொடுக்க ஆரம்பித்தது. இது மாணவர்களிடையே குழப்பத்தை
ஏற்படுத்த, சில மாணவர்களும், பெற்றோர்களும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து
நுழைவுத் தேர்வு நடத்தாமலேயே மேற்படிப்பு அட்மிஷன் செய்யக் கோரினர். இப்போது என்
மகள் மிக மனம் சோர்ந்து விட்டாள்.
அவள் சத்ய சாயியின் தீவிர பக்தை.
அதனால் சுவாமியைத்தான் நம்பிக் கொண்டிருந்தாள். அச்சமயம் பெங்களூரில் என் மகன்
வீட்டில் இருந்த நான் புட்டபர்த்தி சென்றிருந்தேன். என் மகளுக்கு சுவாமியின் அருளை
வேண்டி ஒரு கடிதம் எழுதி எடுத்துச் சென்றிருந்தேன். ஆனால் சுவாமியிடமிருந்து
வெகுதூரம் தள்ளி அமர்ந்தே எனக்கு தரிசனம் கிடைத்தபடியால், அக்கடிதத்தை சுவாமியிடம்
நேரடியாகக் கொடுக்க முடியவில்லை. அதனை ஸ்டாம்பு ஒட்டி தபால் பெட்டியில் போட்டேன்.
நான்கு நாட்களூக்குப் பிறகு என்
வீட்டிற்கு ஒரு இன்லாண்ட் கடிதம் வந்தது. அதன் ஃப்ரம் அட்ரஸைப் பார்க்கையில், ‘பிரசாந்தி
நிலையம்’, புட்டபர்த்தி என்றிருந்தது. ஒரு நிமிடம் எனக்கு மெய் சிலிர்த்து
விட்ட்து. நான் எழுதிய கடிதத்திற்கு பதிலா? நம்ப முடியாமல் முன் பக்க விலாசத்தை
பார்த்தபோது அங்கேயே பக்கத்து வீட்டிற்கு அந்தக் கடிதம் வந்திருந்தது. அவர்கள்
மகன் பர்த்தியில் படிப்பதாயும், அவன் கடிதம் என்றும் கூறினார்கள். கடந்த 4, 5
வருடமாகக் குடியிருக்கும் அவர்கள் விலாசத்திற்கு வரவேண்டிய கடிதம், தவறுதலாக ஏன்
என் வீட்டிற்கு வர வேண்டும்? சுவாமியின் அருளை என்ன சொல்வது?
கண்டிப்பாக என் மகளுக்கு மெடிகல்
சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது. அதன் பின்பு 2 நாளில் நான்
கோலாப்பூர் திரும்பிவிட, உள்ளே வந்ததும் என் கண்ணில் பட்டது அம்மாத ‘சனாதன சாரதி’.
ஆவலோடு எடுத்துப் பிரித்தவளின் கண்ணில் பட்டது, பக்தர்களின் கடிதங்களுடன் காட்சி
தந்த பகவானின் வண்ணப்படம். ‘உன் கடிதம் என் கையில் கிடைத்து விட்டது’ என்று
சொல்கிறாரோ பகவான்! அடுத்த வாரமே நுழைவுத்தேர்வு ரத்தாகி மதிப்பெண் அடிப்படையில்
மும்பாய், கிராண்ட் மெடிகல் கல்லூரியில் என் மகளுக்கு அட்மிஷன் கிடைத்தது. இது
போல் சுவாமியின் அருளை, அற்புதங்களை பல நேரங்களில் அனுபவித்தவள் நான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக