குமும் பக்தி ஸ்பெஷல் பிப்ரவரி 15, 2005 இதழில்
வெளியானது
கொங்கு நாட்டில் குமர வேளுக்கு ஆலயங்கள் அதிகம். அவையும் மலைமேல் அமைந்து, அருணகிரிநாதரால் பாடப் பெற்ற
புகழ் பெற்றவை.
பழனிமலை,
மருதமலை, சென்னிம்லை, திருச்செங்கோடு,
சிவன்மலை என ஏகப்பட்ட ஆலயங்கள். அவற்றுள் ஈரோடுக்கு அருகில் அமைந்து,
எண்ணிய எண்ணியாங்கு செய்து முடிக்கும் ஆற்றலை மக்களுக்கு அளித்து
அருள் செய்பவர் திண்டல் மலையில் ந்ன்று தரிசனம் தரும் குழந்தை வேலாயுதசுவாமி.
குழந்தையாகக் காட்சி தரும் குமரனைக் காணும்போதே கட்டியணைத்து முத்தமிடும் ஆசை
ஏற்படுகிறது.
திண்டு என்றால்,
'பருமனான' என்று பொருள். பருமனான மலை என்ற
பெயரில் 'திண்டல் மலை' என்ற பெயர்
ஏற்பட்டுள்ளது. திண்டல் மலை முருகன், குழந்தை வேலாயுத சுவாமி,
குமார வேலாயுத சுவாமி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். 'வெல்' என்ற சொல்லே வேலாயிற்று. வேல், முருகப் பெருமானின் ஆயுதம் மட்டுமல்ல; வணக்கத்துக்குரியதுமாகும்.
வேலையும், மயிலையும் வணங்கினால் நம் துன்பங்களும்
துயரங்களும் தூரப்போகும். அந்த வேலைக் கையில் தாங்கி, நம்
கஷ்டங்களை விலக்க ஆயத்தமாக நின்று அருள்புரிகிறார், திண்டல்
முருகன். நெடுஞ்சாலையிலுள்ள அழகிய நுழைவாயிலைத்
தாண்டிச் சென்றால், மலையடிவாரத்தில் முதலில் காணப்படுபவர்
அரசமரத்து விநாயகர். அவரை வணங்கி நடந்தால், அடுத்து
காணப்படுவது, சித்தி விநாயகர் ஆலயம்.
இரு பக்கமும் நாகர் சிற்பம் சூழ விளங்கும் விநாயகரை வணங்கி மலையேறலாம். முன்
மண்டபம், முருகப் பெருமானின் சிற்பத்துடன் காட்சியளிக்கிறது.
அங்கிருந்து சில படிகள் ஏறிச்சென்றால், இடும்பன் சன்னதியை அடையலாம். இடும்பன்,
முருகப் பெருமானின் கணத் தலைவன்.
கொங்கு நாட்டு முருகாலயங்களில் முதல் பூஜை செய்யப்படும் சிறப்பு இடும்பனுக்கே.
அப்புறம்தான் முருகப் பெருமானுக்கு. இடும்பன் மூலம் தம் வேண்டுகோளை முருகனிடம்
தெரிவித்தால்,
உடன் நிறைவேறும் என்பது இவ்வூர் மக்கள் நம்பிக்கை. திண்டல் மலையில்
வடக்கு நோக்கி, தோளில் காவடியுடன் மிக அழகாகக்
காட்சியளிக்கிறான் இடும்பன்.
மலை மீது உள்ள மகா கணபதியை தரிசித்து, வேலன் சந்நதியில் நின்று கண்களை மூடினால்,
மனம் லேசாகிப் பறப்பதை உணரலாம். குழந்தை வேலாயுத சுவாமி சிறிய
உருவில் கையில் வேலுடன், கொஞ்சும் சிரிப்புடன், அழகிய அலங்காரத்துடன், கண்களில் அபரிமிதமான
கருணையுடன் 'உன் கஷ்டங்களை, என் வேல்
கொண்டு தகர்த்திடுவேன்' என்று கொஞ்சு மொழி பேசுவது போல்
தோன்றுகிறது. பகலியுகத்தின் கண் கண்ட தெய்வமான கார்த்திகேயனின் உருவத்தை நம்
கண்களிலும், மனதிலும் நிரப்பிக் கொண்ட பின்பும் நகர மனம்
வரவில்லை.
குமரனின் பழைய மூலவர் சிலை, மலைச் சரிவில் உள்ள 'தன்னாசி
குகை' என்னுமிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள
திருவுருவம், பின்னாளில் செய்யப் பெற்றதாம். கார்த்திகை
தீபத்தன்று மட்டும் தன்னாசி குகையில் முதல் சிறப்பு பூஜை நடைபெறுகிறது,
ம்லையின் வடகிழக்கில் ஒரு சுனை உள்ளது. இதன் நீர் மிக இனிமையாக இருப்பதுடன்
எக்காலத்தும் வற்றுவதில்லையாம். இம்மலை 60 அடி உயரமும், 243 ஹெக்டேர்
பரப்பளவும் கொண்டது.
இவ்வாலயத்தில் தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பெளர்ணமி, வைகாசி
விசாகம், திருக்கார்த்திகை, சூரசம்ஹாரம்,
தைப் பூசம், பங்குனி உத்திரம் என்று
முருகனுக்குரிய அத்தனை உற்சவங்களும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
சிவபெருமானைப் போன்றே அவர் மகனும் தாயுமானவன் ஆன சம்பவம், இவ்வூரில் நடந்துள்ளது.
சீனாபுரம் என்ற கிராமத்திலிருந்து பிரசவத்திற்கு ஈரோடு நோக்கி காரில் ஒரு
கர்ப்பிணி வந்தபோது, திண்டல் அருகில் கார் பழுதடைய, வலி பொறுக்காத அப்பெண் 'முருகா' என்று கதற, வெண்ணிற உடையுடன், நெற்றி
நிறைய விபூதியுடன் வந்த ஒரு பெண்மணி, தன் கையிலிருந்த
பச்சிலையை கசக்கி அப்பெண் வாயில் ஊற்ற, உடன் சுகப் பிரசவமாக,
பெண் குழந்தை பிறந்தது. மூதாட்டி, நொடியில்
மறைந்துவிட, வந்தது முருகப் பெருமானே என்றுணர்ந்து மெய்
சிலிர்த்தனர். தாயுமாக வந்து காத்த தணடபாணியைத் தரிசிக்க திண்டலை நோக்கி எப்போது
போகப் போகிறீர்கள்?
ஈரோட்டிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் பெருந்துறை செல்லும் வழியில்
அமைந்துள்ள திண்டல் மலை திருமுருகனை தரிசித்து அவனருள் பெறுவோம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக