ஞான ஆலயம் ஜூன்
2003 இதழில் வெளியானது
அஷ்ட விநாயகர் – 2
ஸ்ரீபல்லாலேஷ்வர் –
பாலி
பூனாவுக்கு அருகில் ராய்கட் மாவட்டத்தில் சுதாகட்
தாலுக்காவில், சரஸ்காட் கோட்டைக்கும், அம்பா நதிக்கும் இடையில் அமைந்துள்ள ‘பாலி’
என்னும் சிறிய ஊரில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருளும் ‘பல்லாலேஷ்வர்’ –
கணபதியின் லம்போதர வடிவமாகப் போற்றப்படுகிறார்.
அசுர குரு சுக்ராசாரியாரின் சீடருள் ஒருவரான க்ரோதாசுரன்,
சூரியனை நோக்கி தவம் செய்து, அழியா வரம் பெற்று மூவுலகையும் வென்று தனக்கு வரம்
தந்த சூரிய பகவானையும் அடிமைப்படுத்தி வந்தான். தேவர்கள் கணபதியை வேண்ட, அவரும்
லம்போதர அவதாரமெடுத்து, க்ரோதாசுரனை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார். தேவர்கள்
மகிழ்ந்து கணபதியைத் துதி செய்த இடமே பாலி. (லம்போதரன் என்றால் பெருத்த வயிரை உடையவன் என்று பொருள்)
க்ருத யுகத்தில் கல்யாண் சேத்,
இந்துமதி தம்பதியரின் மகனான பல்லால் என்ற சிறுவனுக்கு விநாயக பக்தி மிக அதிகம்.
அவன் வயதொத்த சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு ஒரு கல்லை விநாயகராக பாவித்து அதற்கு
பூஜை, அருகம்புல், வில்வ இலைகளால் அர்ச்சிப்பது, ‘ஜெய் கஜானனா’ என்று பாடுவது,
சுலோகம் சொல்வது போன்றவற்றைச் செய்து வந்தான். பசி, தாகமின்றி இந்தப் பூஜையில்
ஒன்றிவிட்ட ஏனைய சிறுவர்களின் பெற்றோர் கல்யாண் சேத்திடம் முறையிட்டனர்.
கோபம் கொண்ட கல்யாண்சேத், சிறுவர்கள்
பூஜை செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்று அங்கிருந்தவற்றை தூக்கி எறிந்தார்.
அச்சிறுவர்கள் அழகாகக் கட்டியிருந்த கோயிலை அழித்து, அதனுள்ளிருந்த கணபதியாக
வணங்கப்பட்ட கல்லை வேகத்துடன் விட்டெறிந்தார். மற்ற சிறுவர்கள் ஓடிவிட, இது
எதுவுமே அறியாமல் பல்லால் தியானத்தில் ஆழ்ந்திருந்தான். அதைக் கண்டு ஆத்திரமடைந்த
அவனுடைய தந்தை அவனை ரத்தம் வர அடித்து அருகிலிருந்த மரத்தில் கட்டிப்போட்டு
விட்டுச் சென்றுவிட்டார்.
மனம் வருந்தி வலியினால் துடித்த
பல்லால், “ஹே கஜானனா! உன்னை வணங்குவோரின் துன்பங்களை நீ போக்குவதாக வேதங்களும்,
சாஸ்திரங்களும் கூறுவது பொய்யா? உன்னை வணங்கியதின் பயன் இதுதானா?” என்றபடி
மயக்கமடைந்தான். அவனது பக்திக்கு மெச்சிய கணபதி ஒரு பிராமண வடிவில் பல்லால் முன்
தோன்றி அவனைத் தொட்டவுடன், அவனது வலி, பசி, தாகம் அத்தனையும் மறைந்து ஒரு புதிய
சக்தி தன்னுள் ஏற்படுவதை உணர்ந்தான். அவரை கஜானனர் என அறிந்து கொண்டு பலவாறு
துதித்தான், போற்றினான்!
கணபதியும் மனமகிழ்ந்து, “உன்
பக்தியை அறியாது என்னைத் தூக்கி எறிந்தவர் அடுத்த பிறவியில் தன் தந்தையால் வீட்டை
விட்டு விரட்டப்பட்டு துன்பம் அனுபவிப்பர். உனக்கு வேண்டும் வரம் கேள்” என்றார்.
பல்லாலும் விநாயகர் அவ்விடத்திலேயே கோயில் கொண்டு, அவரை நாடி வரும் பக்தர்களின்
துயரை நீக்கி அருளுமாறு வேண்டினான். இறைவனும் தாம் பல்லாலின் பெயரை முன்னால்
கொண்டு ‘பல்லால் விநாயகர்’ என்ற பெயரில் விளங்குவதாகச் சொல்லி, அருகிலிருந்த
கல்லினுள் சென்று மறைந்தார். அதுவே இன்றைய பல்லாலேஷ்வர் மூர்த்தம்.
பல்லாலின் தந்தை கல்யான்சேத்
தூக்கி எறிந்த கல் ‘துண்டி விநாயகர்’ என்ற பெயரில் சுயம்புவாகக் காட்சி தருகிறது.
துண்டி விநாயகரைத் தரிசித்த பின்பே, பல்லாலேஷ்வரைத் தரிசிப்பது வழக்கமாக உள்ளது.
முதலில் இருந்த மரத்தினாலான ஆலயம்
1760ம் ஆண்டு ஸ்ரீஃபட்னிஸ் என்பவரால், கல்லால் கட்டப்பட்டு கிழக்கு நோக்கி
அமைந்துள்ள ஆலயம் (ஸ்ரீ) என்ற அமைப்பில் உள்ளது. தட்சிணாயன காலத்தில் காலை சூரிய
உதயத்தின் சமயம், சூரிய கிரணங்கள் நேரடியாக விநாயகர் மீது விழுவது இவ்வாலயத்தின்
சிறப்பு!
ஆலய கர்ப்பகிரஹம் பெரிதாகவும், 15
அடி உயரமாகவும் உள்ளது. கணபதிக்கு எதிரில் கையில் மோதகத்துடன் மூஞ்சூறு வடிவம்
அமைந்துள்ளது.
வெளியிலுள்ள அறை 40 அடி நீளமும்,
20 அடி அகலமும் கொண்டு மிக அழகாகக் காட்சி தருகிறது. உயர் ரக மரத்தினாலான எட்டு
தூண்கள் இவ்வறைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
பல்லால விநாயகர் இங்கு பிராமண
வடிவில் வழிபடப்படுவது மற்ற அஷ்ட விநாயகத் தலங்களில் இல்லாத சிறப்பு. கல்லினாலான
பீடத்தில் கிழக்கு நோக்கி இடப்பக்கம் திரும்பிய தும்பிக்கையுடன் காட்சி தரும்
பல்லாலேஷ்வர் குறைந்த உயரமும், அகன்றும் வித்தியாசமான உருவத்தில் காட்சி
தருகிறார். கண்கள் மற்றும் தொப்புளில் வைரக் கற்கள் பளிச்சிடுகின்றன. கலை அம்சம்
கொண்ட வெள்ளிக் கிரீடமும், அதனைச் சுற்றிலும் வெள்ளியால் செய்யப்பட்ட பீடத்தில்
ரித்தியும், சித்தியும் அழகுற சாமரம் வீசும் காட்சி கண்களைக் கவர்கிறது.
பல்லாலேஷ்வர் ஆலயத்திற்கு முன்பு
கல்யாண்சேத் தூக்கி எறிந்த கல்லில் சுயம்பு உருவமான துண்டி விநாயகர் சன்னிதி
உள்ளது. 1 அடிக்கு மேல்
உயரமும், 4 அடிக்கு மேல் நீளமும் கொண்ட பெரிய பாறையில், அமர்ந்த நிலையில் காட்சி
தரும் துண்டி விநாயகரைத் தரிசித்த பின்பே பல்லாலேஷ்வரைத் தரிசிக்க வேண்டும்.
ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில்
சிம்மாஜி அப்பா என்பவரால் எகிப்திலிருந்து செய்து கொண்டு வரப்பட்ட பெரிய மணி
உள்ளது. இது போன்ற மணிகளை மேலும் பல அஷ்ட விநாயக ஸ்தலங்களுக்கும் அவர் காணிக்கையாக
அளித்துள்ளார்.
லோமச முனிவர் கூறியபடி ஜஜலி
முனிவர், விபாண்டக முனிவர் ஆகியோர் நான்கு மாதம் வெறும் பால் மட்டுமே அருந்தி கணேச
விரதமிருந்து பல்லாலேஷ்வர் தரிசனம் பெற்றதாக புராணம் கூறுகிறது.
இவ்வாலயத்தை 21 முறை பிரதட்சிணம்
செய்பவர்களுக்கு நினைத்த காரியம் ஈடேறும். பிள்ளையார் சதுர்த்தி அன்று பல்லாலேஷ்வரை
தரிசித்தோருக்கு இகபர சுகம் கிடைக்கும்.
மாசி மாத சதுர்த்தி இங்கு மிக மிக
விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றிரவு நைவேத்தியம் செய்து அதனை கர்ப்பக்
கிரஹத்திலேயே வைத்து கதவை மூடி விடுவர். பல்லாலேஷ்வர் நடு இரவில் தானே வந்து அதனை
உண்பதாக ஐதீகம். இதனால் அன்று ஏராளமான கூட்டம் இருக்கும். இது இன்றுவரை
நடைபெறுவதாக நம்பப்படுகிறது.
சுற்றிலும் மலைகள், பச்சைப்
பசேலென்ற வயல் வெளிகள், நெடிதுயர்ந்த மரங்கள் கொண்ட இயற்கை சூழலில் அமர்ந்து,
அன்பர்களின் குறைகளைப் போக்கியருளும் பல்லாலேஷ்வர் எட்டு விநாயகருள் பக்தர்களின்
அன்புக்குப் பாத்திரமானவரும், மிகப் பிரபலமானவருமாவார்.
ராய்கட் மாவட்டத்திலுள்ள பாலி
மும்பையிலிருந்து 124 கி.மீ தொலைவிலும், புனேயிலிருந்து 111 கி.மீ. தொலைவிலும்
அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக