Thanjai

Thanjai

புதன், 16 டிசம்பர், 2015

தாமரைப் பீடத்தில் தயாபரன்


தீபம் டிசம்பர் 20, 2015 தேதி இதழில் சேலம் மாவட்ட செய்திகள் பக்கத்தில் வெளியான கட்டுரை
ஈசனின் அற்புதத் திருவிளையாடல்கள் பல. அறுபத்து மூன்று நாயன்மார்களையும்  ஒவ்வொரு அற்புதத் திருவிளையாடல் மூலமே ஆட்கொண்டவர் எம்பெருமான் சிவபெருமான்.அவ்விதம் கணம்புல்ல நாயனாரை இறைவன் சோதித்து தம் மலரடியில் சேர்த்துக் கொண்ட இடம் சேலம் மாவட்டத்திலுள்ள பேளூர். இங்கு சுயம்புவாக இறைவன் உருவான தான்தோன்றீஸ்வரர் ஆலயமே இத்திருவிளையாடல் நடைபெற்ற ஆலயம். 
ஆலய கோபுரம்

இவ்வாலயம் மிகப் பழமை யானது. காசி விஸ்வேஸ்வர சதகம் கூறும் குறிப்பின்படி 108 வருடங்கள் வாழ்ந்த பஞ்சபாண்டவர்களில் அர்ச்சுனன் தன் முப்பத்தி ஐந்தாம் வயதில் இவ்வாலயத்திற்கு தீர்த்த யாத்திரை வந்ததாக கூறப்பட்டு உள்ளது. பஞ்சபாண்டவர்கள் கலியுகம் பிறந்த அன்றே சொர்க்கம் புகுந்ததாக மகாபாரதம் கூறுகிறது. கலியுகம் பிறந்து 5000 வருடங்களுக்கு மேல் ஆவதால் அதற்கும் முந்தையது இவ்வாலயம் எனப்படுகிறது. 

இவ்வூர்  வசிஷ்ட முனிவர் வேள்வி புரிந்ததால் திருவேள்வியூர் என்றும், வெள்ளாற்றின் கரையில் உள்ளதால் வெள்ளூர் எனவும் அழைக்கப்பட்டு தற்போது பேளூர் என்று மருவியுள்ளது. பதினெண் புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் சூத முனிவர் இத்தலம், மூர்த்தி, தீர்த்த பெருமைகளை கூறியுள்ளார். வெள்ளாற்றை கிருஷ்ணர் உண்டாக்கியதகவும், தன்மேல் பக்தி கொண்ட அர்ச்சுனனுக்கு சிவபெருமான் காட்சி தந்து, தன்  முடியிலிருந்து கங்கையின் பத்தில் ஒரு பாகத்தை இவ்வாற்றில் விட்டதாகவும் புராண வரலாறு. ஹரியும், ஹரனும் ஒன்றாகக் காட்சி கொடுத்த தலம். சிவன் பாசுபதாஸ்திரத்தை அர்ச்சுனனுக்கு வழங்கிய தலம்.


வெள்ளாற்றங்கரையில் தர்ப்பையும், சமித்துகளும் செழித்துள்ளதால் இவ்விடம் யாகம் செய்ய ஏற்ற இடம் என்று தீர்மானித்த வசிஷ்டர் அவர் பத்தினி அருந்ததியுடன் ஒரு கோடி ஆண்டுகள் இங்கு தவம், யாகவேள்விகளைச் செய்தனர். அந்த வேள்விச் சாம்பலே குன்றாகி கோட்டைமேடு என்ற பெயரில் விளங்குகிறது. அக்குன்று மண்ணே இன்றும் இங்கு விபூதிப் பிரசாதமாக வழங்கப் படுகிறது.வசிஷ்டரின் பெயரால் இது வசிஷ்டநதி எனப்படுகிறது.அவர் உலக நலனுக்கு தவம் புரிய பொருள் வேண்டி குபேரனை அழைத்து பொன்மழை பொழிய வேண்டினார். குபேரனும் தாமரை பீடத்திலெழுந்தருளிய சிவபெருமானை வணங்கி பொன்மாரியைப் பொழிந்தார். ஆவுடையில் இல்லாது தாமரையில் எழுந்தருளியுள்ள குபேர சிவலிங்கத்தை இன்றும் தரிசிக்கலாம்.
 
குபேர லிங்கம்

தான் தோன்றீஸ்வரர்

ஆலயம் தோன்றியது எப்படி? இவ்வூருக்கு அருகில் வசித்த மாணிக்கம்  செட்டியார் என்ற மிளகு வியார்பாரி அம்மூட்டைகளை எருதின் மீது ஏற்றிச் சென்று விற்று வருவார். ஒரு சமயம் தற்போது ஆலயம் இருக்குமிடத்தில் அடர்ந்த காடாக இருக்க, இரவானதால் அங்கு தங்கினார். சமையல் செய்ய தன்னிடமிருந்த சுண்டைக் காய்களை ஒரு கல்லில் நசுக்கும்போது 'எனக்கு கல்லடிபட்டு தலை வலிக்கிறது. உன் மிளகாய் அரைத்துப் பற்றுப் போடு' என்று ஒரு குரல் கேட்டதாம். அவரோ 'என்னிடம் உளுந்துதான் இருக்கிறது' என்று சொல்லி விடிந்ததும் அடுத்த ஊருக்கு சென்றாராம். அங்கு மிளகு மூட்டைகளை விற்கத்  திறந்தபோது, அத்தனையும் உளுந்தாக இருந்ததாம். இதைக் கண்ட அவர் வருந்தி இறைவனை வேண்ட, 'நீ சுண்டைக்காய் நசுக்கிய இடத்து மண்ணை எடுத்து உளுந்தின் மேல் தூவு' என்று சொல்ல, அதன்படியே செய்ய, அவை மீண்டும் மிளகாக மாறியதாம். திரும்பும்போது அக்கல்லை ஆராய்ந்து பார்க்க, அது சுயம்பு லிங்கம் என்றறிந்து தான்தோன்றிநாதரின் கருவறையை அவர் கட்டுவித்தார். மிளகு உளுந்தாக மாறிய இடம் உளுந்தூர்பேட்டை என்பர். கோவிலின் கருவறை மிளகு செட்டியாராலும், மற்ற விரிவாக்கப் பணிகள் பராந்தக சோழனாலும் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

ஈசனின் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கணம்புல்லர் பிறந்த ஊர் இது. தான்தோன்றீஸ்வரர் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த கணம்புல்லர் பெரும் செல்வந்தர். இறைவனின் ஆலயத்தில் விளக்கேற்றும் பணியை தவறாது செய்து வந்தார். ஈசன் அவரின் பக்தியை சோதிக்க எண்ணி வறுமையை உண்டாக்கினார். தொண்டரோ மனம் தளராது கிணாங்கு எனும் கணம்புல்லை அறுத்து அதை விற்று வரும் பணத்தில் விளக்கேற்றி வந்தார். ஒருநாள் அப்புல்லும் விற்காமல் போக, கையில் பணமில்லாததால் தன் உயிரை துச்சமாக எண்ணி, தலைமுடியையே திரியாக்கிப் பற்ற வைத்தார். அவரது பக்திக்கு மெச்சிய ஈசன் அவர்முன் தோன்றி தன்னுள் அவரை ஐக்கியமாக்கிக் கொண்டார்.
கணம் புல்லர்

தல விருட்சம்-பலா மரம்
அவரது உருவச் சிலை இன்றும் ஆலயத்தில் உள்ளது. வசிஷ்ட முனியின் பூஜைக்கு கனி கொடுத்த பலா மரமே இவ்வாலய தலவிருட்சமாகும். அம்மரத்தின் கனியைத் திருடிய அரக்கன் வசிஷ்டர் சாபத்தால் இவ்வாலயத்தின் பின்புறமுள்ள மலையாக மாறினான் என்கிறது தலபுராணம். பலாமரத்தில் மா, இலுப்பையும் இணைந்து ஒரே மரமாகக் காணப்படுவது அதிசயமாக உள்ளது.

இனி ஆலயத்தின் உள்சென்று இறைவனை வணங்குவோம். பராந்தக சோழனால் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வாலயம், ராஜ கோபுரம் இல்லாமலிருந்தது. 2002ம் ஆண்டு 197 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு கருவறையில் தான்தோன்றி  ஈஸ்வரர்  சற்று நீள் வடிவில் கட்சி தருகிறார். உளிபடாத சுயம்பு லிங்கம் என்பது அவரின் அமைப்பிலிருந்தே உணர முடிகிறது. பல்லாண்டுகள் பழமையான இறைவனைக் கண் மூடிக் கை குவித்து வணங்கும்போது அதன் சான்னித்தியத்தால் அதிர்வலைகள் நம்முள் எழும்புவதை உணர முடிகிறது. அம்பாள் தர்மசம்வர்த்தனி என்ற பெயரில் நான்கு கரங்களுடன் கருணை பொழியும் முகத்துடன் அழகாகக்  காட்சி தருகிறாள். இங்கும், திருவையாற்றிலும் மட்டுமே தேவி தர்மசம்வர்த்தினி என்ற பெயரில் காட்சி தருகிறாள். நீல நிறத்தில் இருந்த பார்வதிதேவி இங்குள்ள வெள்ளாற்றில் குளித்து பொன்னிறம் பெற்று கௌரி என அழைக்கப் பட்டாள். அவள் குளித்த இடம் பொற்கதிர் ஓடை எனப்பட்டது. சித்திரை மூன்றாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை  இங்குள்ள ஈசன் மற்றும் அம்மனின் மீது சூரிய ஒளி  விழுவது இவ்வாலய சிறப்பாம்.

கோஷ்ட தெய்வங்களான கணபதி, பிரம்மன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிட்சாடனர், பைரவர் என அத்தனை சிற்பங்களும் அழகு. ஈசனின் சுற்றுப் பிரகாரத்தில் கஜலக்ஷ்மி, முருகன் சந்நிதிகளும், அறுபத்து மூவர் உருவங்களும் அற்புதமாக வடிக்கப் பட்டுள்ளன. பிரதோஷ நந்திக்கு எதிரில் கையில் விளக்குடன் கணம்புல்லர் திருவுருவமும், தூண்களில் காணப்படும் சிவன், சக்தி நடனக் காட்சிகளும் கண்ணுக்கு விருந்து.வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் அமைந்துள்ளது. வன்னி மரத்தடியில் நவகிரகங்களும், சனீஸ்வரர் தனியாக காக வாகனத்தில் ஒற்றைக் காலுடன் நின்றபடி காட்சி தருகிறார்.

இங்கு கல்யாண  விநாயகர் என்ற பெயரில் விளங்கும் இரட்டை விநாயகர் திருமணத்தடை நீக்குபவராம். முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறுவது இங்கு சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் கல்யாண விநாயகர் அருளால். சங்கடஹர சதுர்த்தியில் இந்த பிள்ளையாரை வழிபட்டு அபிஷேகம், அர்ச்சனை செய்து அருகு அல்லது வெள்எருக்கு மாலை அணிவித்து விரைவில் திருமண பாக்கியம் பெற்றவர் அநேகராம்.இங்கு வசிஷ்டரும், அருந்ததியும் தம் தபோ பலத்தால் ஆசீர்வதிப்பதால் இங்கு நடக்கும் திருமணங்களில் அம்மி மிதித்து, அருந்ததி பார்ப்பது கிடையாது.குபேரனும், மகாலக்ஷ்மியும் எழுந்தருளியுள்ள இவ்வாலயத்தில் மணம் செய்து கொள்ளும் தம்பதியர் மன ஒற்றுமையுடன் குபேர சம்பத்தும், லக்ஷ்மி கடாட்சமும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். 
கல்யாண கணபதி

  இது பிருத்வி ஸ்தலமாகப் போற்றப்படுகிறது.நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எதுவானாலும் அந்நிலத்தில் இருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்து வந்து இறைவன் முன் வைத்து வழிபட பிரச்னை தீரும். அதே போன்று வீடு கட்ட தொடங்குமுன்பாக 21 செங்கற்களைக் கொண்டு வந்து ஈசன் முன் வைத்து வழிபட்டு பதினெட்டு கற்களை இங்கு விட்டுவிட்டு மீதமுள்ள மூன்று  கற்கலை வைத்து கட்டிடம் கட்ட ஆரம்பித்தால் தடையின்றி விரைவில் கட்டிடம் பூர்த்தியாகும்.

இங்கு அமைந்துள்ள தெய்வச்  சிலைகளின் அழகு சிந்தையைக் கொள்ளை கொள்கிறது. வன்னி மரத்தடியில் ஒற்றைக் காலில் நிற்கும் சனி பகவான் தோஷங்களை நீக்கும் அபார சக்தி உள்ளவர். எந்தக் கோயிலிலும் இல்லாத விதத்தில் ஜேஷ்டா தேவி, பிருங்கி மகரிஷி சிலைகள் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. கணம்புல்ல நாயனார், பிரதோஷ நந்தி சிலைகள் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரே கல்லிலான தூணில் யாழியின் வாயில் உருளும் கல்லாலான பந்தும், ஒரே கல்லிலான குதிரையில் சிவபெருமான் நரியைப் பரியாக்கி சவாரி செய்யும் அழகும் வியத்தகு காட்சி.

ஜேஷ்டா தேவி

யாழி சிலை

வேதக் குதிரை

அர்ச்சுனன், குபேரனைத் தவிர இந்திரன், நாரதர், லக்ஷ்மி, கபிலர், ரோமேசர் எனப் பலரும் இவ்விறைவனை பூசித்து நற்பேறு பெற்றவர்கள். பேளூரில் ஒரு நாள் தங்கினால் சிவலோகத்தில் சிவகணம் ஆகலாம். 15 நாட்கள் தங்கினால் சிவனுக்கு அருகில் இருக்கலாம். ஒரு மாதம் தங்கியிருப்போர் தூய சந்திரனை சூடிக் கொள்வர். பல காலம் தங்கி வணங்கி, உபவாசம் இருப்போர் மோட்ச வீட்டை அடைவர் என்கிறது தல வரலாறு. 

சனிமகா பிரதோஷம் இங்கு மிக விமரிசையாக நடத்தப் படுகிறது.ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடி, நூறு லிட்டருக்கு மேல் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்துவது காணக் கண்கொள்ளாக்  காட்சியாகும். சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இவ்வாலயத்தில் வருட உற்சவமாக ஆடி பதினெட்டு   விமரிசையாகக்  படுகிறது. விநாயக சதுர்த்திநவராத்திரி,சிவா ராத்திரி, திருவாதிரை,அன்னாபிஷேகம் முதலியவை சிறப்பான திருவிழக்களாகும். கணம்புல்ல நாயனாரின் பிறந்த நாளான கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். இத்தனை சிறப்பு பெற்ற ஆலயத்தை  நாம் வாழ்வில் ஒருமுறை அவசியம் தரிசித்து ஈசன் அருள் பெற வேண்டும். 
 
ப்ரதோஷ நந்தி
சேலத்திலுள்ள வாழப்பாடியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பேளூர் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது.

ஆலய நேரம்....காலை 6 - 11 மாலை.....4 -8

தொலைபேசி ...
98658 09768, 9787709742, 04292-241400
1 கருத்து:

  1. அழகழகான படங்களுடன் அருமையான தெய்வீகப்பயணக் கட்டுரை.

    //தாமரைப் பீடத்தில் தயாபரன் - தீபம் டிசம்பர் 20, 2015 தேதி இதழில் சேலம் மாவட்ட செய்திகள் பக்கத்தில் வெளியான கட்டுரை//

    மிகவும் சந்தோஷம். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு