Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

அஷ்ட விநாயகர்-1


ஸ்ரீவரத விநாயகர் – மஹத்






பூனாவுக்கு அருகில் ராய்கட் மாவட்டத்தில் மஹத் என்னும் சிற்றூரில் சுயம்பு ரூபமாகக் காட்சி தரும் ஸ்ரீவரத விநாயகர், மகோதர ரூபமாகப் போற்றப்படுகிறார்.

புராண காலத்தில் அசுரகுரு சுக்ராச்சாரியாரின் சிஷ்யனான மஹாசுரன், சூரிய பகவானிடம் பக்தி கொண்டு அதனால் பலம் மிகுந்து, தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவன் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள் மகோதர ரூபமான கணபதியை வேண்டினர். கணபதி மஹாசுரனை அழித்து விடுவாரென அறிந்த சுக்கிரர், அவனைச் சரணடையக் கூறினார். அவனும் மகோதரர் முன் மணிடியிட்டுச் சரணடைந்து அவர் புகழ் லாட, கணபதியும் இனி தேவர்களுக்குத் துன்பம் தரக்கூடாது என்று கூறி அவனை பாதாள லோகத்திற்கு அனுப்பி வைத்தார். அவரே மஹத்தலத்தின் வரத விநாயகர்.

வெகு காலத்திற்கு முன் கௌடின்யபுரத்தை ஆண்ட பீமன் என்ற அரசன் குழந்தை வேண்டி விசுவாமித்திரரிடம் வேண்ட, அவரும் அவனுக்கு ஏகாட்சர கஜானன மந்திரம் உபதேசித்தார். அதன் பலனாக அவர்களுக்கு ருக்மாங்கதன் என்ற அழகான மகன் பிறந்தான்.

ஒருமுறை காட்டில் வேட்டையாடிக் களைத்த ருக்மாங்கதன் வாசக்னவி என்ற முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். அங்கு முனிவரின் மனைவி முகுந்தா அவனது அழகில் மயங்கி, தன் ஆசையை நிறவேற்ற வேண்டினாள். மறுத்த ருக்மாங்கதனை குஷ்டரோகம் பிடிக்கும்படி சாபம் கொடுத்தாள். வருத்தமுற்ற ருக்மாங்கதன், நாரதர் கூறியபடி அங்கிருந்த சிந்தாமணி தீர்த்தத்தில் நீராடி குணம் பெற்றான்.

ருக்மாங்கதன் நினைவில் தவித்த முகுந்தமாவை, இந்திரன் வஞ்சகமாக ருக்மாங்கதன் வடிவில் வந்து இன்பமாயிருக்க, அதனால் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். வாசக்னவி தன் மகன் என எண்ணி அவனுக்கு ‘க்ரித்ஸமதா’ எனப் பெயரிட்டு சகல வேதங்களையும் கற்பித்தார்.

ஒரு முறை மகத மன்னன் அவையில் அத்ரி, விசுவாமித்ர முனிவர்குளுக்கு சமமாக க்ரித்ஸமதா அமர்ந்திருந்த சமயம், தான் வாசக்னி முனிவரின் மகன் அல்ல என்பதை அறிந்த க்ரித்ஸமதா, கோபத்தில் தன் தாயை முள் மரமாகும்படி சபித்தார். மனம் நொந்த முகுந்தாவும், க்ரித்ஸமதாவுக்கு ஒரு ராட்சஸன் மகனாகப் பிறக்குமென சாபமிட்டாள். அச்சமயம் க்ரித்ஸமதா இந்திரனின் மகன் என அசரீரி கேட்க, தாயும் மகனும் அதிர்ச்சி அடைந்தனர்.

க்ரித்ஸமதர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி புஷ்பக் எனற வனத்துக்குச் சென்று வாசக்னவி முனிவர் கற்றுக் கொடுத்த ‘கணானாம் த்வா கணபதிம் ஹவா மஹே கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்’ என்ற மந்திரத்தை 6000 ஆண்டுகள் ஜபித்தார். வெறும் இயலைகளை மட்டுமே உண்டு ஒருமனதோடு அவர் செய்த தவத்தில் மகிழ்ந்த கணபதி அவருக்குக் காட்சி அளித்து, “நீ சிறந்த வேத பிராமணர்களில் ஒருவராக விளங்குவாய். காணாபத்ய சம்பிரதாயத்தை ஏற்படுத்திய காரண கர்த்தா என்று போற்றப்படுவாய். சிவபெருமானால் மட்டுமே அழிக்கக் கூடிய ஓர் சிறந்த மகனைப் பெறுவாய்” என்று கூறி மறைந்தார்.

க்ரித்ஸமதாவும் அங்கேயே கணபதிக்கு ஆலயம் அமைத்து வரத விநாயகரை ஸ்தாபித்தார். ‘இவ்வாலயம் வந்து வணங்குவோருக்கு சகல நலன்களும் கிட்டும்’ எனக்கூறி ஆசி வழங்கினார்.

கி.பி. 1690ம் ஆண்டு அருகிலுள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்ட வரத விநாயகரது சிலை 1725ம் ஆண்டு பேஷ்வா சர்தார் ராம்ஜி மஹாதேவ் பிவால்கர் என்பவரால் ஆலயம் கட்டப்பட்டு, அதனுள் பிரதிஷ்டை செய்யப்படட்து. ஓடுகள் வேயப்பட்ட சிறிய வீடு போலிருந்த ஆலயம், இன்று பக்தர்கள் மற்றும் நிர்வாகத்தாரின் கைங்கரியத்தால் பல வசதிகளுடன் காட்சி தருகிறது.

எட்டடி நீளமும் எட்டடி அக்லமும் கொண்ட கர்ப்பக் கிரஹத்தில் கிழக்கு பார்த்து கோவில் கொண்டுள்ள வரத விநாயகரின் தும்பிக்கை இடம்பிரியாக அமைந்துள்ளது. சிந்தூரம் பூசப்பட்டு காட்சி அளிக்கும் வரத விநாயகரை பக்தர்களே தொட்டு பூஜை செய்யலாம். கல்லினால் கட்டப்பட்டுள்ள கர்ப்பக் கிரஹத்தின் வாயிலில் ஜய, விஜயர்களின் ஓவியம் அழகாக வரையப்பட்டுள்ளது.

வலப்பக்கம் ஒரு சிறிய பிறயில் ஒரு சிந்தூர விநாயகரும், இடப்பக்க பிறையில் பளிங்கு வலம்புரி விநாயகரும் உள்ளன. வரத விநாயகரின் மூல மூர்த்தி சிதில அடைந்து விட்டதால், அம்மூர்த்தி பின்னாலுள்ள ஸ்ரீதத்தர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. மூலவரைத் தொட்டு பூஜை செய்யும்போது, நம் உடல் சிலிர்க்கிறது. அருகிலுள்ள குருஜி, அவ்வப்போது கணபதியின் மேலுள்ள மாலைகள், நைவேத்தியங்களை அகற்றி சுத்தம் செய்கிறார்கள்.

கணப்திக்கு வலப்பக்கம் ஸ்ரீமங்களேசுவரர் என்ற பெயரில் ஒரு சிவலிங்க சன்னதி உள்ளது சன்னதியின் வலப்பக்கம் கணபதியும், இடப்பக்கம் மஹாவிஷ்ணுவும் அருள் பாலிக்கிறார்கள். ஆலயத்தின் பின்னாலுள்ள தத்த ஆலயத்துக்கு வெளியே உள்ள மின்சார தீபத்தம்பம் கண்ணைக் கவரும்விதத்தில் அமைந்துள்ளது.

வரத விநாயகர் ஆலயத்திலுள்ள நந்த தீபம் 1892ம் ஆண்டு முதல் தொடர்ந்து எரிவதாகக் கூறப்படுகிறது.

இங்கு மாசி மாத சதுர்த்தி பெரிய விழாவாகக் கொண்டாடப்ப்டுகிறது. அன்று இவ்வாலயத்தில் தரப்படும் பிரசாதமான தேங்கயச் சாப்பிடுவோர்க்கு உடன் புத்திரப் பிராப்தி கிடைக்கும். கோயில் அருகில் அமைந்துள்ள கணேச தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வது சகல பாவங்களையும் போக்கும் என புராணங்கள் கூறுகின்றன.

இத்தலம் மும்பையிலிருந்து 63 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மும்பை-பூனா ரயில் பாதையில் கர்ஜத் என்ற இட்த்திலிருந்து 24  கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக