Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

அருநெல்லியில் சில அருமையான அயிட்டங்கள்

மங்கையர் மலர் 1993 இதழில் வெளியானது




 குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும், அருநெல்லிக்காயில், நாம் ஊறுகாய், ஜாம் போன்றவற்றைத் தயாரிக்கலாம், இதோ சில தயாரிப்புகள்:


குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் அருநெல்லிக்காயில் ரசம், ஊறுகாய், ஜாம் போன்றவற்றையும் தயாரிக்கலாம்.

அருநெல்லி ரசம்
இரண்டு கப் ரசம் தயாரிக்கப் பத்து முதல் பதினைந்து நெல்லிக்காய்கள் தேவை. பெரிய, முற்றிய நெல்லிக் காய்களைக் கொட்டை நீக்கித் துண்டுகளாக்கி நைஸாக அரைக்கவும். ஒரு கப் நீர் சேர்த்துச் சிறிது பெருங்காயம், உப்பு இவற்றுடன் மூன்று, நான்கு பச்சை மிளகாய்களை நறுக்கிப் போட்டு, சிறு துண்டு இஞ்சியை கசக்கிப் போட்டு, சற்று கொதித்ததும், ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, மேலே பருப்பு ஜலம் விட்டு நுரைத்து வந்ததும், இறக்கி கொத்துமல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு, ஒரு ஸ்பூன் நெய்யில் கடுகு, மிளகு-சீரகப் பொடியைப் போட்டுத் தாளிக்கவும். இதையே பச்சை மிளகாய், இஞ்சி போடாமல், அரை ஸ்பூன் ரசப்பொடி போட்டும் தயாரிக்கலாம். நெய்யில் கடுகுடன் இரண்டு பச்சை மிளகாய்களைக் கிள்ளிப் போட்டுத் தாளிக்கவும். இந்த ரசத்திற்குப் புளி தேவையில்லை. எலுமிச்சை ரசம் போன்ற ருசியுடன் இருக்கும், இந்த அரு நெல்லி ரசம், நிமிடத்தில் காலியாகி விடும்.

அருநெல்லி பாத்
சாதம் வடித்து ஆற விடவும். நல்லெண்ணையில் பெருங்காயப் பொடி, கடுகு, பொட்டுக் கடலை போட்டுச் சிவக்க வறுத்ததும், பச்சை மிளகாயை நறுக்கிப் போட்டு வதக்கி, கொட்டை நீக்கி துண்டுகளாக்கிய அருநெல்லிக் காயைப் போட்டுச் சுருள வதக்கவும். கத்தரிக்காயைப் பொடிப் பொடியாக நறுக்கி, சிறிது உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்கு வதக்கவும். ஆறிய சாதத்தில் வதக்கிய நெல்லி விழுது, கத்தரிக்காயைப் போட்டு, மேலும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிக் கலக்கவும். இந்த அருநெல்லி பாத் ருசியும் மணமுமாக அருமையாக இருக்கும்.

அருநெல்லி ஊறுகாய்
 நெல்லிக்காய்களை கொட்டை நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெயில் பெருங்காயப் பொடி, கடுகு தாளித்து, நெல்லிக்காயைப் போட்டு சிறிது ம்ஞ்சள் பொடி, தேவையான உப்பு, காரப்பொடி போட்டு இரண்டு கிளறு கிளறி எல்லாம் நன்கு சேர்ந்து கொண்டதும் இறக்கி, சிறிது வெந்தய, மஞ்சள் பொடிகளைப் போடவும்.

அருநெல்லித் தொக்கு
மேற்கூறியபடி தாளித்து நெல்லிக்காயைப் போட்டுச் சிறிது மஞ்சள் பொடி, உப்பு போட்டு நன்கு வதக்கி, தொகு பதமானதும் காரப்பொடி போட்டுச் சற்றுக் கிளறி சேர்ந்ததும் இறக்கி, வெந்தயப்பொடி போடவும். இது மாங்காய்த் தொக்கு போன்று சுவையாக இருக்கும்.

அருநெல்லி தித்திப்பு ஊறுகாய்
இதற்கு முற்றிய பெரிய, ஒரே அளவான நெல்லிக்காய்களை அலம்பி வடிய வைக்கவும். நெல்லிக்காய் அளவு சர்க்கரை தேவை.
சர்க்கரையை சிறிதளவு தண்ணீரில் பாகு வைத்து, ஒரு கரண்டி பாலை விட்டு அழுக்கு நீக்கவும். பாகு கம்பிப்பதம் வந்ததும் நெல்லிக் காய்களைக் கொட்டவும். பாகு நீர்த்துக் கொள்ளும். மேலும் சற்று கொதித்து கம்பிப் பதம் வந்ததும் இறக்கி ஏலப்பொடி, சிறிது பச்சை கலர் போட்டு ஆறியதும் எடுத்து வைக்கவும். இதை குழந்தைகள் ரொட்டி, தோசை, சப்பாத்திக்கு விரும்பித் தொட்டுக் கொள்வார்கள்.

அருநெல்லி ஜாம்
ஒரு கப் நெல்லிக்காய்களைக் கொட்டை நீக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறவும். விழுது நன்றாக வெந்ததும் ஒரு கப் சர்க்கரையை அதில் கொட்டிக் கிளறவும். சர்க்கரை கரைந்து கொண்டு ஜாம் பதமானதும் இறக்கி ஏலப்பொடி போட்டு, பச்சை கலர் சேர்த்து நன்கு கலந்து, ஆறியதும் பாட்டில்களில் எடுத்து வைக்கவும்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக