.
தீபம் அக்டோபர்
20, 2016 இதழில் ஆலய தரிசனம் என்ற பகுதியில் வெளியான கட்டுரை
நம் காலில் சிறு முள் குத்தினால் கூட நம் வாயிலிருந்து வெளிவரும்
வார்த்தை அம்மா என்பதே. தேவியாகிய பராசக்தியே உலகிற்கெல்லாம், அண்ட சராசரங்களுக்கெல்லாம் அன்பான தாயாக
நிற்கிறாள். அந்த தேவி நவராத்திரியில் துர்கை, மகாலக்ஷ்மி, சரஸ்வதி என்று
மூன்று ரூபங்களில் வணங்கப் படுகிறாள். அவர்களை ஒன்பது நாட்கள் சிறப்பாக, இறை சிந்தனையோடு நாம் நவராத்திரியில்
வழிபட்டால் விரும்பும் அனைத்தும் பெறலாம்.
நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கையை வழிபடவும், இறுதி
மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியன. இடைப்பட்ட மூன்று நாட்கள் லக்ஷ்மிக்கு
உரியனவாகும். விக்ஷ்ணு ஆலயங்களில் மகாலக்ஷ்மி தாயாராக தனி சந்நிதியிலும், சிவாலயங்களில் பிரகாரச் சுற்றில் கஜலக்ஷ்மியாகவும் காட்சி தரும்
மகாலக்ஷ்மிக்கு பிரதானமான ஆலயங்களும் உண்டு. மும்பை மகாலட்சுமி, கோலாப்பூர் மகாலட்சுமி,திருச்சானூர் அலர்மேல் மங்கை தாயார், நாமக்கல் நாமகிரி தாயார் சந்நிதிகள் தனிச்சிறப்பு கொண்டவை. அது
போன்று மும்பை தஹானுவில் அமைந்துள்ள மகாலக்ஷ்மி ஆலயம் தனிச்சிறப்பும், சக்தியும் கொண்டு விளங்குகிறது.
மகாராக்ஷ்டிராவின் மிக முக்கியமான சக்தி ஆலயங்களில் ஒன்றாக
விளங்கும் தஹானுவில் தேவி கோயில் கொண்ட வரலாற்றைக் காண்போம். கோலாப்பூர்
மஹாலக்ஷ்மி தன்னை இடையறாது வணங்கி செல்வந்தராக விளங்கும் குஜராத்தி மக்களைக் கண்டு
மகிழ்ச்சியடைந்து, தான் குஜராத்தில் சென்று கோயில் கொள்ள ஆசைப்பட்டாள். அவள் நடந்து
சென்ற இடமெல்லாம் புனிதமாயிற்று. செடி கொடி, பறவைகள்,விலங்குகள்
பவித்ரமடைந்தன. கானகம் செழுமை பெற்றுக் குலுங்கியது! அங்கு வாழ்ந்த அரக்கன் ஒருவன்
மகாலக்ஷ்மியுடன் யுத்தம் செய்தான். தேவிக்கும் அரக்கனுக்கும் மகாபயங்கரமான போர்
நடைபெற்றது. தேவியின் கோபத்தில் கானகமே ஸ்தம்பித்தது. மகாலக்ஷ்மியின் ஆயுதம்
அரக்கனின் கண்களை எரித்தும், அவன் இறக்காமல் முழு வீரியத்துடன் போர் புரிந்தான். தேவி தன்
திரிசூலத்தால் அவனைக் கொன்றாள்.
கோவில் தோற்றம் |
அசுரனைக் கொன்ற களைப்புதீர மகாலக்ஷ்மி அந்த மலையில் அமர்ந்தாள்.
அம்மலையின் இயற்கைக் காட்சிகளின் அழகிலும், செழிப்பிலும் மனம் மயங்கியவள் அங்கேயே கோயில் கொண்டாள். தன் அருளை
மக்களுக்கு வாரி வழங்க மனம் கொண்ட தேவி, கன்னா டாக்கூர் என்பவர் கனவில் தான் மலைமீது இருப்பதை சொல்லி பூஜை
செய்யும்படி ஆணையிட்டாள்.
தஹானு மலை |
சமீபத்திய ஆலயம் கீழேயே உள்ளது. தேவி கீழே கோயில் கொண்டது ஏன்? தேவியின் கருணையைக் கூறும் சம்பவம் இது. மலைமீது தேவியைத்
தரிசிக்கச் சென்ற கர்ப்பிணி ஏறமுடியாமல் மயங்கி விழ, தேவி தான் கீழே இருப்பதாக அருள் செய்தாள். சுயம்புவாகத் தோன்றி
அவளுக்கு தரிசனமும் தந்தாள். அவ்வாலயமே இன்று அனைவரும் வழிபடும் ஆலயம்.
தேவி முதலில் சாந்நித்யம் கொண்ட மலை 1400 அடி உயரம். அங்குதான் தேவியின் சந்நிதியும் உள்ளது. அங்கு யாரும்
செல்ல மிடியாது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பெளர்ணமியன்று 'துவஜ ஸ்தாபனம்' மலைக் கோயிலில் நடைபெறுகிறது. ஆதிவாசிகளே இவ்வாலயத்தில் பூஜை செய்ய
தகுதி உடையவர்கள். அக்குடும்பத்தில் ஒருவரே மிக்க நியம நிஷ்டையுடன் இருந்து இரவு பனிரெண்டு மணிக்குக் கொடியையும், மகாலக்ஷ்மியின் மடியை நிறைக்க பனிரெண்டு தேங்காய்கள், தாம்பூலம் இவற்றுடன் மேலே ஏறிச்செல்வார்.
அந்நாளில் தேவி அங்கு சஞ்சாரம் செய்வதாக ஐதீகம். அவருள் தேவியே ஆட்கொண்டு விடுவதாக
சொல்லப்படுகிறது. மேலே சென்று தேவிக்குப் பூஜை செய்து விட்டு, கொடியும் நட்டு விட்டு, அங்கு தேவி ரூபமாக காட்சி தரும் புலியையும் தரிசித்து காலை ஏழு மணிக்குக் கீழே வந்து விடுவர்.
அதைத் தொடர்ந்து பதினைந்து நாட்கள் 'யாத்ரா உத்சவம்' மிக விமரிசையாக நடைபெறுகிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் அச்சமயம்
இங்கு வழிபட வருகின்றனர்.
இனி தேவியைத் தரிசிப்போம். ஓங்கி உயர்ந்த இரு தீபத்தம்பங்களை
தரிசித்து, ஆலயத்துள் நுழைவோம். அலங்கார வளைவுகளுடன் பளிச்சென்று காணப்படும்
முன் மண்டபத்தை தாண்டிச் சென்றால் தேவியின் கர்ப்ப க்ருஹம். தேவியின்
ஜாஜ்வல்லியமான முகதரிசனம் கண்களைக் கொள்ளை கொள்கிறது. இரு யானைகள் தாங்கும்
தூண்களுடன் கலை நயம் மிக்க மண்டபத்துள், தேவியின் இருபுறமும் துவாரபாலகர் நின்று காட்சி தருகின்றனர்.
சிரத்தில் ஜொலிக்கும் தங்க கிரீடத்துடன், மூக்கில் மீன் போன்ற மூக்குத்தி அணிந்து, கருணை பொங்கும் நயனங்களுடன் பூ மாலைகள் அழகு செய்ய காட்சி தருகிறாள்
அன்னை மகாலக்ஷ்மி. நேரில் நிற்கும்போது தேவியின் விரிந்து பரந்த கண்கள் நம்மையே
பார்ப்பது போல் தோன்றுகிறது!
மஹாலக்ஷ்மி |
நாம் சுமங்கலிகளுக்கும், சுவாசினிகளுக்கும் மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தருவோம். ஆனால் மராட்டியப் பெண்களோ தெய்வங்களுக்கே 'வோட்டிபரி' (மடியை நிரப்புதல்)
செய்வார்கள். புடவைத் தலைப்பால் மூடியபடி மஞ்சளையும், குங்குமத்தையும் தேவி மால்
தெளித்து தாம்பூலம், பழம், தேங்காயை தேவியின் மடியில் சமர்ப்பிப்பார்கள்.
பக்தியும், பணிவும் கொண்டு தேவியை தம் குடும்பப் பெண்போல் பாவிக்கும் மராட்டியப்
பெண்களிடம் தேவி நிரந்தரமாகத் தங்கிவிடுகிறாள்.
தேவி மிகவும் சக்தியுள்ள தெய்வம் என்றும், இவளிடம் எது நினைத்தாலும் நிமிடத்தில் நிறைவேறும் என்றும்
ஆலயத்திலுள்ளோர் சொன்னார்கள். தேவியின் பரிபூரண சாந்நித்தியத்தை நன்கு உணர
முடிந்தது. இங்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் விழாக்கோலம் கொண்டு, அற்புதமான அலங்காரத்தில் அன்னை காட்சி தருவாள். அஷ்டமி நாட்களில்
மிக விசே ஷமான வழிபாடுகள் உண்டு.
தஹானு மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் ரயில் பாதையில்
மும்பையிலிருந்து 124 கி.மீ திலைவில் உள்ளது. தஹானுவிலுள்ள 'சாரோட்டி நாகா' என்ற இடத்தில் ஆலயம் அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் இரவு வரை
தரிசனம் உண்டு. மும்பை செல்வோர் அனைவரும் தரிசிக்க வேண்டிய அழகிய ஆலயம் தஹானு
மகாலக்ஷ்மி ஆலயம்.
கோவில் தோற்றம் |
அருமை
பதிலளிநீக்கு