தீபம் ஜூலை 20 இதழில் பிரசுரமான எனது கட்டுரை
எங்கள் சாயி...
தேடி வருபவர்....
ஸ்ரீசத்ய சாய் பாபா என் குரு; தெய்வம்;
என்ன கஷ்டம் வந்தால்லும் சாய்ராம் ..சாய்ராம்..என்று என் உதடுகள் அழைப்பது அவரையே!அவர் நாமம் சொன்னதும் என் மனக்கவலைகள் பறந்து விடும். இது இன்று.
ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பு பாபாவைப் பற்றி அதிகம் தெரியாது...எந்த ஈடுபாடும் கிடையாது. என் வீட்டுக்கு புகைப்பட வடிவில் வந்த பாபா நிரந்தரமாக என் வீட்டில் மட்டுமன்றி எங்கள் மனதிலும் தங்கி விட்டார்.
ஆம்! நாங்கள் அச்சமயம் ஈரோடில் இருந்தோம்.என் கணவருடன் வங்கியில் பணி புரிந்த சாயி பக்தை எங்கள் வீட்டில் ஒரு நாள் பஜனை வைத்துக் கொள்ளும்படி கேட்டார். பாபாவின் புகைப்படம் கூட எங்கள் வீட்டில் இல்லை என்பதால் அவர்களே சமிதியின் புகைப்படம் ஒன்றைக் கொண்டு வைத்து பஜனையும் செய்தோம். நான் பலமுறை சொல்லியும் அந்தப் படத்தை திரும்ப அவர்கள் எடுத்து செல்லாததுடன் என்னையே வைத்துக் கொள்ளும்படி சொல்லிவிட பாபா 'இனி நான் உங்கள் வீட்டை விட்டு போவதாக இல்லை' என்று எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டார் !
'நீ என்னை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் நான் உன்னை நோக்கி பத்தடி வைத்து வருவேன்' என்பது சாயியின் திருவாக்கு. இதனை நான் பலமுறை உணர்ந்து அனுபவித்துள்ளேன். என் மகன் +2 படிக்கும்போது சுவாமியின் பஜனைக்கு சென்ற நான், என் மகன் நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலாக வர வேண்டும் என வேண்ட, சட்டென்று பாபா படத்திலிருந்த பூ ஒன்று கீழே விழுந்தது. என் மகன் மாநிலத்தில் முதலாக வரப்போவதை அன்றே சூசகமாக பாபா சொன்னதை பிறகுதான் என்னால் உணர முடிந்தது.
ஒரு கார் வாங்க அருள் செய்ய பாபாவை நான் வேண்ட அவரோ, மாநில முதலாக வந்த என் மகனுக்கு ஒரு காரையே பரிசாக பெற அருள் செய்தார்! ஆம்...கே.கே.ஆர். கம்பெனியினர் என் மகனுக்கு மாருதி 800 காரைப் பரிசாக அளித்தனர். ஒரே நேரத்தில் நான் ஆசைப் பட்ட இரண்டு விஷயங்களையும் நிறைவேற்றி விட்டார்.
என் மகள் மருத்துவம் படிக்க விரும்பினாள் . நாங்கள் அப்போது மும்பையில் இருந்தோம். அச்சமயம் பர்த்திக்கு தரிசனத்திற்கு சென்ற நான் அவள் சொன்னபடி ஒரு கடிதம் எழுதி எடுத்து சென்றிருந்தேன் சுவாமி வந்த போது நான் வெகுதூரம் தள்ளி அமர்ந்திருந்ததால் அக்கடிதத்தைக் கொடுக்க முடியவில்லை. சுவாமியின் ஆஸ்ரம விலாசம் எழுதி தபால் பெட்டியில் போட்டுவிட்டேன். 'சுவாமி நமக்கு பதில் போட்டால் எப்படியிருக்கும்' என்று ஒரு கற்பனை வேறு! ஒரு வாரம் கழித்து ஒரு இன்லெண்ட் கடிதம் ஒன்று பர்த்தியில் இருந்து வந்திருந்தது. அட....சுவாமி நமக்கு பதில் போட்டிருக்கிறாரா? என்ற ஆவலுடன் விலாசத்தைப் பார்க்க, அது எங்கள் வீட்டுக்கு கீழே குடியிருந்தவர் வீட்டுக்கு வந்திருந்தது. அவர்கள் பிள்ளை அங்கு பள்ளியில் படிப்பதா யும் அவனிடமிருந்து கடிதம் வந்திருப்பதாயும் சொன்னார்கள். பல வருடங்களாகக் குடியிருக்கும் அவர்கள் வீட்டு கடிதம் என் வீட்டிற்கு வந்தது எப்படி? நான் பதில் போட்டு விட்டேன் என்று சுவாமி அழகாக சொல்லி விட்டாரோ? என் மகளுக்கு மும்பை கிராண்ட் மெடிக்கல் கல்லூரியில் சுலபமாக அட்மிஷன் கிடைத்தது. இப்படி பகவான் எனக்கு அருள் செய்த விஷயங்கள் பலப்பல. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் நடந்த இந்த சம்பவம் பாபாவின் பேரருள் எனலாம்.
நான் பலமுறை பர்த்திக்கு சென்றிருக்கிறேன். அங்கு சர்வீஸ் செய்பவர்களைப் பார்க்கும்போது 'சாயிநாதா! இது போன்ற ஒரு வாய்ப்பை எனக்கு கொடுப்பாயா?' என்று மனமுருக வேண்டுவேன். குழந்தைகளின் படிப்பு, வீட்டில் வேலை என்று எனக்கு அதை நினைத்துப் பார்க்கக் கூட நேரம் இல்லை. ஆனால் அதையும் நிறைவேற்றி வைத்தார் அந்த கருணா சாயி ! கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி பர்த்திக்கு சர்வீசுக்கு சென்றுவரும் என் தோழியிடம் நான் என் விருப்பத்தைக் கூற அவளும் சமிதியில் சொல்லி, விண்ணப்பித்து, அதற்கான விதிமுறைப்படி என்னை ஒரு வார சர்வீசுக்கு அழைத்துச் சென்றாள். ஆஹா! அந்த ஒரு வாரம் சொர்க்கமாக இருந்தது. அதிலும் சுவாமி அமர்ந்து அனைவருக்கும் அருளாசி வழங்கும் இடத்தை கூட்டி, துடைக்கும் சர்வீஸ் கிடைத்ததை என்னவென்று சொல்ல? தினம் தினம் அவரது பாத தூளி பட்ட இடத்தில் சேவை செய்ததோடு, தினமும் இரு வேளையும் அவரது தரிசனம் வெகு அருகில்! அந்த அனுபவத்தை நினைக்கும்போதே இன்றும் எனக்கு மெய்சிலிர்க்கிறது.
இது போன்று தன்னை உறுதியாகப் பற்றிக் கொள்ளும் ஒருவரையும் கைவிடமாட்டார் சுவாமி. 'பாபா ஏன் இவ்வளவு முடியுடன் காணப் படுகிறார்?' என்ற ஒரு பக்தரின் கேள்விக்கு அவர் தந்த பதில்...'என் ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு சாயி பக்தரின் ஏரியல். என் பல்லாயிரக் கணக்கான பக்தர்களுக்கு என்னுடனான தொடர்பு இது'! என்ன அழகான விளக்கம்?
இன்று அவர் நம்முடன் இல்லையென்றாலும் அவர் நம்மைப் பார்த்துக் கொண்டும் நம் கஷ்டங்களைத் தீர்த்துக் கொண்டும் தெய்வீக நிலையில் நம்மைக் காப்பாற்றுவதை உணர முடிகிறது. ஜெய் சாயி ராம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக