Thanjai

Thanjai

புதன், 8 ஏப்ரல், 2015

ஆலய விளக்கம்


ஞானபூமி டிசம்பர் 2003 இதழில் வெளியானது




இந்து தர்மம் ஒன்றுதான், தானே உருவான பெருமை படைத்ததாகும் என்கிறது உபநிஷத்துக்கள். அடுத்தவருக்குத் துன்பம் செய்ய அச்சப்படுபவனே உண்மையான இந்து என்பது உபநிஷத்தின் வாக்கியம். இறைவன் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும்போது தனியாக ஆலயம் சென்று வணங்கக் காரணம் என்ன? கோபுரம், கொடிமரம், கர்ப்பக்கிரஹம் இவற்றின் பொருள் என்ன? தூப தீபங்களின் தாத்பர்யம் என்ன என்பது பற்றி பெரியோர் யாது கூறியிருக்கிறார்கள் எனப் பார்ப்போம்.

ஆலயம்: ஆன்மாக்கள் ஆண்டவனிடம் லயிக்குமிடம். ஆணவ மலம் அடங்குமிடம். கோயில் – கோ என்றால் இறைவன். இல் என்பது தங்குமிடம். கடவுளின் இருப்பிடம்.

இறைவனை ஆலயம் சென்று வணங்கக் காரணம், ஒரு லென்ஸை சூரிய ஒளியில் பிடித்தால் ஒளிக் கற்றைகள் குவிந்து வெப்பம் தருவது போல், இறைவனின் சக்தி விக்கிரகங்களில் சேகரிக்கப்பட்டு அமைந்தவையே ஆலயங்கள்.

கோபுரம்: ஸ்தூல லிங்கத்தை உணர்த்தும் கோபுரம் போல் ஆன்மீக உணர்வில் நாம் ஓங்கி உயர்வதைக் குறிக்கும்.

கொடிமரம்: யோகி பிராண வாயுவை நடு நாடியில் நிறுத்தி தியானம் செய்தால், மனம் முதலான அந்த கரணங்கள் நின்று உலகு மறந்து, தெய்வ தரிசனம் ஏற்படும் தன்மையை உணர்த்தும்.

பிரகாரங்கள்: அன்னம், பிராணன், மனம், விஞ்ஞான, ஆனந்த மயம் என்று ஐந்து கோசங்களையும் பஞ்ச இந்திரியங்களையும் குறிக்கும்.

மூன்று பிரதட்சணங்கள்: ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களைக் குறிப்பது.

மண்டபங்கள: அர்த்த, மஹா, ஸ்நபன, அலங்கார, சபா எனப்படும் ஐந்து மண்டபங்கள் குறிப்பன – நிவ்ருத்தி, பிரதிஷ்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம் என்ற ஐந்து கலைகளைக் குறிப்பவை.

அபிஷேகம்: ஆலயத்தில் அமைந்துள்ள ஆண்டவன் குளிர்ந்தால் அவனுள் அடங்கியுள்ள உயிர்களும் தழைத்து விளங்கும்.

தேங்காய் உடைத்தல்: ஆன்மாக்களிடம் ஆணவம், கன்மம், மாயை என்று மும்மலங்கள் உண்டு. தேங்காய் மீதுள்ள பச்சை மட்டை மாயா மலம். உரித்தெடுக்கும் நார் கன்ம மலம். ஓடு ஆணவ மலம். இம்மூன்று மலமும் அகன்றால் வெண்ணிற பருப்பு தோன்றும். இறைவனை நம் மும்மலங்களையும் அகற்றும்படி வேண்டி குறிப்பு தருவதே இதன் பொருள்.

தூபம்: ‘நான்’ என்ற அகந்தையைப் பொசுக்குவது தூபத்தின் தத்துவம்.

தீபம்: அஞ்ஞான இருளைப் போக்கி, ஞான ஒளி ஏற்படுவதைக் குறிப்பது, கற்பூரம் ஜோதியில் எரிந்து கரியோ, சாம்பலோ இல்லாமல் மறைவது போல், ஆன்மா ஜோதியில் கரைந்து ஒன்றுபடுவதைக் குறிப்பது.

நிவேதனம்: நம் குணங்களாகிய அகங்காரம், குரோதம் முதலானவற்றை ஆண்டவனுக்கு அமுதமாக சமர்ப்பித்து, நாம் தூய்மை பெறுவதை உணர்த்துவதாகும்.

அர்ச்சனை: வாழ்வு மலரவும், மணம் பெறவும், மலர்களால் இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறோம்.

அரோஹரா: ‘ஹர’ என்றால் பாவங்களைப் போக்குவது என்று பொருள். ‘அர’ என்பது சிவ நாமம். ‘அரஹர’ என்று சொல்வதால் நம் துன்பங்கள் தீயிலிட்ட பஞ்சாக எரியும்.

உபவாசம்: பாவங்கள் செய்யாது, சுகபோகங்களை விட்டு, மந்திர ஜபம், பூஜை, சத்சங்கம், ஆகாரம் உண்ணாதிருத்தல் இவையே உபவாசத்தின் குணங்களாகும்.

கோலம்: வாழ்க்கை சுக துக்கம் பின்னல்களால் உருவானது. எறும்பு முதலான ஜீவன்களிடமும் நாம் கருணை காட்டவே அரிசி மாவால் கோலம் போட வேண்டும்.

நமஸ்காரம்: பெண்கள் பஞ்சங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும்.

விபூதி: நாம் இறுதியில் சாம்பலாகப் போவதை உணர்வதே விபூதி தரிப்பதன் பொருள். நாம் மண்ணில் கலப்பதை அறிவிப்பதே வைணவர்களின் திருமண். விபூதியை மூன்று பட்டைகளாகத் தரிப்பதன் பொருள் – ஆணவம், கன்மம், மாயை என்று மும்மலங்களும் தகிக்கப் பட்டதை உணர்த்துவது.

இறைவன் வீதி உலா: நோய்வாய்ப் பட்டோர், முதியோர், ஆலயம் செல்ல முடியாத தீட்டு உடையோர் ஆகியவர்களுக்கு இறைவன் தரிசனம் அளிக்க ஏற்பட்டதே திருவீதி உலா.




செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஆயிரத்தெண் விநாயகர்

ஏப்ரல் 20 தீபம் இதழில் பிரசுரமானது...



 


















விநாயகருக்கென தமிழகத்தில் தனியாக அமைந்துள்ள முக்கிய கோயில்களில் ஒன்று ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண்  விநாயகர் ஆலயம். தேர், கொடிமரத்தொடு விநாயகப் பெருமான் இங்கு திருவிழாவும் காண்கிறார்.


'முதாகராத்த மோதகம்'....இந்த தோத்திரம் நாம் அனைவரும் அறிந்த ஸ்ரீ கணேச  பஞ்சரத்னம். இதை இயற்றியவர் ஆதிசங்கர பகவத்பாதர் என்பதும் நாம் அறிந்த விஷயம். அந்த தோத்திரத்தை ஆதிசங்கரர் இயற்றியது எங்கு தெரியுமா? தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுக மங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ள 'ஆயிரத்து எண்  விநாயக'ரின் சந்நிதியில்தான்.


எல்லா விநாயகர் ஆலயங்களையும் போன்று அரசமரத்தின் அடியில் இருந்த இந்த விநாயகர் ஆதி சங்கரரால் பாடப்பெற்றது எப்படி? மஞ்சளிலும், களிமண்ணிலும் உருவாக்கினாலும், எளிதில் இலவசமாகக் கிடைக்கும் அருகும், தும்பையும்  சாற்றினாலும், அரசமரத்தடியிலும், ஆலமரத்தடியிலும் அமர்ந்து தன்னை நாடி வந்தோரின் குறைகளைக் களையும் நம் பிள்ளையாரப்பன் ஆறுமுகமங்கலத்தில் அருளாட்சி செய்து வருகிறார். சுமார்  2000 ஆண்டுகளுக்கும் முன்பு உருவானவர்  இவ்விநாயகர் என்கிறது வரலாறு. அந்நாளில் யஞ்ஞம்மாள்புரம் என்ற அந்தணர் தெருவில் வாழ்ந்த  வேதியர்களால் ஒரு சிறு ஆலயத்தில் வணங்கப்பெற்றவர்.

நான்காம் நூற்றாண்டில் சோமர வல்லபன் என்ற அரசன் நர்மதை நதி தீரத்திலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து ஒரு யாகம் நடத்தினான். அதில் 1008க்கு ஒருவர் குறைவாக இருக்க, விநாயகர் தானே ஒரு பிராம்மணராக இருந்து யாகத்தை நடத்திக் கொடுத்ததால் அவர் பெயர் 'ஆயிரத்துஎண்  விநாயகர்' ஆயிற்றாம். யாகத்தை முடித்துக் கொடுத்த விநாயகர் ஆறுமுக மங்கலத்திலேயே தங்கி  ஆலயம் கொண்டதாக தல வரலாறு கூறுகிறது.

                                                            ஆலய விமானம்


பலகாலம் முன்பு ஒரு சிறிய சந்நிதியில் கோயில் கொண்டிருந்த கஜமுகனின் பெருமையும், இடர்களை நீக்கி அருளும் அவரது திருவருளும்  எங்கும் பரவ, கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் ஆலய மண்டபங்களும்கொடிமரம்,பலிபீடம்தேர் போன்றவையும்  உருவாக்கப்  பட்டன. தமிழ் நாட்டின் புகழ் பெற்ற விநாயகர் ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். பிள்ளையாரின் ரதோற்சவம் இங்கு மிக விமரிசையாக நடைபெறும்.விநாயகருக்கான பிரத்யேக ஆலயமாக விளங்கிய இவ்வாலயத்தில் உக்ரம பாண்டியனால் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஸ்ரீ கல்யாணி அம்மன் சந்நிதிகள் உருவாக்கப்பட்டன. இவ்வூரின் எல்லைக் காவல் தெய்வங்களான சுடலைமாடன், தோப்பாச்சி அம்மன், இளையநாயனார் மூவரின் ஆலயங்கள் வடக்கு, தெற்கு, மேற்கில் முக்கோண வடிவமாக அமைந்திருக்க, பிந்து ஸ்தானமாகிய நடுவில் இந்த பெருமான் கோயில் கொண்டுள்ளது மிகச் சிறப்பான தோற்றமாகும்.

                                                                  

 1945ம் ஆண்டில் பஞ்சலோகத்தாலான பஞ்சமுக விநாயகர், நடராஜா, முருகப் பெருமான் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஐந்து திருமுகங்களும், பத்து முத்திரைகள் கொண்ட திருக்கரங்களும் கொண்டு ஹேரம்ப வினாயகர் என்ற பெயரில் காட்சி தரும் இப்பெருமானின்  அழகு மனத்தைக் கொள்ளை கொள்கிறது. 




இங்குள்ள நடராஜரின் தலையில் விரிசடையோ, ஜடாமுடியோ இன்றி கிரீடம் இருப்பது வித்யாசமான தோற்றமாகும்.இங்குள்ள ஒன்பது அடி உயரமுள்ள நடராஜாவின் சப்பரம் இப்பகுதியிலுள்ள சப்பரங்களில் மிக உயரமானதும், வித்யாசமான வேலைப்பாடு அமைந்ததுமாகும்.




இப்பெருமான் வரப்பிரசாதியாவார். கேட்டவற்றையும், நினைத்தவற்றையும் உடன் நிறைவேற்றுவதில்  இவருக்கு இணை இவரே என்கின்றனர். திருமணம், பிள்ளைப் பேறு, கல்வி, வேலை, வியாபாரம்  இவற்றிற்கான வேண்டுதல்கள் இங்கு அதிகம். அடிக்கடி விபத்து ஏற்படுவதுதிருமணம், படிப்பில் தடை ஏற்படுவது, வழக்குகளில் இழுபறி, அடிக்கடி உடல்நலக் குறைவு இவற்றிற்கு இவ்வாலய இறைவனை வேண்டி 108, 1008 தேங்காய்கள் உடைப்பதும், 108, 1008 விளக்குகள் ஏற்றுவதும் இவ்வாலயத்தின் சிறப்பான, தனிப்பட்ட வழிபாடாகும்.  அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி நாட்களில் 1008 விளக்கு ஏற்றும் வேண்டுதல் மிகப் பிரபலமாக நடைபெறுகிறது. பரிகாரங்களாக கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், அபிஷேக ஆராதனைகள் அடிக்கடி நடைபெறுகின்றன.


பண்டைய நாட்களில் இங்கு அன்னதானங்களும், உற்சவங்களும் மிக சிறப்பாக நடந்தனவாம். தற்போது ஆகம முறைப்படி இங்கு நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன.சித்திரையில் நடைபெறும் பத்து நாள் பிரம்மோத்சவம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் விதவிதமான வாகனங்களில் அம்மை, அப்பன் சகிதமாக விநாயகர் எழுந்தருள்வார். பத்தாம் நாள் அன்று தேரோட்டம் நடக்கும். அந்த நாட்களில் இங்கு நடக்கும் அன்னதானம் மிகச் சிறப்புடையதாம். விநாயகர் கேது கிரகத்தின்  அதிபதி என்பதாலும், காளஹஸ்தீஸ்வரர்  இங்கு அருள் புரிவதாலும், காளஹஸ்தியைப் போன்றே இவ்வாலயம் கேது கிரக தோஷம், மற்றும் நாகதோஷத்திற்கான பரிகார நிவர்த்தித்  தலமாக விளங்குகிறது.


ஆதி சங்கரர் விஜய யாத்திரையாக திருச்செந்தூர் சென்றபோது வழியில் இவ்வாலய கணபதியை வணங்கி கணேச பஞ்சரத்னத்தை பாடினார். பின் செந்தூர் சென்று 33 ஸ்லோகங்களால்  முருகப்பெருமானை வியந்து, புகழ்ந்து பாடினார். ஆதி சங்கரர் முருகப் பெருமானைக் குறித்துப் பாடிய ஒரே தோத்திரம் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம். இதனை சொல்பவருக்கு சகல நன்மையையும் ஏற்படும் என்பது சங்கர பகவத் பாதரின் வாக்கு. இன்றும் திருச்செந்தூரில் தினமும் கணேச பஞ்சரத்னம் பாடிய பின்பே சுப்ரமணிய புஜங்கம் ஓதப்படுகிறது. ஆதிசங்கரரின் திருப்பாதங்கள் பட்ட இவ்வாலயத்தை நாமும் தரிசித்து ஆயிரத்து எண் வினாயகரின் திருவருளைப் பெறுவோம். தமிழ் அறிஞர் திரு கி.வா.ஜ.அவர்கள் இவ்வாலய இறைவனை சிறப்பித்து பாடியுள்ளார்.


திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ. தூரமுள்ள ஏரல் சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரமுள்ள ஆறுமுகமங்கலத்திற்கு பஸ் அல்லது  ஆட்டோ மூலம் செல்லலாம். 
ஆலய நேரம்...காலை 6-11...மாலை--5-8
தொலைபேசி...0461 232 1486





ஆதி சங்கரர் அருளிச் செய்த ஸ்ரீ கணேச பஞ்சரத்ன ஸ்லோகம்

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |
கலாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அனாயகைக நாயகம் வினாஸிதேப தைத்யகம் |
நதாஸூபாஸூ நாஸகம் நமாமி தம் வினாயகம் || 1 ||

நதேதராதி பீகரம் நவோதிதார்க பாஸ்வரம் |
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம் |
ஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம் |
மஹேஸ்வரம் தமாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம் || 2 ||

ஸமஸ்த லோக ஸங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் |
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் |
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஸஸ்கரம் |
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் || 3 ||

அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம் |
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்சனாஸ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||

நிதாந்த  காந்த  தந்த காந்தி மந்த காந்த  காத்மஜம் |
அசிந்த்ய ரூபமந்த  ஹீன மந்தராய க்ருந்தனம் |
ஹ்ருதன்ந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம் |
தமேகதந்தமேவ தம் விசின்தயாமி ஸந்ததம் || 5 ||

மஹாகணேஸ பஞ்சரத்னமாதரேண யோ‌ன்வஹம் |
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேஸ்வரம் |
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் |
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோ‌சிராத் ||




காதால் கேட்கவும்



திங்கள், 16 மார்ச், 2015

மங்கையர் மலர் இதழில் 'ஆஹா தகவல்' ...

மார்ச் 16-31 மங்கையர் மலர் இதழில் 'ஆஹா தகவல்'  பகுதியில் வெளியான என் குறிப்பு...








மங்கையர் மலர் மார்ச் 16-31, 2015 இதழில் வெளியானது

பாற்கடலில் தோன்றிய ஐந்து மரங்களில் ஒன்றான பாரிஜாத மரத்தினை இந்திரன் பூமிக்குக் கொண்டு வந்தான். இதுவே பவழ மல்லிகை எனப்படுகிறது. சிவப்புக் காம்புடன் மிக மெல்லிய ஐந்து வெண்ணிற இதழ்களைக் கொண்ட இப்பூ, சிவனுக்குரிய எட்டுப் பூக்களில் ஒன்றகும்.


சனி, 7 மார்ச், 2015

காரடையான் நோன்பு

மார்ச் 20 தீபம் இதழில் பிரசுரமான என்கட்டுரை...'காரடையான் நோன்பு'


 
 


                         

                                                        
                                                                   








திருமணமான தமிழ்ப் பெண்கள் முக்கியமாகச் செய்யும் தேவி பூஜைகள் இரண்டு. முதலாவது ஆவணியில் வரும் வரலக்ஷ்மி விரதம்.அடுத்து மாசி பங்குனி சேரும் நேரத்தில் வரும்  காரடை  நோன்பு. இரண்டு மாதம் சேரும் நேரம் என்றாலும் மாசி இருக்கும்போதே செய்துவிட வேண்டும். 'மாசிக் கயிறு பாசி படரும்' என்பது முன்னோர் வாக்கு.


வரலக்ஷ்மி விரதம் செய்வது சில குடும்பங்களுக்கு மட்டுமே வழக்கத்தில் உண்டு.அதனால் மற்றவர்கள் அதைச் செய்வதில்லை.ஆனால் காரடை நோன்பு அனைத்து திருமணமான பெண்களும் கண்டிப்பாக செய்ய வேண்டும். இது கணவரின் நல்வாழ்வு மற்றும் நீடித்த ஆயுளுக்காக செய்யப்படும் நோன்பு. 


சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவரின் உயிரை மீட்டு வந்து நோற்ற நோன்பு இது. இதில் அவள் கார் அடையை நிவேதித்ததால் காரடை நோன்பு எனப்படுகிறது. இதில் செய்யப்படும் உப்பு அடை சிவ  அம்சத்தையும், இனிப்பு அடை சக்தி அம்சத்தையும் குறிப்பதாகும். இல்லற வாழ்க்கையில் இருவரும் இணைந்திருப்பதை உணர்த்துவதே இந்த அடை செய்வதன் தாத்பர்யம். 

பொதுவாக சுவாமி பெயரைக் கூறும்போது, உமாமகேஸ்வரர், ராதா கிருஷ்ணர், லக்ஷ்மி நாராயணன் என்றே  சொல்வோம்.ஆனால் இந்த நோன்பை சத்யவானின் பெயரை முதலில் வைத்து, சத்யவான் சாவித்திரி நோன்பு என்கிறோம். இதன் பொருள் என்னவெனில் கணவனே தாய், தந்தை, குரு , தெய்வம் எல்லாமாகும் என்பதைக் குறிக்கவே கணவன் பெயர் முன்பாகவும், மனைவி பெயர் பின்னாலும் கூறப்படுகிறது.
இந்நோன்பு காஞ்சி காமாக்ஷியால் செய்யப்பட்டதாக ஒரு வரலாறு கூறுகிறது. காஞ்சியில் ஈசனைப் பிரிந்து இருந்த அம்பாளை மாயை மூட, அவள் அக்ஞானத்துக்குள்ளானாள். மண்ணால் லிங்கம் செய்து வைத்து, இறைவனுக்கு பூஜை செய்தாள். அப்போது ஒரு பிரளயம் ஏற்பட்டது. தன் கணவரை அடைய வேண்டி தான் பூஜிக்கும் மணல் லிங்கம் வெள்ளத்தில் கரைந்துவிடும் என்று அஞ்சிய அம்பிகை, இவ்விரதத்தை அனுஷ்டித்ததாக வரலாறு கூறுகிறது. 


காடாகக் கிடந்த அவ்விடத்தில் ஒரு மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, நூலால் சரடு செய்து அதன் அருகில் வைத்தாள். நிவேதனத்துக்கு என்ன செய்யலாம்? யோசித்தாள்! வசந்த ருதுவானதால் துவரை கிடைத்தது. அரிசியை மாவாக்கி, அத்துடன் துவரை, வெல்லம் எல்லாம் சேர்த்துக்  கிளறி அடை தட்டினாள். வைக்கோல் மேல் அதை வைத்து, ஆவியில் வேகவிட்டாள். ஈசனை பூஜித்து அடையையும், சிறிது வெண்ணையையும் வைத்து நிவேதனம் செய்தாள். தன்  கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டி  பிரார்த்தித்து,சரட்டைக்  கையில் கட்டிக் கொண்டாள். சாஸ்திரப்படி இந்த நோன்பு சரடை கையில்தான் கட்டிக் கொள்ள வேண்டுமாம். ஆனால் இடையில் பழக்கம் மாறி கழுத்தில் கட்டும் பழக்கம் வந்து விட்டது.

மாசியும், பங்குனியும் சேரும் நாளில் தேவி செய்த பூஜையின் பலனாக இறைவன் அந்த மணல் லிங்கத்தில் இருந்து வெளிவந்து அம்பாளைத் திருமணம் செய்து கொண்டாராம். இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாகக் கூறப்படும் கங்கணேஸ்வரர் ஆலயம் காஞ்சீபுரத்தில் கம்மாளத்தெருவில் அமைந்துள்ளது.இங்குதான் மணல் லிங்கத்தில் இருந்து ஈசன் வெளிப்பட்டு தேவியை மணந்ததாக வரலாறு. இறைவனின் பெயரிலேயே இத்தல வரலாறு விளங்குகிறது. தேவி கையில் கங்கணமாக நோன்புச் சரடை, ஒரு ஸ்லோகத்தை ஜபித்துக் கையில் கட்டிக் கொண்டு பூஜித்ததால் இப்பெயர் ஏற்பட்டதாம். கங்கணம் என்பது கையில் கட்டும் கயிறு.

நோன்பு செய்முறை 


தேவியை பிரார்த்தனை செய்துசுவாமி அறையில் கிழக்கு பார்த்து, ஒரு சிறிய கோலமிட்டு, சிறிய நுனிவாழை இலை போட்டு, அதில் இனிப்பு, உப்பு அடைகளுடன், வெண்ணையை வைத்து,இலையின் இடப்பக்கம் நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், சரடு வைத்து நிவேதனம் செய்து, தேவியை பிரார்த்தித்து ஒரு சரடை அம்பாளின் படத்திற்கு சாற்றிவிட்டு, மற்றதை பூஜை செய்பவர் அணிய வேண்டும். சரடு கட்டிக்கொள்ளும்போது சொல்ல வேண்டியமந்திரம் 


தோரம் கிருஷ்ணாமி சுபகே !
ஸஹாரித்ரம் தராமி அஹம்!
பர்த்து:ஆயுஷ்ய ஸித்யர்த்தம் !
ஸூப்ரீதா பவ ஸர்வதா !
தமிழில்..
'ஓரடையும், உருகாத வெண்ணையும் நான் படைத்தேன்;
ஒருநாளும் என் கணவனைப் பிரியாமல் இருக்க வேண்டும்.

இவ்வருடம் காரடை நோன்பு மார்ச் 15ம் தேதி விடியற்காலை 4 மணி முதல் 4 1/2 மணிக்குள் செய்ய வேண்டும்.