|
|
ஜூலை 5, 2015ல் வெளியான தீபம் இதழில் பிரசுரமான என் ஆலய தரிசனம் கட்டுரை
பட்டிசீமா ஸ்ரீவீரபத்ர சுவாமி ஆலயம்
ஆந்திர பிரதேசம் ஒரு புண்ணிய பூமியாக விளங்குகிறது. ஆண்டவன் தானே
சுயம்புவாகக் கோவில் கொண்ட ஆலயங்கள் பல சிறப்புற விளங்குகின்றன. ஊரின் செழுமைக்கு
கோதாவரியும், அங்கு
வாழும் மக்களின் வளமான வாழ்விற்கு ஆலயங்களில் கோவில் கொண்டிருக்கும் அற்புத
தெய்வங்களும் துணையாக இருக்கின்றன. அங்குள்ள சிறு ஆலயங்கள் கூட சிறந்த புராண,
இதிகாசப் பெருமைகளுடன் விளங்குகின்றன. பின் தெய்வங்களின் சக்திக்கு
கேட்பானேன்? அத்தனை கடவுளரும் வரப்பிரசாதியாகத்
திகழ்கின்றனர். சிவபெருமானுக்கும், நரசிம்ம
சுவாமிக்கும், மகாலட்சுமி, பார்வதி
தேவியருக்கும் அளவில்லா ஆலயங்கள் உள்ளன. 'பஞ்சராம ஸ்தலங்கள்'
என்னும் ஐந்து சிவாலயங்கள் ஆந்திராவின் மிகச் சிறப்பான
ஆலயங்களாகும்.
தனிச் சிறப்பும் பெருமையும் கொண்டஸ்ரீ வீரபத்ர சுவாமி ஆலயம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில்
ராஜமுந்திரிக்கு அருகிலுள்ள 'பட்டிசீமா' என்ற இடத்தில் அகண்ட கோதாவரி நதிக்கு நடுவில் ஒரு சிறிய குன்றின்மேல்
அமைந்துள்ளது. சிவபெருமானால் உருவாக்கப்பட்ட வீரபத்ர சுவாமி இங்கு லிங்க ரூபத்தில்
கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார்.
தட்சிண காசி' எனப்படும்
இந்தத் தலம் 'பஞ்ச ஷேத்ரம்'
எனப் படும் ஐந்து சிவாலயங்களுள் ஒன்றாகச் சிறப்பித்துக் கூறப்படுகிறது.மற்ற
ஐந்து தலங்கள் கேதார்நாத், காசி,
ஸ்ரீசைலம், காளஹஸ்தி ஆகியவையாம். இத்தல இறைவனை
தரிசித்தால் மற்ற ஆலயங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று
கூறப்படுகிறது. ஸ்கந்த புராணத்தில் இத்தலம் கைலாயமாகவும், வைகுண்டமாகவும்
சிறப்பாகப் போற்றப்படுகிறது.
இயற்கை அழகு நிறைந்த இந்த 'தேவகூடபர்வத்' என்ற இந்தக் குன்று இங்கு
உருவானது எப்படி? இதற்கு ஒரு சுவாரசியமான ஒரு கதை
புராணத்தில்
கூறப்படுகிறது. முன்காலத்தில் எல்லா மலைகளுக்கும் சிறகுகள்
இருந்தனவாம்! அவை அவற்றின் உதவியுடன் பூலோகம் முழுதும் சுற்றி வருமாம்.தாம்
விருப்பப்படும் இடத்தில் இறங்கி விடுமாம். அச்சமயம் அங்குள்ள பல உயிரினங்களுக்கும்
துன்பம் ஏற்பட்டதால் இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டிவிட்டான்.
கைலாச மலையின் பெருமையைப் பற்றி அறிந்த இம்மலை தானும் சிவபெருமானைத்
தன்னில் சுமந்து கைலாயத்திற்கு இணையான பெருமையையும்,புகழையும் பெற விரும்பி சிவபெருமானை நோக்கித் தவம்
செய்தது.சிவபெருமானும் அம்மலைக்கு காட்சி தந்து ' என்ன
வரம் வேண்டும்' எனக் கேட்க, அம்மலை
'என்னில் தாங்கள் வீற்றிருந்து எனக்கு அருள் புரிய
வேண்டும்' எனக் கேட்க சிவபிரானும் 'அப்படியே' என்று கூறி மறைந்தார். அதுமுதல்
அம்மலை ' தேவ குடாத்ரி' எனப்
பெயர் பெற்ற கோதாவரி நதியின் நடுவில் அமைந்திருப்பதால் 'தேவகூடபர்வதம்'
என்ற பெயரைப் பெற்றது. அன்னை பார்வதி தேவியின்
தந்தையான தக்ஷன் பிருகஸ்பதி யாகம் செய்த சமயம், சிவனை அழைக்காது அவமதித்தான். ஆனால் தேவியோ தான் மட்டும் செல்வதாகக் கூறி அங்கு செல்ல, தந்தை தன்னையும், தன்
கணவரையும் அவமதித்ததால், கோபம்
அடைந்தாள். திரும்ப சிவபெருமானிடம்
செல்ல விருப்பமில்லாமல் தன்
இடதுகால் சுண்டுவிரலை தரையில் தேய்த்து அக்னியை உண்டாக்கி அதில்
தான் வீழ்ந்து உயிர் துறந்தாள்.
இறைவியின் செயலை அறிந்த சிவபெருமான் அளவற்ற கோபத்துடன், தன் விரிந்த தலையில் இருந்து ஒரு கேசத்தைப்
பிடுங்கி தரையில் போட்டு தன் அம்சமாக வீரபத்திரரை
உருவாக்கினார். அவர் ஈசனை வணங்கி நின்று தான் செய்ய வேண்டியது யாது? என வினவ, கோபமுற்ற இறைவன் தக்ஷனின்
யாகத்தையும், அவனையும் அழித்து வருமாறு, 'பட்டாயுதம்' என்ற வாள் போன்ற ஒரு ஆயுதத்தைக் கொடுத்தார். வீரபத்ரரும் தந்தை கூறியது போன்றே
யாகத்தை அழிக்க சென்றபோது தடுக்க வந்தனர் மகாவிஷ்ணுவும்,சூரிய பகவானும். ஆனால் அளவற்ற கோபத்தில் இருந்த வீரபத்ரரோ
மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தைப் பிடுங்கியதோடு, சூரிய
தேவனின் பற்களையும் உடைத்துவிட்டார்.
யாகத்தை
அழித்து, தக்ஷனின் தலையையும் வெட்டிவிட,
யாகத்தை முடிக்க தக்ஷனுக்கு அருள வேண்டும் என தேவர்கள் வீரபத்ரரை
வேண்ட, தக்ஷனுக்கு ஒரு வெட்டுப்பட்ட ஆட்டின் தலையைப்
பொருத்தி யாகத்தை முடித்து அவனுக்கு மோக்ஷம் கிடைக்கச் செய்தார்.தக்ஷனின் உயிரை
மாய்த்து அந்த பட்டாயுதம் விழுந்த இடமே 'பட்டாசலக்ஷேத்ரம்'
எனப்பட்டு, பின்னாளில் மருவி பட்டிசீமா
ஆயிற்று.
பின்பும் தன் கோபம் குறையாமல் பிரளய தாண்டவம் ஆடிய வீரபத்ரரைக் கண்டு
சப்த லோகங்களும் நடுநடுங்கின. தேவர்கள் ஈசனிடம் சென்று சதி தேவியை மீண்டும்
உயிர்ப்பிக்க வேண்டினர்.அந்த நேரத்தில் தோன்றியவளே மகாபத்ர காளி தேவி.தேவர்கள்
அகத்திய முனியிடம் சென்று வீரபத்ரரை அமைதியாக்கி, தம்மைக் காக்க வேண்டினர். அகத்தியர் வீரபத்ரரை
தன்னுடைய இரு கைகளாலும் இறுக அணைத்து, அவரது
கோபத்தைத் தணித்து சாந்தமாக்கி, தேவ கூட பர்வதத்தில்
அமர்ந்து அருளும்படி வேண்ட, உக்கிரம் குறைந்த வீரபத்ரரும்
அவ்வாறே அம்மலையில் சுயம்புலிங்கமாக உருக் கொண்டார்.
அவரது கலைந்து, பிரிந்து கிடந்த கேசத்தை அகத்தியர் ஒன்றாக்கி முடிந்துவிட்டார்.
இன்றும் அந்த சிவலிங்கத்தின் தலையில் சற்று உப்பலாக சடை முடிந்தது போன்றும்,
லிங்கத்தின் நடுப்பகுதியில் அகத்தியர் கைகளால் கட்டிய
தழும்புகளும் இருப்பதைக் காண முடிகிறது.ஆலயம் செல்வதற்கு கோதாவரி நதியை படகில்
கடந்து செல்ல வேண்டும். அமைதியுடன் ஓடும் கோதாவரி நதியும், சுற்றிலும் பசுமை நிறைந்த இயற்கைக் காட்சிகளும் மனத்தைக் கொள்ளை
கொள்கின்றன.மழை நாட்களில் இக்குன்று மூழ்கும் அளவு தண்ணீர் நிரம்பி விடுமாம். படகு
ஏறும் இடத்தில் நீண்டு, உயர்ந்து நின்று காட்சி தரும்
ஆஞ்சநேயர் மிக அழகு.
வெண்ணிற கோபுரத்துடன் பளிச்சென்று காட்சி தரும் ஆலயத்திற்கு சில
படிகள் ஏறிச் செல்லவேண்டும். இங்குள்ள நந்தி மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் நூற்றாண்டில்
ராஜ மகேந்திர வர்மானால் கட்டப்பட்ட மிகப் பழமையான
கோயில்.கர்ப்பக்கிரகத்தில் ஆவுடையுடன் கூடிய சிவ லிங்கத்தைக்
காணும்போதே வீரபத்ரரின் தாண்டவம் நினைவுக்கு வருகிறது. வேண்டும் வரங்களை
அனைவருக்கும் அள்ளித்தரும் வள்ளலாம் இவர். இங்குள்ளோர் தமக்கு என்ன துன்பம்
வரினும் இந்த இறைவனை வேண்டிக் கொண்டால் அவை உடன் அகன்று விடுமாம். அர்ச்சகர்கள்
மிக அற்புதமாக ஸ்ரீருத்ரம் சொல்லி அபிஷேகம் செய்கிறார்கள். இது ஆந்திராவில் நான்
எல்லா ஆலயங்களிலும் கண்டு வியந்த விஷயம்.
ஒவ்வொரு சன்னதியிலும் அங்கு இருக்கும் அத்தனை பேர் (சிறு குழந்தைகள் உட்பட)
கையிலும் ஒரு பூவைக் கொடுக்கிறார்கள். பின் திரும்ப வந்து அனைவரின் பெயர், கோத்திரம், நட்சத்திரம் கேட்டு கொடுத்த பூவை
வாங்கிச் சென்று அவற்றால் இறைவனுக்கு அர்ச்சனை செய்து விபூதி பிரசாதம்
தருகிறார்கள். அர்ச்சனைதட்டு கொடுத்தால் மட்டுமே அவர்கள் பெயருக்கு அர்ச்சனை,
பிரசாதம் என்ற பாகுபாடு இன்றி
அனைவரையும் இறைவன் முன் சமமாகக் கருதும் இப்பூஜை முறை மிக அதிசயமாக இருக்கிறது.ஒரு
சின்னக் கோவிலிலிருந்து புகழ் பெற்ற மிகப் பெரிய கோவில்வரை இந்த நடைமுறை கடைப்
பிடிக்கப்படுகிறது.
நான் சமீபத்தில் சில மகிமை பெற்ற தமிழ்நாட்டு ஆலய தரிசனத்துக்கு
சென்ற சமயம், தீபாராதனை
காட்டி தரும் விபூதியை கொஞ்சம் அதிகமாகத் தரும்படி வேண்டியபோது, அர்ச்சகர் 10 ரூபாய் கொடுத்தால் மட்டுமே விபூதி
பொட்டலம் கொடுப்பதாகச் சொன்னார். கடவுள் சன்னதியிலேயே
இப்படி பணம் வசூலிப்பதை என்னென்பது? எல்லாமே ஒரு வியாபாரம்
போல ஆகி விட்டதே என்று மனம் வருந்தியது.
சுற்றுப் பிரகாரத்தில்
தேவி பத்ரகாளியின் சந்நிதி உள்ளது. அழகே உருவாய் காட்சி தரும்
தேவியின் முன் நிற்கும்போது நம் கவலைகள் காணாமல் போய் நிம்மதி ஏற்படுகிறது.
தீர்க்க சௌமாங்கல்யம், திருமணம், மக்கட்பேறு என்று எல்லா செல்வங்களும் இவளை மனமாறப் பிரார்த்தித்தால்
சித்திக்குமாம். வெள்ளிகிழமை மற்றும் நவராத்திரி நாட்களில் அம்மனின் அலங்காரம் அருமையாக
இருக்குமாம். இங்கு தரிசனம் செய்யும் பெண்களுக்கு அம்மனின் பிரசாதமாக கண்ணாடி
வளையல்களைத் தருகிறார்கள்.
லக்ஷ்மி கணபதி, குமாரசுவாமி, சுப்ரமணிய சுவாமி, மஹிஷாசுர மர்த்தனி, கனகதுர்கா, தாண்டவ வீரபத்ரர், சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு சன்னிதி உள்ளது. கோவிலின் சுற்றுச் சுவர்களில் பல
அழகிய நடன வடிவங்கள் கண்ணைக் கவரும் விதமாக வடிக்கப் பட்டுள்ளன.
இவ்வாலயத்துடன் இங்கு அமைந்துள்ள ஸ்ரீபவநாராயணர் ஆலயமும் மிக
அற்புதமாக உள்ளது. இதற்கும் ஒரு வரலாறு உண்டாம். அங்கிருந்து சில மைல்
தூரத்தில்தான் கஜேந்திர மோட்சம் நடைபெற்றதாகவும், அந்தப் பெருமாளே
இங்கு காட்சி தருவதாகவும் கூறினார். பவநாராயணரின் உருவம் மிக அழகாக உள்ளது.பூதேவி,
நீளாதேவி சகிதம் காட்சியளிக்கும் அவர் கைகளில் சங்கும், சக்கரமும் இடம் மாறியுள்ளது.
கஜேந்திரனுக்காக விஷ்ணு அவசரமாக சென்றதால் அவை இடம் மாறியிருப்பதாக காரணம்
சொன்னார் அர்ச்சகர்.
இத்துடன் ஒரு ராமர் ஆலயமும்,
ஆஞ்சநேயர் ஆலயமும் உள்ளது.இங்கு மகாவிஷ்ணு க்ஷேத்திர பாலகராக
இருந்து இம்மலையைக் காப்பதாக புராணக் கூற்று. சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் சேர்ந்துஇங்கு ஆலயம் உள்ளதால் இது 'ஹரிஹர க்ஷேத்ரம்' எனப்படுகிறது. சைவ, வைஷ்ணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக் காட்டாக இவ்வாலயம் விளங்குகிறது.
'
இவ்வாலயத்தின் மிகச் சிறப்பான திருவிழா சிவராத்திரியாகும்.அந்த ஒரு
நாளில் மட்டும் இங்கு ஒரு லட்சம் மக்களுக்கு மேல் வந்து தரிசிப்பார்களாம்.மற்றும்
சாரதா நவராத்திரி, சைத்ர
நவராத்திரி, பீஷ்ம ஏகாதசி ஆகிய நாட்கள் மிக விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது.
மன்னன் ராஜ மகேந்திர வர்மனின் பெயராலேயே அந்நகருக்கு 'ராஜமகேந்திரவரம்' என்ற பெயர் ஏற்பட்டு பின் அதுவே
இன்றைய 'ராஜமுந்திரி' ஆயிற்று.
இவ்வாலயம் ராஜமுந்திரியிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில்
அமைந்துள்ளது.ஆந்திரா சுற்றுப் பயணம் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில்
இது.
ஆலயத்தில் தினமும் ஆறுகால பூஜைகளும், தனிப்பட்ட நிவேதனமும் உண்டு. இங்கு பிள்ளைப் பேறு
தரும் தெய்வங்களாக அனிஸ்த்ரீ, புனிஸ்த்ரீ என்ற இரண்டு பெண்
தெய்வங்கள் வழிபடப் படுகின்றனர். இவர்களை வேண்டிக்கொண்டு குங்கும அர்ச்சனையும்,
புஷ்பா அலங்காரமும் செய்தால் மழலைச் செல்வம் இல்லாதோர் விரைவில்
பிள்ளைப் பேறு அடையலாம்
என்று சொல்லப்படுகிறது.
இவ்வாலயத்திற்கு ராஜமுந்திரியிலிருந்து பஸ், டேக்சியில் சென்று கோதாவரி நதியைப் படகில் கடந்து
செல்லவேண்டும். ராஜமுந்திரியிலிருந்து பேக்கேஜ்
டூர்களிலும் செல்லலாம்.
ஆலயத்தில்
காலை 7 மணிமுதல் 1 மணி
வரையும், மாலை 4 முதல் 7 மணி வரையும் தரிசனம் செய்யலாம்.சிவராத்திரி அன்று இரவு முழுதும் அபிஷேகம்
உண்டு. ஸ்ரீ பத்ரகாளி அம்மன் சமேத
ஸ்ரீவீரபத்ரசுவாமியின் சிறப்பான ஆலயங்களுள் முதன்மையான
ஆலயமாக இது போற்றப் படுகிறது
|
|
|
|
|
|
|