மார்ச் 20 தீபம் இதழில் பிரசுரமான என்கட்டுரை...'காரடையான் நோன்பு'
திருமணமான தமிழ்ப் பெண்கள் முக்கியமாகச்
செய்யும் தேவி பூஜைகள் இரண்டு. முதலாவது ஆவணியில் வரும் வரலக்ஷ்மி விரதம்.அடுத்து
மாசி பங்குனி சேரும் நேரத்தில் வரும்
காரடை நோன்பு. இரண்டு மாதம் சேரும் நேரம் என்றாலும் மாசி
இருக்கும்போதே செய்துவிட வேண்டும். 'மாசிக் கயிறு பாசி படரும்' என்பது முன்னோர் வாக்கு.
வரலக்ஷ்மி
விரதம் செய்வது சில குடும்பங்களுக்கு மட்டுமே வழக்கத்தில் உண்டு.அதனால் மற்றவர்கள்
அதைச் செய்வதில்லை.ஆனால் காரடை நோன்பு அனைத்து திருமணமான பெண்களும் கண்டிப்பாக
செய்ய வேண்டும். இது கணவரின் நல்வாழ்வு மற்றும் நீடித்த ஆயுளுக்காக செய்யப்படும்
நோன்பு.
சாவித்திரி
எமனிடமிருந்து தன் கணவரின் உயிரை மீட்டு வந்து நோற்ற நோன்பு இது. இதில் அவள் கார்
அடையை நிவேதித்ததால் காரடை நோன்பு எனப்படுகிறது. இதில் செய்யப்படும் உப்பு அடை சிவ அம்சத்தையும், இனிப்பு அடை சக்தி அம்சத்தையும் குறிப்பதாகும்.
இல்லற வாழ்க்கையில் இருவரும் இணைந்திருப்பதை உணர்த்துவதே இந்த அடை செய்வதன்
தாத்பர்யம்.
பொதுவாக
சுவாமி பெயரைக் கூறும்போது, உமாமகேஸ்வரர், ராதா கிருஷ்ணர், லக்ஷ்மி நாராயணன் என்றே சொல்வோம்.ஆனால் இந்த நோன்பை சத்யவானின் பெயரை முதலில்
வைத்து, சத்யவான் சாவித்திரி நோன்பு என்கிறோம். இதன்
பொருள் என்னவெனில் கணவனே தாய், தந்தை,
குரு
, தெய்வம் எல்லாமாகும் என்பதைக் குறிக்கவே கணவன் பெயர் முன்பாகவும், மனைவி பெயர் பின்னாலும் கூறப்படுகிறது.
இந்நோன்பு
காஞ்சி காமாக்ஷியால் செய்யப்பட்டதாக ஒரு வரலாறு கூறுகிறது. காஞ்சியில் ஈசனைப்
பிரிந்து இருந்த அம்பாளை மாயை மூட, அவள் அக்ஞானத்துக்குள்ளானாள். மண்ணால் லிங்கம்
செய்து வைத்து, இறைவனுக்கு பூஜை செய்தாள். அப்போது ஒரு பிரளயம்
ஏற்பட்டது. தன் கணவரை அடைய வேண்டி தான் பூஜிக்கும் மணல் லிங்கம் வெள்ளத்தில்
கரைந்துவிடும் என்று அஞ்சிய அம்பிகை, இவ்விரதத்தை அனுஷ்டித்ததாக வரலாறு கூறுகிறது.
காடாகக்
கிடந்த அவ்விடத்தில் ஒரு மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, நூலால் சரடு செய்து அதன் அருகில் வைத்தாள். நிவேதனத்துக்கு என்ன செய்யலாம்? யோசித்தாள்! வசந்த ருதுவானதால் துவரை கிடைத்தது. அரிசியை மாவாக்கி, அத்துடன் துவரை, வெல்லம் எல்லாம் சேர்த்துக் கிளறி அடை தட்டினாள். வைக்கோல் மேல் அதை வைத்து, ஆவியில் வேகவிட்டாள். ஈசனை பூஜித்து அடையையும், சிறிது வெண்ணையையும் வைத்து நிவேதனம் செய்தாள். தன் கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டி பிரார்த்தித்து,சரட்டைக்
கையில்
கட்டிக் கொண்டாள். சாஸ்திரப்படி இந்த நோன்பு சரடை கையில்தான் கட்டிக் கொள்ள
வேண்டுமாம். ஆனால் இடையில் பழக்கம் மாறி கழுத்தில் கட்டும் பழக்கம் வந்து விட்டது.
மாசியும், பங்குனியும் சேரும் நாளில் தேவி செய்த பூஜையின் பலனாக இறைவன் அந்த மணல்
லிங்கத்தில் இருந்து வெளிவந்து அம்பாளைத் திருமணம் செய்து கொண்டாராம். இந்த
நிகழ்ச்சி நடைபெற்றதாகக் கூறப்படும் கங்கணேஸ்வரர் ஆலயம் காஞ்சீபுரத்தில்
கம்மாளத்தெருவில் அமைந்துள்ளது.இங்குதான் மணல் லிங்கத்தில் இருந்து ஈசன்
வெளிப்பட்டு தேவியை மணந்ததாக வரலாறு. இறைவனின் பெயரிலேயே இத்தல வரலாறு
விளங்குகிறது. தேவி கையில் கங்கணமாக நோன்புச் சரடை, ஒரு ஸ்லோகத்தை ஜபித்துக் கையில் கட்டிக் கொண்டு பூஜித்ததால் இப்பெயர்
ஏற்பட்டதாம். கங்கணம் என்பது கையில் கட்டும் கயிறு.
நோன்பு
செய்முறை
தேவியை
பிரார்த்தனை செய்துசுவாமி அறையில் கிழக்கு பார்த்து, ஒரு சிறிய கோலமிட்டு, சிறிய நுனிவாழை இலை போட்டு, அதில் இனிப்பு, உப்பு அடைகளுடன், வெண்ணையை வைத்து,இலையின் இடப்பக்கம் நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், சரடு வைத்து நிவேதனம் செய்து, தேவியை பிரார்த்தித்து ஒரு சரடை அம்பாளின்
படத்திற்கு சாற்றிவிட்டு, மற்றதை பூஜை செய்பவர் அணிய வேண்டும். சரடு
கட்டிக்கொள்ளும்போது சொல்ல வேண்டியமந்திரம்
தோரம்
கிருஷ்ணாமி சுபகே !
ஸஹாரித்ரம் தராமி அஹம்!
பர்த்து:ஆயுஷ்ய ஸித்யர்த்தம் !
ஸூப்ரீதா பவ ஸர்வதா !
தமிழில்..
'ஓரடையும், உருகாத
வெண்ணையும் நான் படைத்தேன்;
ஒருநாளும்
என் கணவனைப் பிரியாமல் இருக்க வேண்டும்.
இவ்வருடம் காரடை நோன்பு மார்ச் 15ம் தேதி விடியற்காலை 4 மணி முதல் 4 1/2 மணிக்குள் செய்ய வேண்டும்.