Thanjai

Thanjai

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

ஒரு தோழி பல முகம்


குங்குமம் தோழி 01-09-2016 இதழில் ‘ஸ்டார் தோழி’ என்ற தலைப்பில் என்னைப் பற்றி வெளியான தணிக்கை செய்யப்பட்ட கட்டுரை. முழுமையான கட்டுரையை முடிவில் கொடுத்துள்ளேன்.

குங்குமம் தோழி ஆன் லைனில் படிக்க இங்கே சொடுக்கவும்.






நான்

நல்ல எண்ணம், திடமனம், எதற்கும் கலங்காமல் வருவதை ஏற்கும் மனப்பக்குவம், கடவுள் தியானம், சிரித்த முகம், இனிய பேச்சு, இளமையான சிந்தனை... ஒரு மனுஷிக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்? இதுதான் நான்!

தாயாக...
இந்தி போராட்ட நேரம் பள்ளிப் படிப்பு. இந்தியில் வா, போவுக்கு கூட என்ன சொல்வது என்று தெரியாது. என் கணவர் உதவியுடன் இந்தி கற்றுக்கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாறுதல். பிள்ளைகள் படிப்பு, வீட்டுப் பொறுப்பு என்று இறக்கை கட்டி ஓடியநாட்கள் அவை. அடிக்கடி பள்ளி மாறினாலும், எல்லாவற்றிலும் முதலாவதாக வந்து, எல்லா போட்டி களிலும் பங்கு பெற்று பரிசுகளையும் பெறத் தவறியதில்லை.

என் பிள்ளைகள்...
முதல் மகனும், இரண்டாம் மகனும் +2 வில் தமிழகத்தில்  மாநில அளவில் மூன்றாவது இடமும், முதல் இடமும் பெற்று என்னை ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வைத்தனர். மாநில முதலிடம் பெற்ற என் இரண்டாவது மகன்  KKR பாமாயில் கம்பெனியார் அளித்த மாருதி 800 காரைப் பரிசாகப் பெற்றான். என் இரண்டு பிள்ளைகள் பொறியியலில் முனைவர் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்று ஜெர்மனியிலும், சிங்கப்பூரிலும் பணி புரிகின்றனர்.  மற்றொரு மகன் முதுகலை வணிக மேலாண்மை படித்து சென்னையில் சுயதொழில் செய்கிறான்.  ஒரே மகள் மருத்துவர்.

கற்றுக்கொண்டதும் பெற்றுக் கொண்டதும்...
வங்கி அதிகாரியான என் கணவரின் இட மாறுதல்களால் பல மாநிலங்களில், பல ஊர்களில் வாசம். அதனால் கிடைத்த அனுபவங்கள் பல. குழந்தைகள் திருமணம், அவர்களின் பிள்ளைப் பேறு என்று கடமைகள் அனைத்தும் முடிந்த நிலையில் என் கணவரிடம் என் தனிக் குடித்தன ஆசையை சொன்னேன்! அவர் ஓகே சொல்லிவிட திருச்சியில் தற்போது வாசம். அழகான திருச்சியில், காலை எழுந்ததும் மூன்றாம் மாடியிலுள்ள என் வீட்டின் சமையலறை ஜன்னல் வழியே மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்லிவிட்டே என் வேலைகளை ஆரம்பிப்பேன்.  மாடியிலிருந்து ஸ்ரீரங்க கோபுர தரிசனம்.
புத்தகங்கள்
ஆன்மிக புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். ராஜாஜியின் சக்கரவர்த்தி திருமகனும், வியாசர் விருந்தும் பலமுறை படித்திருக்கிறேன். கல்கியின் தியாகபூமி என்னால் மறக்க முடியாத என் மனதைத் தொட்ட நாவல். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், லக்ஷ்மி, சிவசங்கரி, பாலகுமாரன், கண்ணதாசன், அனுராதா ரமணன், வாஸந்தி, சாண்டில்யன், தேவிபாலா, ராஜேஷ்குமார் என்று அத்தனை பேரின் கதைகளையும் படிக்கப் பிடிக்கும்.
குடும்பம்
18 வயதில் திருமணம். கணவர் வங்கி ஊழியர். எட்டே மாதங்களில் அதிகாரியாகப் பணி உயர்வுடன் என் கணவருக்கு வடக்கே மதுராவுக்கு மாற்றலாக, கண்ணில் கண்ணீருடன் அம்மா,  அப்பாவைப் பிரிந்து சென்றேன். அன்பான ,கோபம் என்றால் என்னவென்றே தெரியாத பாசமான கணவர். அன்று முதல் இன்றுவரை நாற்பது வருடங்களாக என் மனம் கோணாமல் நடந்து கொள்ளும் மஹானுபவர்! எல்லா வேலைகளிலும் எனக்கு உதவும் கரங்கள் கொண்டவர்! குழந்தைகளிடம் அளவு கடந்த பாசம்! கண்ணன் பிறந்த மதுராவிலும், காதல் சின்னம் காட்சி தரும் ஆக்ராவிலும் 6 வருட வாசம்.

நான் எழுத்தாளர் மணியனின் பயணக் கட்டுரைகளைப் படித்து பாரீஸுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் போக முடியுமா என்று கனவு கண்டவள்! கணவரின் பணி ஓய்வுக்குப் பின், ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பாரீஸ், லண்டன், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா என்று பல நாடுகள் சுற்றிப் பார்த்தாச்சு! ஆல்ப்ஸ் மலையில் ஆசை தீர நடந்தும், தேம்ஸ் நதியில் படகிலும், அங்கோர்வாட் ஆலயமும் பார்த்து பிரமித்தேன்! இன்னமும் என் பயணங்கள் தொடர்கின்றன! பெண், பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து அழகான பேரக் குழந்தைகள்! விடுமுறை நாட்களில் என் வீடு பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகள் வருகையால் கூச்சலும், கும்மாளமுமாக இருக்கும்!
பொழுதுபோக்கு
நான் ஒரு எழுத்தாளர். ஆலய தரிசனக் கட்டுரைகள் நான் அதிகம் எழுதுவேன்.எந்த ஊருக்கு, எந்த நாட்டுக்கு சென்றாலும், அங்குள்ள ஆலயங்களைப் பற்றி இணையதளம் மூலம் அறிந்து கொண்டு அவற்றை தரிசித்து ஆன்மிக இதழ்களுக்கு எழுதுவேன். அது தவிர, சமையல் குறிப்புகள், சிறுகதை, பயண அனுபவங்கள் என்று நான் எழுதிய முன்னூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் பல தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன. radhabaloo.blogspot.comல் என் எழுத்துக்களை வாசிக்கலாம்!

நேர நிர்வாகம்

இருபத்து நான்கு மணி நேரம் போதாது எனக்கு! என் வீட்டில் வேலைக்கு ஆள் இல்லை. விடியகாலை எழுந்து, வாசலில் கோலம் போட்டு, வீட்டைப் பெருக்கி, துடைத்து (மாப்பில் அல்ல... கையால்) சமைத்தபின் ஒரு மணி நேரம் கணவருடன் இணைந்து பூஜை. பிறகு சாப்பிட்டு புத்தகங்கள் படிப்பதும், கட்டுரைகள் எழுதுவதுமாக மதியம் ஆகிவிடும். அரைப்பதற்கு மிக்சி, கிரைண்டர் உபயோகிப்பதில்லை நான். அம்மியும், கல்லுரலும்தான் என் இயந்திரங்கள்!

நான் தொலைக்காட்சி தொடர் பார்க்கும் நேரம் துணிகளை இஸ்திரி செய்து விடுவேன்! மாலை அரை மணி நேரம் வாக்கிங். பின் இரவு சமையல்...அவ்வப்போது வாட்ஸப்பில் அரட்டை... இரவு ஆன்லைன் விளையாட்டு என்று நேரம்
  பறந்துவிடும்! பொன்னான நேரத்தை வீணடிக்காமல் நம் வேலைகளை செய்து கொள்வதுதானே நேர நிர்வாகம்!

சமையல்
சிறுதானியங்களால் செய்யும் பொங்கல், உப்புமா, இட்லி, தோசை எனது இப்போதைய ஸ்பெஷல். பாரம்பரிய வித்தியாசமான என் சமையல்களை அறுசுவைக் களஞ்சியம் (arusuvaikkalanjiyam.blogspot.com )என்ற பிளாக்கில் காணலாம்.
பணி
அலுவலகம் சென்று வேலை பார்க்க எனக்கு மிகவும் ஆசை. அந்த ஆசை நிறைவேறவில்லை! இன்றும் வேலைக்கு போகும் பெண்களைக் காணும்போது அந்த ஏக்கம் என் கண்களில் எட்டிப் பார்ப்பதுண்டு!

கடந்து வந்த பாதை
கலக்கங்கள், சறுக்கல்கள், வருத்தங்கள் இருந்தாலும் போனதை நினைத்து நான் வருந்துவதில்லை. ‘இன்று புதிதாய் பிறந்தோம்’ என்று ஒவ்வொரு நாளையும் புத்துணர்வோடு எதிர் கொள்வேன். நம் கையில் இருக்கும் இந்த நாளை நல்லபடி வாழ்ந்தால் கண்டிப்பாக வாழ்க்கை நம் வசமே!

பிடித்த பெண்கள்
என் மூத்த மருமகள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவள். ஆனால், அவள் மரியாதையுடன் பழகும் விதமும், அனைவரிடமும் அன்பு காட்டுவதும், என் மகன், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதிலும் அவளைப் போல யாரும் இருக்க முடியாது, அவ்வளவு பொறுமை. இரண்டாம் மருமகளோ விட்டுக் கொடுத்து நடப்பது, தவறுகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது, வெளியாரையும் உறவுமுறை சொல்லி அழைப்பது, நல்ல விஷயங்களைத் தயங்காமல் பாராட்டுவது என்று பல சிறப்பான குணங்களைக் கொண்டவள். மகளை விட மேலான மருமகள்கள்!
வாழ்க்கை...
ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினிலே நெசவு நெய்தது வாழ்க்கை.வாழ்க்கை வாழ்வதற்கே...’ என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழ்பவள் நான். சோகத்தையும், சண்டைகளையும் கூட உடனே மறந்து விடுவேன். கையில் கிடைத்திருக்கும் இந்த இனிய நாளை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். தீய எண்ணங்களை நீக்கி, அடுத்தவர் மனதை நோகடிக்காமல், நல்லவற்றையே செய்து வாழ வரம் கொடு இறைவா என்பதே என் தினசரி பிரார்த்தனை.



தணிக்கை செய்யப்படாத என்னைப் பற்றிய தகவல்கள்

1. நான் ஒரு மனுஷியாக. தாயாக. தோழியாக...
நல்ல எண்ணம், திடமனம், எதற்கும் கலங்காமல் வருவதை ஏற்கும் மனப்பக்குவம், கடவுள் தியானம், சிரித்த முகம், இனிய பேச்சு, இளமையான சிந்தனை....ஒரு மனுஷிக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்? இதுதான் நான்!

தாயாக...
இந்தி போராட்டத்தின் சமயம் பள்ளிப் படிப்பு. இந்தியில் வா, போவுக்கு கூட என்ன சொல்வது என்று தெரியாது. என் கணவர் உதவியுடன் இந்தி கற்றுக் கொண்டேன்.அடுத்தடுத்து குழந்தைகள்; இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாறுதல். பிள்ளைகள் படிப்பு, வீட்டுப் பொறுப்பு என்று இறக்கை கட்டி ஓடிய நாட்கள் அவை. அடிக்கடி  பள்ளி மாறினாலும்,எல்லாவற்றிலும் முதலாவதாக வந்து,எல்லா போட்டிகளிலும்  பங்கு பெற்று பரிசுகளையும் பெறத் தவறியதில்லை என் பிள்ளைகள். முதல் மகனும், கடைசி  மகனும் +2 வில் தமிழகத்தில்  மாநில அளவில் மூன்றாவது இடமும், முதல் இடமும் பெற்று என்னை ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வைத்தனர்.மாநில முதலிடம் பெற்ற என் இரண்டாவது மகன்  KKR பாமாயில் கம்பெனியார் அளித்த மாருதி 800 காரைப் பரிசாகப் பெற்றான்.என் இரண்டு பிள்ளைகள் பொறியியலில் முனைவர் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்று ஜெர்மனியிலும், சிங்கப்பூரிலும் பணிபுரிகின்றனர். இரண்டாம் மகன் முதுநிலை வணிக மேலாண்மை (M.B.A)படித்து சுயதொழில் செய்கிறான்.ஒரே மகள் மருத்துவர்.
தோழியாக...
என் தோழி முத்துலட்சுமி ஈரோடில் இருக்கிறாள். சின்னவயதுத் தோழியோ, பள்ளித் தோழியோ அல்ல.எங்கள் நட்பு ஏற்பட்டதே எங்கள் நாற்பது வயதுக்கு மேல்தான்.அடுத்தடுத்த வீடுகளில் இருந்த நாங்கள் ஒரே பள்ளியில் படித்த எங்கள் பிள்ளைகளால் தோழிகள் ஆனோம். இருவர் எண்ணங்களும் ஒன்றாக இருக்க, கடந்த இருபத்து வருடத்துக்கு மேலானது எங்கள் நட்பு. அடிக்கடி சந்தித்துக் கொள்வோம்.ஒருவருக்கொருவர் ஆலோசனை கேட்டுக் கொள்வதும், எங்களின் சுக, துக்கங்களை பரிமாறிக் கொள்வதும் உண்டு. நம் நெருங்கிய சொந்தங்களிடம் கூடப் பேச முடியாத விஷயங்களை மனம் திறந்து பேச முடிவது மனதுக்குகந்த தோழியிடம் மட்டுமே! அவள் எனக்கு தோழி மட்டுமல்ல;என் உடன் பிறவா சகோதரியும் கூட!

2. பள்ளியும் ஆசிரியர்களும். பள்ளி போதித்தது...
சென்னை கோடம்பாக்கம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிதான் என் படிப்பிற்கான அஸ்திவாரம். அதன்பின்பு என் தந்தையின் அலுவலக மாறுதலால் ஈரோடின் புகழ் பெற்ற பள்ளியான கலைமகள் கல்வி நிலையத்தில் படித்தேன். இரு பள்ளிகளிலும் நான் கற்ற தமிழ் அறிவே இன்று எனக்கு சரளமாக தமிழில் எழுதக் கைகொடுக்கின்றது.

3. இப்போது வசிக்கும் ஊர் குறித்து...
 கற்றுக் கொண்டதும் பெற்றுக் கொண்டதும்...
 அங்கே ரசிக்கும் உணவு மற்றும் கலாசாரம்
வங்கி  அதிகாரியான என் கணவரின் இட மாறுதல்களால் பல மாநிலங்களில், பல ஊர்களில் வாசம். அதனால் கிடைத்த அனுபவங்கள் பல. அதன்பின் குழந்தைகள் திருமணம், அவர்களின் பிள்ளைப் பேறு என்று வரிசையாக கடமைகள்.அனைத்தும் முடிந்த நிலையில் நமக்காக வாழ்வோம் என்ற எண்ணம் எனக்குத் தோன்ற, என் கணவரிடம் என் தனிக் குடித்தன ஆசையை சொன்னேன்! அவர் ஓகே சொல்லிவிட திருச்சியில் தற்போது வாசம்.திருச்சியைப் பற்றி சொல்ல வார்த்தைகள் ஏது? பாரதத்தின் சுத்தமான நகரங்களில் இரண்டாமிடம் பெற்ற திருச்சி அழகான, பெரிய நகரம் என்பதால் அனைவரின் விருப்பத்திற்கேற்ப ஒரு வீட்டை வாங்கி சொந்த வீட்டில் தற்போது வாழ்க்கை.காலை எழுந்ததும் மூன்றாம் மாடியிலுள்ள என் வீட்டின் சமையலறை சன்னல் வழியே மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்லிவிட்டே என் வேலைகளை ஆரம்பிப்பேன். மாடியிலிருந்து ஸ்ரீரங்ககோபுர தரிசனம்.அமைதியான, ஆனந்தமான, ஆன்மீக வாழ்வு. குறையில்லா வாழ்வைத் தந்த அந்த இறைவனை இருகரம் கூப்பி வணங்குகிறேன்.
4. பிடித்த புத்தகங்கள்
ஆன்மீக புத்தகங்கள் மிகவும் பிடிக்கும்.ராஜாஜியின் சக்கரவர்த்தி திருமகனும், வியாசர் விருந்தும் பலமுறை படித்திருக்கிறேன்.கல்கியின் தியாகபூமி என்னால் மறக்க முடியாத என் மனதைத் தொட்ட நாவல். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்,...லக்ஷ்மியின் பெண்மனம், சிவசங்கரியின் சின்ன நூல்கண்டா நம்மை சிறைப் படுத்துவது, பாலகுமாரனின் தாயுமானவன்,கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் மற்றும் அனுராதாரமணன், வாஸந்தி, , சாண்டில்யன், தேவிபாலா, ராஜேஷ்குமார் என்று அத்தனை பேரின் கதைகளையும் படிக்கப் பிடிக்கும்.நிறைய கதைப் புத்தகங்கள் படித்ததால்தான் கதை, கட்டுரைகள் எழுதும் ஆர்வமும் எனக்கு ஏற்பட்டது.

5 குடும்பம்
பதினெட்டு வயதில் திருமணம்.கணவர் வங்கி ஊழியர். வங்கி அதிகாரியாக முசிறியில் பணியில் இருந்தார் என் தந்தை. கணவர் பணி திருச்சியில்.நினைத்தால் ஒருமணி நேரத்தில் பிறந்த வீடு என்ற ஏக சந்தோஷத்தில் நான்! எட்டே மாதங்களில் அதிகாரியாகப் பணி  உயர்வுடன் என் கணவருக்கு வடக்கே மதுராவுக்கு மாற்றலாக, கண்ணில் கண்ணீருடன் அம்மா, அப்பாவைப் பிரிந்து சென்றேன்.அன்பான,கோபம் என்றால் என்னவென்றே தெரியாத பாசமான கணவர்.அன்று முதல் இன்றுவரை நாற்பது வருடங்களாக என் மனம் கோணாமல் நடந்து கொள்ளும் மஹானுபாவர்! எல்லா வேலைகளிலும் எனக்கு உதவும் கரங்கள் கொண்டவர்! நான் கோபப் பட்டாலும், அதைப் பெரிது படுத்தாமல் அடுத்த நிமிடம் குழந்தை போல குழைந்து பேசும் குறும்பு மனிதர்! குழந்தைகளிடம் அளவு கடந்த பாசம்! சாதாரணமாக எல்லா வீடுகளிலும் தந்தைதான் கண்டிப்பு, தாயிடம் எதுவும் கேட்டுப் பெறலாம் என்பது பிள்ளைகளின் வழக்கமாக இருக்கும்.ஆனால் என் வீட்டிலோ நான்தான் அதிக கண்டிப்பானவள்.எதைக் கேட்டாலும் உடன் செய்து தருபவர் என் கணவரே!
திருமணமான சில மாதங்களிலேயே உ.பிக்கு மாற்றல். கண்ணன் பிறந்த மதுராவிலும், காதல் சின்னம் காட்சி தரும் ஆக்ராவிலும் 6 வருட வாசம். அதன் பின் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இருந்த பின் 10 வருடங்களுக்கு பின்  மீண்டும்  மும்பை வாசம்.நான் எழுத்தாளர் மணியனின் பயணக் கட்டுரைகளைப் படித்து பாரிசுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் போக முடியுமா என்று கனவு கண்டவள்! கணவரின் பணி ஓய்வுக்குப் பின், ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பாரிஸ்,லண்டன், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா  என்று பல நாடுகள் சுற்றிப் பார்த்தாச்சு! ஆல்ப்ஸ் மலையில் ஆசை தீர நடந்தும்,தேம்ஸ் நதியில் படகிலும்,அங்கோர்வாட் ஆலயமும் பார்த்து பிரமித்தேன்! இன்னமும் என் பயணங்கள் தொடர்கின்றன! பெண், பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து அழகான பேரக் குழந்தைகள்! விடுமுறை நாட்களில் என் வீடு பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகள் வருகையால் கூச்சலும், கும்மாளமுமாக இருக்கும்! எங்கள்  குடும்பம் நல்லதொரு பல்கலைக் கழகம் மட்டுமல்ல...பல்சுவை அரங்கமும் கூட!
6.பொழுதுபோக்கு
நான் ஒரு எழுத்தாளர். ஆலய தரிசனக் கட்டுரைகள் நான் அதிகம் எழுதுவேன். எந்த ஊருக்கு, எந்த நாட்டுக்கு சென்றாலும், அங்குள்ள ஆலயங்களைப் பற்றி இணையதளம் மூலம் அறிந்து கொண்டு அவற்றை தரிசித்து ஆன்மீக இதழ்களுக்கு எழுதுவேன். அது தவிர சமையல்குறிப்புகள் , சிறுகதை, பயண அனுபவங்கள் என்று நான் எழுதிய முன்னூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் பல தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன. நான் ஒரு ப்ளாகர். radhabaloo.blogspot.comல் என் எழுத்துக்களை வாசிக்கலாம்!
7. இயற்கை உங்கள் பார்வையில்...
இயற்கையை நாம் மதித்தால் நம்மைக் காக்கும்;அதை அவமதித்தால் நம்மை சீரழிக்கும்.இதை நாம் தற்போது கண்கூடாகப்பார்க்கிறோமே!
8.  சமூகம் உங்கள் பார்வையில்...
உண்மை எது, பொய் எது, யார் நல்லவர், யார் தீயவர்....ஒண்ணுமே புரியலே உலகத்திலே... என்னமோ நடக்குது..மர்மமாய் இருக்குது...ஆம்....யாரையும், எதையும் நம்ப முடியவில்லை.கொலை, கொள்ளை, பொய்,திருட்டு, நயவஞ்சகம், லஞ்சம்,ஊழல், அவமரியாதை, பெண்களிடம் வன்முறை...நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்ற பாரதியின் வரிகள் இன்று நூறு சதம் உண்மையாகி விட்டது. இந்நிலை என்று மாறுமோ?
9. மனிதர்கள்
மனித நேயம் உள்ளவர்கள்தான் மனிதர்கள். இந்நாளைய பெரும்பாலான மனிதர்களிடம் மனிதமும், நேயமும் இல்லாமல்  பணத்தின் பின்னால் ஓடும் கேவலம் அதிகரித்து விட்டது. அடுத்தவர்களுக்காக உண்மையாக, மன நிறைவோடு தொண்டு செய்யும் மனிதர்கள் அதிகரிக்கும் நாளே பொன்னாளாகும்.அந்த நாள் விரைவில் வர ஆண்டவனைப் பிரார்த்திகிறேன்.
10 . பிறந்த ஊர் . சொந்தங்கள்,
மகாமகப் புகழ் பெற்ற கோவில் நகரமான ஃபில்டர் காபிக்கு பெயர் பெற்ற கும்பகோணம் பிறந்த ஊர்.புகுந்த வீடும் குடந்தை அருகில்.அம்மா, அப்பா,கணவர் பக்கங்களில் நிறைய உறவுகள். அத்தனை பேருக்கும் நான் ஸ்பெஷல்! காரணம் முகம் சுளிக்காத புன்முறுவலுடன் நான் அனைவரிடமும் பழகும் விதம்.
11. நேர நிர்வாகம்
இருபத்துநான்கு மணி நேரம் போதாது எனக்கு! என் வீட்டில் வேலைக்கு ஆள்  இல்லை.. விடிகாலை எழுந்து வாசலில் கோலம் போட்டு வீட்டை பெருக்கி, துடைத்து (மோப்பில் அல்ல...கையால்) சமைத்தபின் ஒரு மணி நேரம் கணவருடன் இணைந்து பூஜை.பிறகு சாப்பிட்டு புத்தகங்கள் படிப்பதும், கட்டுரைகள் எழுதுவதுமாக மதியம் ஆகிவிடும். அரைப்பதற்கு மிக்சி, கிரைண்டர் உபயோகிப்பதில்லை நான். அம்மியும், கல்லுரலும்தான் என் இயந்திரங்கள்! இட்லி, தோசைக்கு அரைக்கும் நேரத்தில் கம்ப்யூட்டரில் நல்ல படங்களைப் பார்த்து விடுவேன்.என் தொலைக்காட்சி தொடர் பார்க்கும் நேரம் துணிகளை இஸ்திரி செய்து விடுவேன்! மாலை அரை மணி நேரம் வாக்கிங். பின் இரவு சமையல்...அவ்வப்போது வாட்ஸப்பில் அரட்டை...இரவு ஆன்லைன் விளையாட்டு என்று நேரம் இறக்கை கட்டிப் பறந்துவிடும்! பொன்னான நேரத்தை வீணடிக்காமல் நம் வேலைகளை செய்து கொள்வதுதானே நேர நிர்வாகம்!
12. சமையல்
சமையல்....எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். என் அம்மா, மாமியாரிடமிருந்து கற்ற அந்தக்கால சமையலில் நான் திறமைசாலி. என் மகள், மருமகள்கள் சமைக்கும் நவீன சமையல்களும், தொலைக்காட்சியில் பார்த்தும், புத்தகங்களில் படித்தும் செய்து பார்ப்பேன்.சிறுதானியங்களால் செய்யும் பொங்கல், உப்புமா, இட்லி, தோசை எனது இப்போதைய ஸ்பெஷல்.என் கணவரும், குழந்தைகளும் சாப்பிடுவதில் மிக விருப்பம் உள்ளவர்கள்; பாரம்பரிய வித்யாசமான என் சமையல்களை அறுசுவைக்களஞ்சியம் arusuvaikkalanjiyam.blogspot.com என்ற ப்ளாகில் காணலாம்.என்னதான் வித விதமாக சமைத்தாலும்,ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் என் அம்மா செய்த வெங்காய சாம்பாரின் சுவையும்,பாதுஷாவின் இனிப்பும் தனிதான்.
13  பிற கலைகள்
கோலம், தையல், பாட்டு, ஓவியம், கைவேலை என்று அத்தனையும் கற்றுக்கொள்ள என்னை ஊக்குவித்தது என் அம்மாதான்.எங்கள் வீட்டு கொலுவில் நம் பாரம்பரிய பொம்மைகளோடு,வெளிநாட்டு பொம்மைகளும் நிறைய உண்டு. தேவையற்ற பொருள்களும் என் கைவண்ணத்தில் உருமாறி புதிதான ஒன்றாகக் காட்சி அளிக்கும். எங்கள் வீட்டு ஹால் பத்து நாட்கள் பளபளவென்று ஜொலிக்கும்! ரங்கோலி, தேவி ஸ்லோகங்கள், பாராயணம் என்று பக்தி பூர்வமாக இருக்கும்.மார்கழி முழுதும் என் வண்ணக் கோலங்களால் வீட்டு வாசல் அழகு பெறும்.என்னுடைய உடைகளை நானே தைக்கும் அளவு தையலில் தேர்ச்சி பெற்றவள்.
14 office / work
அலுவலகம் சென்று வேலை பார்க்க எனக்கு மிகவும் ஆசை. அந்த ஆசை நிறைவேறவில்லை! இன்றும் வேலைக்கு போகும் பெண்களைக் காணும்போது அந்த ஏக்கம் என் கண்களில் எட்டிப் பார்ப்பதுண்டு!
15. கடந்து வந்த பாதை எப்படி இருக்கிறது?
கடந்து வந்த பாதையில் கலக்கங்கள், சறுக்கல்கள், வருத்தங்கள் இருந்தாலும் போனதை நினைத்து நான் வருந்துவதில்லை. 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்று ஒவ்வொரு நாளையும் புத்துணர்வோடு எதிர் கொள்வேன்.நேற்று முடிந்து விட்டது; நாளை பற்றி நாம் அறியோம்; நம் கையில் இருக்கும் இந்த நாளை நல்லபடி வாழ்ந்தால் கண்டிப்பாக வாழ்க்கை நம் வசமே! தொல்லைகள் மறந்த பிள்ளை நிலை இருந்தால் யாரிடமும் கோபமோ, வெறுப்போ ஏற்படாதே!
16. சினிமா
வீரபாண்டிய கட்டபொம்மன், வியட்நாம் வீடு, தில்லானா மோகனாம்பாள், உலகம் சுற்றிய வாலிபன்,மூன்றாம்பிறை,பதினாறு வயதினிலே போன்ற படங்களை மறக்க முடியுமா? இப்பொழுதெல்லாம் எந்தப் படத்திலும் கதை சுவாரசியமாக இருப்பதில்லை. திரை அரங்குக்கு செல்வதைவிட ஆன்லைனில்தான் படங்கள் பார்க்கிறேன். தொல்லைகள் மறந்த பிள்ளை நிலை இருந்தால் யாரிடமும் கோபமோ, வெறுப்போ ஏற்படாதே!
17. உடல் நலம் - மன நலம்
இன்றுவரை உடல்நலத்தில் எந்தக் குறையும் இல்லை.வாழ்க்கையை அதன் போக்கிலேயே ஏற்றுக் கொண்டு, மனத்தைக் குரங்காக அலைய விடாமல், தேவையற்ற விஷயங்களை டெலிட் செய்து, நல்ல விஷயங்களை மட்டுமே இன்பாக்ஸாகிய மனதில் வைத்துக் கொண்டால் மன நலம் சீராக இருக்கும்.  
18.  நீங்கள் எழுதியதில் உங்களுக்குப் பிடித்தவை
ஒரு தாய்க்கு குழந்தைகளிடம் வித்யாசம் உண்டா? சாமான் கட்டி வரும் காகிதங்களைக் கூட விட்டு வைக்காமல் அதில் வரும் செய்திகளைப் படித்து, அதை பத்திரிகைகளில் எழுதியும் இருக்கிறேன்! நான் எழுதிய சின்ன சின்னக் கருத்துகள் கூட என்னைக் கவர்ந்தவைதான்.நான் எழுதிய சிறுகதைகளில் மங்கையர் மலரில் வெளியான 'வீடு தேடி வந்த சக்தி'எனக்கு மிகவும் பிடித்த கதை.
19. இசை
பத்து வருடங்கள் ஒரு தேர்ந்த இசை ஆசிரியரிடம் பாட்டு கற்றுக் கொண்டேன்.பல நிகழ்ச்சிகளில் பாடியது உண்டு.நவிமும்பையில்  இருந்தபோது திரு சுகி. சிவம் அவர்களின் சொற்பொழிவில் .தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதும்,என் கடைசி மகனுடன்  இணைந்து 'அந்திமழை பொழிகிறது' திரைப் படப் பாடலை ஒரு திரைஇசை நிகழ்ச்சியில் மேடையில் பாடியதும்  மறக்க முடியாத அனுபவங்கள்.
20. பிடித்த ஆளுமைகள்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அன்னை தெரசா  
21. பிடித்த பெண்கள் - குடும்பத்தில், வெளியில்
என் மூத்த மருமகள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவள். ஆனால் அவள் மரியாதையுடன் பழகும் விதமும், அனைவரிடமும் அன்பு காட்டுவதும், என் மகன், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதிலும் அவளைப் போல யாரும் இருக்க முடியாது,அவ்வளவு பொறுமை. ஒருவரையும் அவள் கடிந்து பேசி நான் பார்த்ததில்லை.இரண்டாம் மருமகளோ விட்டுக் கொடுத்து நடப்பது, தவறுகளைப் பெரிது படுத்தாமல் இருப்பது, வெளியாரையும் உறவுமுறை சொல்லி அழைப்பது, யார் நல்ல விஷயங்களை செய்தாலும் தயங்காமல் பாராட்டுவது என்று பல சிறப்பான குணங்களைக் கொண்டவள்.அவர்கள் என் மகளை விட மேலான மருமகள்கள்! 
22. நகைச்சுவை நிகழ்ச்சிகள் வாழ்க்கையில்
நாங்கள்கோலாப்பூரில் இருந்த சமயம் எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு பீகாரை சேர்ந்த தம்பதிகள் இருந்தனர். அந்தப் பெண்ணின் 5 மாதமான குழந்தை பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் இருப்பாள்.ஒருநாள் என் மகன் அறையில் இருந்த படங்களைக் காட்டி 'பாப்பா பாரு'என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதில் ஷாருக்கானின் படமும் இருந்தது.சரியாக அச்சமயம் அங்கு வந்த அந்தப் பெண் நான் பாப்பா என்று ஷாருக்கான் படத்தைக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு கோபமாக,'ஆண்ட்டி...ஷாரூக்கானைப் போய் பாப்பானு சொல்லிக் குடுக்காதீங்க' என்று சொல்லி,குழந்தையை வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.என் பிள்ளைகளிடம் இதைச் சொன்னபோது 'பாப்பா என்றால் ஹிந்தியில் அப்பா என்று பொருள்.அதனால்தான் அப்படி சொல்லியிருக்கிறாள்' என்று சொல்லி சிரித்தார்கள்; அவள் கோபத்தின் காரணம் புரிந்து நானும் சிரித்தேன்! இன்றும் இதைச் சொல்லி நாங்கள் சிரிப்போம்!.தமிழ் பாப்பாவுக்கும்,ஹிந்தி பாப்பாவுக்கும் எத்தனை பெரிய வித்யாசம்!
23. ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும்
முகநூல் பல முகம் தெரியா நட்புக்களைப் பெற்றுத் தந்தது. பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. சமீபத்தில் நம் பிரதமர் திரு மோடி அவர்களின் முகநூல் பக்கத்தில் லைக் போட்டுவிட்டேன். தினமும் தன்  நிகழ்ச்சிகளை அதில் அவர் பதிய, அது என் முகநூல் பக்கத்துக்கு வந்துவிடும்!
24. அழகென்பது
இறைவனின் படைப்பில் சின்ன தும்பைப்பூ முதல் பெரிய டைனோசர் வரை அத்தனையும் அழகுதான்! மனிதர்களுக்கு அழகு உருவத்தால் அல்ல.என்னைப் பொருத்தவரை உள்ளத்தில் அன்பும், பண்பும், மரியாதையும்,கருணையும்,புன்முறுவலும்,உற்சாகமும் இருக்கும் அத்தனை பேரும் அழகுதான் என்பேன்.
25. வீடு
வீடு நமக்கு மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும், இன்பமும் தருவதாக இருக்க வேண்டும்.உள்நுழைந்ததும் நம் கவலைகளைப் புறம் தள்ளி சுதந்திரமாக இருக்க வேண்டும். நாம் எங்கு சென்றாலும்,எத்தனை மகிழ்ச்சியாக இருந்தாலும் அப்பாடா என்று நம் வீட்டில் வந்து படுக்கும் சுகம் இருக்கிறதே ...அதற்கு இணையே கிடையாது! எத்தனை அசௌகரியங்கள் இருந்தாலும்,வசதிக் குறைவுகள் இருந்தாலும் அது நம் சொந்த வீடு என்கிறபோது அவை காணாமல் போய் ஒரு நிம்மதி தோன்றுவதை எவரும் உணரலாம். சொர்க்கமே என்றாலும் நம்மூர் மட்டுமல்ல...நம் வீட்டைப் போலவும் வராது.எங்கள் வீட்டின் அழகே ஊஞ்சல்தான். வீடு வாங்கியதும் எங்கள் கிராமத்திலிருந்து தேக்கிலான ஊஞ்சல் செய்து மாட்டினோம்.புத்தகம் படிப்பதும், தொலைக் காட்சி பார்ப்பதும்,நானும், என் கணவரும் உல்லாசமாக ஆடிக்கொண்டே மலரும் நினைவுகளைப் பேசி மகிழ்வதும் ஊஞ்சலில்தான்!என் பேரன், பேத்திகள் விடுமுறை விட்டதும் ஊஞ்சல் ஆடவேன்றே வந்து விடுவார்கள்.மொத்தத்தில் என் வீவீடு களிப்பின் எல்லை!
26. வாழ்க்கை உங்கள் பார்வையில்...
ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினிலே
நெசவு நெய்தது வாழ்க்கை.
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழ்பவள் நான். சோகத்தையும், சண்டைகளையும் கூட உடனே மறந்து விடுவேன்.கையில் கிடைத்திருக்கும் இந்த இனிய நாளை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். தீய எண்ணங்களை நீக்கி, அடுத்தவர் மனதை நோகடிக்காமல், நல்லவற்றையே செய்து வாழ வரம்கொடு இறைவா என்பதே என் தினசரி பிரார்த்தனை.
27. எழுத்தும் வாசிப்பும்
எழுத்தும், வாசிப்பும்தான் என் வாழ்க்கை. நாவல்களோ, வார, மாத இதழ்களோ, கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பக்கம் விடாமல் ரசித்து, அனுபவித்து படிக்கும் ஆசை கொண்டவள் நான்.கணினியில் கதை படிப்பது எனக்கு சிறிதும் பிடிக்காது.முப்பது ஆண்டுகளுக்கு முன் என் கட்டுரை முதன் முதலாக பிரபல பெண்கள் மாத இதழில் வந்தபோது, பெருமைப் பட்டு சந்தோஷமானவர்கள் என் அன்புத் தாயும், ஆசைக் கணவரும்.அவரது ஊக்கம், என் அன்புக் குழந்தைகளின் பாராட்டு இவையே என் எழுத்துக்களுக்கு ஆதாரம்.
28. புகைப்படக்கலை (or)  உங்கள் விருப்பமான கலை
புகைப்படம் எடுப்பது எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று. காமிராவில் எடுப்பதைவிட என் மொபைலிலேயே இப்பொழுதெல்லாம் புகைப்படம் எடுக்க முடிகிறதே. நான் அடிக்கடி பயணங்கள் செய்து கொண்டே இருப்பதால் காமிரா இல்லாமல் நான் செல்வதில்லை.
29. இவை தவிர நீங்கள் கூற விரும்புபவை.
என் எழுத்துக்களை படித்தவர்கள் என்னைப் பற்றி தெரிந்து பாராட்டும்போதும், என் கட்டுரைகளை இணையதளத்தில் படித்தவர்கள் கடிதம் எழுதி எனக்கு  ஊக்கம் தரும்போதும்,புதிதாய்ப் பார்ப்பவர்கள் என்னைப் பற்றி அறிந்து 'அட...நீங்களா ராதாபாலு' என்று கேட்கும்போதும்,பாரம்பரியப் பத்திரிகைகளான மங்கையர் மலர், கல்கி குழுமத்தின் தீபம், குமுதம் சிநேகிதி, ஹிந்து தமிழ் இவற்றில் என் எழுத்துக்கள் அடிக்கடி வெளியாகும்போதும் என் மனம் வானில் சிறகடித்து பறக்கும்! என்னையும் சிலர் அறிந்திருப்பது எனக்கு சொல்லவொண்ணா மகிழ்ச்சி தரும்!
30. குங்குமம் தோழி இதழ் பற்றி உங்கள் கருத்துகள்
மற்ற பெண்கள் பத்திரிகைகளில் இருந்து வித்யாசமான பல பகுதிகளைக் கொண்டிருக்கும் குங்குமம் தோழி இதழ், குங்குமம் வைத்த குடும்பப் பெண்களின் மனம் கவர் தோழி என்பதில் சந்தேகம் இல்லை!
31. குங்குமம் தோழி இதழில் இடம் பெற வேண்டிய புதிய பகுதிகள் / விஷயங்கள்
தோழியில் எல்லா வயதுப் பெண்களுக்கும் தேவையான அனைத்து விஷயங்களும் வெளிவருகிறது. கோலப்பகுதி ஒன்று ஆரம்பிக்கலாமே?