தி
இந்து தமிழ் நாளிதழ் இணைப்பான ‘பெண் இன்று’ 28-05-2017 அன்று வெளியான சுற்றுலா பற்றிய
செய்தி
கடல்
மட்டத்திலிருந்து 3555 அடி உயரத்தில் இயற்கை எழிலுடன்
அமைந்துள்ள பச்மரி(Pachmari), மத்திய பிரதேசத்திலுள்ள ஒரே
குளிர்வாச ஸ்தலம். விந்திய சாத்புரா மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த இடம்
சாத்புராவின் ராணி என அழைக்கப்படுகிறது. 1875ல் ஜேம்ஸ் ஃ
போர்ஸித் என்ற ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடம் அழகின் இருப்பிடம்! ஒரு
உல்லாசப்பொழுதுபோக்கு இடத்திற்கான அத்தனை விஷயங்களும்அளவின்றிக் கொட்டிக்
கிடக்கும் அற்புதசுற்றுலாத்தலம்!
பளிங்கு
போல் விழும் அருவிகள்,நெளிந்து ஓடும் நீரோடைகள்,அடர்ந்த காடுகள், 1000 வருடத்துக்கு முந்தைய
கலாச்சாரம் பற்றி அறியவைக்கும் குகை ஓவியங்கள், சிவாலயங்கள்,
அழகிய வேலைப்பாடமைந்த கண்ணாடி சன்னல்களுடனான சர்ச்சுகள், கோண்ட் என்ற பழங்குடி மக்களின் நடனம், மிதமான குளிர்
என்று அத்தனையும் கண்ணுக்கும், மனதுக்கும் பெருவிருந்து!
பஞ்சபாண்டவர்கள்
அஞ்ஞாதவாசத்தின்போது இங்கு வாழ்ந்ததன் அடையாளமான ஐந்து பாண்டவர் குகைகள்
உள்ளன.அதன் பெயராலேயே இவ்விடம் பச்மரி...அதாவது பாஞ்ச் என்றால் ஐந்து, மரி என்றால் குகை என்பதைக் கொண்டே பச்மரி எனப்படுகிறது.
சாத்புரா
நேஷனல் பார்க் என்ற வனவிலங்கு சரணாலயம், அன்னை
இந்திராகாந்தி 1964ல் வந்ததன் அடையாளமாக பெயரிடப்பட்ட
பிரியதர்ஷினி பாயிண்ட், கண்ணைப் பறிக்கும் 150 அடி உயர பீஃபால்ஸ்(Bee Falls), டட்ச் ஃ பால்ஸ்,
350 அடி உயர ரஜத் ஃ பால்ஸ், இரு உயர்ந்த
மலைகளுக்கிடையே பயங்கரமான வீ வடிவ ஹண்டிகோ என்ற பள்ளத்தாக்கு, சூர்ய உதயமும், அஸ்தமனமும் அழகுறக் காட்டும் 4400 அடி உயர தூப்கார், மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்டு, மூன்று வாசல்களுடைய ஒரு கோட்டை போல உயர்ந்து நிற்கும் ரீச்கரின் மிரட்டும்
அழகு... இவற்றில் நாம் நம்மையே மறந்துவிடுவோம்..
சிவபெருமானின்
வாசஸ்தலங்களான மஹாதேவ், ஜடாசங்கர், சவுராகர் இவை ஆன்மீக பக்தர்கள் தரிசிக்க வேண்டிய சிவாலயங்கள். பஸ்மாசுரனுக்கு
வரம் கொடுத்த சிவபெருமான், அவன் அவரையே தலையில் கைவைத்து
சாபத்தை பரீட்சிக்க வந்தபோது அவரது ஜடை, நாகம், திரிசூலம் இவற்றை மேற்கூறிய இடங்களில் வைத்துவிட்டு, தான் அங்கிருந்த குகைக்குள் ஒளிந்து கொண்டாராம். அக்குகையில் இன்றும்
இறைவனை தரிசிக்கலாம்.
காஷ்மீர், சிம்லா போன்று அனைவரும் அறியாத இடமாக இது இருப்பதன் காரணம் இங்கு ரயில்,
பஸ் வசதி இல்லாததே. போபால் மற்றும் ஜபல்பூரிலிருந்து இவ்விடம்
செல்லலாம். ஹௌரா- மும்பை ரயில்பாதையிலுள்ள பிப்பாரியா என்ற ரயில் நிலையத்தில்
இறங்கி, வேன், ஜீப்புகள் மூலமாக
செல்லலாம்.நிறைய ஹோட்டல்கள் உள்ளன.அதிகம் யாரும் அறியாத மறைந்திருக்கும் புதையலாக,அதிக மக்கள் கூட்டமில்லாத, மாசில்லாத அழகிய பச்மரி
அனைவரும் சென்று கண்டு களித்து அனுபவிக்க ஏற்ற சுற்றுலாத்தலம்!