Thanjai

Thanjai

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

வழித்துணைநாதர்



தீபம் அக்டோபர் 5, 2015 இதழில் வெளியானது

மகப்பேறு அருளும்  மார்க்கபந்தீஸ்வரர்







தன்னை மனம் ஒன்றி வணங்குபவர்களை அருளும், பொருளும்,அறிவும், செறிவும் பெற்று வாழ வைக்கும் இறைவன் ஈசன். அவன் அருளாட்சி செய்யும் ஆலயங்கள் பல. அவற்றுள் வேலூர் மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான, மிகப் பெரிய, பிரம்மாண்டமான  கலைத்திறன் நிறைந்த கண்ணையும், கருத்தையும் கவரும் அற்புதமான ஆலயம் ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர் ஆலயம்.

கோபுரம்
ஸ்வயம்பு லிங்கமாக இங்கு அருள் புரியும் மார்க்கபந்தீஸ்வரரின் கர்ப்பக்கிரகத்தின் மேல் கூரை ருத்ராட்சத்தால் வேயப்பட்ட சிறப்புடையது. ஆதிசங்கரருக்கு பின் அத்வைத சித்தாந்தத்தில் சிறந்த புலமை பெற்றிருந்த அப்பைய  தீட்சிதர் பிறந்த தலம் இது. திருமூலர், பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற 1300 ஆண்டுகள் பழமையான இத்தலம் விரிஞ்சிபுரம் என்ற பெயர் பெற்றது எப்படி?

கஜ ப்ருஷ்ட விமானம்

 
கருவறை
விரிஞ்சன்  என்பது படைக்கும் கடவுள் பிரம்மனின் பெயர். பரமசிவனின் அடியையும், முடியையும் கண்டு பிடிக்க  விஷ்ணுவும், பிரம்மனும் பாதாளத்திற்கும், ஆகாயத்திற்கும் சென்றது நாம் அறிந்த கதை. விஷ்ணு அடியைக் காணமுடியாத உண்மையை ஒப்புக் கொள்ள, அன்ன வடிவில் ஆகாயத்தில் சென்ற பிரம்மனோ கீழே விழுந்த தாழம்பூவுடன் வந்து பொய்யுரைத்ததும் நாம் அறிவோம். அந்த நான்முகனுக்கு தன் முடியைக் காட்டி அருளிய தலமே இது. அதன்பொருட்டே இத்தலம் விரிஞ்சிபுரம் ஆயிற்று.கௌரிதேவி இத்தல இறைவனை வழிபட்டு இங்குள்ள தீர்த்தத்தை உருவாக்கியதால் கௌரிபுரம் என்றும் அழைக்கப் படுகிறது. விஷ்ணுபுரம், மார்க்கபந்தீஸ்வரம் என்பவை வேறு பெயர்கள். இத்தலப்  பெருமைகள்  அருணாச்சல புராணம்,சிவரஹசியம், காஞ்சி புராணம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.


இவ்வாலயத்தில் இறைவனை ஆராதித்துவந்த சிவநாதன்-நயினானந்தினி தம்பதியர்க்கு சிவசர்மா என்ற மகனாகப் பிறந்தார் படைக்கும் கடவுளான பிரம்மன். மகனுக்கு உபநயனம் செய்யும் முன்பே தந்தை இறந்துவிட, தொடர்ந்து பூஜை செய்வது தடைப்பட்டது. தன்  மகனுக்கு பிரம்மோபதேசம் செய்து வைக்கும்படி நயினானந்தினி தன் உறவினரை வேண்ட, அவர்களோ ஆலய பராமரிப்பை தாமே ஏற்றுக் கொள்ளப் போவதாகக் கூறினார். மனம் நொந்த அந்தத் தாய் சிவபெருமானை வேண்டி நின்றாள். அவள் கனவில் தோன்றிய ஈசன், மறுநாள் சிவசர்மனை  பிரம்ம தீர்த்தத்தில்  நீராட்டி அழைத்துவரச் சொன்னார். அவளும் அப்படியே செய்து காத்திருக்க, ஈசன் வயோதிக வடிவில் அங்கு வந்து சிறுவனுக்கு பிரம்மோபதேசமும், சிவமந்திர  தீட்சையும் செய்து வைத்து பின் அவ்வாலயக் குளத்தினுள் சென்று மறைந்துவிட்டார்.

அவ்வூர் மன்னரின் கனவில் தோன்றிய இறைவன் சிவசர்மாவை ஊர்வலமாக ஆலயம் அழைத்துச் செல்லப் பணித்தார். அவ்வாறே ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவு தானாகவே திறந்தது. தீர்த்தக் குடத்துடன் உட்சென்ற பாலகன் இறைவனிடம் தீட்சை பெற்றதால், பூஜைகளை மரபு மாறாமல் செய்யலானான். அபிஷேகம் செய்ய தன்  உயரம் போதாமல் வருந்தினான். பாலனுக்கு அருள பரமசிவனும் தன் பாணத்தை சற்றே சாய்த்து அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். சிருஷ்டிகர்த்தாவாக இருந்தபோது காட்டாத தன் திருமுடியை, சிறுவனாக வந்து வணங்கிக் கேட்டபோது காட்டி அபிஷேகத்தை ஏற்றருளிய நாள் கார்த்திகை கடைசி ஞாயிறு.பணிவுடன் தன்னை வணங்குபவர்க்கு எதுவும் செய்வேன் என்று பாமரராகிய நமக்கும் பரம்பொருள் உணர்த்திய தலம் இது.அதே கோலத்தில் இன்றும் தலைமுடி சாய்ந்த மகாலிங்கமாக ஸ்ரீ மார்க்க பந்தீஸ்வரராகக் காட்சி தருகிறார்.

இவருக்கு மார்க்கபந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட ஒரு வரலாறு உள்ளது.குண்டல தேசத்து மிளகு வியாபாரியான தனபாலன் சிறந்த சிவபக்தன். அவனது மிளகு மூட்டைகளை வழிப்பறித் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். ஈசனிடம் முறையிட்ட தனபாலனுக்காக ஒரு வீரன் வடிவில் அவனுக்கு துணையாக வந்து அவர்களிடமிருந்து மிளகு மூட்டைகளைக் காப்பாற்றிக் கொடுத்ததுடன், காஞ்சீபுரம் வரை அவனுக்கு துணையாகச் சென்றதால் மார்க்கபந்தீஸ்வரர் அதாவது வழித்துணை நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. தன்னை வணங்கும் பக்தர்களை எந்த இன்னலிலும் கைவிடாமல் இம்மைக்கும், மறுமைக்கும் வழித்துணையாக வருவேன் என்று நமக்கு உணர்த்திய புண்ணியத் தலமாகும்.

இனி ஆலயத்தை தரிசிப்போம். 110 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய ஏழு நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரம் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. ஐந்து பிரகாரங்களைக் கொண்ட ஆலயத்தின் நெடிதுயர்ந்த மதில் சுவர்கள் 'திருவாரூர் தேரழகு...விரிஞ்சிபுரம் மதில் அழகு' என்ற வழக்குமொழிக்கேற்ப ஆலயத்துக்கு மேலும் அழகு சேர்க்கிறது. பல அழகிய மண்டபங்கள் அற்புதமான சிற்பக் கலையுடன் காட்சி அளிக்கின்றன. உள்ளே நுழைந்ததும் சுவாமிக்கும், அம்மனுக்குமென இரண்டு த்வஜஸ்தம்பங்களும், பலிபீடம், நந்தியும் உள்ளன. 


சுற்றி வரும்போது 14 தூண்களைக் கொண்ட சக்தி மண்டபமும், சிம்மத்தின் முகம் கொண்ட குளமும் அமைந்துள்ளது. இந்த சிம்மதீர்த்தமே மகளிரின் மழலை இல்லாக் குறையை தீர்க்கும் அற்புத குளம். கார்த்திகை மாதக் கடை ஞாயிறு அன்று குழந்தை இல்லாதவர்கள் பிரம்மதீர்த்தத்திலும், சூலி தீர்த்தத்திலும்,சிம்மதீர்த்தத்திலும் குளித்துவிட்டு இரவு ஆலயத்திலேயே உறங்க வேண்டும். அவர்கள் கனவில் இறைவன் தோன்றி அருள் செய்து அவர்களின் குறையை நீக்கி பிள்ளைப் பேறு தருவார் என்பது ஐதீகம்.பலருக்கும் இது இன்றுவரை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.ஆதிசங்கரரால் பீஜாக்ஷர பிரதிஷ்டை செய்யப்பட தீர்த்தம் இது எனக் கூறப்படுகிறது.

அடுத்து இறைவனின் கருவறைக்கு செல்வோம். கஜப்பிருஷ்ட விமானம். உயர்ந்து நிற்கும் த்வாரபலகர்களைத் தாண்டி சென்றால் சற்றே ஈசானிய பக்கமாகத் தலையைத் தாழ்த்தி சுயம்பு ரூபமாக உயர்ந்த பெரிய லிங்க வடிவில் காட்சி தரும்  இறைவனின் தோற்றம் மனதைப் பரவசப் படுத்துகின்றது. எண்ணம் மறந்து, சொல்லும், செயலும் மறந்து ஓம் நமசிவாய என்று மட்டுமே நம்மால் ஜபிக்க முடிகிறது. பிரம்மனுக்கு மட்டுமல்ல நம் குறைகளையும் உன்னிப்பாகக் கேட்டு நிறைவேற்றும் பொருட்டே தலையைத் தாழ்த்தி அருள் செய்வது போன்று தோன்றும் அந்த  இறைவனின் கருணாகடாட்சம் மெய்சிலிர்க்க வைக்கிறது.இறைவனின் திருமுடிக்கு மேல் காணப்படும் ருத்ராட்சப் பந்தல் அதிசய அற்புதம். கஜபிருஷ்ட வடிவில் அமைந்துள்ள கர்ப்பக்கிரகத்தை சுற்றிலும் கோஷ்ட தெய்வங்கலாக கணபதி, தட்சினாமூர்த்தி, துர்கை, வாசுதேவபெருமாள் ஆகியோர் கவினுறக் காட்சி தருகின்றனர். இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பிட்சாண்டவர் சந்நிதி கலை வண்ணத்துடன் எழிலாகக் காட்சி தருகிறது.


அடுத்து அழகாகக் காட்சி தரும் மரகதாம்பிகையை  தரிசிக்கலாம்.அம்மனுக்கு தனி துவஜஸ்தம்பத்துடன் கிழக்கு நோக்கிய தனி சந்நிதி. மூன்று அடி உயரத்தில் அழகு மிளிரும் முகத்துடன் அதரங்களில் நகை சிந்த நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் திவ்ய தரிசனம் தருகிறாள் அன்னை மரகதாம்பிகை. தாயே சரணம் என்று அவளை அண்டி வந்தவர்களுக்கு கற்பக விருட்சமாய் அருள் புரிபவளாம் அன்னை. அம்மன் சந்நிதியில் ஒரு நிலவறை  இருப்பதாகவும், அது வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.

பங்குனி மாதம் சூரியனின் கதிர்கள் ஈசன் மேல் விழுவதால் இது பாஸ்கர க்ஷேத்ரம் என்று போற்றப்படுகிறது. இங்கு தல விருட்சமான பனைமரம் அதிசயமானது. இதன் காய்கள் ஒரு வருடம் கருப்பாகவும், அடுத்த வருடம் வெள்ளையாகவும் காய்க்கிறது. அப்பைய தீட்சிதர் இத்தல இறைவனை வேண்டியே மார்க்கபந்து ஸ்தோத்திரம் இயற்றியுள்ளார். பிரயாணங்களின் சமயம் நாம் இந்த ஸ்லோகம் சொல்வதால் ஈசன் நம்முடன் வழித்துணை நாதராக வந்து   தடையின்றி, பயணத்தை நடத்தி வைப்பார்.


அருமையான சிற்பக்கலை.13ம் நூறாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு, பின் பல்லவ, விஜயநகர மன்னர்களால் மேம்படுத்தப் பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.ஆலயம் முழுதும் மண்டபங்களிலும், தூண்களிலும் உள்ள ஒவ்வொரு கல்லும், சிற்பங்களும்  கதை பேசுவதாக அமைந்துள்ளது.சிற்பங்கள் அழகுருவமாக அமைந்துள்ளன. வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள காலம் காட்டும் கல்லில் அக்காலத்தில் நிழல் விழுவதை வைத்து நேரம் கண்டு பிடிப்பார்களாம். இங்குள்ள சகஸ்ர மகாலிங்கம் அற்புத தரிசனம். தெற்கில் இருக்கும் சிறிய ராஜகோபுரம் வழியாக இன்றும் இரவில் சித்தர்கள் வந்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது.

பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் மிக விமரிசையாக நடைபெறும். கார்த்திகை மாதக் கடை ஞாயிறு அன்று ஆலயம் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.ஆயிரக் கணக்கானோர் சிம்மக்குளத்தில் நீராடுவர். சிவராத்திரி, நவராத்திரி, ஆடி, தை  வெள்ளிகள்,கார்த்திகை தீபம், பிரதோஷம் இவை சிறப்பாக நடைபெறுகின்றன. சுவாமிக்கு அபிஷேகம், அம்மனுக்கு மஞ்சள் சாற்று, புடவை சாற்றுதல், அன்னதானம் செய்தக் ஆகியவை இங்கு சிறப்பான வேண்டுதல்களாகும்.

குழந்தை வரத்துக்கு மிகப் பிரசித்தி பெற்ற ஆலயம் இது.
திருமண வரம் கிடைக்கவும் இங்கு பக்தர்கள் வழிபடுகிறார்கள். 

பிரம்மனுக்கு ஈசனே பிரம்மோபதேசம் செய்த தலமானதால் குழந்தைகளுக்கு பூணூல் போடவும், பெரியவர்கள் மந்திர தீட்சை எடுத்துக்கொள்ளவும், வித்யாரம்பத்திற்கும் இத்தலம் மிகச் சிறப்பானதாகும்.

மிளகு வியாபாரிக்கு வழித்துணையாக சென்றதால் வியாபாரிகள் லாபம் கிடைக்க இப்பெருமானை வேண்டித் தொழுகிறார்கள். 

இத்தல வழிபாட்டால் பேய் , பிசாசு தொல்லைகள்  நீங்கும் எனப்படுகிறது.

இத்துணை சிறப்புகள் பெற்று, தம்மை வழிபடுவோரை இம்மையிலும், மறுமையிலும் இன்பம் பெற வைக்கும் எந்தை ஈசன் வழித்துணை நாதனைக் கண்டு  வணங்குவோம்.

இவ்வாலயம் சென்னை-பெங்களூர் ஹைவேயில் வேலூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 

ஆலய நேரம் காலை 6-11...மாலை 4-8
தொலைபேசி  0416-2914546


ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர் இயற்றிய ஸ்ரீமார்க்கபந்து ஸ்தோத்திரம் 
சம்போ மகாதேவ தேவா சிவ  சம்போ மகாதேவ
தேவேச சம்போ----சம்போ மகாதேவ தேவா

பாலாவநம்ரத்ந கிரீடம் பால-
நேத்ரார்ச்சிஷா தக்த பஞ்சே ஷுகீடம் |
சூலாஹதாராதிகூடம் சுத்தமர்த்தேந்து
சூடம் பஜே மார்க்க பந்தும் ||   
....சம்போ 
அங்கே விராஜத் புஜங்கம் அப்ர
கங்காதரங்காபிரா மோத்தமாங்கம் |
ஓங்கார வாடீ குரங்கம் ஸித்த ஸம்ஸேவிதாங்க்ரீம்
பஜே மார்க்க பந்தும் ||
....சம்போ 
நித்யம் சிதாநந்தரூபம் நிந்ஹுதா
சே ஷலோகேச வைரிப்ரதாபம் |
கார்த்தஸ்வரா கேந்த்ர சாபம்
க்ருத்திவாஸம் பஜேதிவ்யஸன் மார்க்க பந்தும் ||
....சம்போ
கந்தர்ப்பதர்பக்னமீசம்  கால
கண்டம் மகேசம் மஹாவ்யோமகேசம் |
குந்தாபதந்தம் ஸுரேசம் கோடி
ஸூர்யப்ரகாம் பஜே மார்க்கபந்தும் ||
....சம்போ 
மந்தாரபூ தேருதூரம் மந்த
ராகேந்த்ரஸாரம் மகாகௌர்யதூரம் |
சிந்தூர தூரப்ரசாரம் சிந்து
ராஜாதிதீரம் பஜே மார்க்கபந்தும் ||
....சம்போ 
அப்பய்ய யஜ்வேந்த்ரகீதம்
ஸ்தோத்ர ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே   |
தஸ்யார்த்த ஸித்தம் விதத்தே மார்க்க மத்யே
பயம் ஸாது தோஷோ மஹேச ||
....சம்போ 
சம்போ மகாதேவ தேவா சிவா சம்போ மகாதேவ
தேவேச சம்போ--சம்போ மகா தேவ தேவ...|

இதி ஸ்ரீ அப்பய்ய தீக்ஷித ப்ரணிதம் ஸ்ரீமார்க்கபந்து ஸ்தோத்ரம் சம்பூர்ணம் ||


கண்ணனைக் கண்டு கண் திறந்த ராதை


தி இந்து செப்டம்பர் 24, 2015 நாளிதழ் இணைப்பான ஆனந்த  ஜோதியில் வெளியான கட்டுரை

  





ராதாஷ்டமி...

கிருஷ்ணன் என்றாலே நமக்கு நினைவில் முதலில் தோன்றுவது ராதையின் நினைவுதான்!

இறைவனை வழிபடும் பக்தனின் பல பாவங்களில் ஒன்றான காதல்பாவத்தில் கிருஷ்ணனை நேசித்து அவனுடன் ஓருயிராக இணைந்து, ராஸ லீலைகளில் மகிழ்ந்து, அணுவளவும் அவனை விட்டுப் பிரிய மனமின்றி வாழ்ந்த ராதையின் பக்திக்கு அளவேது?

பரமாத்மாவான இறைவனுடன் இரண்டறக் கலந்த ஜீவாத்மா ரூபிணி ராதை! அதனாலேயே அவள் பெயரைத் தன்னோடு இணைத்து ராதாகிருஷ்ணன் ஆனார் அந்த பரமன்! அந்த ராதையின் பிறந்த நாளான ராதாஷ்டமி, உத்தரபிரதேசத்திலுள்ள ராதை பிறந்த பர்ஸானாஎன்ற ஊரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கோகுலத்தில் யாதவ குல அரசன்  வ்ருஷபானு ஒருநாள் யமுனை நதிக்கரையில் அழகிய தாமரை மலரில் ஒரு பெண் குழந்தையைக் கண்டார். ஆர்வத்துடன் அதனை அள்ளி எடுத்தவர் உடன் இல்லம் சென்று தன மனைவி கீர்த்திதாவிடம் கொடுத்தார். ஆனால் அக்குழந்தையின் கண்கள் பார்க்கும் தன்மையற்று இருந்ததை அறிந்த தம்பதியர் மன வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

தன்  தோழியின் குழந்தையைக் காண நந்தகோபனுடனும், கண்ணனுடனும் வந்த யசோதை குழந்தைக்கு கண் பார்வை இல்லாததை அறிந்தாள் . அச்சமயம் அன்னையின் கையிலிருந்து துள்ளி எட்டிப் பார்த்த கண்ணனைக் கண்டதும் ராதையின் கண்கள் பளிச்சென்று திறந்து கொண்டதாம்.

ராதையின் கண்கள் திறந்தன
கண்ணன் பிறப்பதற்கு முன்பே பிறந்த ராதை, கண்களைத் திறந்தது கண்ணனைப் பார்த்த பின்புதானாம்! கோபியர் அனைவருக்குமே கண்ணன் இனியவன் என்றாலும் ராதையின் அன்பு மட்டுமே அவனைக் கட்டிப் போட்டதாம்!

கண்ணனின் மேல் ராதையின் அன்பு ஒரு பெருங்கடல் என்றால் மற்ற கோபியரின் அன்பு ஒரு சின்ன குளத்தளவே! அயனா என்ற யாதவனின் மனைவியான ராதை, கண்ணனின் குழலோசை கேட்டவுடன் போட்டது போட்டபடி ஓடி வந்து விடுவாளாம்! திருமணமான பெண்தான் என்றாலும் கிருஷ்ணன் மேல் கொண்ட காதலை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

கண்ணனும் பெரும்பாலான நேரம் ராதையுடன் இருப்பதிலேயே மகிழ்ந்தார்! கண்ணன் கடவுள்; அவரது ஆத்மா ராதா! உலகுக்கு ஆற்றலை அளிப்பவன் கண்ணன். அவனது சக்தி ராதா! உடல் கண்ணன் என்றால் அவனது உயிர் ராதா! பரமாத்மா கண்ணன்...ஜீவாத்மா ராதை! பரமாத்மாவும், ஜீவாத்மாவும் இணைவதைக் குறிப்பதே ராதா கிருஷன பிரேமை.

உத்தரப்பிரதேசத்தில் மதுராவுக்கு அருகில் பிரம்மஸரண்என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பர்ஸானா என்ற சிறிய ஊர்தான் ராதை பிறந்த இடம். 5000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த காதலுக்கு இலக்கணமாகத் திகழும் ராதை இங்கு ராதாராணிஎன்றே குறிப்பிடப்படுகிறாள். இங்கு அமைந்துள்ள ராதாராணி ஆலயம், ராஜா பீர்சிங் என்பவரால் 1675-ம் ஆண்டு, செந்நிறக் கற்களால் மிக அழகாக உருவாக்கப்பட்ட்து. அருகிலேயே இக்கால இணைப்பாக பளிங்கினால் கட்டப்பட்ட ஆலயமும் உள்ளது.

ராதை வழிபாடு நடக்கும் ஆலயம்
இவ்வூர் மக்கள் ஒருவரை ஒருவர் ராதே ராதேஎன்று சொல்லி பேசிக் கொள்வது, இவர்கள் ராதாபக்தியை உணர்த்துகிறது. ராதை செல்லமாக இங்கு லாட்லிஜிஎன்று அழைக்கப்படுகிறாள். ராதை வழிபாடு நடைபெறும் ஒரே ஆலயம் இது மட்டுமே! ராதாஷ்டமி அன்று மட்டுமே இங்குள்ள ராதாரானியின் பாத தரிசனம் பெறலாம். மற்ற நாட்களில் பாதங்கள் மூடப்பட்டிருக்கும்.

இங்குள்ள ப்ரேம ஸரோவர்என்ற நதிக் கரையில்தான் ராதையும் கண்ணனும் முதலில் சந்தித்துக் கொண்டார்களாம்! ராதாஷ்டமி கோகுலாஷ்டமிக்குப் பிறகு அமாவாசைக்குப் பின்பு வரும் அஷ்டமியில்  கொண்டாடப்படுகிறது. கௌடிய வைஷ்ணவர்களின் முதல் தெய்வமாகப் போற்றப் படுகிறாள் ராதை. ராதாஷ்டமி அன்று ஏகாதசி போன்றே விரதம் இருப்பார்கள். ரதக்ரிஷ்னரை பல வண்ண மலர்களால் அலங்கரித்து, அன்று முழுதும் பஜனைகளைப் பாடி திளைப்பர். அன்று ராதைக்கு சிவப்பு வண்ண உடைகளையே அணிவிப்பர். அவர்களின் பிரதான தெய்வமாயும், தம்மைக் காக்கும் தாயாகவும்  ராதையை அவ்வூர் மக்கள் வணங்குகின்றனர்.

ராதையின் கிருஷ்ண பக்தியைப் பற்றிக் கூறும் வேடிக்கையான ஒரு கதை இது! ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு ராஸலீலா வைபவத்திற்காக ராதை, பார்வதியை அழைத்திருந்தாளாம். அது பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பார்வதியும் மகாதேவரிடம் அனுமதி வேண்ட, சிவனோ தானும் பெண் வேடத்தில் வந்து கலந்து கொள்வேன் என்று பிடிவாதம் செய்து உடன் வந்தார். அழகிய பெண்ணாக வந்த பரமசிவனை அடையாளம் கண்டு கொண்ட கண்ணன், ராதையுடன் செய்து கொண்டிருந்த ராஸலீலையிலிருந்து விலகி வந்து ஈசனை வரவேற்க, தன்னைத் தவிர்த்து வேறொரு பெண்ணுடன் கண்ணன் நடனமாடுவதைக் கண்ட ராதா கோபம் கொண்டு ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டாள்.

பரமசிவன் அவளை சமாதானம் செய்து தரிசனம் கொடுத்தாராம். இதன் காரணமாக கோபி வடிவத்தில் வந்த ஈசன் கோபிநாத் கோபேஸ்வர்எனப்பட்டார். காலையில் சிவலிங்கத்திற்கு பூஜையும், மாலை தினமும் சிவபெருமான் கோபி ரூபத்திலும் வழிபடப்படுகிறார்.
கண்ணனின் ஆசைக் காதலியாக கண்ணனை விட்டுப் பிரியாமல் கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும் ஆடிப்பாடி கூடி மகிழ்ந்த ராதை, கண்ணன் மதுராவுக்குச் சென்ற பின்பு அவனையே நினைத்து அழுதாளாம்; தன் கரங்களில் முகத்தைப் புதைத்து கண்ணீர் சிந்திக் கொண்டே இருந்து, சற்றும் உறங்காமல் இருந்தாள் என்று உத்தவர் பிரஹ்லாத சமிதையில் கூறுகிறார். இவ்வருடம் செப்டம்பர் 21ம் தேதி ராதாஷ்டமி.

கண்ணா, உன்னை விட்டு நான் வாழ்வதெப்படி?” என ராதை கேட்க, “நான் என்றும் யுகயுகமாய் உன்னுடன்தான் இருப்பேன்என்று ஆறுதல் சொன்ன கண்ணனை இன்றும் நாம் நினைவுறும்போது, முதலில் ராதைதானே வந்து நிற்கிறாள். அன்று கிருஷ்ணர் ராதையை திருமணம் செய்து கொள்ளவில்லை; ஆனால் இன்று ராதா கல்யாணம் எல்லா இடங்களிலும் விமரிசையாக நடைபெறுகிறது. ராதா இல்லாமல் கிருஷ்ணன் இல்லையே? நாமும் இந்த ராதாஷ்டமி நாளில் ராதையை வணங்கி அருள் பெறுவோம்!




புதன், 16 செப்டம்பர், 2015

தமாஷ் அனுபவம்


மங்கையர் மலர் செப்டம்பர் 1-16, 2015 இதழில் புடவை பரிசுப் போட்டியில் பிரசுரிக்கப்பட்ட தமாஷ் அனுபவம்



35 x 24 புடவை பரிசுப் போட்டி 13ல் வெற்றி பெற்றவர்கள் வழங்கிய தமாஷ் அனுபவங்களில் என்னுடைய குறிப்பு இதோ!



அப்போது நாங்கள் பெங்களூருவில் குடியிருந்தோம். எனக்கு கன்னடம் தெரியாது. ஒரு முறை எங்கள் ஹவுஸ் ஓனரின் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அவர் எங்களைப் பார்த்துபன்றி-குட்றி என்றார். ‘என்ன இவர் நம்மை பரியாதை இல்லாமல் பேசுகிறாரேஎன்று எண்ணியபோது, நாற்காலியைக் காட்டிகுத்து கொட்றிஎன்றார். சென்னையில் குந்திக்கஎன்று கூறுவது ஞாபகத்துக்கு வர, நாற்காலியில் உட்காற்ந்தோம். பிறகு ஏதோ புரிந்தும், புரியாமலும் பேசிவிட்டு வெளியில் வந்ததும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இன்றும் அந்த அனுபவத்தை நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது.