Thanjai

Thanjai

ஞாயிறு, 4 ஜூன், 2017

அற்புதம் புரியும் அவதாரம்


தீபம் ஜூன் 20, 2017 இதழில் வெளியான கட்டுரை

மஹாபெரியவா ஜெயந்தி...8.6.2017

பெரியவா சரணம்

ஸதா சிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம்!
அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்!!
அபார கருணாசிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்!
ஸ்ரீசந்த்ரசேகரகுரும் ப்ரணமாமி முதான்வஹம்!!

மகாபெரியவர், ஆசாரியாள், ஜகத்குரு என்றெல்லாம் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜயந்தி தினம் ஜூன் 8ம் தேதி வருகிறது, அவரது 124வது ஜயந்தி விழா கொண்டாடும் இந்நாளில் அவரது வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

சுப்ரமணிய சாஸ்திரி, மகாலட்சுமி தம்பதியரின் இரண்டாவது மகனாக விழுப்புரத்தில் 1894ம் ஆண்டு, வைகாசி 2ம் நாள், அதாவது மே 20ம் தேதி, அனுஷா நட்சத்திரத்தில் சுவாமிநாதன் என்ற பெயரில் ஆசாரியார் அவதரித்தார்.

வீட்டில் அவர் தந்தையிடமே ஆரம்பப் பாடங்களைப் படித்தவர், எட்டு வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 1905ம் ஆண்டு உபநயனம் எனும் பூணூல் போடும் வைபவம் நடைபெற்றது.

1906ம் ஆண்டு நான்காவது ஃபாரமில் படித்தபோது ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் பிரின்ஸ் ஆர்தராக அற்புதமாக ஆங்கிலம் பேசி நடித்த தன் மகன், பின்னாளில் பெரிய அதிகாரியாக வருவாரென அவர் தந்தை எண்ணினார். ஆனால் ஆண்டவனின் எண்ணம் வேறாயிற்றே!


காஞ்சியின் 66வது ஆசார்யர் தென் ஆற்காடு மாவட்டம் சென்றிருந்த சமயம் தந்தையுடன் தரிசனத்திற்கு வந்திருந்த சுவாமிநாதனே தனக்குப் பின் பீடத்தை ஆரோகணிக்கப் போவதை அறிந்து, தக்க முறைகளுடன் அவரை காஞ்சிக்கு வரச் செய்து, 68வது பீடாதிபதியாக அறிவித்தார். 1907, பிப்ரவரி 13, சுவாமிநாதன் காஞ்சி பீடத்தின் 68வது குருவானார். காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார்.

பின் வேத சாஸ்திரங்களை அதற்கான பண்டிதர்களிடம் முறையாகப் பயில, கும்பகோணம் மடத்துக்கு அனுப்பப் பட்டார். பீடமேறிய அவரால் நடத்தப் பெற்ற முதல் கும்பாபிஷேகம், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் 1908 பிப்ரவரி 6ம் நாள் நடைபெற்றது. குடந்தை மடத்தில் சுவாமியைத் தரிசிக்கவும், சந்திக்கவும் அடிக்கடி மக்கள் வந்தது அவரது படிப்புக்கு இடையூறாக இருந்ததால் திருச்சிக்கு அருகே உள்ள மகேந்திர மங்கலத்தில் தங்கி படித்தார். வேத சாஸ்திரம் மட்டுமின்றி, ஜோதிடம், இசை, இலக்கியம், தத்துவம் என்று பலவும் படித்தார்.

மார்ச் 1919ல் முதன்முறை காசி யாத்திரை சென்றவர் தொடர்ந்து பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் செய்தார். தேச பந்து சித்தரஞ்சன் தாஸ், சத்யமூர்த்தி, சேட் ஜம்னாலால் பஜாஜ், ராஜாஜி ஆகியோரை சந்தித்த மகா பெரியவர் 1920 முதல் கதர் ஆடை மட்டுமே அணிவதை வழக்கமாகக் கொண்டார்.

ஜனவரி 1931ல் பால் பிரண்டன் என்ற ஆங்கில எழுத்தாளர் பெரியவருடன் சந்தித்துப் பேசி, அதனைப் பற்றி அவரது ‘ஸர்ச் இன் சீக்ரெட் இண்டியா’ (Search in Secret India) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். தேசமெங்கும் யாத்திரை மேற் கொண்டார்; அனைவருக்கும் ஆசி வழங்கி, அருளினார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா எனப் பெருமையுடன் சொல்லிப் பூரித்தனர்.

ஒருமுறை (14.6.1932), ஆந்திர மாநிலத்தின் நகரியில் முகாமிட்டிருந்தார், காஞ்சி மகான். அப்போது, கும்பகோணத்தில் உள்ள அவருடைய தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.தாயின் மரணத்தை எந்த உணர்வும் இன்றி அமைதியாக ஏற்றுக் கொண்டது அவரது சன்னியாசத்தின் உயர்வைக் காட்டுகிறது.

ஆச்சார்யக் கடமையை நிறைவேற்றும் வகையில், நீராடிய சுவாமிகள், அந்தணர்களுக்குத் தானம் அளித்து, தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார். பெரியவாளின் மனதுள் ‘ஈச்சங்குடியில் உள்ள, அவருடைய தாயார் பிறந்த இல்லத்தை வேத பாடசாலையாக்க வேண்டும்; அந்த இடத்தில், எப்போதும் வேத கோஷம் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்’  என்ற எண்ணம் ஏற்பட்டது.

1932 செப்டம்பர் 28 சென்னைக்கு முதன் முறையாக விஜயம் செய்தார். ஒவ்வொரு இடத்திலும் இளம் ஆசாரியாரைக் காண வரும் கூட்டம் கட்டுக் கடங்காது. 1933, மே 18ம் நாள் முதன் முறையாக சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசித்தார். இந்தியாவின் பல இடங்களுக்கு சுவாமிகள் கால் நடையாகவே சென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

1954ம் ஆண்டு மார்ச் 22, தனக்கு அடுத்த பீடாதிபதியாக மன்னார்குடியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவரைத் தேர்ந்தெடுத்தார். 1957 செப்டம்பர் 6ம் நாள் ஸ்ரீ ஜெயேந்திரர் அவர்கள் முன்னிலையில் மகா பெரியவருக்கு காஞ்சியில் கனகாபிஷேகம் நடைபெற்றது.

இரண்டு ஆச்சாரியர்களுமாக இணைந்து பல தலங்களுக்கும், ஊர்களுக்கும் தொடர் விஜயம் செய்தனர். 1966ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 1969 மே 23 வரை இருவரும் நான்கு ஆண்டுகள் காஞ்சிபுரத்திலேயே இல்லாமல் ஆந்திரா முழுவதும் தொடர் விஜயம் செய்தது குறிப்பிடத் தக்கது. அதன் பின் 9 வருடங்கள் காஞ்சியிலேயே தங்கியிருந்த பெரியவர் திடீரென கிளம்பி பாத யாத்திரையாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா முழுதும் 6 ஆண்டுகள் பயணம் செய்தார். 80 வயதில் அவர் செய்த பாத யாத்திரை அவர் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகும்.

1983, மே 28ம் நாள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடுத்த பீடாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அச்சமயம் ஆந்திராவிலிருந்த மகா பெரியவரை இருவருமாகச் சென்று தரிசித்து, அவ்வருட வியாச பூஜையை மூன்று ஆசார்யருமாக இணைந்து செய்தனர். 1984 தமிழ் வருடப் பிறப்பன்று மூவருமாக காஞ்சி திரும்பினர்.

காலங்கள் ஓடின. 93-ஆம் வருடம், பெங்களூருவில் இருந்து, அவரைத் தரிசிப்பதற்காக வந்த ஹரி என்ற பக்தரிடம் ”ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு விரும்பறே! நல்லது, பண்ணு!” எனச் சொல்லி,அந்தக் கோயில் குறித்தும், ஸ்ரீகச்சபுரீஸ்வரர் குறித்தும், ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை குறித்தும் கூறிய  பெரியவா, சிறு வயதில் தான் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும், அங்கே அமர்ந்து வேதங்கள் கற்றதையும் விவரித்தார். சட்டென்று அவரிடம்  ஈச்சங்குடியில் உள்ள தன் தாயாரின் இல்லம் குறித்தும், அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி, ”இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்” என்றார்  உடனே ஹரி, ”இது என் பாக்கியம்!’ என்று சொல்லி, ஆனந்தத்தில் அழுதேவிட்டார்.

பிறகென்ன…அந்தவீடு, விலைக்கு வாங்கப்பட்டு, அன்பர்களின் கூட்டு முயற்சியில், வேத பாடசாலைப் பணிகள் துவங்கின. புதிதாகத் துவங்கும் வேத பாடசாலையில், குரு பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி. அன்றைய தினம், 8.1.94. அதாவது, தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம், அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யார்   அறிவார்?

விழுப்புரம் சங்கர மடம்


பெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல், ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்’ என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டு,அவரை ஆசீர்வதித்தார். வேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையை வாங்கிப் படித்தவர், அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை அன்பரிடம் தந்தார். ”இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார். ஈச்சங்குடி வேத பாடசாலை, அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. அவரது பாதுகை இப்பாடசாலையில் அழகுறக் காட்சி தருகிறது.

விழுப்புரத்தில்  பெரியவரின் அவதார ஸ்தலமாகிய அவரது இல்லமே 'பாதுகா மண்டபம்' என்னும் சங்கர மடமாக உள்ளது. அவர் பிறந்த அறையில் அவரது  திருவுருவ சிலையும், பாத தரிசனமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. மடத்து நிர்வாகி, பெரியவர் அங்கு பலமுறை வந்து தியானத்தில் அமர்ந்து பூஜை செய்திருக்கிறார் என்றும், இப்பொழுதும் ஸ்ரீ ஜெயேந்திரரும், பால பெரியவரும் அடிக்கடி வந்து பூஜை செய்வார்கள் என்றும் கூறினார். ஒவ்வொரு மாத அனுஷமும் அங்கு சிறப்பாகக் கொண்டாடப் படுவதாகக் கூறினார்.

அந்த வீட்டில்தான் பெரியவர் பிறந்து, தவழ்ந்து, விளையாடி, வளர்ந்த இடம் என்பதைக் கேட்டபோது மனமும், மெய்யும் சிலிர்த்து விட்டது. சுவாமிகள் நடந்த அந்தப் புனிதமான இடத்தில் இன்று நாமும் அமர்ந்திருப்பதை நினைக்க 'என்ன தவம் செய்தோமோ நாம்' என்று ஆனந்தம் ஏற்பட்டது.

பாதுகா மண்டபம்

அங்குள்ள பெரிய அறையில் மகாபெரியவரின் அழகான சிலை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. நேரிலேயே அவர் அமர்ந்திருப்பது போல் காணப்படுகிறது. ஒரு பல்லக்கில் பெரியவரின் புகைப்படம் வைக்கப் பட்டுள்ளது.இவ்வருட ஜெயந்தி மஹோத்சவம் ஜூன் 5 முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மஹாபெரியவா


விழுப்புரம் பெரியவரின் அவதார ஸ்தலமும், ஈச்சங்குடி வேத பாடசாலையும் அவசியம் மகாபெரியவரின் பக்தர்கள் தரிசிக்க வேண்டிய இடங்களாகும். நூற்றாண்டுகள் வாழ்ந்து, நடமாடும் தெய்வமாய் விளங்கி, பலரின் வாழ்விலும் அதிசயங்களையும், அற்புதங்களையும் இன்றும் நிகழ்த்தி தம் இறையருளை உலகம் முழுதும் பரவச் செய்த ஜகத் குருவின் காலத்தில் வாழும் பாக்கியம் பெற்ற நாம், அவரது தெய்வத் திருவடிகளை இந்நாளில் தியானித்து, ஹரஹர சங்கர...ஜெயஜெய சங்கர என்று ஜபித்து அவரருள் பெறுவோம்.

ஈச்சங்குடி பாடசாலா



ஞாயிறு, 28 மே, 2017

மாசில்லாத மலைவாசஸ்தலம்...பச்மரி

தி இந்து தமிழ் நாளிதழ் இணைப்பான ‘பெண் இன்று’ 28-05-2017 அன்று வெளியான சுற்றுலா பற்றிய செய்தி


கடல் மட்டத்திலிருந்து 3555 அடி உயரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள பச்மரி(Pachmari), மத்திய பிரதேசத்திலுள்ள ஒரே குளிர்வாச ஸ்தலம். விந்திய சாத்புரா மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த இடம் சாத்புராவின் ராணி என அழைக்கப்படுகிறது. 1875ல் ஜேம்ஸ் ஃ போர்ஸித் என்ற ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடம் அழகின் இருப்பிடம்! ஒரு உல்லாசப்பொழுதுபோக்கு இடத்திற்கான அத்தனை விஷயங்களும்அளவின்றிக் கொட்டிக் கிடக்கும் அற்புதசுற்றுலாத்தலம்!

பளிங்கு போல் விழும் அருவிகள்,நெளிந்து ஓடும் நீரோடைகள்,அடர்ந்த காடுகள், 1000 வருடத்துக்கு முந்தைய கலாச்சாரம் பற்றி அறியவைக்கும் குகை ஓவியங்கள், சிவாலயங்கள், அழகிய வேலைப்பாடமைந்த கண்ணாடி சன்னல்களுடனான சர்ச்சுகள், கோண்ட் என்ற பழங்குடி மக்களின் நடனம், மிதமான குளிர் என்று அத்தனையும் கண்ணுக்கும், மனதுக்கும்  பெருவிருந்து!

பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது இங்கு வாழ்ந்ததன் அடையாளமான ஐந்து பாண்டவர் குகைகள் உள்ளன.அதன் பெயராலேயே இவ்விடம் பச்மரி...அதாவது பாஞ்ச்  என்றால் ஐந்து, மரி என்றால் குகை என்பதைக் கொண்டே பச்மரி எனப்படுகிறது.

சாத்புரா நேஷனல் பார்க் என்ற வனவிலங்கு சரணாலயம், அன்னை இந்திராகாந்தி 1964ல் வந்ததன் அடையாளமாக பெயரிடப்பட்ட பிரியதர்ஷினி பாயிண்ட், கண்ணைப் பறிக்கும் 150 அடி உயர பீஃபால்ஸ்(Bee Falls), டட்ச் ஃ பால்ஸ், 350 அடி உயர ரஜத் ஃ பால்ஸ், இரு உயர்ந்த மலைகளுக்கிடையே பயங்கரமான வீ வடிவ ஹண்டிகோ என்ற பள்ளத்தாக்கு, சூர்ய உதயமும், அஸ்தமனமும் அழகுறக் காட்டும் 4400 அடி உயர தூப்கார், மூன்று  பக்கமும் மலைகளால் சூழப்பட்டு, மூன்று வாசல்களுடைய ஒரு கோட்டை போல உயர்ந்து நிற்கும் ரீச்கரின் மிரட்டும் அழகு... இவற்றில் நாம் நம்மையே மறந்துவிடுவோம்..

சிவபெருமானின் வாசஸ்தலங்களான மஹாதேவ், ஜடாசங்கர், சவுராகர் இவை ஆன்மீக பக்தர்கள் தரிசிக்க வேண்டிய சிவாலயங்கள். பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவபெருமான், அவன் அவரையே தலையில் கைவைத்து சாபத்தை பரீட்சிக்க வந்தபோது அவரது ஜடை, நாகம், திரிசூலம் இவற்றை மேற்கூறிய இடங்களில் வைத்துவிட்டு, தான் அங்கிருந்த குகைக்குள் ஒளிந்து கொண்டாராம். அக்குகையில் இன்றும் இறைவனை தரிசிக்கலாம்.


காஷ்மீர், சிம்லா போன்று அனைவரும் அறியாத இடமாக இது இருப்பதன் காரணம் இங்கு ரயில், பஸ் வசதி இல்லாததே. போபால் மற்றும் ஜபல்பூரிலிருந்து இவ்விடம் செல்லலாம். ஹௌரா- மும்பை ரயில்பாதையிலுள்ள பிப்பாரியா என்ற ரயில் நிலையத்தில் இறங்கி, வேன், ஜீப்புகள் மூலமாக செல்லலாம்.நிறைய ஹோட்டல்கள் உள்ளன.அதிகம் யாரும் அறியாத மறைந்திருக்கும் புதையலாக,அதிக மக்கள் கூட்டமில்லாத, மாசில்லாத அழகிய பச்மரி அனைவரும் சென்று கண்டு களித்து அனுபவிக்க ஏற்ற சுற்றுலாத்தலம்!






புதன், 10 மே, 2017

கருணை புரிவாள் கனக மகாலக்ஷ்மி


தீபம் மே 05, 2017 இதழில் வெளியான கட்டுரை





ஆலயங்கள் நிறைந்த நகரம் ஆந்திரா. நரசிம்மர், சிவன், தேவி ஆலயங்கள் என்று எத்தனை ஆலயங்கள்! அவற்றினுள் நுழையும்போதே நமக்கு பக்தி உணர்வும், மெய்சிலிர்ப்பும் உருவாவதை உணரலாம்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ கனகமகாலக்ஷ்மி ஆலயம் மிகச் சிறப்பும், சாந்நித்தியமும் வாய்ந்த வித்யாசமான ஆலயம். ஆலயத்துக்கு செல்லும் அனைத்து பெண்களும் அர்ச்சகர் துணையின்றி தாமே அன்னைக்கு அபிஷேகம் செய்து வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

விசாகப்பட்டினத்தில் புருஜுபேட்டா என்ற இடத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம். சாலையின் நடுவில் அமைந்துள்ள இவ்வாலயம் உருவான விதம் நம்மை வியக்க வைக்கிறது.

கோபுரம்

கோபுர முகப்பு


1912ம் ஆண்டில் விசாகப்பட்டினத்தை ஆண்ட ராஜாக்களின் குலதெய்வமாக விளங்கிய கனகமஹாலக்ஷ்மி தேவி சிலை மன்னர்களின் கோட்டை பகுதிக்கு அருகில். ஒரு கிணற்றுக்குள்ளிருந்து எடுக்கப்பட்டது. தேவியின் அழகில் மயங்கிய மக்கள், அதனை அந்த முனிசிபல் சாலையின் நடுவிலேயே ஸ்தாபித்து வணங்கி வந்தனர்.

1917ம் ஆண்டு சாலையை அகலப் படுத்தியபோது, அச் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைத்தனர். அந்நிகழ்வுக்குப் பின் வைசாக்கில் மிக்க கொடுமையான தொற்று நோயான பிளேக் நோய் படு வேகமாகப் பரவி, பலரை பலி வாங்கியது. இவ்வம்மனை அகற்றியதால் இந்த நோய் வருகிறது  என அஞ்சிய மக்கள், மீண்டும் தேவியை சாலை நடுவில் ஸ்தாபித்து பூஜைகளைத் தொடர்ந்தனர். என்ன அதிசயம்... சில நாட்களிலேயே நோய் மறைந்தது! ஊரும் செழித்தது! மக்களின் நம்பிக்கை அதிகமாக, அது முதல் 'கனகமஹாலக்ஷ்மி அம்மவாரு' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட தேவியின் பெருமை திக்கெட்டும் பரவியது. இன்றும் வைசாகின் செல்வ வளத்திற்கு காரணம் இந்த அன்னையே என்று கூறப் படுகிறது. தன்னை வணங்கியவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் தேவியின் பெருமை அளவற்றது. பெண்கள் தம் மாங்கல்யம் நிலைக்கவும், பிறந்த குழந்தைகளின் நோயற்ற வாழ்விற்கு அவள் காலடியில் விடுவதும் மிக முக்கிய வழிபாடாகும்.

தேவிக் கிணறு

அம்மவாரு


ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட தேவியின் ஆலயம் கடந்த நூறாண்டுகளில் மிக வேகமான வளர்ச்சி அடைந்துள்ளதாம்.இன்றைய வைசாக்கின் காவல் தெய்வமாகவும், தாயாகவும் விளங்கும் இத்தேவி சிலையின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட விசாக வர்மன் என்ற அரசன் காலத்ததாக இருக்கும் எனப்படுகிறது.ஒரு சிறிய சன்னதியுடன் இருந்த இவ்வாலயம் இன்று பலகோடி வருமானம் ஈட்டும் ஆந்திராவின் பணக்கார ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இனி தேவியை தரிசிப்போம். சாதாரணமாக அங்கம் பின்னமான தெய்வ ரூபங்களை நாம் பிரதானமாக வணங்குவதில்லை. ஆனால் இங்கு எந்த ஆலயத்திலும் இல்லாதவிதமாக, வடமேற்கு திசை நோக்கி வலது கையில் தாமரைமொட்டும், இடக்கை பின்னமாயும்  மார்புவரை உள்ள  அன்னையே அழகுருவாய் காட்சி அளிக்கின்றாள்.கண்களின் காருண்யம் நம்மை 'நீயே கதி அம்மா' என்று சரணடையவைக்கிறது.தேவி தனக்கு மேல் கூரை தேவையில்லையென்று ஆணையிட்டதால், சுற்றிலும் கோபுரங்கள் இருந்தாலும் அன்னையின் சிரம் வானம் பார்த்தே உள்ளது. ஜாதி, மத  பேதமின்றி எவரும் அம்பிகையைத் தன் கைகளால் அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்கலாம். தன்னை வழிபட எந்த தடையும், யார் உதவியும் இருக்கக் கூடாது என்பது அன்னையின் ஆணையாம். அதனால் இங்கு நமக்காக பூஜிக்க அர்ச்சகர்கள் கிடையாது.  

பெண்கள் வரிசையில் சென்று தாமே பால், இளநீர், மஞ்சள், குங்குமம் இவற்றால் நிதானமாக அம்மனை அபிஷேகம் செய்து பூஜிக்கின்றனர். ஆலய அலுவலர்கள் உடனுக்குடன்  தேவியை சுத்தம் செய்கின்றனர். என் முறை வந்தபோது சற்று தயக்கமாக இருந்தாலும், அப்படிச் செய்யும்போது மெய்சிலிர்ப்பும், மனதிருப்தியும், தேவியை நெருங்கிவிட்டோம் என்ற மகிழ்ச்சியும் மனதில் ஏற்பட்டதை உணர முடிந்தது. அம்மனை நெருங்கி நம் மனக்குறைகளை சொல்லும்போதே, தேவி நம்மைக் கைவிட மாட்டாள் என்று உணர முடிகிறது. அடைக்கலம் என்று அவளை அண்டிச் செல்லும்போதே நம் மனம் நிச்சலனமடைகிறது. அன்னையை விட்டு அகலவே மனமில்லை. இந்த தனித்துவமான தானே வணங்கும் முறையில் ஈர்க்கப்பட்ட மக்கள் இங்கு பல வெளி மாநிலம் மற்றும் நாடுகளிலிருந்து வந்து தரிசிக்கின்றனராம்.மற்றும் பின்னால் உருவாக்கப்பட்ட ஸ்ரீராஜராஜேஸ்வரி, சிவன், விஷ்ணுவிற்கும் சன்னதிகள் உள்ளன. அம்மன் கிடைத்த கிணற்றைச் சுற்றிலும் அஷ்டலக்ஷ்மிகள்  அமைக்கப் பட்டுள்ளது.

அபிஷேகம்





தினசரி காலை 5 மற்றும் 11.30,மாலை 6 மணிக்கு ஒரு மணி நேரத்திற்கு திரிகால அர்ச்சனை நடைபெறும்.வியாழக்கிழமைகளில் இத்தேவியை வழிபட வரிசையில் நிற்க வேண்டுமாம்.மார்கழி மாதம் முழுதும் நடைபெறு 'மார்கஸீரா மஹோத்சவம்' மிக பிரசித்தமான, பெரியதிருவிழா. தினமும் லலிதா, லக்ஷ்மி ஸஹஸ்ரநாமம், தேவி சப்தசதி பாராயணம், அஷ்டலக்ஷ்மி பூஜை,சிறப்பு அபிஷேகங்கள், கதாகாலட்சேபம், அன்னதானம் என்று ஆலயம் வண்ண விளக்கு அலங்காரத்தில் அற்புதக் காட்சி அளிக்குமாம்.நவராத்திரி 9 நாட்களும் தேவியின் விதவிதமான அலங்காரங்கள் கண்களைக் கவரும்.திரிகால அர்ச்சனை நேரம் தவிர, தினமும் 24 மணி நேரமும் ஆலயம் திறந்திருக்கும். பக்தர்களின் குறைகளைத் தீர்க்க அல்லும், பகலும் தேவி விழித்திருப்பதாக ஐதீகம்.

விசாகப்பட்டினம் செல்லும் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம் அன்னை கனகமஹாலக்ஷ்மி அம்மவாரு ஆலயம். வைசாக் ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையத்திலிருந்து ஆட்டோ, டேக்சிகளில் எளிதாகச் செல்லலாம்.
தொடர்புக்கு...

0891-2566515, 2568645, 2711725, 2566514 Mob:9491000651.


வியாழன், 23 மார்ச், 2017

ஆயுதம் ஏந்தா அழகன்


தீபம் ஏப்ரல் 5, 2017 இதழில் வெளியான கட்டுரை

காலாராம் ஆலயம்..
பஞ்சவடி...நாசிக்...மகாராஷ்டிரா





அம்பும், வில்லும் இல்லாத அழகிய ராமர்...


காலாராமர்

ஒக மாட, ஒக பாண, ஒக பத்னி’ என்று (ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்) போற்றப்பட்ட ஒரே கடவுள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. ஏனைய கடவுளர் தத்தம் மனைவியருடன் மட்டுமே காட்சி தரும்போது, ஸ்ரீராமன் மட்டுமே, தன் தம்பி, தன் தொண்டன் ஹனுமான் என்று அனைவரையும் தன்னுடன் இணைத்து நிற்பவர்.

ஸ்ரீராமனை எண்ணும்போதே நமக்கு முதலில் நினைவு வருவது அவரது 14 ஆண்டு கால வனவாசம். அதில் பெரும்பகுதியை அவர்கள் நாசிக்கிலுள்ள பஞ்சவடியில்தான் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. கோதாவரியின் கரையில் அமைந்துள்ள நாசிக்கில் பல இடங்கள் ராமாயணத்தின் நிகழ்ச்சிகளை நம் கண் முன் கொண்டு வருகின்றன.

இங்குள்ள சீதா குகையில் சீதையின் சமையலறை உள்ளது. இங்கிருந்துதான் சீதையை ராவணன் அபகரித்துச் சென்றான். லக்ஷ்மணர் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததால் இவ்விடம் நாசிகா (மூக்கு) எனப்பட்டு 'நாசிக்'காக மாறியது.

கோதாவரி நதி மிகவும் புனிதமான நதியாகும். இங்கு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா  நடைபெறுகிறது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது இந்நதியில் சில துளிகள் அமிர்தம் விழுந்ததாம். இதில் ஒருமுறை நீராடினால் கங்கையில் 60000 முறை நீராடிய புண்ணியம் கிடைக்கும் எனப்படுகிறது. கோதாவரி நதிக்கரையிலுள்ள ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒரு அழகு.

பஞ்சவடியில் முக்கியமான அழகும், கம்பீரமும் கலைத் திறனும் கொண்டு விளங்கும் 'காலாராம் ஆலயம்', 83 அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. 1788ம் ஆண்டு ரங்கராவ் ஓடேகர் என்பவரால்  கட்டப்பட்டது. அவரது கனவில் தோன்றிய ராமர் தன்னை கோதாவரி நதியிலிருந்து கொண்டு வந்து ஆலயம் கட்டுமாறு கூற, மூன்று சிலைகளும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்டு ஆலயம் உருவாக்கப்பட்டது. அருகிலுள்ள 'ராம்ஷேஜ்' என்ற மலைச் சுரங்கங்களிலிருந்து வெட்டிக் கொண்டு வரப்பட்ட உயர் ரக கருநிறக் கல்லால், 2000 பேர்கள் 12 ஆண்டுகள் உருவாக்கிய இவ்வாலயத்திற்கு 23 லட்சம் ரூபாய் செலவானதாம். கோபுர உச்சியிலுள்ள கலசம் 32 டன் தங்கத்தால் உருவாக்கப்பட்டது. சிறந்த கலையழகுடன் உருவாக்கப்பட்ட இவ்வாலயத்தில் 96 தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன.

காலாராம் கோவில் கோபுரம்

ஆலயத் தோற்றம்


கர்ப்பக் கிரஹம் அழகிய அலங்காரங்களுடன் காட்சியளிக்கிறது. வெள்ளியாலான திருவாசியின் உச்சியில் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அழகிய வெள்ளிக் குடைகளின் கீழ் ராமன், லட்சுமணன், சீதை மூவரும் வித்தியாசமான நிலைகளில் காட்சி தருகின்றனர். ராமனின் வலக்கரம் அவரது இதயத்திலும், இடக்கரம் அவரது பாதத்தை நோக்கியும் உள்ளது. 'என் காலைப் பிடித்தவர்களை நான் கைவிட மாட்டேன்' என்று உணர்த்தும் இத்தோற்றம் மிக விசேஷமானது. சீதையாகிய மகாலட்சுமியின் இரு கைகளுமே கீழ் நோக்கி, 'என்னை சரணடைந்தால் எல்லாம் பெறலாம்' என்பது போலுள்ளது. ராம, லட்சுமணர்களிடம் அம்பும், வில்லும் இல்லாததுடன், ஹனுமனும் இல்லை! பஞ்சவடியிலிருந்து சென்றபின்தானே ஹனுமனின் நட்பு கிடைக்கிறது!  ராமருடன் இல்லையெனினும், நுழைவாயிலில்  கருநிறக் கல்லிலான ஹனுமான் சிலை மிக அழகாகக் காட்சி தருகிறது.

காலாராமர்


இம்மூன்று விக்ரகங்களும் பஞ்சவடியில் கிடைத்ததாகவும், காலத்தால் மதிப்பிட முடியாத அளவு பழமையான சுயம்பு என்றும் ஆலயத்தார் கூறினர். வேண்டியோர்க்கு வேண்டுவன தரும் வரப்பிரசாதியாம் இம்மூவரும்! சொக்க வைக்கும் அழகில் தம்பியுடனும், தாரத்துடனும் காட்சி தரும் சுந்தரராமனின் சன்னிதியை விட்டு நகரவே மனமில்லை. இவ்வாலயத்தில் ராமநவமி, தசரா, சித்திரை  வருடப் பிறப்பு இவை மிகப் பெரிய விழாக்களாகக்  கொண்டாடப்படுகின்றன.

நம் வாழ்வில் ஒருமுறை அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புதமான ஆலயம் காலாராமர் ஆலயம்.

மும்பையிலிருந்து நாசிக்கிற்கு விமானம்,பேருந்து மற்றும் புகைவண்டியில் செல்லலாம்.

ஆலய நேரம் ...காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை
தொலைபேசி....0253 2621730








வியாழன், 9 மார்ச், 2017

மாங்கல்யம் காக்கும் குங்கும சுந்தரி

தீபம் மார்ச் 20, 2017 இதழில் ஆலயம் கண்டேன் பகுதியில் வெளியான கட்டுரை



ஓம் எனும் பிரணவ ரூபமாய் அ, , ம என்ற எழுத்துக்களின் சேர்க்கையால் உருவானது ‘உமா’ என்ற சொல். அதனாலேயே பார்வதி தேவியின் பல்வேறு நாமங்களில் தனித்துவமும், சிறப்பும், பெருமையும் பெற்று விளங்குகிறது. ‘உமா’ என்ற நாமம், ‘உமா, சிவன்’ என்ற இரு சொற்கள் இணைந்தே குழந்தைகள் கடவுளைக் குறித்துச் சொல்லும் ‘உம்மாச்சி’ ஆயிற்று என்பது மகா பெரியவரின் வாக்கு.

இந்த உமையவள் அருளாட்சி நடத்தும் தலமே ‘உமையாள்புரம்’. ஆயிரம் வருடங்கள் பழமையானது இவ்வாலயம். தஞ்சை மாவட்டத்தில் காவிரி வடகரையில், குடந்தையிலிருந்து பனிரெண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தின் பெருமைகள் அனேகம். ப்ரம்மாண்ட புராணத்தில் உமாபுர மஹாத்மியம் என்கிற தலைப்பில் இவ்வாலயச் சிறப்புகள் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீகுங்குமசுந்தரி சமேத ஸ்ரீகாசிவிசுவநாதரின் மகிமையும், காசியை விடச் சிறந்த இவ்வூர் மயானச் சிறப்பும் மிக அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது.
கோவில் முகப்பு

புர தரிசனம்

இவ்வாலயம் இங்கு உருவானது எப்படி? விஜயா என்ற கந்தர்வப் பெண் பார்வதிக்கு ஒரு கோயில் எழுப்ப எண்ணி கடும் தவம் புரிந்தாள். கோயில் அமைக்க தகுதியான இடத்தை வேண்டி தேவியை வழிபட்டபோது, அம்பாளே இத்தலத்தைக் காட்டிய சிறப்பான தலம் இது. அவளது தவத்தில் மகிழ்ந்த ஈசனும், தேவியும் இங்கேயே எழுந்தருளியதாக கூறுகிறது புராணம்.

கந்தர்வப் பெண்ணின் ஆணையின் பேரில் விசுவகர்மாவால் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் தென்புறம், அவள் கடுந்தவம் புரிந்த குளம் விஜயா தீர்த்தம், நாரிகுளம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு அருள் புரியும் அம்மன் பெண்களுக்கு தீர்க்க சௌமாங்கல்யம் அளிக்கும் ‘குங்கும சுந்தரி’ என்ற அழகிய திரு நாமத்துடன் காட்சியளிக்கிறாள். கமலா என்கிற ஒரு பெண் தன் கணவனின் தீர்க்க முடியாத நோயைத் தீர்க்க குங்குமத்தால் அர்ச்சனை செய்து தன் மாங்கல்யத்தைக் காப்பாற்றிக் கொண்டதால், இவ்வம்மனுக்கு ‘குங்கும சுந்தரி’ என்ற பெயர் வந்ததாக புராணத்தில் அம்பாளின் வாக்காகவே கூறப்படுகிறது. பெண்கள் தம் திருமாங்கல்ய பாக்கியத்திற்கென இந்த அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது மிக விசேஷமானது.கருவுற்ற பெண்களுக்கு குங்கும சுந்தரியின் சந்நிதியில் வளைகாப்பு நடத்தினால் சுகாப் பிரசவம் நடக்கும் என்பதும் ஐதீகம். 

பிரணவப் பொருளை அறியாத பிரம்மனை சிறை வைத்த குமரக் கடவுளிடம் அப்பிரணவ மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டினார் சிவபிரான். முருகப் பெருமான் ‘தத்துவ உபதேசத்தை’ முறைப்படி பெற வேண்டும் எனக் கூற, ஈசனும் தன் சக்தி சேனைகளுடன் திருவையாறு வந்து நந்தி தேவரை அனுப்பி, எப்பொழுது உபதேசம் பெற வரலாம்? என்று கேட்க, குமரனோ, எல்லா சேனைகளையும் விட்டு தனியாக, அடக்கமுடன் வருமாறு கூற, அதன்படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் விட்டு விட்டு, தான் மட்டும் சுவாமிமலை சென்றார் இறைவன். அவ்வாறு உமையவளை விட்டுச் சென்ற இடமே இவ்வூராகும்.

விநாயகர்

இனி தேவியை தரிசிப்போமா? கிழக்கு நோக்கிய ஆலயத்தில் தல விநாயகரை தரிசித்து, நந்தியை வணங்கி உள்ளே சென்றால் மகா, அர்த்த மண்டபங்களைத் தாண்டி, ஸ்ரீகாசி விஸ்வநாதர் அருள் காட்சி அளிக்கின்றார். காசிக்குச் செல்ல முடியாத ஒருவருக்கு கனவில் இப்பெருமான் தோன்றி தரிசனம் அளித்து, காசியில் வழிபட்ட பலனை அருளியதாக வரலாறு. அதனால் இவ்வாலயம் காசியிலும் உயர்வாகக் கூறப் படுகிறது.
காசி விஸ்வநாதர்


தட்சிணாமூர்த்தி

நாமும் அப்பலனை வேண்டி இறைவனை மனமுருக வேண்டி, பிரதட்சிணமாக வரும்போது, தட்சிணாமூர்த்தி, வள்ளி, தேவயானி சமேத முருகப் பெருமானை வணங்கி வடமேற்கில் தனி சந்நிதியில் காட்சி தரும் குங்குமசுந்தரியை தரிசிப்போம். அழகும், கருணையும் கொண்ட இரு நயனங்களுடன் அருள் தரும் அதரங்களில் குறு நகையுடன் நம்மைப் பார்த்து ‘எதுவும் கேள் தருகிறேன்’ என்று சொல்வது போல் காட்சி தரும் தேவியைக் காணக் கண்ணிரண்டு போதாது! மகளிரின் குங்குமத்தை காக்கும் தேவியின் தரிசனம் கண்களோடு மனதையும் சிலிர்க்க செய்கிறது.

குங்குமசுந்தரி

நாம் வேண்டியதைத் தருவதிலும், நினைத்ததை நிறைவேற்றுவதிலும் இவளுக்கு நிகர் இவளே! பெண்களுக்கு திருமணபாக்கியம், கணவரின் உடல்நலம் பெற  இத் தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பான வழிபாடாகும். குழந்தை வரம் வேண்டுவோர் அம்மனுக்கு ஆடிப்பூரத்தில் வளையல் வாங்கி சார்த்தினால் விரைவில் பலன் கிடைக்கும். அம்பாள் சன்னதி எதிரில் ராஜமகாவல்லபா கணபதி அழகுறக் காட்சி தருகிறார். மாத சதுர்த்திகளில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. வடப்புறத்தில்  ஸ்ரீசண்டிகேசுவரர், துர்க்கை, பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. கோயிலின் சாந்நித்தியத்தை ஒவ்வொரு சந்நிதியிலும் உணர முடிகிறது. வில்வம் தலமரமாகும்.

இவ்வூர் மயானத்தில் வெட்டியான்களே கிடையாது. எரிக்கப்பட்ட உடல்கள் கலையாமலும், மற்ற பிராணிகளால் சேதப்படுத்தப்படாமலும் இருக்க இங்கு கோயில் கொண்டுள்ள ‘காவற்காரப் பிள்ளையாரே’ காரணம் என்பது இவ்வூர் மக்களின் திடமான நம்பிக்கை.

இங்கு வைகாசி விசாகத்தன்று நடக்கும் திருக் கல்யாண உற்சவம் மிகச் சிறப்பானது. அன்று இவ்வூர் பெருமாள் கோயிலில் காட்சி தரும் லக்ஷ்மிநாராயணப் பெருமாள் இவ்வாலயம் வந்து அம்பிகையை ஈசனுக்கு மணமுடித்து தருவார். ஆடி மாதம் முழுவதும் இச்சந்நிதியில் சௌந்தர்யலஹரி பாராயணம் செய்வதால் சகல நன்மையும் பெறலாம். ஆடி வெள்ளி, தைவெள்ளிகள், நவராத்திரி பத்து நாட்களும் தேவி, விதவிதமான அலங்காரங்களில் ஜெகத்ஜோதியாகக் காட்சி தருவாள். மேலும் கந்த சஷ்டி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், திருக்கார்த்திகை, மகர சங்கராந்தி, சிவராத்திரி, திருவாதிரை நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தலம் திருவையாறு-குடந்தை மார்க்கத்தில் திருவையாற்றிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆலய நேரம் காலை 5.30 - 10.30...மாலை - 5.30 - 8.30...தொலைபேசி...0435 2441095

செல்லும் வழி - கும்பகோணாத்திலிருந்து -17 கி.மீ