Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

கடலை மாவு லாடு

கடலை மாவு லாடு

 மங்கையர் மலர் 2010  அக்டோபர் இதழில் என் பேத்தி பெயரில் நான் எழுதியது



 

தேவையான பொருள்கள்:

கடலை மாவு - 250 கிராம்
நெய் - 150 கிராம்
கோவா (இனிப்பில்லாதது) - 100 கிராம்
ஈக்வல் (Artifical Sweetener Equal) - 1/4 கப்
ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகள் 
(
தேவையெனில் சேர்க்கவும்) - தேவையான அளவு

செய்முறை

கடலை மாவை சலித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய்விட்டு முந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து வைக்கவும். பின்பு, எல்லா நெய்யையும் விட்டு உருகியதும், கடலை மாவைப் போட்டு கைவிடாமல் மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்கவும். 

 கடலை மாவு நிறம் மாறி, வாசனை வந்ததும், அதில் உதிர்த்த கோவா, வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து, ஈக்வலைச் சேர்க்கவும். அது கரைந்ததும் இறக்கி ஏலப்பொடி சேர்க்கவும். கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும். சுலபமான, சுவையான கடலை மாவு லாடு, சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது!

-ப்ரீதி கணேஷ், போபால்.




'யக்ஞ' விநாயகர் இவர் ஒருவர்தான்


ஞான ஆலயம் ஜூன், 2004 இதழில் வெளியானது





சென்னை மேற்கு மாம்பலம் பல புகழ் பெற்ற ஆலயங்களை தன்னகத்தே கொண்டு ஒரு புண்ணிய பூமியாக விளங்குகிறது. எல்லவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல விளங்கும் அயோத்யா மண்டபம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்றது. இவ்வாலயத்தில் வருடம் முழுவதும் சத்சங்க நிகழ்ச்சிகள், கதைகள், காலட்சேபங்கள் நடந்து கொண்டே இருக்கும். இது போன்ற நிகழ்ச்சிகளின் போது அவ்வாலய மூர்த்தியின் அலங்காரமும், மண்டபத்தின் உள் அமைப்பும் நாம் ஏதோ தேவலோகத்திற்கு வந்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றும். அயோத்யா ராமனின் அருட் கடாட்சத்தை இங்கு பிரத்யக்ஷமாக உணர முடியும்.

இங்குள்ள சீனிவாசன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசத்ய நாராயணப் பெருமாள் ஆலயம் மிக சக்தி வாய்ந்ததும், சிறப்பு பெற்றதுமான ஆலயமாகும். சத்ய நாராயணரின் தனி ஆலயம் ஆந்திராவில் அன்னாவரம் என்ற ஊரில் மட்டும் உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய ஹனுமான் சன்னிதி மட்டுமே இருந்த ஆலயம் இன்று 7 சன்னிதிகளுடன் அழகுற காட்சியளிக்கிறது.

இக்கோயிலை நிர்மாணித்தபோது அதில் பெரும் பங்கு கொண்டிருந்த ரத்தன் தாஸ் என்ற வட நாட்டவர் கூறியபடி பெருமாளுக்கு சத்ய நாராயணப் பெருமாள் அன பெயரிடப்பட்டது. நெடிதுயர்ந்த உருவத்தில் சங்கு, சக்ர, கதாபாணியாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் சத்ய நாராயணப் பெருமாளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. தேவி மகாலக்ஷ்மி அமர்ந்த நிலையில் கருணை நிறந்த விழிகளுடன் அற்புத தரிசனம் தருகிறாள்.
இங்குள்ள லக்ஷ்மி ஹயக்ரீவர் சன்னிதி விசேஷமானது. கல்வி, அறிவு, புத்திக் கூர்மைக்கு அதிபதியான ஹயக்ரீவர் சன்னிதியில் எந்நேரமும் மாணவர் கூட்டம் அலை மோதுகிறது. புதன், வியாழக் கிழமைகளில் ஹயக்ரீவருக்கு அர்ச்சனை, ஆராதனை செய்வது மிக விசேஷமானது. வேண்டியதை நிறைவேற்றுவதால் சமீப காலமாக ஹயக்ரீவரை ஆராதிக்கும் பக்தர்கள் அதிகமாக இருப்பதாக ஆலயத்திலுள்ளோர் கூறுகிறார்கள்.

இதே தெருவில் அமைந்துள்ளது முருகாசிரமம். சுருண்டு படமெடுத்த நாகத்தின் மேல் நின்ற கோலத்தில் காட்சி தரும் வேலவனின் திருவுருவம் மனதை கொள்ளை கொள்ளுகிறது. அங்கு ஒரு தெய்வீக ஈர்ப்பு நிலவுவதை நம்மால் உணர முடிகிறது.

சனி பகவானுக்கென திருநள்ளாற்றிற்கு இணையான தனிப்பட்ட ஆலயம் மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அமைந்து ‘வட திருநள்ளாறு’ என போற்றப்படுகிறது. சனி பகவானுக்கென்றே ஏற்பட்ட தனிச் சிறப்பு பெற்ற கோயில் இது. சனி பகவான் காக வாகனத்தில் நீலாம்பிகையுடன் இணைந்து சாந்தமாகக் காட்சி தரும் ஒரே தலம். அறுபது ஆண்டுகளுக்கு முன் இங்கு வருகை புரிந்த பரமாச்சாரியாள் தனது திருவாக்கினால் வட திருநள்ளாறு என்றூ அருளினார்.

சனியால் பீடிக்கப் படாதவர்கள் பிள்ளையாரும், அனுமனும். அந்த அனுமன் இங்கு சக்தி வாய்ந்த பஞ்சமுக அனுமனாக நின்று அருள் பாலிக்கிறார். அரச மரத்தடியில் அருட் காட்சி தருன் ‘யக்ஞ’ விநாயகர் மிகவும் வரப்ரசாதி. திருமணம், பிள்ளைச் செல்வம், கல்வி அனைத்தையும் அருளும் கற்பக விநாயகராக அருள் புரிகிறார். அத்துடன் ‘யக்ஞ் விநாயகர்’ என்ற பெயரில் உள்ள ஒரே விநாயகர் இவர் மட்டுமே என்றூ கூறப்படுகிறது. இவ்வாறு சனி பகவானுடன் சக்தி வாய்ந்த விநாயகரும், பராக்கிரமம் மிக்க ஆஞ்சநேயரும் குடி கொண்டுள்ள இவ்வாலய இறைவனை வணங்கும்போது சனியின் துன்பம் வெகுவாகக் குறைந்து பரமசுகமான மங்கல வாழ்வு கிட்டுவது உறுதி.

இவ்வாலயம் சனஞ்சயா அறக் கட்டளையினரால் மிக நன்றாக பராமறிக்கப்படுகிறது. மேலும் விஷ்ணு, துர்க்கைக்கு ஒரு சன்னிதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளிய யந்திரங்கள் பிரதிஷ்டிக்கப்பட்டு மிகுந்த  சக்தியுடன் விளங்கும் இக்கோயில் மூர்த்திகளைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. மேற்கு மாம்பலத்தின் பல பிரசித்தி பெற்ற கோயில்களில் முக்கியமான சில ஆலயங்கள் இவை.






ஆச்சரியமான விஷயம்


சினேகிதி ஆகஸ்ட் 2004 இதழில் வெளியானது


மனிதர்கள் இறந்த பின்பும் அவர்களின் சில உறுப்புகள் சில மணி நேரங்களுக்கு உயிருடன் இருப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

கண் – 30 நிமிடம்
மூளை – 10 நிமிடம்
தோல் – 5 நிமிடம்
கால் – 4 நிமிடம்
இதயம் – 10 நிமிடம்
காது – 1 நிமிடம்
எலும்பு – 30 நாட்கள்

தோள் பட்டை – 4 மணி நேரம்


பெண்ணின் முதல் எதிரி பெண்ணா? ஆணா?

மங்கை அக்டோபர் 1994 இதழில் வெளியானது



பெண்குழந்தை பிறந்தவுடன் அதன் தாயே ‘சே, பெண்ணாகப் பிறந்து விட்டதே’ என்று அலுத்துக் கொள்கிறாள்.

அடுத்து... அப்பெண் வளரும்போது ஆண் குழந்தைகளுக்கு உள்ள உரிமைகளையும், சுதந்திரத்தையும் தாய் அவளுக்குத் தருவதில்லை. என்றைக்கும் அவளை வேறு வீட்டிற்கு வாழப் போகிறவள் என்ற நினைவிலேயே மிக்க கட்டுப்பாட்டோடு வளர்க்கிறாள்.

அவளது திறமைகளும், சாதனை எண்ணங்களும் அவளது தாய், பாட்டி போன்ற பெண்களால் கிள்ளி எறியப்பட்டு, கல்யாணச் சந்தைக்குத் தயாராகிறாள். அங்கு பலி ஆடு போல் நிறுத்தப்பட்டு, மணமகளின் தாய் என்ற பெண்ணால் பேரம் பேசப்படுகிறாள்.

திருமணத்திற்குப் பின் தன்னைப்போல் அவளும் ஒரு பெண் என்று நினைக்காத மாமியாராலும், நாத்தனாராலும் பலவித துன்புறுத்தல்கள்...

அந்தப் பெண் வேலைக்குச் சென்று அனைவருடனும் சரிசமமாகப் பழகினாலோ, சக தோழிகளிடமிருந்து அவளுக்கு விமரிசன அம்புகள்...


பெண்களின் உயர்வில் ஒரு ஆண் என்றும் பொறாமை அடைவதில்லை. தன் மனைவி என்று பெருமையே அடைகிறான். அவளை உயர விடாமல் பேச்சுக்களாலும், செயல்களாலும் கேவலப்படுத்துவது அவளுடனேயே இருக்கும் பெண்கள்தான்.


தீபாவளியே வருக !







ஞான பூமி தீபாவளி மலர் 2003 – October Supplement

கடந்த 2000 ஆண்டுகட்கும் மேலாகப் பண்பாடு, கலாச்சாரத்தின் அடிப்படையில் பாரதத்தில் மட்டுமின்றி, மலேயா, சீனா, ஜப்பான், நேபாளம் என பலநாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீப + ஆவளி என்பதே ‘தீபாவளி’ ஆனது. இதற்கு தீபங்களின் வரிசை என்று பொருள். அதனாலேயே வடநாடுகளில் தீபாவளியன்று மாலை வீடு முழுவதும் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடுவர். நேபாளத்தில் ஐந்து நாள் தீபத் திரு நாளாகவும், சைனாவில் தீய சக்திகளை எதிர்க்கும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஜப்பானியர்கள் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடுவர். சீக்கியர்கள் குரு கோவிந்தசிங் ஔரங்கசீப்பிடமிருந்து விடுதலை பெற்று அமிர்தசரஸூக்கு வந்த  நாளாகவும், சமணர்கள் மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாளாகவும் கொண்டாடுவர்.

குவாலியரைச் சேர்ந்த ராஜபுத்திரர்கள் தம் வீரர்களைப் போற்றி வீரவணக்கம் செலுத்தும் நாளாகவும், வைணவர்கள் திருமகள் மாலவனை மணந்த நாளாகவும் கொண்டாடுவர்.

தீபாவளி நம் நாட்டில் ஐந்து நாட்கள் கொண்டாடப்பட்டு வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

தீபாவளிக்கு முதல் நாள் ‘தந்தே ராஸ்’, ‘தன திரதோயசி’, ‘தன்வந்திரி ஜயந்தி’ என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறது. தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த 14 பொருட்களில் தன்வந்திரியும் ஒருவர். அவர் அமிர்தத்தில் தனக்கு பங்கு கேட்க, திருமால், ‘நீ திருமேனி பெற்றிருப்பதால் உலகில் ஆயுர்வேதத்தை செழிக்கச் செய்து பெயர் பெறுவாய்’ எனக் கூற அந்த நாளே ‘தனத்ரயோதசி.’

இதற்கு இன்னொரு கதையும் உண்டு. ஹிமா என்ற அரசனின் மகன் மணமான நாங்கு நாளில் பாம்பு தீண்டி இறந்து விடுவான் என்பது அவனது ஜாதகக் கூற்று. அது அறிந்த அவன் மனைவி அன்று இரவு அவனைத் தூங்க விடாது அவனது படுக்கையறை முழுதும் அவளது தங்க நகைகள், வெள்ளிக் காசுகளை பரப்பி, ஏகப்பட்ட விளக்குகளை ஒளிர விட்டாள். இனிய பாடல்களைப் பாடினாள். அச்சமயம் பாம்பு உருவில் வந்த யமன் அந்த ஒளியினால் கண்கள் கூச, மலைபோலிருந்த நாணயங்களில் ஏறிச் செல்ல முடியாது, இசையில் மயங்கி, மறு நாள் திரும்பிச் சென்று விடுகிறான். இவ்வாறு அந்த மதியூகியான இளம் மனைவியின் செயலால் இளவரசன் காப்பாற்றப்பட்டான். அது முதல் தீபாவளிக்கு முந்தைய நாள் ‘யமதீபதான்’ என்ற பெயரில் விளக்குகள் ஏற்றி வைக்கப்படும் வழக்கம் ஏற்பட்டது. இதனால் யமபயம் நீங்கும்.

இரண்டாம் நாள் ‘நரக சதுர்த்தசி’. ‘சோட்டி தீபாவளி’ என்று அழைக்கப்படுகிறது.

துவாபர யுகத்தில் பூதேவியின் புதல்வன் நரகாசுரன் பதினாறாயிரம் கன்னியரை சிறை வைத்தும், இந்திரனின் தாய் அதிதியின் கர்ண குண்டலங்களைக் கவர்ந்து செல்ல, தேவர்கள் முறையீட்டுக்கு இரங்கிய ஸ்ரீகிருஷ்ணன், தேவி சத்யபாமாவுடன் நரகனின் ஊரான ப்ராக் ஜோதிவும் மீது போர் செய்து கொன்றார். வெற்றித் திலகத்துடன் விடிகாலை திரும்பிய கிருஷ்ணனை தாதியர் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விட்டதால் விடியற்காலை சூரியோதயத்துக்கு முன் குளிக்க வேண்டும் என்பது வழக்கம்.

சோகத்திலேயே பெரிய புத்திர சோகத்தை அடைந்த பூதேவி தன் மகன் கிருஷ்ணன் கையால் மோட்சம் பெற்றதால் மகிழ்ந்து, உலகத்திலுள்ளோர் நரகாசுரன் இறந்த நாளாய்க் கொண்டாடும் விதமாக விடியற்காலை எழுந்து எண்ணெய் தேய்த்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் உண்டு கொண்டாட வேண்டுமென பகவானிடம் வேண்டிக் கொண்டாள்.

நாம் துன்பப்பட்டாலும் உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்பதே தீபாவளிப் பண்டிகையின் நோக்கம்.

தீபாவளியன்று லட்சுமி கங்கை நீரிலும், எண்ணெயிலும் இருப்பதால் அன்று ‘கங்கா ஸ்நானம்’ செய்ததாகக் கருதப்படுகிறது. தீபாவளியன்று காலை யம தர்ப்பணம் செய்தால் யமதர்மன் திருப்தியடைந்து, நாம் ஒரு வருடம் செய்யும் பாபம் விலகுவதாக ஐதீகம்.

மூன்றாம் நாள் மார்வாடிகள், மற்றும் பல வட நாட்டினர் லக்ஷ்மி பூஜையை மாலையில் செய்வர். வாமன அவதாரம் எடுத்து மகா விஷ்ணு, பலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்கி, அவனை அழித்து அவன் சிறப்படுத்தி வைத்திருந்த லக்ஷ்மி தேவியை விடுவித்தார். அந்த நாளே வணிகர்கள் லக்ஷ்மி பூஜை செய்யும் நாளாயிற்று.

அன்று புதுக்கணக்கு ஆரம்பிப்பது வழக்கம். உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரும் ஆண்டு லாப ஆண்டாக இருக்க லக்ஷ்மி தேவியை வரவேற்று, பிரார்த்தனை செய்வர்.

பார்வதி தேவி, சிவபெருமானுடன் தாயக்கட்டம் ஆடிய நாள் அது என்பதால் அன்று கண்டிப்பாக சூதாட்டம் ஆடுவது பல வட நாடுகளில் வழக்கமாயுள்ளது. அன்று இரவு சூதாட்டம் ஆடுவதால். அவ்வருடம் முழுதும் சுபிட்சமாக இருக்குமென்பது அவர்கள் நம்பிக்கை.

நான்காம் நாள் ‘பல்ப்ரதிபாதா’, ‘பலிபத்யாமி’ என்று கொண்டாடப்படுகிறது. பலியை மூன்று அடியால் பாதாள லோகத்தில் அழுத்தி அழித்த விஷ்ணு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, அடுத்த பிரதமை அன்று வந்து அவனது அறிவு ஒளியால், உலகின் அஞ்ஞான இருட்டை அழிக்க அனுமதித்ததால், அன்று பல இடங்களில் பலிச் சக்கரவர்த்தி வழிபாடு செய்து, கோ பூஜை செய்வர்.

ஐந்தாம் நாள் ‘பாவ்பீஜ்’ என்ற பெயரில் சகோதர, சகோதரிகளுக்குள் நெருக்கம் ஏற்படுத்தும் நாள். இதற்கும் ஒரு புராணக் கதை உண்டு.

எமன் தன் தங்கை யமுனாவிடம் மிகவும் பாசம் கொண்டிருந்தாலும் அவளைக் காண அடிக்கடி வருவதில்லை.

தீபாவளிக்குப் பிறகு வரும் துவிதியை அன்று அதிசயமாக வந்த அண்ணன் யமனை வரவேற்ற யமுனை ஒவ்வொரு ஆண்டும் தன்னைக் காண அந்த நாளில் வருவதுடன் உலகில் எல்லா சகோதரர்களும் தங்கள் சகோதரிகளின் வீட்டுக்கு சென்று உபசரணைகளை ஏற்க வேண்டும். அவர்களுக்கு யமபயம் இருக்கக் கூடாது என வேண்டுவார்கள். அதனாலேயே அன்று சகோதரர்கள் தம் சகோதரிகள் வீட்டுக்குச் சென்று விருந்துண்ணும் பழக்கம் ஏற்பட்டது.

அன்றுதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உலகுக்கே வேதமான ஸ்ரீமத் பகவத் கீதையை அர்ச்சுனனுக்கு உபதேசித்த நாள்.

மஹாவீரர் நிர்வாண நிலை அடந்த நாள். உண்மையைத் தேடி அலைந்த நசிகேதன் யமனை சந்தித்து மரணத்தை வெல்லும் வழி கேட்க, ‘இறைவனைப் பற்றிய விழிப்பு நிலை பெறும்போதே, உனக்கு ஜனன, மரண பந்தம் விலகி முக்தி கிட்டும்’ என எமன் போதித்த நாளும் இதுவே.

மற்ற மாநிலங்களில் இரண்டு முதல் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி நம் தமிழ் நாட்டில் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. அமாவாசை அன்று கேதார கௌரி விரதம் செய்வது நம் தமிழ் நாட்டு வழக்கம். தேவி பார்வதி இந்த விரதத்தை நோற்றே, இறைவன் உடலில் பாதி பெற்றதால் இதைச் செய்யும் பெண்கள் கணவருடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.

நாமும் தீபாவளியை இறைவனைத் துதித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகளை உண்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்!





எடை குறைப்பு இனி உங்கள் கையில்

கிருஹ ஷோபா அக்டோபர் 2002 இதழில் வெளியானது



“ஹாய் மாலா! என்ன அடையாளமே தெரியாம பெருத்துட்டியே, காலேஜ் நாளில் இருந்த மாலாவா நீ?”

“ஜானு! நீ பின் சீட்டில் உட்கார்ந்ததும் ஸ்கூட்டரே அமுங்கி விட்டது பார்!”


அம்மா! உன்னைப் பார்க்க எதிர்த்த வீட்டு குண்டு ஆண்ட்டி வந்திருக்காங்க!”

இது போன்ற பேச்சுக்களை அவ்வப்போது கேட்க நேரும் 35 முதல் 40 வயதிருக்கும் பெண்மணியா நீங்கள்? நிதானமாகக் கண்ணாடியில் பார்த்தபோது, இத்தனை நாள் தெரியாத பருமன் இப்பொழுது விசுவரூபமெடுத்து தெரிகிறதா? உங்களுக்கு மட்டுமல்ல, பல பெண்களின் பெரிய பிரச்சினை இது.

பாபா பட்த்தில், குடும்பப் பெண்கள் அன்றாடம் செய்யும் வீட்டு வேலைகளில் என்னென்ன யோகாசன முறைகள் அடங்கியிருக்கின்றன என்ற ஒரு வசனம் வரும். அது சினிமாவுக்கான சமாச்சாரம் அல்ல. உண்மையிலேயே பெண்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.

அக்காலப் பெண்மணிகள் குனிந்து பெருக்கி, துடைத்து, அம்மி, கல்லுரலில் அரைத்து, துணி துவைத்து, வாசல், முற்றம், கொல்லை என்று நிறைய நடந்து... அடேயப்பா! எத்தனை உடற்பயிற்சிகள்? அதனால்தான் அன்று பெரும்பாலான பெண்மணிகள் அளவான, அழகான, ஆரோக்கியமான உடற்கட்டுடன் இருந்தார்கள். இன்றோ எல்லாவற்றிற்கும் மிஷின். கொரிக்க, குடிக்க ‘ரெடிமேட்’ ஸ்நாக்ஸ், பானங்கள்! சதா நேரமும் டி.வி.யின் ‘மெகா சீரியல்’கள் முன் ஆசனம்! இன்றைய முக்கால்வாசிப் பெண்களின் ‘ஓவர் வெயிட்’டுக்கு இவையே முக்கியக் காரணங்கள்.

திருமணமாகி குழந்தை பிறந்ததுமே பெண்களுக்கு தங்கள் அழகு பற்றிய உணர்வு குறைந்து விடுகிறது. குழந்தை வளர்ப்பு, அவர்கள் படிப்பு, சாப்பாடு, டிபன், வேலை என்று குடும்பத்திலேயே உழன்று தன்னை மறந்துவிடும் குடும்பத் தலைவிக்கு அழகு பற்றிய ஆர்வம் 35 வயதுக்கு மேல் ஏற்படும்போது, தன் பருமனைக் குறைக்க எது செய்யவும் தயாராகிறாள். இதுதான் தவறான அணுகுமுறை என்பது. ஆரம்பத்திலிருந்தே கீழ்க்கண்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

நன்கு பசித்த பின்பே சாப்பிட வேண்டும். நொறுக்கு தீனிகளை அடிக்கடி சாப்பிடக்கூடாது.



என் தோழி ஒருத்தி பருமனைக் குறைக்க ஒரு நாளைக்கு நான்கு முறை ‘வாக்கிங்’ செல்வாள்! ஒரு வேளை மிகச் சிறிதளவு சாப்பிடுவாள்! பலன்? உடம்பு குறையவில்லை! அனீமியா வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதுதான் மிச்சம்! உடல் எடை படிப்படியாகக் குறைய வேண்டும். கடுமையான உடற் பயிற்சிகள் உடலை எளிதில் சோர்வடையச் செய்யும்.

v நொறுக்குத் தீனிகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது.

v இனிப்பு உடல் எடையை அதிகரிக்கும் என்பதால், இனிப்பு சாப்பிட ஆசை ஏற்படும்போது. சிறிது பற்பசையால் பற்களைத் தேய்த்தால், பற்பசையின் இனிப்பு, அந்த ஆசையை நீக்கி விடும்.


v வாரம் ஒரு முறை எடையைப் பார்க்கவும்.

v எளிய உடற்பயிற்சிகள், தினமும் அரை மணி நேரம் வேக நடை, எடை குறைப்புக்கு எளிய வழி.


v 8 முதல் 10 டம்ளர்கள் வரை தினமும் தண்ணீற் குடிக்க வேண்டும்.

v சாப்பிடும் எண்ணம் ஏற்படும்போது ஒரு சிறு துண்டு ஊறுகாய் அல்லது எலுமிச்சை துண்டை வாயில் அடக்கிக் கொண்டால், அந்த எண்ணம் போய்விடும்.


v சமைத்த உணவை விட பச்சைக் காய்கறிகள், பழங்கள், முளை வந்த தானியங்களை அதிகம் சாப்பிடவும்.

v முட்டைக்கோஸ், தக்காளி இவற்றிற்கு எடை குறைக்கும் சக்தி அதிகம். தினமும் காலை ‘கோஸ் சாலட்’ செய்து சாப்பிடவும். காலை உணவுக்கு பதில் 2 பழுத்த தக்காளிகளை சாப்பிடவும்.


v கேழ்வரகை கஞ்சி, தோசை செய்து சாப்பிட்டால் எடையும் குறையும்; உடலுக்கு சத்தும் கிடைக்கும்.

v டென்ஷன், கவலை இவையும் ஆரோக்கியத்தின் எதிரிகள்.


v பசியைக் கட்டுப்படுத்தும் ‘ஆம்பெடமைன்ஸ்’ என்ற மருந்து சாப்பிடுவதால் இதயம், நரம்பு சம்பந்தமான நோய்கள் வருவதாக ‘ஃபெடரல் ட்ரேட் கமிஷன்’ (அமெரிக்கா) இவற்றைத் தடை செய்துள்ளது.

v எபிட்ரின் கலந்த மருந்துகள் ஹார்ட் அட்டாக், பக்கவாதம் இவற்றை ஏற்படுத்தும்.


v ‘ஒரே வாரத்தில் 5 கிலோ குறையலாம், 10 கிலோ குறையலாம்’ என வரும் அறிவிப்புகள் முற்றிலும் பொய்யானவை.

v கொழுப்பைக் கரைத்து எடையைக் குறைக்கும் எந்த மருந்தும், மற்ற வைட்டமின் சத்துப் பொருள்களையும் கரைத்து விடுமென்பதை நாம் உணரவேண்டும்.


v சில மின் உடற்பயிற்சி சாதனங்களை சரியாக உபயோகப் படுத்தாவிடில் அவையும் ஆபத்தானவையே. அவற்றால் தசையின் நாளங்கள் பாதிக்கப்படும். ஷாக், உடல் எரிச்சல் போன்றவை ஏற்படும்.


v எனவே இயற்கையான உணவு முறை, எளிய உடற் பயிற்சி போன்றவை மட்டுமே உடல் எடையைக்  குறைக்க உதவும், உத்தமமான வழிகள்.







எக்கச்சக்க 'ஏ' வைட்டமின்

சினேகிதி ஜூலை, 2004 இதழில் வெளியானது



உடல் நலத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருப்பவை பழங்கள். பழங்களை வெகு நாட்கள் வைத்து சாப்பிடுவது முடியாது. ஆனால் பேரீச்சம் பழம் மட்டுமே இதற்கு விதி விலக்கு. இதனைப் பல நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம். உடல் வலிமைக்கு, தசை வளர்ச்சிக்கு, இரும்பு சத்துக்கு மிகத் தேவையானது பேரீச்சை. உயர்தர பேரீச்சம் பழம் நம் நாட்டில் உற்பத்தியாவதில்லை. எகிப்து, அரபு, ஆப்பிரிக்க நாடுகளில்தான் தரமான பேரீச்சம் பழங்கள் கிடைக்கின்றன. அவை பக்குவப்படுத்தப்பட்டு நம் நாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. நம் நாட்டிலுள்ள கருஞ்சிவப்பு நிற பேரீச்சம் பழங்களைவிட, நல்ல கருப்பு நிறத்தில் வெளி நாட்டிலிருந்து வரும் பேரீச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் அளவு வைட்டமின் ‘ஏ’ சத்து அடங்கியுள்ளது. மற்றும் பி1 வைய்டமின், பி2 வைட்டமின்களும் உள்ளன. இரும்புச் சத்து 30 மில்லி கிராமும், கால்சியம் 20 மில்லி கிராமும் உள்ளது.

பேரீச்சம்பழம் இரத்த விருத்திக்கு மிகவும் நல்ல பழம். அனீமியா இருப்போருக்கும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்தோருக்கும் பேரீச்சம் பழம் மிக நல்லது. தினமும் இரவு பேரீச்சம் பழமும், பசும்பாலும் சாப்பிட்டால் இரத்தம் ஊறி உடல் நலம் கிடைக்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள்கூட மற்ற பழங்கள் போலன்றி பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம்.

காச நோயாளிகள் உடல் வலிமை பெற தொடர்ந்து பேரீச்சம் பழங்களை சாப்பிடுவது நல்லது.

பேரீச்சம் பழங்களை கொட்டை நீக்கி, நல்ல தேனில் ஊறவைத்து, தினமும் இரவில் இரண்டு பழங்கள் சாப்பிட்டால், ஆண்களுக்கு தாது விருத்தி உண்டாகும். சத்துக் குறைவால் மெலிந்திருப்போரின் உடல் நிலை சீரடைந்து, பலம் பெருகும்.


பேரீச்சம் பழத்தை கடைகளில் நல்ல தரமாக, சுத்தமாக இருக்கிறதா எனப் பார்த்து வாங்குவது அவசியம். ஈக்களும், கொசுக்களும் மொய்த்துக் கொண்டு விற்பவற்றை வாங்கினால் நம் ஆரோக்கியம்தான் கெட்டுப் போகும்.


என் விமரிசனங்கள்


என் விமரிசனங்கள்

ஞான ஆலயம் ஜூலை 1, 2005 இதழில் பக்தர் தபால் பகுதியில் எழுதிய விமரிசனம்.




மங்களம் தரும் வீரபத்திரர் பற்றிய கட்டுரையும், பூஜை முறைகளும் அவரிடம் பயம் நீக்கி, பக்தியை ஏற்படுத்தியது.

ஞான ஆலயம் அக்டோபர் 2005 இதழில் வாசகர் பதில்கள் பகுதியான ஒரு செய்தி

பி.ராஜேஸ்வரி மதுரை வீரன் கோயில் பற்றிக் கேட்டிருந்தார். அப்படி ஒரு கோயில் தஞ்சை ஜில்லா, பாபநாசம் தாலுக்காவில், வடகுரங்காடுதுறை என்ற ஊரில் இருக்கிறது. இது, என் தாய்வழிப் பாட்டனாரின் குலதெய்வம்.வாய்க்காலில் (சிறிய வாய்க்கால்தான்) இறங்கி மறுகரை ஏறி, சிறிது தூரம் கரையோடு நடந்து சென்றால் காட்டுக்குள் மதுரை வீரன் கோயில் கொண்டிருக்கிறார்.திருவையாற்றிலிருந்து 7 கி.மீ. கிழக்கு, கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. திலைவில் உள்ளது. யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்.இவ்வளவு தூரம் வருபவர்கள், ஆடுதுறையில் 'வாலி' பூஜித்த தயாநிதீஸ்வரரையும், அருகிலேயே 108 வைணவத் தலங்களில் ஒன்றான ஜகத்ரட்சகப் பெருமாளையும் தரிசிக்கலாம்.
எழுதியவர் - ஜெ. ஜெயலக்ஷ்மி.
(இச்செய்தியை திருமதி இந்துமதி (சென்னை-24), ராதா பாலு(மும்பை) ஆகிய வாசகர்களும் தெரிவித்து உள்ளனர். அனைவருக்கும் நன்றி)