இந்து தமிழ் நாளிதழ் 08/05/2016 அன்று பெண் இன்று இணைப்பில் வெளியான தொகுப்பு
பத்திரிகையைப் படிக்க இங்கே சொடுக்கவும்
* மலிவான விலையில் கிடைக்கிற வெள்ளரி, வெயில் காலக் கோளாறுகள் பலவற்றைத் தீர்க்க வல்லது. வெள்ளரிக்காய் சாறு குடித்துவந்தால் வாயுத் தொல்லை, குடற்புண், வயிற்றெரிச்சல் ஆகியவை குணமாகும்.
* ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கொழுப்பைக் குறைக்கும் சக்தி வெள்ளரிக்கு உண்டு.
* சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலுக்கு வெள்ளரி விதையை அரைத்துத் தயிருடன் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
* ஆரோக்கியத்துடன் அழகும் தர வல்லது வெள்ளரி. வெள்ளரியைத் துண்டுகளாக்கி முகத்தில் தேய்த்துவந்தால் கரும்புள்ளிகள், கருவளையங்கள் ஆகியவை மறைந்து சருமம் பளபளக்கும். பருக்களைக் கட்டுப்படுத்தும்.
* கண்களை மூடி அவற்றின் மேல் வெள்ளரித் துண்டுகளை வைத்திருந்தால் கண்கள் குளிர்ச்சியடையும்.
* வெள்ளரிக் காயைப் பொடியாக நறுக்கிக் தயிரில் போட்டு அத்துடன் பெரிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றுடன் கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கப் சாப்பிட்டால் வெயிலின் தாகம், சோர்வு, களைப்பு நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.
* வெள்ளரியை சாலடாகவோ, பச்சடி செய்தோ சாப்பிட்டுவந்தால், உடலுக்கு நார்ச்சத்து கிடைப்பதுடன் எடையும் குறையும்.
* வெள்ளரியை இரண்டாக நறுக்கி, வெந்நீரில் கொதிக்க வைத்து அந்த ஆவியை உள்ளிழுத்தால், களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சி பெறலாம்.
* வறண்ட உதடுகளில் வெள்ளரிச் சாற்றைத் தடவி 20 நிமிடங்களுக்குப் பின்பு கழுவுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இப்படிச் செய்துவந்தால் உதடுகள் பளபளக்கும்.
* இரண்டு பிஞ்சு வெள்ளரியுடன் பனங்கற்கண்டு பொடி, ஒரு கப் தயிர் சேர்த்து மிக்ஸியில் அடித்து, ஐஸ் துண்டுகளைப் போட்டுக் குடித்தால் வெயில் களைப்பு, அதனால் வரும் உடல் உபாதைகள் நீங்கும்.
* வெள்ளரிச் சாற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டுவந்தால் குடல் புழுக்கள், கொக்கிப் புழுக்கள் அழியும்.
* வெள்ளரியை வேகவைப்பதால் அதிலுள்ள சத்துக்கள் அழிந்துவிடும். அதனால் கூடியவரை பச்சையாக சாலட், பச்சடி, ஜூஸ் செய்து சாப்பிடுவது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக