Thanjai

Thanjai

வியாழன், 23 ஜூன், 2016

சிரிக்கும் குபேரர்





தி இந்து தமிழ் நாளிதழ் தேதி 23-06-2016 யுடன் வெளி வந்த ஆனந்த ஜோதி இணைப்பில் வெளியான கட்டுரை.

நேரடியாக செய்தித் தாள் கட்டுரையைப் படிக்க இங்கேசொடுக்கவும்.





நாங்கள் ஒவ்வொரு முறையும் திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் செல்லும்போது தகதகக்கும் அந்த ஆலயத்தை பார்த்துக் கொண்டே செல்வோம். இந்த முறை அவ்வாலயத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு பல ஆலயங்களில் சன்னதி உண்டு. சில சிறப்பான தனிப்பட்ட ஆலயங்களும் உண்டு. ஆனால் வித்யாசமான ரூபத்துடன் வானுயர்ந்து நின்று காட்சி தந்து, தன்னை வணங்குவோரின் ஆசைகளையும், வேண்டுதல்களையும்
  நிறைவேற்றி வைக்கும் செல்வ குபேரரைக் காண நீங்கள் விழுப்புரம் மாவட்டம் ஓங்கூருக்கு செல்ல வேண்டும்.

தஞ்சை மாவட்டம் குடவாசலை சொந்த ஊராகக் கொண்ட சென்னை P.R ஜுவெல்லரி உரிமையாளரான திரு.ரவீந்திரன் அவர்கள் மனதில்  உலக மக்களின் ஆனந்தத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணம் தோன்றியதாம். அதன் விளைவாக அவரால் உருவாக்கப் பட்டதே இவ்வாலயம். இங்குள்ள  மண்டபத்தில் அமர்ந்து தம் கோரிக்கைகளை வேண்டினால் அனைத்திலும் வெற்றி பெற்று சகல செல்வங்களும் பெற்று வாழ்வில் உயர்நிலை அடையலாம்.

அவரால்  உருவாக்கப்பட்ட இவ்வாலயம் தங்கம் போல் தகதகக்கிறது. நாம் ஹேப்பிமேன் என்று சொல்லும் Laughing Budhdha உருவம்தான் தங்க வண்ணத்தில் சிரித்த முகத்துடன், பெருத்த தொப்பையுடன், பொற்காசு மாலை தாங்கி நெடிதுயர்ந்து நின்று செல்வகுபேரராகக் காட்சி தருகிறார். அவரது சிரித்த மகிழ்ச்சியான உருவம் கண்டதுமே நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அப்பொழுதே நம் துன்பங்கள் தூரப்போய் விட்டாற்போன்ற மகிழ்ச்சி மனதை ஆட்கொள்கிறது.




இவ்வாலயத்தின் சிறப்பம்சமாக 10800 சதுர அடியில் ஒன்பது என்ற கூட்டு எண்ணிக்கையில் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து நவக்கிரகங்களும் தமக்குரிய திசையில், அவரவர் வாகனங்களுடன், தனித்தனி சந்நிதி, மரம், பூ அமைக்கப் பட்டு, அவர்களுக்கான ஸ்லோகம் எழுதப்பட்டு, சிறப்பாக அமைந்துள்ளது. ஆனந்த நர்த்தன விநாயகர், ஆஞ்சநேயர், லக்ஷ்மி ஹயக்ரீவர், கன்னிகா பரமேஸ்வரி, லக்ஷ்மி நாராயணர்,ஷீர்டி பாபா, அன்னை, அரவிந்தருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. 





ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பிரமிடு வடிவ கோபுரங்கள் மேலே கலசங்களுடன் அற்புதக் காட்சி அளிக்கின்றன. கோபுர  தரிசனம் கோடி புண்ணியம் என்பர். இங்கு பிரமிடு வடிவ கோபுரங்கள் காலை சூரிய வெளிச்சத்தில் மின்னுவது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி! ஒவ்வொரு சந்நிதியிலுள்ள தெய்வங்களும் தங்கக் கவசத்தில் பொலிவோடும், அழகோடும் காட்சி தருகின்றனர். ஆலயத்தில் ஒரு தெய்வீகம் நம்மை ஆட்கொள்வதை உணர முடிகிறது.செல்வா குபேரர் நம்மைப் பார்த்து 'கவலைப் படாதே. உன் எண்ணங்கள் ஈடேறும்' என்று புன்னகையுடன் சொல்வதுபோல் தோன்றுகிறது. 




கடந்த 2014ம் ஆண்டு செப்டெம்பர் நாலாம் தேதி கும்பாபிஷேகம் கண்ட இக்கோயில் மிக சுத்தமாகப் பராமரிக்கப் படுகிறது. ஆலயம் முழுதும் மிதியடிகள் போடப்பட்டு, வெயிலின் சூடு தாக்காமல், அம்புக்குறி போட்ட வழியே சென்று நாம் வரிசையாக தெய்வங்களை தரிசிக்கும்படி சிறந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஒரே வண்ண புடவை அணிந்த பெண்கள் நமக்கு அனைத்தும் விளக்கி சொல்கிறார்கள். எல்லா சன்னதிகளிலும் கண்ணாடிப் பெட்டிக்குள் அணையா விளக்குகள் உள்ளன. சன்னதிகளின் எண்ணிக்கைக்கு தக்கபடி அவர்களிடமே விலைக்கு கிடைக்கும் எண்ணையை வாங்கி நாம் அத்தனை விளக்குகளுக்கும் ஊற்றி  வழிபடலாம். 





அங்குள்ள மண்டபத்தில் குடும்பத்துடன் அமர்ந்து பெயர், ஊர், தொலைபேசி எண், இமெயில் விலாசம் பதிவு செய்து செல்வ குபேரரிடம் நம் கோரிக்கைகளை வேண்டிக்கொண்டால் அவர் அத்தனையும் விரைவில் நிரைவேற்றுவார் என்ற திரு ரவீந்திரன் அவர்களின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் அங்கு எழுதப் பட்டிருப்பது எவருக்கும் கண்டிப்பாக மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். 

 



இங்கு உண்டியல் கிடையாது. வரும் அனைவருக்கும் அன்னதானம் உண்டு. நன்கொடைகள், வழிபாட்டுக் கட்டணம் கிடையாது. அன்னதானத்திற்கு மட்டுமே தொகை வசூலிக்கப் படுகிறது. ஆன்மீக  புத்தகங்கள், மற்றும் தெய்வ விக்கிரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.




சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் NH45ல் சென்னையிலிருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் பிரதான சாலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் ஓங்கூரில் அமைந்துள்ளது  ஸ்ரீ செல்வகுபேரர் ஆலயம். ஆலய நேரம் காலை 7 முதல் இரவு 8 வரை. சொந்த வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஆலயம் தரிசித்து செல்வ குபேரரின் அருளைப் பெறலாம்.






ஞாயிறு, 5 ஜூன், 2016

வினை தீர்க்கும் வேலவர்


தீபம் மே 20, 2016 இதழில் வெளியான கட்டுரை

சென்னை மாவட்டக் கோவில்கள்...வடபழனி முருகன் கோவில்















தமிழ்க் கடவுளான அழகன் முருகனுக்கு தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும், வெளி நாட்டிலும் கூட ஆலயங்கள் உண்டு. இவற்றில் சிறப்பு பெற்ற ஆறு தலங்கள் அறுபடை வீடுகள் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப் படுகின்றன. அழகன் முருகன் கோபம் கொண்டு ஆண்டிக் கோலத்தில் ஆவினன்குடி என்ற மலையில் நின்று ஆட்சி செய்யும் ஸ்தலமே பழநி. சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாஷாணச் சிலையே இன்றுவரை பழநி ஆலயத்தில் காட்சி தரும் பழனியாண்டவர் மூல விக்ரகம். அதே போன்று சென்னையில் 3 சித்தர்களால் பூஜிக்கப்பட்டு, இன்று மிகப் பெரிய ஆலயமாகி, சென்னை வாழ் பக்தர்களுக்கு இன்னருளை வாரி வழங்குகிறது வடபழநி ஆண்டவர் ஆலயம்.



சென்னையின் மிகப்பெரிய, மிகப் பிரபலமான, வேண்டுவோர்க்கு வேண்டியன அருளும் அப்பன் தமிழ்க் குமரனின் ஆலயம் சென்னை நகரின் வளமைக்கும், சிறப்பிற்கும் ஆதாரமாக விளங்குகிறது என்றால் மிகையில்லை. சென்னையில் உண்டியல் வருமானம் மிக அதிக அளவு அரசுக்கு வரும் தலங்களில் இவ்வாலயம் முக்க்யமானது.  

 
17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது இன்றைய சென்னை. புலியூர்க் கோட்டம் என்பது அதன் பெயர். அங்கு வாழ்ந்த அண்ணாசாமி நாயக்கர் என்பவர் சிறந்த முருக பக்தர். நாளும் பொழுதும் அழகன் முருகனை வணங்குவதையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். பழநி முருகனின் மேல் அவருக்கு அபார பக்தி. ஏனைய வாழிவியல் ஆசைகளில் நாட்டமில்லாது அல்லும் பகலும் குமரக் கடவுளையே துதித்து வந்தார். அவரது பெரிய சொத்தாக அவர் வைத்து வழிபட்டது பழநி ஆண்டவரின் ஒரு புகைப்படம். 

அவரது பக்தியில் கட்டுண்ட கதிர்வேலன் ஒரு நாள் அவர் கனவில் தோன்றினான். அவரது வீட்டையே கோவிலாக்கி வழிபடும்படி ஆணையிட்டான். மெய் சிலிர்த்து விழித்த அண்ணாசாமி நாயக்கர் இறைவன் ஆணாயை நிறைவேற்றினார்அவரது இல்லம் கோயிலாயிற்றுபழநி ஆண்டவன் வடபழநி ஆண்டவன் என்ற பெயர் பெற்றான்அண்ணாசாமி நாயக்கர், அண்ணாசாமி தம்பிரான் என்ற பெயருடன், முருகன் அருளால் பல சித்துக்களை நிகழ்த்தினார். முருகனை மனதில் கொண்டு, ஆலயம் வருவோர்க்கு குறி சொல்ல, முருகனருளால் அவர் வாக்குமெய்ப்பட ஆரம்பித்தது. வட பழநி ஆண்டவனின் புகழும் பரவியது. முருகனிடம் பெரும் பக்தி கொண்டு தன்னிடம் தொண்டு செய்த இரத்தினசாமி செட்டியாரிடம் பழனி ஆண்டவருக்கு ஒரு சிலை வடித்து கோவில் அமைக்க வேண்டுமென தன் உள்ளக் கிடக்கையைத் தெரிவித்தார். அதன்படியே இரத்தினசாமி செட்டியாரும் ஆலய திருப்பணிகளை ஆரம்பித்தார்.

இடையில் அண்ணாசாமி தம்பிரான் ஆண்டவன் திருவடி அடைய அவரது சீடர் இரத்தினசாமி செட்டியார், இரத்தினசாமி தம்பிரான் என்ற பயருடன் தம் குருவின் ஆணைப்படி அவரும் குறி சொல்ல ஆரம்பித்தார். அதில் கிடைக்கும் தொகையில் ஆலயம் முடிவுற்று 1865ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

அவருக்குப்பின் அவரது  சீடர் பாக்யலிங்கத் தம்பிரான் முருகன்  அருள் பெற்று, கடமைகளைத் தொடர்ந்தார். 1931 ஆம் ஆண்டு அவர்சித்தியடைந்த பின், அங்கு தொடர்ந்து வந்து டிருந்த பக்தர்களால் ஆலயப்பணி தொடரப்பட்டது. 

மூன்று சித்தர்களின் சமாதியும் ஆலயத்தின் பின்புறம் அமைக்கப் பட்டு முறையாக பூஜைகள் நடைபெறுகின்றன. பௌர்ணமி தோறும் சிறப்பு பூஜைகளும், குரு பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது. 

ஒரு சிறிய வீடே ஆலயமாக இருந்தது. இன்று வானளாவிய கோபுரம், அழகான சன்னதிகள், திருமண மண்டபம், தங்கரதம் என்று மிகப் பெரிய ஆலயமாக விளங்குகிறது. 1972ம் ஆண்டு 72 அடி உயர ராஜகோபுரம் எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

இதில் ஸ்கந்தபுராணக் காட்சிகள் சிலைகளாக வடிக்கப் பட்டுள்ளன. 40 அடி  உயரமுள்ள  கிழக்கு  கோபுரத்தில் 108 பாரத வடிவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. ஆலயத்திற்கு முன்பாக தெப்பக் குளம் அமைந்துள்ளது. ஆலயத்தில் நுழையும்போதே பக்தி அலைகள் இறைவனின் கருணை நம்மை ஈர்ப்பதை நன்கு உணர முடிகிறது. 





வரசித்தி விநாயகரின் ஆசியுடன் வடபழநி ஆண்டவரைத் தரிசிக்கச் செல்கிறோம் தாமரை  பீடத்தின்  மேல் வலது கால் சற்று முன்வைத்தது போலக் காட்சி தரும் குமரன்  நம்  துன்பங்களை  விரைந்து  வந்து  நீக்குவதாக ஐதீகம். வலக்கையில் வேலும்தண்டமும் தாங்கி, இடக்கையை இடுப்பில் தாங்கி, நம்முடன் புன்முறுவலுடன் பேசுவது போல் ஒயிலாக தரிசனம் தரும்   ஐயன்  ஆனந்தக்  குமரனை  விட்டு  நகரவே மனம் வரவில்லை. முருகன் என்றால் அழகு என்பதை இந்த  வடபழனி  ஆண்டவனை  தரிசிக்கும் போது முழுதாய் உணர முடிகிறது. கண்களைச் சொக்க வைக்கும் குழந்தை பாலனை அருகில் சென்று அள்ளி அணைக்க ஆவல் ஏற்படுகிறது. எந்த ஆலயத்திலும் இல்லாத விதமாக, கால்களில் பாத ரட்சையுடன் காணப்படும்  முருகனை  தரிசித்தால் ஆணவமும், அகங்காரமும் நீங்கும் என்பது திண்ணம்.   




ராஜ அலங்காரத்திலும், சந்தன, விபூதிக் காப்பு அலங்காரங்களிலும் ர்ச்சகர்களின் கை வண்ணத்தில் இறைவன் காட்டும் புன்சிரிப்பு உலகையே மறக்கவைக்கிறதுஅற்புத தரிசனத்திலிருந்து விலக முடியாமல் நகர வேண்டியுள்ளது. 



ர்ப்பக்கிரகத்தைச் சுற்றி வரும்போது, தட்சிணாமூர்த்தி,  துர்கைசண்டிகேசுவரர்  சன்னதிகளும்  உற்சவ விக்கிரகங்களும் காட்சியளிக்கின்றனர்.  பிரம்மாவின்  உருவம்  சுற்றுச்  சுவரில்  உள்ளது.  வெளிச்சுற்றில் சொக்க நாதர், மீனாட்சி சந்நிதிகள் உள்ளது. இவை தவிர  அங்காரகன், ஆறுமுக வேலவர், அருணகிரி நாதர், வள்ளி, தேவசேனை,  ஆஞ்சநேயருக்குத் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. 

அங்காரகனுக்கு இங்கு தனி சன்னதி அமைந்துள்ளது  இவ்வாலய சிறப்பாகும். திருமணத்தடை நீங்கவும், பிள்ளைப்பேறு, கல்வியில் சிறப்பு ஏற்படவும் இங்கு அருள் தரும் அங்காரகனை வணங்கி சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்தால் குறைகள் தீரும். தென்பழனியில் செய்ய வேண்டிய நேர்த்திக்கடன்களையும், வேண்டுதல்களையும் வடபழனியில் செய்தால் முருகப் பெருமான் அருளால் குறைகள் நீங்கி நல்வாழ்வு பெறலாம். வடபழனி ஆண்டவர் சந்நிதியின் முக்கிய நேர்த்திக்கடன் முடி காணிக்கை, வேல் காணிக்கை, உண்டியல் காணிக்கை மற்றும் காவடி, அபிஷேகங்களாகும். கோவிலின் தல விருட்சம் அத்தி. பிள்ளை இல்லாதோர் இம்மரத்தில் தொட்டில் கட்டினால் உடன் மழலைப் பேறு  பெறுவார்.   


கந்த சஷ்டி, மாத கிருத்திகை, சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம் நாட்களில் நடை அடைப்பது இல்லை.செவ்வாய்க் கிழமைகளில் 3 மணிக்கு நடை திறக்கப்படும்.வைகாசி மாத விசாகத்தில் பிரம்மோத்சவம்  11 நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.பங்குனி உத்திரத்தில் மூன்று நாட்கள் தெப்போற்சவம் நடைபெறும்.   


ஆலயத்தின் பின்பகுதியில் வள்ளி திருமண மண்டபம் உள்ளது. அதன் அருகில் கோயிலை உருவாக்கிய மூன்று சித்தர்களான ஸ்ரீஅண்ணாசாமி தம்பிரான், ஸ்ரீஇரத்தினசாமி தம்பிரான், ஸ்ரீபாக்கிய லிங்கத் தம்பிரான் ஆகியோரின் சமாதி ஆலயம் உள்ளது. அங்கு அவர்கள் உபயோகித்த பொருட்கள் உள்ளது. அவர்கள் குறி சொல்லும்போது உபயோகித்த சிறிய கம்பினால் சந்நிதியில் தரிசிப்பவர்களின் தலையில் தட்டுவதால், அவர்கள் துன்பங்கள தீருவதாகக் கருதப்படுகிறது.


சந்நிதி எதிரில் ஒரு தியான மண்டபம் உள்ளது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மாலை 6.30 மணிக்கு இங்கு அபிஷேகமும், பின் அன்னதானமும் நடைபெறுகிறது. இங்கு ஒவ்வொரு கார்த்திகை, சஷ்டி, விசாக நாட்களில் விசேஷ வழிபாட்டுடன்கந்த சஷ்டியன்று சூரசம்ஹாரம், வைகாசி விசாகம், தைப்பூச உற்சாவங்கள், பங்குனி உத்திரத்தன்று தெப்பம் இவை மிக  விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சிறிய தங்கத் தேரில் அலங்கார பூஷணனாய் என்னப்பன் முருகன் ஆடி ஆடி வரும் அழகுக் காட்சி கண்களுக்கு பெருவிருந்து. 


வேண்டியன நிறைவேற்றும் வேலாயுதனுக்கு பக்தர்கள் தங்கத் தேர் இழுப்பது அன்றாட நிகழ்ச்சியாக உள்ளது. சென்னையின் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும்  பிரபலங்களின்  இஷ்ட  தெய்வமாக வடபழநி முருகன் விளங்குவதாக அவ்வாலய அர்ச்சகர் கூறினார். 


இவ்வாறு சென்னை நகர மக்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும், ஏன் வெளி நாட்டிலிருந்தும் கூட பக்தர்கள் வந்து வடபழநி ஆண்டவனைத் தரிசித்து, அவனருள் பெற்றுச் செல்கின்றனர். தன் வெற்றி வேலினால் நம் வினைகளைத் தூர விரட்டும் வடபழநி ஆலயம் சென்று வடபழநி ஆண்டவனைத் தரிசித்து அவனருள் பெறுவோம்!                             

ஆலயம் சென்னை வடபழனியில் உள்ளது. 
ஆலய நேரம்.....காலை-6 - 12...மாலை..4 - 9  
.தொடர்புக்கு..044 24836903