Thanjai

Thanjai

ஞாயிறு, 17 மே, 2015

தலையில் லிங்கம் சூடிய மகாலட்சுமி

சினேகிதி மார்ச் 2008 இதழில் வெளியானது


கோவாவில் பண்டோரா என்ற இடத்தில் காட்சி தரும் மகாலட்சுமி தலையில் சிவலிங்கம் தாங்கியவாறு புதுமையாகக் காட்சி தருகிறாள்.

கோவாவில் வாழும் சரஸ்வதி பிராமணர்களின் குலதேவதை மகாலட்சுமி. அவர்கள் பரசுராமரின் அருளாணைப்படி கோவா வந்தபோது, சிவசக்தியை வணங்குபவர்கள். ஆதலால் இருவரும் இணைந்த உருவமாக மகாலட்சுமி சிவலிங்கத்தைத் தலையில் கொண்டவளாக அமைத்து வணங்க ஆரம்பித்தனர்.

இவ்வாலய மூலவர் சிலை 1557-ல் போர்ச்சுகீசியரால் தாக்கப்பட்டபோது, கோல்வா என்ற இடத்தில் இருந்த ஆலயம் அழிந்துவிட, பண்டோராவில் வேறு ஆலயம் எழுப்பப்பட்டது. அச்சமயம் ஸப்தா, பேடா என்ற இருவர் பஞ்சலோகத்தாலான உற்சவ மூர்த்தியைக் கொண்டுவர, இன்றுவரை அந்த மூர்த்திதான் பூஜிக்கப்படுகிறது.

ஆலயத்தில் நுழைந்ததும் ஒரு பெரிய சபா மண்டபம் உள்ளது. அதில் மரத்தினாலான 18 விஷ்ணு ரூபங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. அடுத்து மகாலட்சுமியின் கர்ப்பக்கிரகம் அமைந்துள்ளது. இந்த மகாலட்சுமி சாத்வீக ரூபமாகப் போற்றப்படுகிறாள்.

கிட்ட்த்தட்ட கோலாப்பூர் மகாலட்சுமி போன்றே தோற்றத்தில் காணப்படும் தேவி கரங்களில் கத்தியும், கேடயமும் கொண்டு இருபக்கமும் நாகங்களும், யானையும், மயிலும் புடைசூழ வீற்றிருக்கும் அழகைக் காண இரு கண்கள் போதாது. தலையில் சிவலிங்கம் தரித்து ‘சிவசக்தி ஸ்வரூபிணி’யாகக் காட்சி தருகிறாள்.

அன்னை எந்தவரமும் தரும் வரப்பிரசாதியாம். நினைத்ததை நிறைவேற்றும் கற்பக விருட்சம் என்று போற்றப்படுகிறாள். ஆலயம் நல்ல விஸ்தாரமாக, மிக அழகாக, தூய்மையாக விளங்குகிறது.


கோவா செல்வோர் அங்குள்ள சுற்றுலா தலங்களுடன், செல்வத்தின் தேவதையான மகாலட்சுமியையும் தரிசித்து அருளைப் பெறலாம். இவ்வாலயம் ‘போண்டா’ என்ற இட்த்துக்கருகே நான்கு கி.மீ. தூரத்தில் ‘பண்டோரா’ என்ற இடத்தில் அமைந்துள்ளது.


2 கருத்துகள்: