Thanjai

Thanjai

வெள்ளி, 22 மே, 2015

கோலத்தை அழிக்க குழந்தை வேண்டும்


மங்கையர் மலர் ஜூலை 2002 இதழில் வெளியானது





கோலம் என்பதற்கு அழகு என்று பெயர். சூரியோதயத்திற்கு முன் எழுந்து பசுஞ்சாணியை நீரில் கரைத்துத் தெளித்து வாசலில் அரிசி மாவினால் போடும் கோலத்தின் அழகு கண்களைக் கொள்ளை கொள்ளும். பசுஞ்சாணம் கிருமிநாசினி. அரிசி மாவு எறும்பு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு உணவாகப் பயன்படும்.

வேத காலத்தில் அங்குரார்பணத்தின் போது பல கட்டங்கள் வரைந்து அவற்றின் மேல் பால் குடம், முளைப் பாலிகைகளை வைத்து பூஜை செய்வர். அக்கட்டங்களில் அரிசி மாவு, மஞ்சள் பொடி போட்டு அழகு செய்வர். அதுவே கட்டக் கோலங்களாயிற்று. ஹோமம் செய்ய அக்னி குண்டத்திற்கென 9 குழிகள் தோண்டி அவற்றை இணைத்து அக்னி வளர்ப்பார்கள். அதுவே புள்ளிக் கோலத்தின் ஆதாரம். பழந்தமிழர் மணலிலும், தோலிலும் கோலம் எழுதியது பற்றி சங்க நூல்களில் காணப்படுகிறது.

மார்கழி மாதம் தேவர்கள் தூங்கி விழிக்கும் காலமானதாலும், ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று ஸ்ரீகிருஷ்ண பகவான் கீதையில் சொல்லியிருப்பதாலும், அம்மாதம் பூஜை, பஜனைகள் செய்ய மிக விசேஷமாக சொல்லப்படுகிறது. வானில் வலம் வரும் தேவர்களை மகிழ்விக்க வீடுதோரும் விதவிதமாய் கோலம் வரைவது விசேஷமாகக் கருதப்படுகிறது. விஞ்ஞான ரீதியாகவும் அம்மாதம் விடியற்காலை காற்றில் ஓசோன் அதிகமாக இருப்பதாக அறிகிறோம். அதன் பயனைப் பெறவே முன்னோர் விடியற்காலை பஜனையையும், கோலம் போடுவதையும் உருவாக்கினார்களோ?

கோலத்தில் அழகு மட்டுமின்றி ஒரு புனிதத் தன்மையும் இருப்பதால் திருமணம், பூஜை, யாகம், திருவிழாக்களின் சமயம் போடப்படுகிறது. வளைந்தும், நெளிந்தும், சுழித்தும் போடப்படும் கோலங்கள் நம் வாழ்க்கை சுகதுக்கப் பின்னல்களால் ஆனது என்பதையும், சுழிகள் போல பல துன்பங்கள் வரினும் துணிவோடு இருக்க வேண்டுமென்பதையும் உணர்த்துகின்றன. விசேஷ நாட்களில் காவி இடுவது, சிவசக்தி ஐக்யத்தை உணர்த்துகிறது. வெள்ளை மாவி – சிவன், காவி –சக்தி. காவி இட்டு கோலம் போடுவதால் திருஷ்டி நீங்கும். தீய சக்திகளிலிருந்து காக்கும். இதனாலேயே திருமணம், ஆண்டு நிறைவு போன்ற விசேஷ நாட்களில் செம்மண் இட்டுக் கோலம் போட வேண்டும்.

தமிழ்நாடு பழக் கோலங்கள், பின்னல் கோலங்களுக்கு பிரசித்தமானதெனில், ஆந்திராவின் பொட்டுகளை இணைத்து போடப்படும் கோலங்கள் மிக அழகானவை. கர்நாடகாவில் (+) கூட்டல் குறி போன்று வரிசையாய் போட்டு அவற்றை இணைத்தே மிகப் பெரிய கோலங்களைக்கூட நொடியில் உருவாக்கி விடுவார். கேரளாவின் “அத்திப்பூ விடல்” எனும் பூக்கோலம், பல வண்ண முழு மலர்களாலும், மலர் இதழ்களாலும் போடப்பட்டு, நம் கண்ணிற்கும், கருத்துக்கும் விருந்தாக அமையும்.

வடநாடுகளில் “ரங்கோலி” என்ற வண்ணக் கோலங்களே பிரசித்தம். ரங்க் + ஆவலி எனில் “வண்ணங்களின் வரிசை” எனப் பொருள். “ஹோலி” என்ற முனிவரின் பத்தினி தன் கணவர் இறந்ததும் அவர் உருவத்தை பலவகை வண்ணப் பொடிகளல் வரைந்து, அதன் மேலேயே ஒரு மண்டலம் படுத்திருந்து தன் உயிரை விட்டதால், அவளால் பல வண்ணங்களால் போடப்பட்ட கோலம் “ரங்கோலி” எனப்பட்டது.

ரங்கோலியின் பிறப்பிடம் மகாராஷ்டிரா. நல்ல அடர் நிறங்களில், எந்த உருவமும், கோலமும் போடாமல் வட்ட வடிவமாக பல வண்ணங்களைக் கற்பனைக் கேற்றவாறு போடும் மராட்டிய ரங்கோலி பார்ப்போர் கண்களைப் பரவசப்படுத்தும். பல வண்ணங்கள் கற்பனை நயத்தோடு இணைந்து நம் உள்ளத்தை மகிழ்விப்பதுடன், கணிதத்திற்கும், கோலத்திற்கும் இருக்கும் நெருக்கத்தையும் உணர்த்துகிறதே?

குஜராத்திப் பெண்கள் “சாகியா” என்று மஞ்சள் பொடி சேர்த்து ரங்கோலியை வரைவார்கள். வங்காளம், ஒரிஸ்ஸா, ஹிமாச்சல பிரதேசங்களில் “அல்பனா” என்ற கோலமிடுவர். செடிகளிருந்து தயாரிக்கும் சாயத்துடன் அரிசி மாவு கலந்து துர்க்கை, மகாலட்சுமி என்று பெரும்பாலும் உருவக் கோலங்களையே “அல்பனா” முறையில் போடுகின்றனர். கோலம் ஆந்திராவில் “மொக்கு” என்றும், கன்னடத்தில் “மண்ட்னா” என்றும் வழங்கப்படுகிறது.

கோலங்களை அடிப்படையாகக் கொண்டவையே, யந்திரங்கள் எனப்படும் தெய்வீக சக்தி வாய்ந்த கோலங்கள். இந்த யந்திரங்களை முறையான மந்திர உச்சரிப்புகளுடன் பூஜை செய்தால் நினைத்த நலன்களைப் பெறலாம்.  நவகிரகக் கோலம், ஐஸ்வர்ய கோலம், ஹ்ருதய கமலக் கோலம் இவற்றைப் பூஜையறையில் அரிசி மாவினால் போட்டால் தெய்வ அனுக்கிரகம் நிச்சயம் கூடும்.

வீட்டு விசேஷங்கள், பண்டிகைகளுக்குக் கட்டியம் கூறுபவை சுற்றிலும் காவியுடன் காட்சி தரும் இழைக் கோலங்கள்.

குழந்தை பிறந்தாலும், பெண் குழந்தைகள் பருவமடைந்தாலும் எந்நேரமாக இருப்பினும் (இரவாக இருந்தாலும்) கோலம் போடுவது, அந்நல்ல செய்தியை அனைவருக்கும் அறிவிக்கும் ஒரு பாணி!

படிக் கோலத்தின் நான்கு மூலைகளில் போடும் தாமரைப் பூக்கள், நான்கு திக்பாலகர்களின் ஆசியை வேண்டிப்போடுவது!

முற்றத்துக் கோலத்தை அழிக்க குழந்தை வேண்டியும், சுவாமி தேரினால் போட்ட கோலம் அழிந்தால் புண்ணியம் கிடைக்குமென்றும், கோலத்தை அழிக்க மழை வேண்டியும் கோலமிடுவார்கள் கிராமத்துப் பெண்கள்!

கோலத்தை நின்றபடியே போடுவது, உடலுக்கு நல்ல தேகப் பயிற்சி. கோல இழையை வலப்புறம் இழுப்பது மிகுந்த நன்மை சேர்க்கும். இடப்புறம் இழுப்பது கூடாது. கோலத்தை காலால் அழிப்பது பாபம்.

படிக்கட்டுகளில் குறுக்குக் கோடுகள் (---) போடுவது லட்சுமி தேவியின் வரவைத் தடுக்கும்.

வீட்டின் உள்நோக்கிக் கோலம் போடுவது (||||) விருந்தினர்கள், தெய்வங்களை வரவேற்பதாகும்.

இன்று அரசியல் விழாவோ, ஆன்மீக விழாவோ, வீட்டின் பெரிய விசேஷங்களோ எல்லாவற்றிற்கும் அழகு சேர்ப்பவை பல வண்ணப் பொடிகளால் அழகாகப் போடப்படும் கோலங்களே என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் 5000 ஆண்டு பழமையான, மேல் நாட்டினரால் பெரிதும் பாராட்டிப் போற்றப்படும் இந்தக் கோலக் கலை நகர நாகரிகத்தில் அழிந்து வருவதை நினைக்க வருத்தமாக இருக்கிறது. வேலைக்குப் போகும் பெண்களின் நேரமின்மை, வீட்டு வாசலில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர் கோலத்தில் தெரிகிறது.


எனினும், புனிதம், தெய்வீகம், கைத்திறன், அழகு இத்தனையும் நிறைந்த மனதிற்கு மகிழ்ச்சியும், புத்துணர்வும் தரும் கோலங்களை முடிந்த நேரங்களிலாவது போட்டு கோலக் கலை அழியாமல் பாதுகாக்க வேண்டியது பெண்களாகிய நம் முக்கிய கடமை.


1 கருத்து:

  1. தலைப்பு மிக அழகாக இருக்கிறது. மென்மையான எண்ணங்களையும் உணர்வுகளையும் வரவழைக்கிறது.

    God Bless You

    பதிலளிநீக்கு