Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

மும்மூர்த்திகள் வழிபட்ட முருகப்பெருமான்


ஞான பூமி மே, 2005 இதழில் வெளியானது


குன்றம் தோறும் கோயில் கொண்டுள்ளான் தமிழர் தெய்வமான, அழகின் உருவமான குமரக் கடவுள், திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர், திருவாவினன்குடி எனும் பழனி, திருவேரகம் எனும் சுவாமிமலை, குன்றுதோறாடல் எனும் திருத்தணி, பழமுதிர்ச்சோலை இவை ஆறும் முருகனின் அறு படை வீடுகளாகப் போற்றப்ப்டுகின்றன. இவற்றூள் குன்றுதோறாடல் என்பது எல்லா மலைக் கோயில்லளையும் குறிக்கும் என்றாலும், திருத்தணிகையையே தனிச்சிறப்பாகக் குறிப்பிடுகிறது. சங்க காலப் புலவரான நக்கீரர் 2000 ஆண்டுகட்கு முன்பே இத்தலத்தை 'குன்றுதோறாடல்' என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். 1500 ஆண்டுகட்கு முன்பு திருநாவுக்கரசரும் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். முருகப் பெருமான் தேவர்களின் துயர் நீக்க சூரனுடன் பெரும் போர் செய்து, வள்ளியை மணக்க வேடர்களுடன் சிறு போர் செய்து, கோபம், வேகம் இவை தணிந்து அமர்ந்த தலம் இதுவாதலால், திருத்தணி எனும் பெயர் பெற்றது. தேவர்களின் அச்சம் தணிந்த இடம்; முனிவர்கள் காம, வெகுளி, மயக்கமாகிய பகைகள் தணியும் இடம்; அடியாரின் துன்பம், கவலை, பிணி, வறுமை இவை தணிக்கும் இடம்; அதுவே திருத்தணிகை மலை.

இத்தலத்தில் முருகப்பெருமான் மலைமீது 'ஞான சக்திதான்' என்ற ரூபத்தில், வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளியுள்ளார். கிழக்கு நோக்கி அமைந்துள்ள மலையின் இரு புறமும் மலைகள் உள்ளன. வடக்கில் உள்ள மலை வெண்ணிறமாக இருப்பதால் 'பச்சரிசி மலை'  என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் 'பிண்ணாக்கு மலை' என்றும் கூறப்படுகின்றன. மலையடி வாரத்தில் 'சரவணப் பொய்கை' எனும் 'குமார தீர்த்தம்' உள்ளது.

அருணகிரிநாதர் 'அழகுத் திருத்தணி மலை' என்றும், திருத்தணிக்கு சமமான வேறு தலம் இல்லையென்றும் 63 பாடல்களில் பாடியுள்ளார்.

முருகப் பெருமான் தன் கிரியா சக்தியான தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் மணந்தார். இச்சா சக்தியாகிய வள்ளியம்மையை திருத்தணியில் மணந்து, தன் இரு மனைவியருடன் இனிது, மகிழ்ந்து ஏகாந்தமாக வீற்றருளுகின்றார். தணிகை ஆண்டவனை தரிசிக்க மலை ஏறுமுன், அடிவாரத்திலுள்ள சரவணப் பொய்கையில் நீராடுவது சிறப்பு. இயலாதோர் நீரை தலையில் ப்ரோக்ஷணம் செய்து கொண்டு மலை ஏறலாம். வாகனஷ்களும் மேலே ஆலய வாயில் வரை செல்கின்றன. எனினும் நடந்து ஏறுவது புண்ணியம் தரும்.

இங்கு அமைந்துள்ள 365 படிகள், ஓராண்டின் 365 நாட்களைக் குறிக்கும். இதே போன்று சுவாமி மலையில் அமைந்துள்ள 60 படிகள், 60 வருடஷ்களைக் குறிக்கும். மலையில் அமைந்துள்ள கோயிலின் சுற்றளவு 1000 அடி. தெற்கு வாயிலுக்கு நேராக தென்புறம் இந்திர நீலச்சுனை உள்ளது. இதிலிருந்த்ஞ் தீர்த்தம் அபிஷேகாதிகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

ஆலயத்திர்கு கிழக்கு வாசல் வழியே விநாயகரை வணங்கி உள்ளே வெளிப்பிரகாரத்தை அடையலாம். இங்குதான் கிருத்திகை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் அங்க பிரதக்ஷணம் செய்வர். பின் உச்சிப்ப்ள்ளையார், கொடிக்கம்ப விநாயகரை வணங்கி உள்ளே செல்லும்போது நம் கவனத்தைக் கவர்வது, யானை வாகனம். ஆம்! முருகனின் வாகனமான மயிலுக்கு பதில் யானை காணப்படுவதுடன், அது முருகனைப் பார்த்தவாறின்றி வெளிப்பக்கம் நோக்கி காணப்படுவது ஏன்? அது சுவையான கதை!

இந்திரன் தெய்வானையை முருகனுக்கு மண முடித்தபோது ஐராவதத்தை சீதனமாக வழங்கி விட்டான். இதனால் இந்திரனின் செல்வம் குறைய, அதனால் வருந்திய தேவர் த்லைவன் இத்தல இறைவனை செங்கழுநீர் மலர் கொண்டு வணங்கி தொழ, மகிங்ந்த குமரப் பெருமான் ஐராவதத்தை திரும்ப எடுத்துப் போக்க் கூறினார்.

ஆனால் சீதனப் பொருளை திரும்ப வாங்க மன்மில்லாத இந்திரன், ஐராவதத்தை கிழக்கிலுள்ள தன் உலகைப் பார்த்தபடி இருக்க வேண்டினான். அதனால் தேவருலகம் செல்வ வளங் குன்றாது விளங்கிற்று. அதன் பொருட்டே ஐராவதம் முருகனைத் தன் மீது சுமந்து கிளம்பத் தயாரான நிலையில் வாயிலைப் பார்த்து அமைந்துள்ளது.

உட்பிரகாரத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் சன்னதியும் சண்முக சுவாமியின் மூலவர் சன்னதியும் உள்ளது. இங்குள்ள யாகசாலைக்கு எதிரில் அற்புதமான, பெரிய சந்தனக்கல் ஒன்று உள்ளது. இதுவும் இந்திரன் தன் மகளுக்குக் கொடுத்த சீதனமாம்!

இதில் அரைத்த சந்தன்மே சுவாமிக்கு திருமேனிப் பூச்சாகப் பயன்படுத்தப்பட்டு, 'ஸ்ரீ பாதரேணு' எனும் அருட்பிரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. இது சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகும்.

இப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்பாகம் முழுவதும் சிறப்பான அழகிய ருத்திராட்ச மணிகளாலான விமானத்தில் பெரிய உற்சவ மூர்த்தி உள்ளார். உற்சவரான சண்முக மூர்த்தியும் இங்கே வீற்றுள்ளார். பிரதோஷ காலத்தில் இந்த உற்சவருக்கு தீபாராதனை முடிந்த பின்பே, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இங்கு ஆபர்சகாய விநாயகர், அருணகிரிநாதர், வீரப்த்திரர், வீரபாகு மற்றும் நவவீரர்கள், சூரிய மூர்த்தி ஆகிய சன்னதிகள் உள்ளன. இப்பிரகாரத்திலிருந்து மூலத்தான இறைவனை தரிசிக்க 'பஞ்சாட்சரப் படிகள்' எனும் ஐந்து படிகள் வழியே செல்ல வேண்டும். அதனைக் கடந்து அர்த்த மண்டபம், கடந்து சென்றால் தணிகை முருகனின் தரிசனம் கிடைக்கும். 

முருகனுக்கு 16 வகையான திருவுருவங்கள் உண்டு. அவற்றில் ஒரு கையில் வேலேந்தி, மறுகையை தொடையில் ஊன்றி, மயிலின்றி தனித்திருக்கும் 'ஞானசக்திதரர்' என்ற உருவமே இங்கு காட்சி தருவதாகும்.
'தணிகைமலையைச் சாரேனோ? சாமி அழகைப் பாரேனோ?' என்று இராமலிங்க அடிகள் பாடியது போல், அழகுக் குமரனை விட்டு அகல்வே மனமில்லாமல் அண்டி வந்தோரின் அல்லல் களைந்து அபயக்கரம் தந்து ஆதரிக்கும் ஆனந்தக் குமரனை பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்படுகின்றது.

எல்லா ஆசைகளையும் அல்லல்களையும் தணிக்கும் நாதனைப் பார்த்துக் கொண்டே இருக்க முடியாதா? என்ற ஏக்கத்தை தணிக்க முடியவில்லை.

இவ்விறைவனை கூர்ந்து நோக்கினால் மார்பில் சிறிது பள்ளமாக இருக்கும். தாரகாசுரன் திருமாலின் சக்கரத்தை அவரிடமிருந்து கவர்ந்து செல்ல, முருகன் அவனை வென்று அச்சக்கரத்தைச் சிறிது காலம் தன் மார்பில் அணிந்து கொண்டிருந்தாராம். அதனால் அவரது மார்பில் சிறு பள்ளம் ஏற்பட்டுவிட்டதாம். அதில் அணிவிக்கப்பெறும் சந்தனமே சர்வரோக நிவாரணியாக பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.

தணிகை முருகனை வணங்கி, வேண்டி, வடக்கே நீலோற்பவ மலர் தாங்கிய தேவசேனையையும், தெற்கே தாமரை மலருடன் வள்ளியையும் தரிசித்து வலம் வரும்போது பாலசுப்ரமணியர் சந்நிதி உள்ளது. இவருக்கு ஆருத்ரா தரிசனத்தன்று வெந்நீர் அபிஷேகம் ந்டைபெறுவது வித்தியாசமான நடைமுறையாகும்.

இத்திருத்தல முருகனை சிவன், பிரம்மா, திருமால் மூவரும் வழிபட்டுள்ளனர். சிவனுக்கு ஆறுமுகன் இங்கு பிரணவ உபதேசம் செய்தார். திருமால் தாரகாசுரனிடமிருந்து தம் சக்கரம் பெற வழிபட்டார். பிரம்மா படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலைப் பெற்றார். மேலும், ராமர், இந்திரன், நந்தி, வாசுகி, அகத்தியர், நாரதர், சப்தரிஷிகள் ஆகியோர் இங்கு முருகனை துதித்து உய்வு பெற்றனர். குமரக் கடவுள் போர் செய்யுமுன் சிவனை துதிக்க எண்ணி, ஆபத் சகாய விநாயகரை நிறுவி வழிபட்டு, பின் சிவனை பூசித்தார். மபம்கிழ்ந்த ஈசனும் 'ஞான சக்தி' எனும் வேல்படையை முருகனுக்கு வழங்கி அருளினார்.

இங்கு ஒவ்வொரு மாதக் கிருத்திகையும் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இலட்சக் கணக்கான மக்கள் இங்கு கூடுவர். ஆடிக் கிருத்திகை அன்று தெப்போற்சவம் நடக்கும்.

ஓராண்டில் இரண்டு பிரம்மோற்சவம் நடக்கும் ஆலயம் இருவாகத்தானிருக்கும். மாசியில் வள்ளி, சித்திரையில் தேவயானை திருமண விழாக்கள் பிரம்மோர்சவமாக மிக விமரிசையாக நடை பெறும். சூரசம்ஹார விழா நடை பெறாத ஒரே முருகன் தலமும் இதுவே. போருக்குப் பின் முருகன் சினம் தணிந்து இங்கு எழுந்தருளியிருப்பதால், இங்கு கந்த சஷ்டி விழா, வைதீக முறையிலேயே ந்டைபெறும். சிவராத்திரி அன்று இரவு முருகனுக்கு நடக்கும் 1008 சங்காபிஷேகத் திருவிழா மிக அற்புதமான ஒன்று. டிசம்பர் 31, ஜனவரி முதல் தேதிகளில் திருப்புகழ் சபையோரால் நடத்தப் பெறும் படி விழாவைக் காணக் கண்கோடி வேண்டும். திருப்புகழ் அமுதத்தைக் கேட்டு ரசிக்க இரு காது போதாது. தைக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரத் திருவிழாக்களும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருத்தணி ஒரு சிறந்த பிரார்த்த்னைத் தலம். தன்னிடம் நேர்த்திக்கடன் செய்து கொள்வோரின் துன்பங்களை உடன் நீக்கி, அவர்கள் வேண்டும் நலங்களையும், வரங்களையும் தந்து, கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய்க் காட்சி தரும் தணிகை வேலனின் சன்னதியில் ஆண்டு முழுவதும் திருமணம், காது குத்தல், முடி இறக்குதல் போன்றவை நடந்த வண்ணம் உள்ளன.

தடைகளைத் தகர்த்து, துயர்களைத் துரத்தி தம் பக்தர்களின் வாழ்வைத் தழைக்கச் செய்யும் தணிகை நாதனை ஒரு முறை தரிசித்து வளமான வாழ்வைப் பெறுவோமாக! திருத்தணி சென்னை-மும்பை இருப்புப்பாதை வழியில் அரக்கோணத்திற்கு வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 84 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக