ஞானபூமி
பிப்ரவரி 2005
இதழில் வெளியானது.
தமிழ் நாட்டில் இசைக்கென வாழ்ந்த மாமேதைகள் பலர். ஆழ்வர்கள், நாயன்மார்கள் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும்,
இசையுடன் தெய்வீக உணர்வைக் கலந்து மனமுருகப் பாடிய பெருமை உடைய
மூவர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்
மற்றும் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள். மூவரும் 17ஆம்
நூற்றாண்டில் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். எனினும் தியாகராஜ ஸ்வாமிகள் மிகப்
பெருமையும், புகழும் பெற்று ஏராளமான பாடல்களை எழுதியும்,
இசையுடன் பாடியும் ஸ்ரீ ராமனின் பக்தராகத் திகழ்ந்து அவனடி
சேர்ந்தார். 'ஸ்த்குரு', தியாகப்
ப்ரும்மம்' 'தியாகையர்' என்றெல்லாம்
அழைக்கப்பட்ட அவரது வாழ்க்கையும் மிக பக்தி மயமானதே.
தியாகராஜனின் முன்னோர்கள் ஆந்திராவைச் சேர்ந்த முலகநாடு எனும்
சிற்றூரைச் சேர்ந்தவர்கள். த்ஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட காலத்தில், அவரது பாட்டனார் கிரிராஜ பிரம்மம் என்பவர்
திருவாரூரில் குடியேறினார். அவரது மகன் இராமபிரம்ம் வீணை காளஹஸ்தி ஐயாவின் மகள்
சீதம்மாவை மணந்தார். இவர்களுக்கு பஞ்சநாதன், பஞ்சாபகேசன்,
தியாகராஜன் என்று மூன்று புதல்வர்கள். தியாகராஜன் 1767ம் ஆண்டு மே நான்காம் நாள் திருவாரூரில் புதுத் தெருவில் அவதரித்தார்.
தியாகராஜரின் தந்தை இராமபிரம்மம் இராமயண சொற்பொழிவுகளும், பஜனைகளும் நிகழ்த்தி வந்தார். இதனால், அந்நாளில் தஞ்சைப் பகுதியை ஆண்ட மன்னர் இரண்டாவது துளஜாஜியிடம் தொடர்பு
ஏற்பட்டு, ஆண்டுதோறும் திருவையாற்றில் நடக்கும் சமஸ்தான
திருவிழாவில் பஜனை செய்வார். அச்சமயம் திருவையாற்றின் காவிரிக் கரையும், ஆலய அழகும் அவர் மனதைக் கவர அங்குள்ள திருமஞ்சன வீதியில் குடியேறினார்.
தியாகராஜன் கல்வி பயின்றது திருவாரூர் மன்னர் கல்லூரியில். அவரது
தந்தை ராமதாரக மந்திரத்தையும், அன்னை சீதம்மா இராமதாஸர், புரந்தரதாஸர்
கீர்த்தனைகளையும், அஷ்டபதியையும் பயிற்றுவித்தனர்.
இறை வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்கினார் தியாகராஜர்.
தந்தை பூஜை செய்யும்போது, தானும்
உடனமர்ந்து இறைப் பாடல்களைப் பாடுவார். ஒரு நாள் அவரையும் மறந்து ஸ்ரீராமனிடம்
ஐக்கியமாகி 'நமோ நமோ ராகவாய அநிசம்' என்ற
தேசிகதோடி ராக கீர்த்தனையை மெய்யுருகப் பாடினார்.
ராம பக்தியையே சாம்ராஜ்யமாக எண்ணி, பின்னால் 2500 கீர்த்தனைகளுக்கு
மேல் பாடிய தியாகய்யரின் முதல் பாடல் அது. அவரது இசைப் புலமையால் பெருமையையும்,
மகிழ்ச்சியும் அடைந்த அவரது தந்தை, ஸொண்டி
வெங்கட்ரமணய்யா என்பவரிடம் இசை பயில ஏற்பாடு செய்தார்.
ஒரு நாள் அவர் தியாகராஜரை அழைத்து அவர் புதிதாக இயற்றியுள்ள பாடல்களை
சில இசை விற்பன்னர்கள் முன்னிலையில் பாடும்படி கூறினார்.
'தொருகுனா இடுவண்டி சேவா' என்ற
பிலஹரி ராகப் பாடலை அற்புதமாக விஸ்தாரமாக நிரவல், ஸ்வரம்
எல்லாம் பாடி முடித்த தியாகராஜரை 'தொருகுனா இடுவண்டி
சிஷ்யிடு' (இப்படிப்பட்ட ஒரு மாணவன் கிடைப்பானா?) என்று பாராட்டி, தனக்கு பரிசளிக்கப்பட்ட தோடாவையும்,
மகர கண்டியையும் அவருக்கு அணிவித்தார்.
தியாகராஜருக்கு பதினெட்டாம் வயதில் பார்வதி என்ற பெண்ணுடன் திருமணம்
நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளில் அவரது மனைவி இறந்துவிட, அடுத்து அவரது தங்கை கமலாம்பாளை இரண்டாம் தாரமாக
மணந்தார். அவருக்கு சீதாலட்சுமி என்ற பெண் பிறந்தாள். தியாகய்யரும், அவரது மனைவியும், அளவு கடந்த பாசத்துடன் மகளை
வளர்த்து, அவளை குப்புசாமி அய்யர் என்பவருக்கு மணமுடித்தனர்.
அவளுக்கு பிறந்த மகன் தியாகராஜன். அவனுக்கு குருவம்மாள் என்ற பெண்ணை மணமுடித்து
வைத்தனர். முப்பது வயதில் அவன் அகால மரணமடைய அத்துடன் தியாகய்யர் வம்சம்
முடிந்துவிட்டது. அவரது சந்ததியாக இன்றும், என்றும் புகழ்
பெற்று விளங்குவது, விளங்கப் போவது அவர் இயற்றிய சாகாவரம்
பெற்ற கீர்த்தனைகளே!
தியாகராஜரின் புகழ் நாடு முழுவதும் பரவ, சாதி, மொழி, இன வேற்றுமையின்றி பல மாணவர்கள் அவரிடம் இசை பயில் தேடி வந்தனர்.
தில்லைஸ்தானம் ராமய்யங்கார், வாலாஜா பேட்டை வெங்கட்ரமண
பாகவதர், மானம்பூச்சாவடி வெங்கடசுப்பையர், ஐயா பாகவதர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர் ஆகியோர் அவரது முக்கியமான சிஷ்யர்கள் ஆவர்.
தியாகராஜரின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள், திவ்ய நாம கீர்த்தனைகள், பிரக்லாத
பக்த விஜயம், நெளகா சரித்திரம் ஆகியவை மிகப் பிரபலமான இசைக்
கருவூலங்கள். 'ராமா ராமா; என்று உருகிய
தியாகராஜரின் கீர்த்தனைகளை ஸ்ரீ ராமரே கேட்டு ரசித்ததுண்டு என்பர்.
ஸ்ரீராமரின் ஆணைப்படி சந்நியாசம் வாங்கிய தியாகராஜர் 'கிரியை நெலகொன்னி ராமுனி' என்ற
ஸஹானா ராகக் கீர்த்தனையை பரவசத்துடன் பாடினார். கி.பி. 1847ம்
ஆண்டு பிரபவ ஆண்டில் புஷ்ய பஞ்சமி அன்று ஸ்ரீராமரின் சரண கமலங்களில் ஐக்கியமானார்.
ஸ்ரீராமனை பிரத்யட்சமாக தரிசித்தவர் தியாகராஜர்.
தியாகய்யரின் சீடர்கள் அவரது மறைவிற்குப் பின் அவரது திவ்ய சரீரத்தை
என்ன செய்வது என வினவ, அவரும்
காவிரி நதிக்கரையில் அவரது குரு ஸொண்டி வெஷ்கட்ரமணய்யா சமாதி அருகில், துளசி பிருந்தாவனமாக அமைக்க உத்தரவிட்டார். அத்துடன் தம் புகழ் 60 ஆன்டுகட்குப் பின்பே வெளிப்படும் என்றும் தீர்க்க தரிசன்த்தோடு கூறினார்.
அதே போன்று அவர் மறைந்து 60 ஆன்டுகளுக்கு பின்பே ஆராதனை
உற்சவம் அவரது சீடர்களால் ஆரம்பிக்கப்பட்டது. சங்கீத மும்மூர்த்திகளில்
முதல்வராகப் பெரும் புகழுடன் திகழும் தியாகராஜர் தம் தாய்மொழியான தெலுங்கிலேயே
பாடல்களை எழுதினாலும், அவற்றைப் பொருள் அறிந்து பாடும்போது,
அதில் கிடைக்கும் பக்தி ரசத்தையும், இனிமையையும்,
அனைவரும் அறிய முடியும். இன்று திருவையாற்றில் அவரது சமாதியில்
அனைத்து இசைக் கலைஞர்களும் இணைந்து செய்யும் ஆராதனை உற்சவம் உலகப் பிரசித்தி
பெற்றது.
இந்தக் கோயிலும் இன்று சிறப்பாக ஆராதனையும் நடக்கக் காரணமானவர்
பெங்களூர் நாகரத்தினம்மாள். அவரது குரு பக்தி வியக்கத்தக்கது; வணங்கத் தகுந்தது.
மைசூரில் பிறந்து கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டு சமஸ்கிருதத்திலும், தெலுங்கிலும் புலமை பெற்ற நாகரத்தினம்மாள், இசைத் தொண்டு செய்தது தமிழ் நாட்டில். தியாகராஜரைத் தன் குருவாய்க் கொண்டு,
அவரது கீர்த்தனைகளைப் பாடியும், பிறருக்கு
சொல்லிக் கொடுத்தும், சீரிய லட்சியங்களோடு வாழ்ந்த
நாகரத்தினம்மாளின் கனவில் 1921ம் ஆண்டு தியாகராஜ சுவாமிகள்
தோன்றி திருவையாறு சென்று என் சமாதியில் கோயில் கட்டு என ஆணையிட அவரும் பசி
நோக்காது, கண் துஞ்சாது அல்லும், பகலும்
பாடுபட்டு, கோயில் கட்டி 1925ம் ஆண்டு
கும்பாபிஷேகம் நடத்தினார்.
நாகரத்தினம்மாள் தன் கடைசி நாட்களைத் திருவையாற்றில் தியாகப் பிரம்ம
நிலையம் என்ற ஆசிரம்த்தை ஏற்படுத்தி அங்கேயே இசை பயில்வித்து வந்தார். 1952 மே 19ம் நாள் ஏகாதசியன்று
அவர் குருவின் திருவடி அடைந்தார். அவரது சமாதியும், தியாகையரின்
சமாதி அருகிலேயே அமைந்துள்ளது.
ஸ்ரீ ராமனையே அல்லும், பகலும் ஆராதித்து சீதாபதியையும், நாரதரையும் நேரில்
தரிசித்துப் பேசிய தியாகராஜர் வால்மீகி அவதாரமாகப் போற்றப்படுகிறார். அவரது ஆராதனை
நாளான ஜனவரி 30 அன்று நாமும் அம்மகானை தியானித்து அவரது
கீர்த்தனைகளைப் பாடி அவரருள் பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக