ஞான ஆலயம் ஜூன் 2010 இதழில்
வெளியானது
இயற்கயை இறைவுருவாக வணங்குவது நம் தமிழ் மரபு. மாரியம்மன், காளியம்மன், அங்காள பரமேஸ்வரி போன்ற தேவிகள்
புற்றுருவாய் அமைந்து அருள் செய்யும் தலங்கள் பல உண்டு. ஆனால் அந்தப் புற்றே ஒரு
பெண்ணுருவமாக, அதுவும் நிறைமாத கர்ப்பிணிப் பெண்
படுத்திருப்பது போல் அமைந்திருப்பது மிக அற்புதமான ஒரு தரிசனம். இதனை தரிசிக்க
நீங்கள் செல்ல வேண்டிய தலம் சென்னை அருகிலுள்ள புட்லூர்.
ஸ்ரீதேவி இந்தக் கோலம் இவ்வூரில் கொண்டது எப்படி? இக்கோயில் ஸ்தல வரலாறாகக் கூறப்படுவது-
செஞ்சிக்கு அருகிலுள்ள மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி சக்திபீடமாய், புற்றாக அமர்ந்து அருள்பாலிக்கிறாள். அங்கிருந்து சிவனும், பார்வதியும் இடுப்பில் கூடையுடன், சூலத்தை தடியாகக் கொண்டு காடு, மலை, வனம் வழியே நடந்து வந்தனர். புட்லூர் வரும்போது அங்கு மாமரம், வேப்பமரம், இலுப்பமரம் வளர்ந்து குளிர்ச்சியாக இருந்ததால், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த தேவி, அங்கு அம்ர்ந்து விட்டாள்.
செஞ்சிக்கு அருகிலுள்ள மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி சக்திபீடமாய், புற்றாக அமர்ந்து அருள்பாலிக்கிறாள். அங்கிருந்து சிவனும், பார்வதியும் இடுப்பில் கூடையுடன், சூலத்தை தடியாகக் கொண்டு காடு, மலை, வனம் வழியே நடந்து வந்தனர். புட்லூர் வரும்போது அங்கு மாமரம், வேப்பமரம், இலுப்பமரம் வளர்ந்து குளிர்ச்சியாக இருந்ததால், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த தேவி, அங்கு அம்ர்ந்து விட்டாள்.
அவளுக்கு தாகம் தொண்டையை வரட்ட, பார்வதி
சிவனிடம் "நான் இங்கேயே இருக்கிறேன். என் தாகத்திற்கு தண்ணீர் எடுத்து
வாருங்கள்" என்றாள். சிவனும் வெகு தூரம் சென்றும் நீர் கிடைக்காமல், கூவம் ஆற்றைக் கடந்து சென்றபோது, திடீரென்று வெள்ளம்
ஆற்றில் கரை புரண்டு ஓட, சிவன் திரும்பி வர முடியாமல்
திகைத்து நின்றார். இங்கு பார்வதியோ சிவனைக் காணாமல், தாகம்
தாங்காமல் அப்படியே மல்லாந்து படுத்து விட்டாளாம். நீர் வடிந்து சிவன் இங்கு வந்து
பார்த்தபோது அம்மன் புற்றுருவாகப் படுத்திருப்பது கண்டு, தானும்
பக்கத்தில் நின்று விட்டாராம்.
இது நடந்து பல நூற்றாண்டுகளுக்குப்பின், அவ்விடம்
வயல் காடாகி விட்டது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு உழவன் அவ்வயலில் ஏர் உழ,
அவ்விடத்திலிருந்து ரத்தம் பெருகி வருவது கண்டு மயக்கமடைந்து
விட்டான். ஊர் மக்கள் கூடி வேடிக்கை பார்க்க, அம்மன் ஒரு
கிழவியின்மேல் அருள் கொண்டு "நான் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி. நான் இங்கு
புற்றாக அம்ர்ந்துவிட்டேன். எனக்கு ஆலயம் கட்டி வழிபட்டால் உங்களுக்குக் கஷ்டம்
நீக்கி, பில்லி, சூனியம் நோய்கள்
அணுகாமல் பாதுகாப்பேன். பிள்ளைச் செல்வம், திருமணப் பேறு
தருவேன்" என்றுரைக்க, அங்கு ஆலயம் உருவாயிற்று.
ஏர் உழவன் மயக்கம் தெளிந்து எழுந்து மன்னிப்பு கேட்க, "இவ்வாலய பூசாரியாக இருந்து எனக்கு தொண்டு செய்து வா" என்று
பணித்தாளாம் பார்வதி. அன்று முதல் இன்றுவரை அந்த ஏர் உழவன் பரம்பரையே பூசாரிகளாக
இருந்து வருகிறார்கள்.
சிறிய கோபுரம் கொண்ட ஆலயத்தில் நுழைந்ததும் ஒரு மண்டபம், நந்தி, தாண்டி சென்றால் அங்காள பரமேஸ்வரியுடன்,
சிவபெருமானும் கோயில் கொண்டுள்ளனர். அந்த மண்டபம் தாண்டிச் சென்றால்
புற்றுருவான அம்மனின் சன்னதி உள்ளது. அன்னையின் உருவம் காணும் போதே
மெய்சிலிர்க்கிறது.
சன்னதியில் சுமார் எட்டடிக்கு மேல் நீளத்தில், ஈசானிய மூலையில் தலை வைத்து குறுக்காக மல்லாந்து படுத்திருக்கிறாள்.
நிறைமாத கர்ப்பிணி தண்ணீர் தாகத்தால் ஆயாசத்துடன், சற்றே
வாயைத் திறந்தபடி, கைகளை இருபக்கமும் விரித்து, கால்களை அகற்றியபடி, நிறைமாத உயர்ந்த வயிற்றுடன்
படுத்திருக்கும் காட்சியைக் காண, கைகள் தம்மையறியாமல்
கன்னத்தில் போட்டுக் கொள்கிறோம்.
சற்றே திறந்துள்ள வாயில் அழகாக உதடுகளைப் போல் தங்கக் கவசம்
சாற்றப்பட்டுள்ளது. அழகிய விழிகள் பொருத்தப்பட்டு, அம்மன்
நம்மைக் காண்பது போல் தோற்றமளிக்கிறது. புற்றினுள் வாழும் நாகங்களுக்கு அம்மனின்
வாயில் பாலும், முட்டையும் அளித்து வழிபாடு செய்கிறார்கள்.
புற்று அம்மனின் சன்னதிக்குப் பின்னால் நடராஜர், அங்காள
பரமேஸ்வரி, கணபதி, முருகனின்
திருவுருவங்களும், அங்காள பரமேஸ்வரியின் உற்சவ விக்கிரகமும்
உள்ளன.
தேவி பக்தர் ஒருவர் கனவில் தோன்றி ஆலயத்திற்கு எதிரில் ஒரு குளம்
வெட்டச் சொன்னதாயும், அதனுள் கிடைத்த சிலைகள் இங்கு
பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரம் சுற்றி
வரும்போது, வலப்பக்கம் தானே உருவாகிய ஐந்தடி உயர புற்று
ஒன்று உள்ளது. அது முழுவதும் மஞ்சள் பொடி பூசி வைத்துள்ளார்கள். சன்னதிக்குப்
பின்னால் நாகர் சிலைகள் உள்ளன. அங்குள்ள வேப்ப மரத்தில் நிறைய துணித்
தொட்டில்களும், மஞ்சள் கயிறும் கட்டப்பட்டுள்ளது.
அம்மன் நிறைமாத கர்ப்பிணி என்பதால் அம்மனுக்குப் பூ, வளையல் சாற்றுவது மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. இங்கு ஒரு வித்தியாசமான
வேண்டுதல் வழக்கத்தில் உள்ளது. திருமணமாக, பிள்ளைப் பேறு
வேண்டுவோர் எலுமிச்சம் பழம் எடுத்துக் கொண்டு ஈரத் துணியுடன் ஆலய வலம் வந்து
பூசாரியிடம் கொடுத்தால், அவர் அக்கனியை தேவியின் பாதத்தில்
ஒரு முழம் பூவில் சுற்றி வைத்து "உத்தரவு கொடும்மா" என்கிறார்.
வேண்டுதல் உள்ளவர் அன்னையின் பாதத்தின் கீழ் முந்தானையை விரித்தபடி அமர வேண்டும்.
அக்காரியம் சீக்கிரம் நடைபெறுமெனில் பழம் தானே வந்து மடியில் விழுமாம். சிலர்
இரண்டு மணி நேரம் கூட காத்திருக்க வேண்டியிருக்குமாம். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் அதிக கூட்டம்
இல்லாத நாட்களில் இந்த வேண்டுதல் அதிகமாக நடக்குமென்கிறார்கள்.
திருமணம் ஆக பதினோரு வாரம், பதினோரு சுற்று
ஆலயத்தை சுற்றி. எலுமிச்சை கனி அன்னை பாதத்தில் வைத்துப் பெற வேண்டும்.
குழந்தை பேறு வேண்டுவோர், ஈரத்துடன், பதினோறு சுற்று சுற்றிய பின், ஒன்பது வாரம், ஒன்பது கனி அன்னை பாதத்தில் வைத்துப் பெற்று, முழு பழமும், பூசாரி தரும் வேப்பிலையையும் உண்ண வேண்டும். தாம் கட்டியுள்ள (பட்டுப் புடவை ஆனாலும்) புடவை முந்தனை கிழித்து, வேப்ப மரத்தில் தொட்டில் கட்ட வேண்டும்.
வீட்டுப் பிரச்சினை, கடன் தொல்லைக்கு ஐந்து
வாரமும், பில்லி, சூனியம் விலகிட ஏழு
வாரங்களும் ஆலயம் வந்து தொழ வேண்டும். வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாத இந்த
அற்புத தோற்றம் கொண்ட அன்னையின் ஆலயத்திற்கு ஒரு முறை சென்றாலே மனக்குறைகள்
நீங்குவதை நன்கு உணர முடிகிறது. ஆடி வெள்ளி, தை வெள்ளி,
நவராத்திரி, சிவராத்திரி நாட்களில் சிறப்பு
வழிபாடு உண்டு.
கோவிலுக்குச் செல்வது எப்படி?
ஆவடியிலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியில், காக்களூர் ஸ்டாப்புக்கு முதல் ஸ்டாப் ராமாபுரம் என்ற ஊரில் இவ்வாலயம் உள்ளது. பாரிசிலிருந்து 72A, ஆவடியிலிருந்து T16 என்ற பஸ்கள் திருவள்ளூர் செல்லும் வழியில் இறங்கவும். சென்னை-திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு முன் புட்லூர் ரயில் நிலையம் உள்ளது. ஆலயம் இங்கிருந்து அரை கி.மீ தூரம் உள்ளது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக