Thanjai

Thanjai

திங்கள், 21 மார்ச், 2011

மும்பையில் ஒரு மினி சீரடி


ஞான ஆலயம் அக்டோபர், 2003 இதழில் வெளியானது




‘ஸப்கா மாலிக் ஏக் ஹை’ – ‘உலகின் உயிரினங்கள்அனைத்துக்கும் இறைவன் ஒருவனே’ என்பது ஷீரடி சாய்பாபாவின் வாக்கு. மகாராஷ்டிராவில் வாழ்ந்து இறைவனுடன் ஐக்கியமான சாயிபாபா இம்மாநில மக்களால் மட்டுமன்றி, உலகெங்கிலுமுள்ள மக்களால் வணங்கப்படுகிறார்.

ஷீரடியில் அவரால் ஏற்றப்பட்ட அக்னி இன்றளவும் அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் சாம்பல் ‘தூனி’ என்ற பெயரில் பிரசாதமாகத் தரப்படுகிறது. பல நோய்களையும் தீர்க்கும் சக்தி அந்த தூனிக்கும் உண்டு.

ஷீரடி சாய்பாபாவின் ஆலயங்கள் பல ஊர்களிலும் நிறுவப்பட்டுள்ளன. சென்னை, கோவை மற்றும் பெங்களூரிலும் நிறுவப்பட்டுள்ளன. சென்னை, கோவை, பெங்களூரிலுள்ள ஆலயங்கள் மிகப் புகழ் பெற்றவை. மும்பையில் ஷீரடி பாபாவின் ஆலயங்கள் பல இருப்பினும், நவி மும்பை பன்வெல்லில் அமைந்துள்ள ‘ஸ்ரீ பகவதி சாயி சன்ஸ்தான்’ என்ற நிறுவனத்தாரால் அமைக்கப்பட்டுள்ள அழகிய ஆலயம் ‘மினி ஷீரடி’ என்ற பெயருடன் விளங்குகிறது.

இவ்வாலயத்தை உருவாக்கியவர் ஸ்ரீ சாயி நாரயண் பாபா என்ற சாது. 1936ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி பிறந்த இவர், தன் 22ம் வயதில் சாயி பக்தையான ஸ்ரீ ஆதி மஹா சக்தி பாலயோகினி சரஸ்வதி அம்மா அவர்களால் ஆட்கொள்ளப்பட்டு, தன் வாழ்வை சாயி சேவையில் அர்ப்பணித்தார். 1964ம் ஆண்டு ஸ்ரீ பகவதி சாயி சன்ஸ்தான் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் ஏழை மக்களுக்குப் பெரும் தொண்டுகளைச் செய்து வருகிறார்.

ஸ்ரீ ஆதி மஹா சக்தி பாலயோகினி அம்மா அவர்கள் தம் அற்புத சக்தியால் உருவாக்கி ஸ்ரீ சாயி நாராயண் பாபா அவர்களுக்கு அளித்த ஸ்ரீ ஷீரடி பாபாவின் அழகிய விக்கிரகங்களும், சிவலிங்கமும் இன்றும் அவ்வாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மும்பை பன்வெல்லில் ரயில் நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ள ‘மினி ஷீரடி’ எனப் போற்றப்படும் இவ்வாலயம், ஷீரடி போன்றே தெய்வீக ஈர்ப்புடன் விளங்குவது குறிப்பிடத் தக்கது. ஷீரடியில் காட்சி தரும் சாயிபாபாவை அச்சு அசலாக செய்தது போல், அதே அமைப்பில், உயரத்தில் காட்சி தரும் சாயிபாபாவின் அழகு மனதைக் கொள்ளை கொள்கிறது. நம்மைப் பார்த்து ‘என்னிடம் வந்து விட்டாயா? உன் கவலைகளெல்லாம் பறந்து விடும்’ என்று ஆறுதலாகச் சொல்வது போல் தோன்றுகிறது. பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட சன்னிதியில் பளபளக்கும் வெள்ளி சிம்மாசனத்தில், கால் மடித்து அமர்ந்து அருட் காட்சி தரும் ஐயனின் முன் நிற்கும் போது மனம் லேசாகிறது. அங்கிருந்து நகரவே மனமில்லை.


பாபாவின் முன்னால் ஸ்ரீபால யோகி அம்மாவின் திருவுருவப் படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. வலப்பக்கம் துர்க்கையின் விக்கிரகமும், இடப்பக்கம் சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. பாபாவின் வலப்பக்கம் பளிங்கிலான பாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் இரண்டு வேளை ஆரத்தி மற்றும் குரு பூர்ணிமா, சாயி பாபா சமாதி தினம் போன்ற நாட்களில் விசேஷ வழிபாடுகள் உண்டு. இந்த சாயி பாபாவிற்கு 108 குட பால் அபிஷேகம் மிக விசேஷமானது. அந்த பால் வீணடிக்கப்படாமல் இந்த ஆசிரமத்தால் நடத்தப்படும், பள்ளிக் குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

ஆலயம் மிக சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. ஆலயத்தைச் சுற்றிலும் அழகிய தோட்டம் உள்ளது அங்கு அமைந்துள்ள சாயிபாபாவின் சிலை மிகவும் விசேஷமானது. இது உலகிலேயே மிக உயரமான சாயிபாபாவின் திரு உருவச் சிலையாகும். வலக்கையில் குவளையுடன், வெண்ணிற அங்கியுடன், கண்களில் கனிவுடன், நெடிதுயர்ந்து காட்சி தரும் இச்சிலையின் உயரம் 27 அடி. சிற்பியின் கைவண்ணத்தில் தத்ரூபமாகக் காட்சி தருகிறார் பாபா.

அதன் எதிரில் 8 அடி உயரத்தில் பிரம்மாண்ட ரூபமாக கால் மடித்து ராமஜபம் செய்து கொண்டிருக்கும், ஆஞ்சநேயர் கண்ணைக் கவரும் அழகுடன் காட்சி தருகிறர். மின் இணைப்பு கொடுக்கப்படும்போது இந்த அனுமன், முகத்தைத் திருப்பியபடியே ராம நாம ஜெபம் செய்வது மிக அற்புதமான காட்சி.

‘எளியவர்க்கு செய்யும் தொண்டே இறைவனுக்குச் செய்யும் தொண்டு’ எனக் கூறிய பாபாவின் வாக்கிற்கேற்ப, சாமி நாராயண் பாபா ஏழை, எளியோருக்கும், உடல் நிலை சரியில்லாதோருக்கும் செய்யும் தொண்டுகள் பலப்பல. இலவச பள்ளிகள், இலவச மருத்துவ மனை, கண் பார்வை இல்லாதோர் காப்பகம், தொழு நோயாளர் காப்பகம், சுவாமி பக்தியைப் பரப்பும் சத்சங்கங்கள், சாயி ஆலயங்கள் நிர்மாணித்தல் போன்றவை இந்த சன்ஸ்தான் மூலம் நடைபெறும் சேவைகள்.

பன்வெல்லிலிருந்து 8 கி.மீட்டர் தொலைவில் உள்ள ‘சாந்திவன்’ என்ற இடத்தில் நவீன முறயில், ஸ்வீடன் டெக்னாலஜியல் நட்த்தப்படும் ‘கோசாலை’ இயங்குகிறது. இங்குள்ள தொழு நோயாளிகள் இல்லத்தில் வாழும் தொழு நோயாளிகளாலேயே இந்த ‘கோசாலை’ பராமரிக்கப்படுகிறது. ஷீரடியில் ஆசிரமத்தில் யாத்ரீகர்கள் தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. 1986ம் ஆண்டு அமெரிக்காவில் லாஸ்வேகாஸ் நகரில், முதல் சாயிபாபா ஆலயம் ஸ்ரீசாமி நாராயண் பாபாவால் உருவாக்கப்பட்டது.


சாயிபாபாவின் அருள் உபதேசங்களின்படி நடந்து ஏழை, எளியோருக்கு எண்ணற்ற உதவிகளைச் செய்து வரும், ஸ்ரீபகவதி சாயி சன்ஸ்தானத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வரும் ‘மினி ஷீரடி’ மும்பை வாசிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம் ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக