Thanjai

Thanjai

திங்கள், 21 மார்ச், 2011

மினிசபரிமலை

குமுதம் பக்தி ஜனவரி 2004 இதழில் வெளியானது



மும்பை பக்தர்களுக்கு சபரிமலை சென்று தரிசித்த இன்பத்தையும், திருப்தியையும் தருகிறார் காஞ்சூர் மார்க், ‘மினி சபரிமலா’வில் காட்சி தரும் அரிஹரசுதன்.

முன்பு தேவி பகவதி, ஐயப்பன் சந்நதிகளுடன் பெரிய அழகிய ஆலயமாயிருந்தபோது ஆங்கிலேயர்கள் இவற்றை அழித்து விட்டனராம். பின் வெகு காலம் இவ்வாலயம் பற்றி, தெரியாமலிருந்து, பிறகு, பிரச்னம் மூலம் இக்கோவிலைப் பற்றித் தெரிய வந்ததாம்.

1960ம் ஆண்டு தோஷ நிவர்த்தியும், ஆலய சுத்தியும் செய்யப்பட்டது. அதற்கு இருபது ஆண்டுகளுக்குப் பின் 1980ம் ஆண்டு அஷ்ட மங்கல தேவ பிரச்னம் செய்யப்பட்டது. ஆலய தந்திர விதி மற்றும் கேரள சாஸ்திர விதிப்படி பஞ்சலோக விக்ரகங்களில் தெய்வ சாந்நித்யம் ஏற்றப்பட்டு, ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. ‘மினி சபரிமலை’ என்பதற்கேற்ப தர்ம சாஸ்தாவின் ஆலயம் இயற்கை வனப்புடன் கூடிய உயர்ந்த குன்றின் மீது அமைந்துள்ளது. ஐயப்பன் சந்நிதி நடு நாயகமாக விளங்குகிறது. வல, இடப் பக்கங்களில் கணபதி, பகவதி சந்நிதிகள் அமைந்துள்ளன. வட கிழக்குப் பக்கம் சர்ப்பக் காவு என்னும் நாக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கேரள முறைப்படி பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேரள மாநிலத்திற்கு செல்ல முடியாது ஏங்கும் பக்தர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்கிறது இத்தலம். சபரிமலை போலின்றி இங்கு ஆண்டு முழுவதும் ஐயனின் தரிசனம் உண்டு.

வருடம் தோறும் மண்டல பூஜை, மகர விளக்கு மஹோத்சவம் போன்றவையும் உண்டு. மாலை வேளையில் ஆலய சந்நிதிகளைச் சுற்றியும், மலைப் படிகளிலும் விளக்குகள் ஒளிர, ஆலயம் ஜகஜ்ஜோதியாய்க் காட்சியளிக்கும்.

பம்பா நதி தீரனை மும்பை மக்கள் தரிசிக்க விரும்பும் போதெல்லாம் ‘மினி சபரிமலை’ சென்று ஐயனை தரிசித்து அவன் அருளைப் பெறுகின்றனர்.

காஞ்சூர் மார்க் ரயில் நிலையம், மும்பை விக்டோரியா டெர்மினசிலிருந்து தானே செல்லும் வழியில் உள்ளது. காஞ்சூர் மார்க் மேற்கில், என்.சி.ஹெச்.காலனியில் மினி சபரிமலாவில் காட்சி தருகிறார் சாஸ்தா.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக