Thanjai

Thanjai

திங்கள், 21 மார்ச், 2011

வளர்கிறார் ஆஞ்சநேயர்

சக்தி விகடன் 15-08-2004 இதழில் வெளியானது






யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸந்தகம் |

எங்கெல்லாம் ராம பஜனை, ராம கதை கேட்கிறதோ அங்கெல்லாம் அனுமன் தலையில் கூப்பிய கரங்களும், கண்களில் ஆனந்த பாஷ்பமுமாக, அரூபியாக அருகில் நின்று கேட்டுச் சந்தோஷப்படுவாராம். இது புராணக் கூற்று. வீரமும், விவேகமும், சுந்தரமும், அளவிடற்கரிய ராம பக்தியும் உடைய அனுமனுக்குச் சிறப்பான ஆலயங்கள் அளவற்றவை. அத்தகைய தலங்களுள் ஒன்று நாமக்கல். இங்கு ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் என்ற பெயரில் விசுவரூபமெடுத்து கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார் ஸ்ரீ ராம பக்த அனுமன்.

இன்று நாமக்கல் எனக் கூறப்படும் இந்த இடம் புராண காலத்தில் நாமகிரி என்றும் ஸ்ரீசைல க்ஷேத்திரம் என்றும் கூறப்பட்டது. நாமகிரி என்ற நான்கு எழுத்துக்களும் மிகப் புனிதமானவை. நா – பாவங்களை நசிக்கச் செய்வது; ம – மங்களம் தருவது; கி – வாக்குவன்மை அளிப்பது; ரி – முக்தி தரும் சக்தி உடையது. இந்த ஊரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நாமகிரித் தாயாரின் சக்தி சொல்லில் அடங்காது. அம்மனின் தோற்றம் நம் முன் நின்று பேசுவதுபோல் காட்சி தரும் அற்புத அழகு வாய்ந்தது.

நாமக்கல் நகரின் நடுவில் விளங்கும் குன்று விஷ்ணு அம்சம் பொருந்திய இரு முகங்களையுடைய சாளக்கிராம மலை. ஒரே கல்லாலான இந்த மலை ஆஞ்சநேயரால் எடுத்து வரப்பட்டது. ராமாவதாரத்தில் யுத்தத்தின் போது சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் கொணர்ந்து, மூர்ச்சையடைந்த ராமரையும் வானர வீரர்களையும் எழுப்பினார். அதன் பின் அந்த மலையைத் திரும்ப அதே இடத்திலேயே வைத்துவிட்டு வரும் வழியில், நேபாளத்தில் கண்டகி நதியில் நரசிம்ம ரூபமாயிருந்த சாளக்கிராம மலையைக் கண்டு, அதை வழிபாட்டுக்கென பெயர்த்தெடுத்து வந்தார். சூரியோதய காலம் நெருங்கவே, அனுஷ்டானம் செய்யும் பொருட்டு இவ்வூரில் மலையைக் கீழே வைத்தார். திரும்ப எடுக்க முயன்றபோது சிறிதும் அசைக்க முடியவில்லை. அந்த நேரம், நரசிம்மர், ‘ராமாவதாரத்துக்குப் பின் இங்கு வந்து பணியாற்று!’ எனப் பணித்தார். அவ்வாறே இன்றும் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் நரசிம்ம மலை எதிரில் நின்று அருள்பாலிக்கிறார்.



திறந்த வெளியில் மலைக்கு மேற்புறம் அமைந்திருக்கும்  இடத்தில் மிக உயர்ந்து, காற்று, மழை, வெயில் இவற்றைத் தாங்கியவாறு தொழுத கைகளுடன் 18 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் கிழக்கு நோக்கி பிரம்மாண்டமாகக் காட்சி அளிக்கிறார் ஆஞ்சநேயர். மேல் விதானம் அமைக்க ஆஞ்சநேயர் உத்தரவு அளிக்கவில்லையாம். முன்னோர்கள் விதானம் கட்ட முயற்சித்தபோது லோக நாயகனான நரசிம்மரே மலை உருவில் விதானமின்றி இருப்பதால் தனக்கும் விதானம் தேவையில்லை என்று கனவில் கூறியதால் அந்தப் பணி கைவிடப்பட்டது. மேலும் அனுமனின் திருவுருவம் இன்னமும் வளர்ந்து கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சந்நிதியில் ஆஞ்சநேயர் முன் நிற்கும்போது நம் கவலைகள் காணாமல் போகின்றன. அழகிய, நெடிதுயர்ந்த உருவத்தை, ராமபக்த அனுமனின் திவ்யதரிசனத்தைக் காணக்காண மனம் நிச்சலனமாகி, அமைதியும் ஆனந்தமும் ஏற்படுகிறது. அனுமனின் அருள் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற உறுதி ஏற்படுகிறது.

நினைத்தவையும், வேண்டுவனவும் இந்த மாருதிராயன் அருளில் உடனுக்குடன் நிறைவேறுவதை இங்கு வரும் பக்தர்கள் செலுத்தும் பிரார்த்தனைகள் மூலம் நன்கு உணர முடிகிறது, லக்ஷ்மி நரசிம்மர் ஆலயமுள்ள இந்த மலை இருநூற்றைம்பது அடி உயரம் கொண்டது.  ஆஞ்சநேயரின் இரு விழிகள் நேராக அந்த லக்ஷ்மி நரசிம்மப் பெருமாளின் பாத கமலங்களில் பதிந்திருப்பது மிக அதிசயமான ஒன்று. இதை கருடாழ்வார் சந்நிதியிலிருந்து பார்த்தால் நன்கு உணர முடியும்.

ஆஞ்சநேயருக்கு உளுந்து வடைகளை நல்லெண்ணெயில் செய்து வடைமாலை சாற்றுவது பொதுவான வழிபாடாகும். இதற்கு ஒரு காரணம் உள்ளது.

ஒருமுறை நவக்கிரகங்களில் அடங்கிய ராகுவும், சனியும் அனுமனிடம் தோல்வியடைந்து அவரிடம் கீழ்ப்படிந்தனர். மனிதர்களுக்கு ராகு, சனியால் கெடுதல் ஏற்பட்டால் அவர்களைத் திருப்திப்படுத்தவே, ராகுவுக்குப் பிரியமான உளுந்து, சனிக்குப் பிரியமான எள், எண்ணெய் இவற்றில் செய்த வடைமாலையை அனுமனுக்குச் சாற்றி நன்மை பெறுகிறார்கள்.

ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் இந்தப் புனிதமான சாளக்கிராம மலையை வலம் வருவது மிக விசேஷமானது. மார்கழி மாத ஹனுமத் ஜயந்தி உற்சவம் மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. இங்கு விசுவரூப ஆஞ்சநேயருக்குப் பரிகாரமாக வடைமாலை தவிர, எலுமிச்சை, துளசி, வெற்றிலை ஆகியவற்றால் ஆன மாலைகள், நல்லெண்ணெய், பால், தயிர் போன்றவை கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள், வெண்ணெய்க் காப்பு, புஷ்பாலங்காரம் ஆகியவை மிக விசேஷமாகக் கூறப்படுகிறது.

திருமணம், பிள்ளைச் செல்வம், தீரா நோய், வேலை ஏனைய இப்பிறவிக்கான வேண்டுதல்களுடன், மறுமையில் முக்தியும் பெற இத்தல ஆஞ்சநேயரிடம் இறைஞ்சி வழிபட்டால், எக்குறையும் நீக்கி நிறைவான வாழ்வைத் தருவார் என்கிறது தல புராணம்.


திருச்சி – ஈரோடு நகரங்களுக்கருகில் அமைந்துள்ளது நாமக்கல். இவ்விரு நகரங்களிலிருந்தும் நிறயைப் பேருந்து வசதி உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக