ஸ்ரீகிரிஜாத்மஜர் கோவில் கொண்டுள்ள லேன்யாத்ரியிலிருந்து 15
கிலோ மீட்டர் தொலைவில் குக்கடி நதிக்கரையில் ‘விக்னராஜ’ ரூபமாகக் கோவில் கொண்டு,
தன் பக்தர்களின் விக்னங்களைக் களைபவரே ஓஸாரிலுள்ள ஸ்ரீவிக்னேஷ்வர்.
ஒருமுறை பார்வதி தன் தோழிகளுடன் பேசிக்கொண்டும், சிரித்துக்
கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தாள். அச்சமயம் அவள் சிரித்தபோது, அவள் வாயிலிருந்து
பெரிய உருவத்துடன் ஒரு அரக்கன் தோன்றினான். அவனுக்கு மம்தாசுரன் என்ற பெயரிட்டு,
விக்னேஷ்வர பகவானின் சடாக்ஷர மந்திரமான ‘வக்ர துண்டாய நம:’ என்ற மந்திரத்தை சொல்லி
விநாயகரைத் துதிக்கும்படி கூறி அனுப்பினாள் பார்வதி. அவனும் பார்வதியின் சொற்படி
கடுமையான தவம் செய்தான். துரதிர்ஷ்ட வசமாக இடையில் சம்பாசுரன் என்ற அரக்கன் அவனைச்
சந்தித்து, அரக்க குணங்களைக் கற்றுக் கொடுக்க, தவத்திற்கு மெச்சி, காட்சியளித்த
விக்னேஷ்வரிடம் மூவுலகையும் கைப்பற்றி, அழியாத வரம் கேட்டான், கணபதியும் ‘அப்படியே
ஆகுக’ என்றார்.
பெற்ற வரத்தினால் கர்வமுற்று அனைத்து கடவுளர், தேவர்களை
சிறை பிடித்தான். சம்பாசுரன் மகளைத் த்ரிமணம் முடித்து இன்பமாக நாட்களைக்
கழித்தான். இதனால் துன்புற்ற தேவர்கள் விக்னேஷ்வரரைத் துதிக்க, அவரும் அவனுடன்
போருக்குச் சென்று, தன் கையிலிருந்த தாமரையை அவன் சேனை மீது வீச, சேனை முழுவதும்
நினைவிழந்து விழுந்தது. பயந்த மம்தாசுரன் கணேசரிடம் சரணடைய, அவரும் அவனை
மென்னித்து அனுப்பினார். அவரே ஓஸாரில் காட்சி தரும் விக்னேஷ்வர்.
ஹேமவதி நகரை ஆண்ட மன்னன் அபிநந்தன் கல்வி, கேள்விகள், தவ
ஒழுக்கத்தில் மிகச் சிறந்தவன். அவன் இந்திர பதவியைப் பெறும் பொருட்டு பல
யாகங்களைச் செய்தான். இதனால் தன் பத்வி போய்விடும் என பயந்த இந்திரன் காலதேவனை
அழைத்து, அவன் செய்யும் யாகங்களை அழிக்கச் சொன்னான். கொடிய பயங்கர தோற்றமுடைய
காலனோ, அவன் தவத்தை மட்டுமின்றி, உலகில் ஏனைய முனிவர்கள், ரிஷிகள் செய்யும்
யாகங்களையும் அழித்துவிட்டான்.
பூவுலகில் தர்மம் அழிந்து அதர்மம் தலைவிரித்தாடியது.
பாபங்கள் பெருகின. தவத்திற்கு, நற்செயல்களுக்கு ஊறு விளைவித்த காலன் ‘விக்னன்’ என
அழைக்கப்பட்டான். இதனால் துன்புற்ற தேவர்கள் கஜானன மூர்த்தியிடம் அடைக்கலம்
புகுந்து தம்மைக் காப்பாற்ற வேண்டினர். அபயம் அளித்த கணபதி பார்கவ முனிவருக்கும்,
அவர் மனைவி தீபவத்சலைக்கும் மகனாக அவதரித்தார்.
தேவர்கள் அவரிடம் சென்று சிறுவன் கணபதியை விக்னாசுரனை
அழிக்க அனுப்பும்படி விண்ணப்பித்தனர். தயங்கிய முனிவரை சமாதானம் செய்து, அவரின்
அனுமதியுடன் போருக்குச் சென்றார் கணபதி. தனது அங்குசத்தை அவன்மீது வீசி, அவனை
தேவர்களின் முன் கொண்டு நிறுத்தினார். அதிலும் அவன் அடங்காது தன் மாயையால் பல
இடர்களை தோற்றுவித்தான். எல்லாவற்றையும் அழித்த கணபதிப் பெருமானிடம் தன் ஜம்பம்
பலிக்காது என்றுணர்ந்தவன், அவர் காலடியில் பணிந்தான். தன் பெயரை கணபதியின்
பெயருக்கு முன் சேர்க்க வேண்டினான். கணபதியும் அவன் வேண்டுதலை ஏற்று அதுமுதல்
‘விக்னேசுவரர், விக்னராஜா’ எனப் பெயர் பெற்றார்.
“யாரெல்லாம் என்னை இந்தப் பெயரில் வணங்குகிறார்களோ அவர்கள்
காரியத்தில் நீ எந்தத் தடையும் செய்யக் கூடாது. என்னை வணங்காமல் ஆரம்பிக்கும்
காரியங்களில் நீ தயங்காமல் தடை ஏற்படுத்து. அது சாதாரண மக்கள் முதல் தெய்வங்கள்
வரை அனைவருக்கும் பொருந்தும்” எனக் கூற, விக்னாசுரன் கணபதியை வணங்கி விடை
பெற்றான்.
இனி நம் விக்ன்ங்களை நிக்கி நம் காரியங்களை செம்மையாக
நடத்தித் தரும் விக்னேஷ்வர் ஆலயத்திற்குச் செல்வோமா? அழகிய குக்கடி நதிக்கரையில்
ஓங்கி உயர்ந்து விளங்குகிறது ஆலயம். சில படிகள் ஏறிச் சென்றால் உயரமான, பெரிய
உருவத்துடன் ஒரு துவாரபாலகர்களுடன் அழகிய வண்ணச் சிலைகள் பதிக்கப்பட்டு, சிறந்த
கலையம்சத்துடன் விளங்கும் நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்ல வேண்டும்.
ஆலயத்தைச் சுற்றி கருங்கல்லாலான சுவர் உள்ளது. ஆலயத்துள்
சென்று துவாரபாலகர்களின் சித்திரம் வரையப்பட்ட அலங்கார நுழைவு வாயிலைத் தாண்டிச்
சென்றால் ஒரு பெரிய அறை உள்ளது. அதனை அடுத்துள்ள கர்ப்பக்கிரகம் பத்தடி
உயரமுள்ளது. சுற்றிலும் மிக அழகிய சித்திர வேலைப்பாடு கண்ணுக்கு விருந்து.
கோபுரம் வெண்ணிறத்தில், சுற்றிலும் பல தெய்வ உருவங்கள்
வண்ணத்தில் பதிக்கப்பட்டு, மிக அழகாக விளங்குகிறது. மேலே தங்கக் கலசம்
பளபளக்கிறது. அஷ்ட விநாயக ஆலயங்களிலேயே இத்தலத்தில் மட்டுமே விமானமும்,
கோபுரத்தின் மீது தங்கக் கலசமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கலசம் பேஷ்வா அரசர் சிம்மாஜி அப்பா என்பவரால்
நிறுவப்பட்டது. அவர் போர்த்துகீசியர்களுடன் போருக்குச் செல்லும் சமயம் இவ்வாலய்
இறைவனை வணங்க வந்தபோது, உய்ரம் குறைந்த வாயிற்படியில் கிரீடம் இடித்து கீழே
விழுந்துவிட்ட்து. இதை அபசகுனமாக நினைத்த அவர், தான் போரில் வெற்றி பெற்றால்
ஆலயத்தை விரிவாகக் கட்டுவதாக எண்ணிக் கொண்டார். அதன்படி வெற்றி பெற்றது கி.பி.
1785ல் இவ்வாலயத்தைப் புதுப்பித்து, பெரிதாகக் கட்டினார். அவரே இந்தத் தங்கக்
கவசம் மற்றும் விமானத்தைக் காணிக்கையாக உருவாக்கினார்.
கர்ப்பக்கிரகத்தின் முன்னால் ஓடும் நிலையில் பளிங்கினால்
ஒரு மூஞ்சூறு உள்ளது. நடு நாயகமாக கிழக்கு பார்த்த நிலையில், கம்பீரமாக அமர்ந்த
நிலையில் சுயம்புவாகக் காட்சி தருகிறார் விக்னேஷ்வர். செந்தூரம் பூசிய உடலில்,
இரண்டு கண்கள் மற்றும் தொப்புளில் ரத்தினம் மற்றும் வைரக் கற்கள் பதித்து, இரு
பக்கமும் ரித்தி, சித்தியின் சிறிய பித்தளைச் சிலைகளுடன் அழகுற காணாப்படும்
விக்னேஷ்வர் மனதை கொள்ளை கொள்கிறார். கர்ப்பக் கிரகத்தின் நான்கு பக்கங்களில்
சிவன், விஷ்ணு, சுறியன், துர்க்கைக்குச் சிறிய சன்னதிகள் உள்ளதால் தினமும்
பஞ்சாயதன் பூஜை நடைபெறுவது இங்கு மிக விசேஷம்.
இவ்வாலயத்தில் சங்கடஹர சதுர்த்தி, மாசி, புரட்டாசி மாத
சுத்த சதுர்த்திகள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறன. இவற்றைத்ட் தவிர
கார்த்திகை பூர்ணிமா எனப்படும் கார்த்திகை மாத பௌர்ணமி முதல் சதுர்த்தி வரை, ஐந்து
நாட்கள் இங்குள்ள பிரம்மாண்டமான தீப மாலாக்களில் விளக்குகள் ஏற்றப்படுவது
கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஓஸார் பூனாவிலிருந்து 85
கிலோ மீட்டரிலும், மும்பையிலிருந்து 182 கிலோ மீட்டர் தொலைவிலும்
அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக