அவளது அழகில் இறைவனே மயங்கி 'தம்காதலி' என்று
அழைத்ததால் இத்தேவி 'தங்காதலி அம்மை' என்றே பெயர் கொண்டுள்ளாள். ஈசனே மயங்கிய தேவியின் முன் நாம்
எம்மாத்திரம்? தேவியை விட்டு நகரவே மனமில்லை.
|
பதினோரு வினாயகர்கள் ஒரே பீடத்தில் அமைந்து 'ஏகாதச வினாயகரா'கக்
காட்சி தருவது இவ்வாலயத்தில் மட்டுமே காணப்படும் சிறப்பு. பிரதானமாக வலம்புரி
விநாயகர் அமைந்துள்ளார்.
|
தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ளது திருப்பாசூர். இது சென்னையிலிருந்து
திருத்தணி செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இத்தலம் திருவள்ளூருக்கு மேற்கிலும், திருவாலங்காட்டிற்குக்
கிழக்கிலும் அமைந்துள்ளது.
இத்தல ஈசன் மூங்கில் புதரிலிருந்து தோன்றியமையால் (பாசு - மூங்கில்) வேயீன்ற
நாதர் எனப்படுகிறார். இவ்வூர் மூங்கில் காடுகளுடன் நீர், நில வளங்கள் செறிந்து பாசி
படர்ந்து இருப்பதால் பாசூர் எனவும், இறைவன் 'பாசூர் நாதர்' என்றும் அழைக்கப்ப்டுகிறார்.
இவ்வாலயம் கரிகால் சோழனால் உருவாக்கப்பட்டது. இப்பகுதி முழுவதும் மூங்கில்
காடாக இருந்தபோது,
மேய வந்த ஒரு பசு சிவலிங்கம் இருந்த இடத்தில் தினமும் பால் சொரிய,
அதனைக் கணட வேடர்கள் அவ்விடத்தை வெட்டியபோது, சிவலிங்கம்
வெளிப்பட்டது. கோடரியால் வெட்டிய தழும்புகள் இன்றளவும் இறைவன்மேல் காணப்படுகிறது.
இதனால் இறைவனுக்கு 'வாசீசுவரர்' என்த
ஒரு பெயரும் உண்டு. (வாசி - கோடரி) வேடர்களால் செய்தியறிந்த கரிகால மன்னன் உடன்
அவ்விடத்தைச் சீர் செய்து ஆலயம் எழுப்பினான்.
அனுதினமும் ஆண்டவனைத் தொழுது வழிபட்டான். ஒருமுறை குறும்பர் அரசனுக்கும், கரிகாலனுக்கும் பகை உண்டானபோது,
அம்மன்னன் சமணர்கள் உதவியுடன் மந்திரத்தால் பாம்பை உருவாக்கிக்
கரிகாலன்மீது ஏவினான். கரிகாலன் வாகீசுவரரை வணங்கி வேண்ட, ஏசன்
அப் பாம்பைத் தம் கையில் எடுத்து அடக்கினார் என்பதை நாவுக்கரசர் பாடியுள்ளார்.
கரிகாலன் இவ்வாலயத்தைக் கட்ட முற்பட்ட சமயம், இப்பகுதியை ஆண்ட காளி உபாசகனான
குறு நில மன்னன் ஒருவனுடன் போர் செய்தான். அச்சமயம் காளி தேவி குறுநில
மன்னனுக்குத் துணையாகப் போரிட, அவனை வெல்ல முடியாத கரிகாலன்
இவ்விறைவனிடம் முறையிட்டான். ஈசன் நந்தியை அனுப்பி, மீண்டும்
போருக்கு அனுப்ப, நந்தியம் பெருமான் காளியை உற்று நோக்கி
அவள் வலிமையை அடக்கி, அவளுக்கு விலங்கு பூட்டி அடைத்து
விட்டார். இன்றும் அந்தக் காளி சன்னதி உள்ளது.
மூன்று நிலை ராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. சுவாமி, அம்மன் கோயில்கள் தனித்தனி
விமானங்களுடன் தனிக் கோயில்களாக உள்ளன. உள்ளே நுழைந்ததும் அம்பாள் சந்நிதி.
மோகனாம்பாள் என்ற பெயருக்கேற்ப நான்கு கரங்களில் அபய, வரத,
பாச அங்குசங்களுடன் சொக்கும் அழகுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி
தருகிறாள் அன்னை.
அவள்து அழகில் இறைவனே பயங்கி 'தம் காதலி' என்று
அழைத்ததால் இத்தேவி 'தங்காதலி அம்மை' என்றே
பெயர் கொண்டுள்ளாள். ஈசனே மயங்கிய தேவியின் முன் நாம் எம்மாத்திரம்? தேவியை விட்டு நகரவே மன்மில்லை.
அடுத்தது செல்வ முருகன் சந்நிதி. பெயருக்கேற்றபடி முருகன் அழகுக் கோலம் காட்டி
அருள் செய்கிறான். அதனை அடுத்து அமைந்துள்ளது வினாயகர் சபை? பதினொரு வினாயகர்கள் ஒரே
பீடத்தில் அமைந்து 'ஏகாதச வினாயகரா'கக்
காட்சி தருவது, இவ்வாலயத்தில் மட்டுமே காணப்படும் சிறப்பு.
பிரதானமாக வலம்புரி விநாயகர் அமைந்துள்ளார்.
எனவே விநாயகர் சதுர்த்தியில் இந்த வினாயக சபையை தரிசிப்பது விசேஷம். வலப்புறம்
'பெருமாள் வினை தீர்த்த ஈசுவரன்'
அமைந்துள்ளார்.
அடுத்து மூலவர் சந்நிதியை வலம் வரும்போது தென்கிழக்கு மூலை யில் சூரியன், சப்த கன்னியர், நால்வர் கோயில் கொண்டுள்ளனர். வெளிப் பிரகாரத்தில் தனி மண்டபத்தில்
தட்சிணாமூர்த்தி காட்சி தருகின்றார். மூலவரின் பின்புறம் அண்ணாமலையாரும், வடக்கில் விஷ்ணு துர்க்கை, வீரபத்திரர், சொர்ண பைரவர் உள்ளனர்.
லிங்கம் சதுர பீட ஆவுடையில், மேற்புறமும், பக்கவாட்டிலும்
வெட்டிய தழும்புகளுடன் சுயம்புவாகக் காட்சி தருகிறார். சுவாமிக்கு எண்ணெய்க்காப்பு
மட்டும் கிடையாது. மூலவர் சந்நிதி முன் ஆதி சங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் அமைத்து,
வழிபடப்படுகிறது. இங்குள்ள நடராச சபை மிக அற்புத அழகுடன் காட்சி
தருகிறது. ராஜ கோபுர வாயிலிலிருந்தே இதை தரிசிக்கலாம்.
இத்தலம் பல சிறப்புக்களைக் கொண்டுள்ளது. இறைவனின் வலப்பக்கம் தேவி அமைந்துள்ள
ஆலயங்களுக்கு ஆக்கசக்தி அதிகம் என்று ஆகம நூல்கள் உரைக்கின்றன. அதன்படி இங்கு
தங்காதலி அம்மைக்கே முதல் பூஜை. அம்மையே குளித்து முடித்து இறைவனைப் பூசிப்பதாக
ஐதீகம்.
சிவனுக்கும்,
சக்திக்கும் இடையில் குமரன் சந்நிதி அமைந்து சோமாஸ்கந்த தலமாகவும்
போற்றப்ப்டுகிறது. இத்தல ஈசனை நாகங்கள் மணியிட்டு பூசித்தன. சந்திரன் வழிபட்டு
அருள் பெற்றான். மேலும் பிருகு, பரத்துவாசர், மார்க்கண்டேயர், ததீசி, காசியபர்,
வசிட்டர், விசுவாமித்திரர் போன்ற பல
முனிவர்களும் வழிபட்டு முக்தி பெற்றுள்ளனர். தல மரமான மூங்கில் ஆலயத்தினுள்
அமைந்துள்ளது.
ஆலய வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபம் பாழடைந்து காணப்படுகிறது. விலங்கிடப்பட்ட
பழைய காளி சிலை சிதிலமானதால் புதிய சிலை சொர்ணகாளி என்ற பெயரில் காட்சி தருகிறது.
இக்காளி அன்பர் வேண்டுவதையும், விரும்புவதையும் உடன் நிறைவேற்றூவதாகக்
கூறுகிறார்கள். எல்லத் தலங்களின் கலைகளும் உச்சிப் பொழுதில் இங்கு கூடுவதால்,
இத்தலம் உச்சிக்கால தரிசனத்துக்கு ஏற்றது.
அப்பரும்,
சம்பந்தரும் பாடிய இத்தலத்தை தரிசிப்பதால் அடியவர்க்கு அருளும்,
பொருளும் சேரும் என்பதில் ஐயமில்லை.
திருத்தணி ஆலய நிர்வாகத்தின் கீழ் உள்ள திருப்பாசூர் ஆலயம் சென்னை திருத்தணி
வழித்தடத்தில் கடம்பத்தூர் சாலை பிரியுமிடத்தில் உள்ள
து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக