Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

பயன் தரும் பழங்கள்

மங்கை 1993 இதழில் வெளியானதுநம் அன்றாட உணவில் பழங்களின் முக்கியத்துவம் இன்றியமையாதது. பழங்களில் ஏ, பி, சி வைட்டமின்களும், சிட்ரிக் ஆசிட், மாலிக் ஆசிட், டார்ட்டாரிக் ஆசிட், பெப்டின் ஆகிய உடலுக்கு ஊக்கமும், பலமும் அளிக்கும் அமிலங்களும் கலந்திருப்பதால், ஒரு பழம் சாப்பிடும்போது நம் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கிடைக்கின்றது. நம் உடலும், மனமும் புத்துணர்வும், ஆரோக்கியமும் அடைகிறது.

ஆனால் நம் வேகமான இன்றைய நடைமுறை வாழ்வில் நாம் இவற்றைப் பற்றிச் சற்றும் சிந்திப்பதில்லை. வீட்டுப் பிரச்னை, அலுவலகப் பிரச்னை, பொருளாதாரப்  பிரச்னை இப்படி ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள். நம் வாகனங்களுக்குக் காட்டும் சர்வீஸ் நேரத்தைக்கூட நம் ஆரோக்கியத்திற்கு பலர் காட்டுவதில்லை. தலைவலி என்றால் ஒரு மாத்திரை, காய்ச்சல் என்றால் ஊசி, அதையும் மீறினால் எக்ஸ்‌ரே, ஸ்கேன், ஏகப்பட்ட மருந்துகள்! மருத்துவம் முன்னேறும்போது, மருந்துகளே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு நோய்களும் பெருகி விட்டன.

நோய்கள் உண்டாவதன் முக்கிய காரணம் வைட்டமின் பற்றாக்குறை. நாம் சாப்பிடும் இன்றைய உணவில் வைட்டமின் சத்து தேவையான அளவு இல்லை என்பது நாம் அறிந்ததே. நெல்லை அரைக்கும்போது அரிசியில் ‘பி’ வைட்டமினும், தயாமின், நிக்கோடினிக் அமிலம் இவை அழிந்து விடுகின்றன. அதனாலேயே பழங்காலத்தில் கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டார்கள். அரிசி களையும்போதும், வடிக்கும்போதும், ‘பி’ வைட்டமின் முழுமையாகவே அழிந்து விடுகிறது. நாம் சாப்பிடும் கீரை, காய்கறிகளிலாவது வைட்டமின் உண்டா எனில் அதுவும் இல்லை. ஏனெனில் காய்கறிகள் பயிரிடும்போது போடும் கண்ட கண்ட ரசாயன உரங்களாலும், நாம் முறையானபடி சமைக்காமல், அவசர யுகத்தில் வேகவிட்டு சமைக்கும்போதும் அதிலுள்ள வைட்டமின்கள் அழிந்து சத்தின்றி போகிறது. இதனாலேயே வாய்ப்புண், காய்ச்சல், வாதம், இருதய நோய் இன்னும் பல பெயர் தெரியாத நோய்களின் ஆரம்பம்.

அப்படியானால் வைட்டமின்களைப் பெற வாய்ப்பே இல்லையா? உண்டு! கடவுள் நமக்குத் தந்த இயற்கையின் வரம்தான் பழங்கள். பழங்களில் அனைத்து வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், நோய்களை நீக்குவதோடு, உடலுக்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது. குடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. உணவுப் பொருள்களை அழுகச் செய்யும் கிருமிகளை மாற்றிப் புளிக்க வைக்கும் கிருமிகளாகச் செய்யும் ஆற்றலும் உண்டு. பழங்களை வேகவிட வேண்டியதில்லை. அப்படியே சாப்பிடுவதில் வைட்டமின் வீணாவதில்லை. குழந்தைகள் முதல் முதியோர் வரை எவ்வளவு உடல் நலக் குறைவு இருப்பினும், பழங்கள் சாப்பிட் தடையே இல்லை. அதனாலேயே நம் முன்னோர்கள் சாப்பிட்டவுடன் கண்டிப்பாக ஏதாவது ஒரு பழம் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். பழ மரங்களின் வேர்கள் நீளமாக இருப்பதால் பூமியின் ஆழத்திலிருக்கும் தாதுப் பொருள்களை இழுத்து தேக்கி வைத்திருக்கின்றன. இனி என்னென்ன நோய்க்கு என்ன பழங்கள் மருந்தாக இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

சிறுநீரகம் சரியாக வேலை செய்யாதபோது, கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் கலக்கின்றன. அந்தக் கழிவுப் பொருட்களே நுரையீரலில் வெண்ணிற ஜவ்வுகளாக ஒட்டிக் கொள்கின்றன. இதனால் மூச்சு விடும்போது தடை ஏற்பட்டு, இருமல் உண்டாகிறது. நுரையீரலில் சளி தங்கி விடுகிறது.

இத்தகைய சளியைக் கரைத்து வெளியேற்றும் சக்தி ஆரஞ்சுப் பழத்திற்கு மட்டுமே உண்டு. ஆரஞ்சு ஜூஸ் மூன்று மாதக் குழந்தைகளுக்குக் கூட கொடுக்கலாம். சிறிது வெந்நீர் கலந்து கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்குப் பிறகு தண்ணீர் கலக்காமல் கொடுக்கலாம்.

‘ஏழைகளின் ஆப்பிள்’ எனப் புகழப்படும் தக்காளிச் சாறு மலச்சிக்கலை நீக்கி உடலுக்கு வலுவைத் தரும். வாயுத் தொல்லை இருந்தால் வாழைப்பழம், அன்னாசி இவற்றைச் சாப்பிட்டு வந்தால், பலன் கிடைக்கும். வயிற்றில் பூச்சி இருக்கும் குழந்தைகளுக்கு அன்னாசிப் பழம் கொடுத்து வந்தால் பூச்சிகள் அழிந்து விடும். சிறு நீரகம் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு பப்பாளி உடனடி பலன் தரும். அதிக அளவு வைட்டமின்கள் நிறைந்த பப்பாளி குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் ஒரு பழமாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு மாதுளை சிறந்த மருந்தாகும். சீதாப்பழம் இருதய நோய்க்கு ஏற்றது. சப்போட்டா, மங்குஸ்தான் போன்றவை உடலுக்கு புத்துணர்வு தரும்.

வைட்டமின் ‘ஏ’ குறைவதாலேயே கண் பார்வை பாதிக்கப்படுகிறது. பப்பாளி ஜூஸ், மாம்பழ ஜூஸ், காரட் ஜூஸ் இவற்றை தினசரி அருந்தி வந்தால், ஆரோக்கியமான கண் பார்வை பெறுவதோடு, கண்ணாடி அணியும் தொல்லையும் ஏற்படாது. குழந்தைகளுக்கு பச்சையாக ஒரு காரட் தினசரி கொடுப்பது நல்லது.

கல்லீரலில் உள்ள கணையத்திலிருந்து இன்சுலின் நீர் சுரந்தால்தான் இரத்தத்திலுள்ள சர்க்கரை, சத்துப் பொருளாக மாறும். இல்லையெனில் நீரிழிவு நோய் ஏற்பட நேரும். இந்த நீரிழிவு நோய்க்கு மிகவும் ஏற்ற மருந்து நாவல் பழம். நாவல் பழம் இன்சுலினை உற்பத்தி செய்து கல்லீரலின் வேலை சரிவர நடைபெற துணை புரிகிறது.

அன்னாசிப் பழம் சூடு என்பது மிகத்  தவறான எண்ணம், அன்னாசியில் ‘பி’ வைட்டமின் சக்தி மிக அதிக அளவில் உள்ளது. இருபக்கத் தலைவலி, கண்களில் பீளை சேர்தல், கண்ணில் நீர் வடிதல், காதுவலி, பல்வலி, தொண்டைப்புண், ஞாபக சக்தி குறைவு இவற்றை குணமாக்கும் சக்தி அன்னாசிப் பழத்துக்குத்தான் உண்டு.

பெண்களுக்குக் கர்ப்பப் பையில் ஏற்படும் புண்களை ஆற்றும் சக்தி திராட்சைக்கு உண்டு. வயிற்றுப் புண் இருப்பவர்களும், மாத விலக்கு கோளாறு இருப்பவர்களும் தினசரி காலையில் திராட்சை ஜூஸ் சாப்பிடலாம்.

ஆப்பிளில் வைட்டமின் ‘பி’ பெப்டின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. வசதியுள்ளவர்கள் தினசரி ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் அவர்களை நோய் அணுகாது. முடியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது வாழைப்பழமும், தக்காளியும்.

எலுமிச்சை சாறு வயிற்றுப் பொருமல், எரிச்சல், ஜீரணக் குறைவிற்கு ஏற்ற எளிய மருந்து. அஜீரணம் ஏற்படும்போது எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு போட்டு சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும். சில பொதினா இலைகளின் மேல் கொதிக்கும் வெந்நீர்விட்டு மூடி வைத்து, சில நிமிடங்கள் கழித்து எலுமிச்சை சாறு பிழிந்து, தேன் சிறிது சேர்த்து சாப்பிட வயிற்று நோய் பறந்துவிடும். வெயில் நாட்களில் களைப்பை நீக்கும் பானமாகவும், மற்ற நாட்களில் மருந்தாகவும் இருவிதப் பயனையும் தரும் எலுமிச்சம் பழம்.


இவை தவிர காரட், வெள்ளரி, பச்சை பட்டாணி, பீட்ரூட், வெங்காயம் போன்ற காய்கறிகளை அப்படியே பச்சையாக, வைட்டமின் அழியாமல் நம்மால் சாப்பிட முடியும். இந்தக் காய்கறிகளை வேக வைக்காமல் அப்படியே நறுக்கி, சாலட், பச்சடி இவற்றைச் செய்து சாப்பிடலாம். வாழைத் தண்டைப் பொடியாக நறுக்கி உப்பு, தயிர் கலந்து பச்சடி செய்து சாப்பிட வயிற்றில் ஏற்படும் கல் கரையும். அறுவை சிகிச்சைக்கு அவசியம் ஏற்படாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக