ஆடி மாதம் பிறந்தாலே வரிசையாக
பண்டிகைகள்தான். அதிலும் நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை ஆகிய மூன்று பெரிய
பண்டிகைகளும் அடுத்தடுத்து வந்து விடும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும்
உற்சாகமும், மகிழ்ச்சியையும் தருவன் இப்பண்டிகைகள்.
கார்த்திகை மாதம் முதல்
நாளிலிருந்து மாதம் முடியும் வரை தினமும் மாலையில் விளக்கேற்ற வேண்டும். சிவஜோதியை
யோக வழியால் காண முடியாதவர்கள் திருவிளக்கிட்ட தொண்டுகளால் காணலாம் என்பதை
உணர்த்துவதே கார்த்திகை தீபம்.
இத்தீப வழிபாடு எல்லா
ஜாதியினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கலிய நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகியோர்
திருவிளக்குத் தொண்டால் முக்தி பெற்றனர். காஞ்சீபுரத்தில் தீபப் பிரகாசர்
விளக்கொளி பெருமாள் என்ற பெயரில் திருமால் ஆலயம் உள்ளது.
அக்னி அருவமாகவும், உருவமாயும்
விளங்குவது போல சிவபெருமானும் விளங்குகிறார். ‘நமசிவாய’ மந்திரமே ஒளி மயமானது. ‘சுஷ்கப்பன்’
என்ற சிவபெருமான் நாமமே, சொக்கப்பன் என்றாகி, பனை மரத்து கட்டையாலும், பனை
ஓலையாலும் கார்த்திகை தீபத்தன்று ‘சொக்கப்பனை’ கொளுத்தும் வழக்கம் ஆலயங்களில்
ஏற்பட்டதாகத் தெரிகிறது. சிவனுடைய ஜோதியை நினைவூட்டவே, எல்லா சிவாலயங்களிலும்
இப்பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது.
அக்னி ஸ்தலமாக விளங்கும்
திருவண்ணாமலையிலுள்ள ‘தேஜோலிங்கம்’ எனும் மலை உச்சியில் ஒரு பெரிய கொப்பரையில்,
இருபத்தி நான்கு முழ துணியில் கற்பூரத் தூளைத் தடவி திரியாக்கி, கொப்பரையில் நெய்
விட்டு ஊற வைத்து, மாலையில் சுவாமி புறப்பாடாகி ஆலயம் விட்டு வெளிவந்து மலையை நோக்கி
நின்று தீபாராதனை எடுத்ததும் ஜோதி ஏற்றப்படும்.
விளக்கு இருளை விலக்குவது போல் அஞ்ஞான
இருளை விலக்குவது ஜோதி. முற்காலத்தில் அகல் என்ற மண் விளக்குகளையே உபயோகிப்பர்.
அகல், எண்ணெய், திரி, சுடர் நான்கும் சேர்ந்ததே விளக்கு. இவை அறம் பொருள், இன்பம்,
வீடு என்ற நான்கு பொருள்களையும் குறிப்பது. விளக்கேற்றி வழிபட்டால் நம் அறிவாகிய
விளக்கு சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.
கார்த்திகை அன்று அப்பம், பொரி
இவற்றை நிவேதனம் செய்கிறோம். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அப்பத்தில் நீர்ச்
சத்துள்ளவரை நெய்யில் மேலும் கீழும் செல்லும். நீர்ப்பகுதி வற்றிவிட்டால் அப்பம்
மேலே மிதக்கும். இதைப் போல் ஞானம் பரிபூர்ணமாக ஏற்படும் வரை அகங்காரம் பிடித்த
மனம் சலனமடையும். ஞானம் கைகூடி விட்டால் அப்பம் நெய்யில் மிதப்பது போல் ஆன்மா
ஞானம் பெற்று சலனமற்று சாந்தியடையும்.
நெல்லிலிருந்து பொரி கிடைக்கிறது.
நெல்லை மீண்டும் பூமியில் விளைத்தால், அது மீண்டும் முளைக்கும். நெல்லை வறுத்து
பொரியாக்கி விட்டால் மீண்டும் முளைக்காது. அது போல் மனமாகிய நெல்லை ஞானமாகிய
பொரியாக்கி விட்டால் மீண்டும் பிறப்பு என்ற பேதமை நிகழாது.
விளக்குகளுக்கு இலுப்பெண்ணெய்
அல்லது நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதே நல்லது. வெள்ளி, வெண்கலம், பீங்கான் என்று பல
விளக்குகளை ஏற்றினாலும், மண் அகல் விளக்குகளில் ஏற்றுவதே மிகவும் நல்லது.
இன்று சாஸ்திரத்திற்காகவென்று
இரண்டு அகல்களை கார்த்திகை தீபம் அன்று புதிதாக வாங்கும் வழக்கம் பல வீடுகளிலும்
உண்டு. எவர்சில்வர் விளக்குகளை உபயோகப் படுத்துவது நல்லதல்ல.
கார்த்திகை தீபங்களை ஏற்றும் போது
பெண்கள் தீப மங்கள சுலோகத்தை சொல்லிக் கொண்டே ஏற்றினால் சர்வ நன்மைகளும் ஏற்படும்.
தீப மங்கள ஜோதி ஸ்லோகமும் அதன் பொருளும்:
கீடா பதங்கா மசகாச்ச
வ்ருக்ஷா ஜலே
ஸ்தலயே நிவஸந்தி
ஜீவா த்ருஷ்ட்வா
ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி
நித்யம் ஸ்வபச ஹிவிப்ரா ||
பொருள்:
புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும ஆனந்தம் பெறட்டும் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக