Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

மும்பையில்..... காதலை நிறைவேற்றும் கணபதி!


ஞான ஆலயம் செப்டம்பர், 2005 இதழில் வெளியானது.




காதலர்களை இணைத்து வைப்பதும், திருமணம் நடத்தி வைப்பதும், பிரிந்த தம்பதியரை இணைத்து வைப்பதும் இந்த மகாகணபதியின் தனிச் சிறப்பு.
சகுந்தலையும், துஷ்யந்தனும் மணம் புரிந்து கொண்டது இவ்வாலயத்தில்தான்.

இவ்வாலயம் அமைந்துள்ள டிட்வாலாவில்தான் கண்வ முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்தது.

இந்தியாவில் பிள்ளையார் வழிபாட்டில் சிறப்பு பெற்று விளங்குவது மகாராஷ்டிரா. இங்கு ஒவ்வொரு சிற்றூரிலும், பேரூரிலும் சுயம்புவான, புராணச் சிறப்புப் பெற்ற பலப்பல ஆலயங்கள்; தனித்தனி பெருமைகள். வாழ்நாளில் ஒருமுறை தரிசனம் செய்தால் பிறவாப் பேறு பெறலாம் என கணேச புராணம் கூறும் 'அஷ்ட விநாயக் யாத்திரை'யில் கூறப்பட்டுள்ள எட்டு பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்கள் இம்மாநிலத்திற்கு தனிப் பெருமை சேர்க்கும்.தலைநகரான மும்பையில் அமைந்துள்ள கணபதி ஆலயங்களில் சிகரமாய் விளங்குவது பிரபாதேவி ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயம். அதற்கடுத்ததாக சிறப்பு பெற்ற ஆலயமாக விளங்குவது 'டிட்வாலா'விலுள்ள மகா கணபதி ஆலயம். இவ்வாலயத்திற்கு ஒரு விசேஷ சிறப்பு. காதலர்களை இணைத்து வைப்பதும், திருமணம் நடத்தி வைப்பதும், பிரிந்த தம்பதியரை இணைத்து வைப்பதும் இந்த மகாகணபதியின் தனிச் சிறப்பு. ஆம்!! சகுந்தலையும், துஷ்யந்தனும் மணம் புரிந்து கொண்டது இவ்வாலயத்தில்தானாம்.

கோயில் கூறும் புராணக் கதைக்குச் செல்வோமா? இவ்வாலயம் அமைந்துள்ள டிட்வாலாவில் தான் கண்வ முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்தது. காலு என்ற நதியின் ஓரம் அமைந்திருந்த இவ்வாசிரம அழகை எழுத்தில் வடிக்க முடியாது. யக்ஞங்களும், யாகங்களும் இடைவிடாது நடக்கும் புண்ணிய பூமி! வேத மந்திரங்களின் ஒலியில் தெய்வீகம் உலாவும் ஆசிரமம்! அந்த ஆசிரமத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் கண்வரின் ஆசிரமத்தில் வளர்ந்தாள் சகுந்தலை.

அஸ்தினாபுர அரசன் துஷ்யந்தன் வேட்டையாட அவ்விடம் வந்தவன், சகுந்தலையைக் கண்டு காதல் கொண்டான்; காந்தர்வ விவாகம் செய்து கொண்டான். திரும்ப வந்து அழைத்துச் சென்று ஊரறிய மணம் செய்து கொள்வதாகச் சொன்ன துஷ்யந்தன், துர்வாசரின் சாபத்தால் சகுந்தலையை மறந்து விட்டான். சகுந்தலைக்கு அரசன் அணிவித்த அடையாள மோதிரமும் தொலைந்து விட்டது. செய்வதறியாது மனம் கலங்கினாள் சகுந்தலை. மகா கணபதியே கதி என்று சதாசர்வ காலமும் அவரையே வேண்டித் துதித்தாள்; விரதமிருந்து வழிபட்டாள்.

கணபதியின் அருளால் சகுந்தலைக்கு பரதன் பிறந்தான். அவன் பெயராலேயே நம் நாடு பாரத நாடாயிற்று. மகா கணபதியை நாளும், பொழுதும் அர்ச்சித்தும், ஆராதனை செய்தும் வந்த சகுந்தலைக்கு கருணை செய்த இறைவன், அவளது மோதிரம் கிடைக்கச் செய்து, துஷ்யந்தனுக்கு சகுந்தலையின் நினைவு வரச் செய்தார். ஆசிரமம் வந்த துஷ்யந்தன் இவ்வாலயத்தில் சகுநதலையை மணந்து கொண்டு, மகன் பரத்னுடன் நாடு திரும்பினான். பல யுகங்களாக முனிவர்களாலும், ரிஷிகளாலும் வழிபடப்பட்ட மகா கணபதி இன்னும் அதே அற்புத சக்தியுடன், வேண்டியது தரும் வரகணபதியாக அமர்ந்த நிலையில் அழகுற காட்சி தருகிறார்.

கால மாற்றங்களாலும், பல போர்களாலும் மக்கள் பாதிக்கப் பட்டபோது இந்த கணபதியை ஒரு குளத்தினுள் போட்டு விட்டனர். இவ்வாறு ஜல சமாதியில் இருந்த இறைவன் 17ம் நூற்றாண்டில் மாதவராவ் பேஷ்வா அவர்கள் காலத்தில்தான் கண்டெடுக்கப்பட்டு ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். பேஷ்வாவின் குல தெய்வம் கஜானன் மூர்த்தி. அவரது காலத்தில் மகாராஷ்டிராவில் பல விநாயக ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டு, புனருத்தாரணம் செய்யப்பட்டன.

ராமச்சந்திர பண்ட் என்பவர் குளத்திலிருந்து செடி, கொடிகளுக்கு தண்ணீர் விட்டபோது, ஓரிடத்தில் ஜோதி தெரிய, அங்கு மகா கணபதி ஒளியுடனும், திவ்ய கந்தத்துடனும் காணப்பட, அதை வெளியிலெடுத்து, சுத்தம் செய்து ஆலயம் அமைத்தார். அவ்வாலயமே இன்று பெரிதாக விரிவடைந்து அழகாகக் காட்சி அளிக்கிறது.

ஆலயத்தினுள் சென்று முன் மண்டபத்திலுள்ள மூஞ்சூறை வணங்கி சந்நிதிக்கு செல்வோம். இவ்வூர் மக்கள் அனைவரும் மூஞ்சூறின் காதில் தங்கள் வேண்டுதல்களைச் செய்வதால், அவை பிள்ளையாரால் விரைவில் நிறைவேற்றப்படுவதாக நம்புகிறார்கள்! நல்ல அகன்ற கர்ப்பக்கிரஹத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் சித்தி விநாயக மகா கணபதி.

செந்தூரம் பூசப்பட்டு, நான்கு கரங்களுடன், வலக்காலை குத்திட்டு, இடக்காலை மடித்தபடி, சற்றே பெருத்த வயிறுடன் காட்சியளிக்கிறார். மேலிரண்டு கரங்களில் பாசமும், அங்குசமும், கீழ் வலக்கையில் ஜபமாலை, இடக்கையில் மோதகமும் கொண்டு, சர்ப்பத்தை பூணூலாக அணிந்துள்ளார். அகன்று, படர்ந்த காதுகள் நம் துன்பங்களைக் கேட்டு, நிவர்த்தி செய்யு முகமாக விரிந்து, வித்தியாசமாகக் காணப்படுகின்றன. அமர்ந்துள்ள பீடம் நாக பந்தனத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவிலுள்ள அநேக விநாயகர்கள் புத்தி, சித்தியுடன் இணைந்தே காணப்படுவர். அதற்கு மாறாக இந்த மகா கணபதி தனியே காட்சி தருகிறார் இவ்வாலயத்தில். சிரத்தில் அழகிய கிரீடம் பளபளக்க, இரு கண்கள், நாபியில் ரத்னக் கற்கள் பளிச்சிட, கழுத்தில் பூமாலைகளுடன், கருணை சிந்தும் விழிகளுடன் காட்சி தரும் மகா கணபதி தம்மை பக்தியோடு வழிபடும் பக்தர்களின் குறைகளைக் களைந்து வேண்டிய வரம் தருபவர்.

திருமணப் பேறு, பிரிந்த தம்பதிய்ரை இணைத்தல் இவற்றுடன் புத்திரப் பேறு அருளும் பிள்ளையார் இவர். கஜானனரை தரிசித்த மாத்திரத்திலேயே நம் கவலைகள், கஷ்டங்கள் காணாமல் போவதை உணர முடிகிறது. விசாலமான சந்நிதியில் கணபதியை தரிசித்தவாறே சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்து விட்டு, வெளிவருவோம். இங்கு சிவபெருமானுக்கும் ஒரு சந்நிதி உள்ளது.

ஆலயம் மிக சுத்தமாக, அழகாகப் பராமரிக்கப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி, அங்காரக சதுர்த்தி, விநாயக சதுர்த்தி நாட்கள் மிக விசேஷமானவை. சங்கடஹர சதுர்த்தி நாட்களில் நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்தே ஐயனை தரிசிக்க முடியும். காதலை கைகூடச் செய்யும் இக்கணநாதனின் ஆலயத்தில் இளைஞர், இளைஞிகளின் கூட்டம் எப்பொழுதுமே காணப்படும்.

இவ்வாலயத்திற்கருகில் ஒரு விட்டல் ஆலயம் உள்ளது. பண்டரிநாதனும், ருக்குபாயும் இடுப்பில் கைவைத்து ஒய்யாரக் காட்சி தருவர். இங்குள்ள ஒரு இரும்புக் குழாயில் காது வைத்துக் கேட்டால் பஜனை போல் ஒரு சத்தம் கேட்கும். பண்டரிபுரத்தில் பாடும் பஜனை ஒலி இவ்வலயத்தில் கேட்பதாகக் கூறப்படுகிறது. டிட்வாலாவிற்கு மும்பை விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் சென்று, அங்கிருந்து ஆட்டோவில் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக