சிங்கார வேல் முருகன்
ஞான ஆலயம் ஆகஸ்டு 2009 இதழில் வெளியானது.
சிங்கார சிங்கப்பூரில் சுற்றுலா தலங்கள் ஏராளம். அதே போன்று ஆண்டவன்
அருள் புரியும் ஆலயங்களும் அதிகம். தமிழ் நாட்டில் இருந்து வியாபாரம் செய்யவும், வேலை நிமித்தமும் சென்றவர்கள் சிறியதாக ஏற்படுத்திய
ஆலயங்கள் இன்று ஓங்கி உயர்ந்து அற்புதமாகக் காட்சியளிக்கின்றன. அந்த வகையில்
புதுமையான முறையில், வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளதே
வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம்.
சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்த மூன்று ஆலயங்களான ஸ்ரீவேல்முருகன் ஆலயம், ஸ்ரீகிருஷ்ண பகவான் துர்கா பரமேஸ்வரி ஆலயம் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் முனீஸ்வரர் ஆலயங்கள் ஒன்றிணைக்கப் பட்டு செங்காங்க் என்ற இடத்திலுள்ள ரிவர்வேல் கிரசன்ட்டில் மிகப் பெரிய ஆலயமாக உருவாக்கப்பட்டது. சன்னிதிகளின் அழகு மனதை சொக்க வைக்கும்.
சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்த மூன்று ஆலயங்களான ஸ்ரீவேல்முருகன் ஆலயம், ஸ்ரீகிருஷ்ண பகவான் துர்கா பரமேஸ்வரி ஆலயம் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் முனீஸ்வரர் ஆலயங்கள் ஒன்றிணைக்கப் பட்டு செங்காங்க் என்ற இடத்திலுள்ள ரிவர்வேல் கிரசன்ட்டில் மிகப் பெரிய ஆலயமாக உருவாக்கப்பட்டது. சன்னிதிகளின் அழகு மனதை சொக்க வைக்கும்.
சிங்கப்பூரின் மற்ற ஆலயங்களுக்கு இல்லாத சில பெருமைகள் இவ்வாலயத்துக்கு உண்டு. இவ்வாலய இறைவனின்
கர்ப்பக் கிரஹத்தின் கீழ் ஆயிரத்தெட்டு சங்குகள் அமைந்த 'சங்கு ஸ்தாபனம்'
செய்யப்பட்டுள்ளது.
'பிரமரந்திர ஸ்தாபனம்' என்ற
முறையில் கர்ப்பக்கிரஹத்தின் மேல் அமைந்துள்ள கோபுரத்தினுள் விலை உயர்ந்த கற்களும்,
உலோகங்களும் பக்தர்களால் அளிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால்
ஆலயத்தின் புனிதம் மேம்படுமென்பது சாஸ்திரம்.
ஏழு மில்லியன் டாலர் செலவில்,
இரண்டரை வருடங்களில் கட்டி முடிக்கப்பட்ட இவ்வாலயத்தின் கோபுர
அமைப்பு சிறந்த கலை அம்சத்துடன் விளங்குகிறது. சில படிகள் ஏறிச் செல்லுமளவு உயரமாக
அமைக்கப்பட்டு, பொன்னிறத்தில் மின்னும் ஆலயம், இரவில் விளக்கொளியில் ஜகஜ்ஜோதியாக மின்னும்.
ஆலயத்தில் நுழைந்தவுடன் மேலே காணப்படும் சிற்பங்களும், ஓவியங்களும் அழகு கொஞ்சுகின்றன. மேலே
அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவுகளின் அழகு கண்களைக் கவர்கிறது. இருபக்கமும்
கணபதியும், ஐயப்பனும் காட்சி தர, நடு
நாயகமாகக் காட்சி தருகிறான் வெற்றிவேல் முருகன்.
கருணை விழிகளும், கையில் வேலும் பக்தர்களுக்கு கேளாமலே வரம் தருமாறு தோன்றுகிறது. ஞான
முனீஸ்வரருக்கு அழகிய தனி சன்னதி. அவரும் கருணை ததும்பும் புன்சிரிப்புடன் அருள்
பாலிக்கிறார். பளபளவென மின்னும் வெள்ளிக் கவசத்தில், பரம
செளந்தர்யத்துடன் அருள் பாலிக்கும் முத்து மாரியம்மனின் அழகே அழகு. தனி சன்னதியில்
காட்சி தரும் துர்க்கைக்கு ராகு கால பூஜைகள் மிக விமரிசையாக நடைபெறுகிறது.
கேட்ட வரம் தரும் தெய்வங்களின் அருளைப்பெற, பக்தர்களின் கூட்டம் எப்பொழுதும் நிறைந்திருக்கிறது.
சன்னதிகளின் பக்கவாட்டிலும்,
பின்னாலும் அறுபடை வீட்டு முருகனின் திருவுருவங்கள் அழகுற
அமைந்துள்ளன.
பெளத்தர்களின் ஆதரவுடன் செயல்படும் ஒரே ஆலயம் இதுவே. மற்ற
மதத்தினரின் ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் இவ்வாலயம் பங்கு கொள்கிறது. மேலும் குறைந்த
வருமானம் பெறும் மக்களுக்கு இலவச உணவும்,
கல்வியும் அளிக்கப்படுகிறது.
இங்கு எல்லா தெய்வங்களும் குடி கொண்டிருப்பதால், எல்லா உற்சவங்களும் முறையாக நடைபெறுகின்றன. ஆலயம்
மிக சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. ஆலய அர்ச்சகர்களும் மிக அருமையாக பூஜை செய்வது
மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
முருகனுக்கு விசே
ஷமான கிருத்திகை, சஷ்டி,
கார்த்திகைப் பெருநாள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த
நாட்களில் தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரங்களும், பூஜைகளும்
அற்புதமாக நடப்பதுடன் பிரசாதமும்
அளிக்கப்படுகிறது.
இவ்வாலயத்திற்கு செங்காங்க் ஸ்டே ஷனில் (Sengkang MRT) இறங்கிச் செல்ல வேண்டும். சிங்கப்பூர்
செல்பவர்கள் கண்டிப்பாக வணங்கி, வழிபட வேண்டிய ஆலயம் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக