Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

சிங்கப்பூர் வீர மாகாளியம்மன்!

ஞான ஆலயம் ஆகஸ்டு 2008 இதழில் வெளியானது

                                                 














சிங்கை மாநகரம் எனக்கூறப்படும் சிங்கப்பூரில் தமிழ் மக்களுக்குத் தனி உரிமை உண்டு. அரசு மொழிகளில் தமிழும் உண்டு. பெரும்பாலான மக்கள் தமிழர் என்பதால் இந்துக் கடவுளரின் ஆலயங்களும் ஏராளம். 'லிட்டில் இண்டியா' என்ற இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பல ஆலயங்கள் உள்ளன. இதில் வீரமாகாளியம்மன், வடபத்ர காளியம்மன், ருத்ர காளியம்மன், மாரியம்மன், முனீஸ்வரன் போன்ற காவல் தெய்வங்களின் ஆலயங்கள் நிறைய. இதில் வீரமாகாளியம்மன் கோயில் மிகப்பழமையான ஆலயம் எனப்படுகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் சிங்கப்பூர், பிரிட்டானிய இந்தியக் கைதிகளின் தண்டனை நிலையமாக இருந்தது. அச்சமயம் வந்த கைதிகள் சிங்கப்பூரிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டனர். அவர்கள் வழிபடவேண்டி தம்மைக் காக்கும் தெய்வமான காளிக்கு ஓரு சிறு ஆலயம் கட்டினர். அந்த ஆலயம் இரண்டு நூற்றாண்டுகளில் சிறிது, சிறிதாக விரிவு செய்யப்பட்டும், புதிய சந்நிதிகள் நிறுவப்பட்டும் இன்று சிங்கப்பூரின் மிகப் பெரிய, அழகிய கோயில்களில் ஓன்றாக விளங்குகிறது.
ஆதியில் சுண்ணாம்புக் காளவாயில் வேலை செய்த இந்தியர்களால் வழிபடப்பட்ட இவ்வாலய தேவி களிமண் சிலையாக இருந்தது. பின் சிங்கப்பூரில் வந்து குடுயேறிய இந்திய மக்கள் தொகை அதிகமானதால் அவர்கள் உதவியுடன் ஆலயம் சீரமைக்கப்பட்டு 1908-ல் இந்தியாவிலிருந்து தற்போதைய தேவி சிலை தருவிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவரை 'சுண்ணாம்புக் கம்பம் கோயில்' என அழைக்கப்பட்ட இவ்வாலயம் 'வீர மாகாளியம்மன் ஆலயம்' என புதிய பெயர் பெற்றது.

ஆலயத்தில் அழகாக நிமிர்ந்து உயர்ந்த கோபுரத்தில் பல அழ்கிய சிற்பங்கள் அணிவகுத்து அழகு செய்கின்றன. உள்ளே நுழைந்ததும் எதிரில் தெரியும் வீரமாகாளியம்மன் கண்களில் அன்பும், அருளும் பெருகக் காட்சி தருகிறாள். அன்னையின் சன்னிதியில் ஓரு அற்புத ஈர்ப்பு சக்தியை அறிய முடிகிறது. இரு பக்கமும் கணப்தியும், முருகனும் அன்னையுடன் இணைந்து அருள்தர தயாராக உள்ளனர்.
அன்னைய பிரதட்சிணம் செய்யும்போது மதுரைவீரன், பெரியாச்சி அம்மன், சின்னகருப்பன், பெரிய கருப்பன் சிலைகள் ஐந்தடி உயரத்தில் வீரமும், அருளும் சேரக் காட்சி தருகின்றன. இங்கு தரிசனம் தரும் ஸ்ரீலக்ஷமி துர்க்கையின் அழகு அற்புதமாக உள்ளது. பார்க்கப் பார்க்க பரவசமாக் உள்ளது.

காளிதேவியின் இடப்புறம் காசி விசுவநாதர், விசாலாட்சி சன்னிதி உள்ளது. இங்குள்ள சிவலிங்கம் காஞ்சி மகாபெரியவரால் ஆசி கூறி வழங்கப்பட்ட மற்றும் தேவர்களால் பூஜிக்கப்பட்ட பாணலிங்கம். சிவன் சன்னிதியின் சுற்றுச் சுவர்களில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை காட்சி தருகின்றனர். வெள்ளிக் கிழமைகளில் அத்தனை கடவுளர்க்கும் வெள்ளி, தங்கக் கவசங்கள் பூட்டப்பெற்று மிக விமரிசையாக விளங்குகிறது. வேண்டிய வரம் தந்து, கேட்டவற்றைக் கொடுக்கும் காளிக்கு மக்களும் நன்கொடைகளை வாரி வழங்குவதால், ஆலயம் செல்வச் செழிப்புடன் காட்சி தருகிறது. சிங்கப்பூர் சுற்றுலா செல்வோர் அவசியம் சென்று அன்னையின் அருள் பெற்று வரலாம்.

ஆலயம் செரங்கூன் தெருவில் அமைந்துள்ளது. லிட்டில் இண்டியா ரயில் சந்திப்பில் இறங்கிச் செல்ல வேண்டும்.

ஆடி வெள்ளிக்கிழமை, நவராத்திரி நாட்களில் அன்னையின் அலங்காரம் மிக அற்புதமாக இருக்கும். இவற்றுடன் ஓன்பது நாட்களும் கச்சேரி, அம்மன் புறப்பாடு என்று மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரம் மைல் தூரத்திற்கு அப்பால் வாழும் நம் தமிழ் மக்களைக் காக்கும் தெய்வமாக விளங்கும் காளியின் அருளுக்கு அங்கு வரும் மக்களே சான்று.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக