ஞான ஆலயம் ஆகஸ்டு 2005 இதழில் வெளியானது
நல்ல வெயில். சோர்வாக நடந்து வந்து கொண்டிருந்தாள் அந்த கர்ப்பிணிப்பெண்.
அவளுக்கோ தாகம் தாங்க முடியவில்லை. சோலைகளும், பயிர்ப் பச்சைகளும்
நிறைந்திருந்த அவ்விடத்தில் எங்கும் தண்ணீரைக் காணமுடியவில்லை. தாகமும், களைப்பும் அவளை வாட்ட அப்படியே மயக்கமானாள்.
அந்த இடத்தில் கோயில் கொண்டிருந்த ஈசன் இதை அறிந்தார். தாயுமானவராக இருந்து
ஒரு பக்தைக்கு திருச்சியில் அருளிய இறைவன், கர்ப்பிணியின் தாகத்தைத் தீர்க்க மாட்டாரா?
அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த
வழி செய்து கொடுத்தார். இறைவனருளால் அப்பெண் தாகம்
நீங்கி புத்துணர்வு பெற்றாள். இறை வனும் குலை வணங்கி நாதர் எனும் பெயர் பெற்றார்.
இந்த இறைவன் அம்ர்ந்திருந்து அருள் செய்யும் ஆலயம் வடகுரங்காடுதுறை எனும் ஆடுதுறை
பெருமாள் கோயில்.
சோழ வள நாட்டில் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள மிகத் தொன்மையான இவ்வாலயம்
த்ஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்டது. ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற
தலம்.
|
கர்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டுமின்றி தன்னை வணங்கிய ஒரு சிட்டுக் குருவிக்கும்
கூட அருள் செய்த இவ்விறைவன் 'தயாநிதீஸ்வரர்' என்றும்
போற்றப்படுகிறார். வாலி வந்து வணங்கியதால் 'வாலிபுரீஸ்வரர்'
என்ற பெயரும் உண்டு. ஹனுமன் சிவலிங்க பூஜை செய்த ஐந்து தலங்களுள்
இவ்வாலயமும் ஒன்றாகும். தேவியின் திருநாமம் ஜடாமகுட நாயகி எனும் அழகு சடைமுடியம்மை,
இது ஒரு பிரார்த்தனை தலமுமாகும்.
கர்ப்பக் கிரகத்தில் சற்று குட்டையான பாணத்துடன் அழகுற காட்சி தருகிறார்
தயாநிதீஸ்வரர். சிட்டுக் குருவுக்கும் கூட கருணை செய்த சிட்டிலிங்கேசரிடம் நாமும்
அருளை வேண்டி தியானித்து, மனம் ஒன்றி பஞ்சாட்சரத்தை ஜபித்து அன்னையின் சந்நிதிக்கு
செல்வோம். தேவியின் அழகு நம்மை மெய்மறக்கச் செய்கிறது. சிரத்தில் உயர்ந்த
சடாமுடியுடன் அழகின் மறு உருவமாகக் காட்சி தரும் அன்னையின் முன் நிற்கும்போது
உலகமே மறந்து போகிறது. பெளர்ணமி நாட்களில் அன்னையின் அலங்காரம் நம்மை மெய்மறக்கச்
செய்கிறது. மக்கட்பேறு தரும் மகத்தான சக்தி இவள்.
பல்லாண்டுகட்கு முன் ஒரு சித்தர் மஹா மேருவை மண்ணால் பிரதிஷ்டை செய்து பூஜித்த
புனிதமான தலம் இது. இந்த ஜடாமகுட நாயகி சன்னிதியில் வேண்டியது கிடைக்கும். சத்ரபதி
சிவாஜி பரம்பரையினர் மிக சிரத்தையுடனும், பக்தியுடனும் வழிபட அவர்களுக்கு ஓர் ஆண்
சந்ததியை வாரிசாகத் தந்தவள் இந்த தேவி. பெளர்ணமியன்று மாலை வேளைகளில் ஒன்பது
மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவித்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
இது சத்ய வாக்காக சித்தரால் அன்று உரைக்கப்பட்டதாகும். கர்ப்பிணியின் தாகம்
தீர்த்த, இறைவனின் சரிபாதி பாகம் பெற்ற அம்பிகை, பெண்களின்
பிள்ளையில்லாக் குறையை நீக்குவதில் வியப்பென்ன? கர்ப்பிணிகள்
இத்தல இறைவனை வணங்கி வந்தால் எந்தக் கஷ்டமுமின்றி சுகப் பிரசவம் நடக்கும்.
வாலி,
ராவணனுடன் போரிட்ட சமயம் அறுந்த வால் வளர இத்தலத்து இறைவனை
வழிபட்டான். ஆலய விமானத்தில் வாலி இறைவனை வழிபடும் சிற்பமும், ஈசன் கர்ப்பிணிக்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்
பட்டுள்ளன. ஈசனை வலம் வரும்போது தட்சிணாமூர்த்தி சன்னிதி மிக விசேஷமானது. இவரை
தரிசித்து மனமார பிரார்த்தித்தால் குருபலம் பெருகும்.
இவ்வாலயத்திலுள்ள விஷ்ணு துர்க்கை அபரிமிதமான சக்தி படைத்தவள். அஷ்ட
புஜங்களுடன் கைகளில் சங்கு சக்கரத்துடன் காட்சி தரும் துர்க்கைக்கு ராகுகால பூஜை
செய்யும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். இவ்வன்னைக்கு
பாலபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறுவது அதிசயமாக உள்ளது. நவராத்திரி
நாட்களில் இந்த தேவியை உள்ளமுருகி வழிபட்டால் பன்மடங்கு நன்மை தருவாள் என்பது
பலனடைந்தோர் கூற்று.
இத்தலத்தின் தல விருட்சம் தென்னையாதலால், விவசாயிகள் நெல் நாற்றுகளையும், தென்னம் பிள்ளைகளையும் சன்னதியில் வைத்து வழிபட்டு அதிக மகசூல்
பெறுகின்றனர். ஆனி பெளர்ணமியில் 'முப்பழ விழா', ஆடிப் பூரத்தில் அம்மனுக்கு வளையல் சாற்று விழா, நவராத்திரி,
பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவமாக பங்குனி உத்திரத் திருவிழா
என்று வருடம் முழுவதும் உற்சவங்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி,
தை வெள்ளிகளில் அம்மனின் அலங்காரம் காணக் கண் கொள்ளாக் காட்சி!
மானுடரின் இம்மைத் தேவைகளான திருமணம், மக்கட்பேறு, கல்வி,
செல்வம் இவற்றுடன் மறுமைக்குத் தேவையான புண்ணியங்களும் பெற அருள்
செய்து, பிறவாப் பேறு தந்து அருளும் அம்மையப்பனாம்
தயாநிதீசுவரரையும், வேண்டி வந்தோர் குறை தீர்த்து, குறைப் பிரசவம், பிள்ளையில்லாக் குறைகளை நீக்கி,
மங்கையர்க்கு புத்திர பாக்கியமும், சுகப்
பிரசவமும் தரும் அழகு சடாமுடியம்மையையும் வணங்கி அனைத்து நலன்களும் பெறுவோமாக!
இத்த்லம் கும்பகோணம்-திருவையாறு பஸ் தடத்தில் 22வது கிலோ மீட்டரில்
அமைந்துள்ளது. "ஆடுதுறை பெருமாள் கோயில் சிவாலயம்" என்று கேட்டு இறங்க
வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக