Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

தீபாவளி ஸ்பெஷல்-1


ஆலயம் சினேகிதி – தீபாவளி சிறப்பிதழ் – நவம்பர் 2003 ல் வெளியானது




















தீபாவளி ஸ்பெஷல்
 நமக்கு இனிப்பு கார வகைகளை சாப்பிட ஆசை ஏற்படும்போது கடைகளில் வாங்கிச் சாப்பிடுகிறோம். சில சமயங்களில் எளிமையாகச் செய்யக் கூடிய இனிப்பு வகைகளை வீட்டிலும் செய்கிறோம். தீபாவளி ஒரு இனிப்பு பண்டிகை என்று சொல்லுமளவுக்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் விதவிதமான இனிப்புகளுடனேயே இப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

அனைவரும் ஒன்றாகக் கூடிக் கொண்டாடும் தீபாவளிக்கு மேலும் இனிப்பு சேர்ப்பவை நாமே செய்யும் இனிப்புகளும், பட்சணங்களும். கொஞ்சம் சிரமப் பட்டாலும், நாம் பக்குவமாகச் செய்த இனிப்பிற்கு கிடைக்கும் பாராட்டே ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் தீபாவளி என்பது என் எண்ணம்!

எப்பொழுதும் போல் கேக், ஹல்வா, மைசூர் பாகு, பர்பி என்று செய்வதற்கு மாறாக, வெவ்வேறு மாநிலங்களில் செய்யக் கூடிய, எளிய செய்முறைகளைக் கொண்ட இந்த இனிப்புகளை இவ்வருடம் முயற்சித்துப் பாருங்களேன்!


சர்க்கர்பாரா (உத்திர பிரதேசம்)




தேவையானவை:

கோதுமை மாவு - ¼ கிலோ
சீனி - ½ கிலோ
எண்ணெய் வேகவிட
நெய் – 6 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மாவுடன் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளும்படி பிசறவும். பின் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டி கம்பி பாகு செய்யவும். மாவை நன்கு அழுத்திப் பிசைந்து சற்று தரமான ரொட்டியாக இட்டு, அதனை சோமாசிக் கரண்டியால் சின்ன சதுரம் அல்லது டைமண்ட் வடிவில் வெட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து, சீனிப்பாகில் போட்டு, சில நிமிடங்கள் ஊறியதும் எடுத்து தட்டில் பரவலாகப் போடவும். மீதி மாவையும் இதே முறையில் செய்து ஆற விடவும். மேலே வெளுப்பான சர்க்கரை பூச்சுடன் ‘சக்கர் பாரா’ ருசியாக இருக்கும்.


நெய் அப்பம் (கேரளா)

தேவையானவை:

அரிசி மாவு – 1 கப்
வெல்லம் – 1 கப்
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/8 கப்
பேகிங் பவுடர் – சிட்டிகை
நெய் அல்லது எண்ணெய் வேகவிட.

செய்முறை:

வெல்லத்தைப் பொடியாக்கி, ½ கப் நீரில் போட்டு அடுப்பில் வைத்து கரைத்தபின் வடிகட்டவும். அதில் அரிசி மாவு, மைதா, தேங்காய்த் துருவல், பேகிங் பவுடர், ஏலப்பொடி, 4 டீஸ்பூன் நெய் சேர்த்து தோசை மாவு பதமாக கரைக்கவும். தேவையெனில் நீர் சேர்க்கவும். அடுப்பில் நெய் அல்லது எண்ணெய் வைத்துக் காய்ந்ததும் கரைத்த மாவை ஒரு சிறு குழிக் கரண்டியால் எடுத்து விட்டு, நன்கு உப்பி வெந்ததும் எடுக்கவும். இதை குழிப் பணியாரத் தட்டில், சின்னக் குழியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, மேலே மாவு விட்டு, மேலாக 2 டீஸ்பூன் நெய் விட்டு, மேலே ஒரு மூடியால் மூடி, அடுப்பை சிறிதாக வைக்கவும். மேல் பாகம் வெந்ததும், ஒரு சிறிய ஸ்பூனால் குழி அப்பத்தை திருப்பி விட்டு, மேலும் 2 டீஸ்பூன் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும். சுவையான நெய் அப்பம் தயார்.!


மிஷ்டி தோய் (வங்காளம்)

வங்காளத்தில் பாலால் செய்யப்படும் ரசகுல்லா, குலாப் ஜாமூன் இவை மிகப் பிரசித்தம். இது ஒரு வித்தியாசமான சுவையுள்ள சுலப இனிப்பு.

தேவையானவை:

பால் -  1 லிட்டர்
தயிர் – 25 கிராம்
சர்க்கரை – 150 கிராம்.

செய்முறை:

காஸை சிம்மில் வைத்து பாலை நன்கு காய்ச்சவும். அடிக்கடி கிளறி விடவும். பாலின் அளவு பாதியாக வற்றி, பழுப்பு நிறமானதும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து சற்று கொதித்தபின், ஒரு அகலமான காஸரோலில் கொட்டி ஆறவிடவும். வெதுவெதுப்பான சூட்டில் தயிரை சேர்த்து மூடி, அசையாமல் 10 மணி நேரம் வைத்து, பின் ஃபிரிட்ஜில் வைத்து, கப்பில் குளிர்ச்சியாக பரிமாறாவும்.
[மேலே சிறு துண்டுகளாக்கிய பாதாம், மிந்திரி சேர்க்கலாம்]


மோஹன்தால் (குஜராத்)

தேவையானவை:

கடலை மாவு -1/2 கிலோ
நெய் - 1/4 கிலோ
கோவா – 100 கிராம்
பால் – 1/8 கப்
சீனி – 150 கிராம்
ஏலப்பொடி, குங்குமப்பூ – சிறிது
துண்டாக்கிய பாதாம், மிந்திரி துண்டுகள்.

செய்முறை:

கடலை மாவை நன்கு சலித்து, நான்கில் ஒரு பங்கு நெய்யை உருக்கி விட்டு, பாலையும் கை பொறுக்கும் சூடாக விட்டுப் பிசறி, (அரிசி பிட்டுக்கு பிசறுவது போல்) நான்கு மணி நேரம் வைக்கவும். கோவாவை நன்கு உதிர்த்து, 2 ஸ்பூன் நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். குங்குமப்பூவை சிறிது வெதுவெதுப்பான பாலில் ஊற வைக்கவும்.

பிசறிய கடலை மாவை ஒரு சல்லடையில் நன்கு அழுத்தி, கட்டிகளின்றி சலிக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் அளந்து கொண்டு, அதில் பாதி அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். (75 கிராம் சரியாக இருக்கும்). மீதியுள்ள நெய்யைக் காய வைத்து அதில் சலித்த மாவைப் போட்டு நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும். அதிலேயே வறுத்து வைத்துள்ள கோவாவை சேர்த்து, மேலும் இரண்டு பிரட்டு பிரட்டி வேறு பாத்திரத்தில் கொட்டவும்.


சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் வரை நீர் விட்டு கெட்டி கம்பி பாகு வைக்கவும். அதில் வறுத்த மாவு, ஏலபொடி, குங்குமப்பூ சேர்த்து விடாமல் கிளறவும். பத்து நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டவும். மேலே துண்டாக்கிய மிந்திரி, பாதாம் சேர்த்து அலங்கரிக்கவும். துண்டுகளாக்கி பரிமாறவும்.






பாதாம் – பிஸ்தா – ஃபிர்ணி (ஜம்மு-காஷ்மீர்)

தேவையானவை:

பாதாம் – 15
பால் - 21/2 கப்
அரிசி – 4 டேபிள் ஸ்பூன்
சீனி - 1/4கப்
குங்குமப்பூ – 8 இதழ்கள்
ஏலப்பொடி, பிஸ்தா துண்டுகள் – 4 டீஸ்பூன்.

செய்முறை:

அரிசியைக் களைந்து நீரில் சற்று ஊறவைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பாதாம் பருப்பை வெந்நீரில் போட்டு ½ மணி ஊற விட்டு தோல்  நீக்கி பாலுடன் சேர்த்து மேலும் 2 சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். விழுது நல்ல நைஸாக இருக்க வேண்டும்.

இரண்டு டீஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும். மீதி பாலை அடுப்பில் வைத்து பால் ¾ பாகம் ஆகும் வரைக் காய்ச்சவும். அதில் சர்க்கரை போட்டுக் கரைந்ததும், அதில் அரைத்த பாதாம், அரிசி விழுதைப் போட்டு, கைவிடாமல் கிளறவும். கிளறாவிட்டால், அடி பிடித்து விடும். பாதாம், அரிசி வெந்து கெட்டியான பதம் வந்ததும், இறக்கி குங்குமப்பூ, ஏலப்பொடி சேர்க்கவும். சிறிய கப்புகளில் ஊற்றி, மேலே சீவிய பிஸ்தா துண்டுகள் சேர்த்து குளிர வைத்து பரிமாறாவும். இது ரிச்சான காஷ்மீர்வாசிகளால் செய்யப்படும் ரிச்சான பாயசம்!


மலாய் பேடா (டில்லி)

தேவையானவை:

பால் – 1 லிட்டர்
சீனி – 150 கிராம்
சோளமாவு – 1 டீஸ்பூன் (நீரில் கரைக்கவும்)
ஏலப்பொடி, பிஸ்தா.

செய்முறை:

பாலை அடுப்பில் வைத்து கோவா பதம் வரும் வரை கிளறவும். அடுப்பை சிறிதாக வைத்து அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். நல்ல கெட்டியானதும், சர்க்கரை, சோளமாவு சேர்த்துக் கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும். கெட்டியாக பந்து போலான கலவையை ஆற விடவும். அவற்றை சிறிய உருண்டையாக்கி, நடுவில் கட்டை விரலால் அமுக்கி, அதில் ஒரு பிஸ்தா துண்டை வைத்து எடுத்து வைக்கவும். இதில் சர்க்கரை சேர்க்கும் போது, சில இதழ்கள் குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்த்தால் அதற்கு பெயர் ‘கேஸர் மலாய் பேடா’. செய்வதற்கு எளிய இனிப்பு இது!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக