‘நாற்பது வயதினிலே’ கட்டுரைகள்
நன்றாக இருந்தன. இந்த ‘மெனோபாஸ்’ பிரச்னை பெண்ணாகப் பிறந்த அனைவரும் அனுபவிக்க
வேண்டிய ஒரு சாபம் என்றே சொல்லலாம். என் தாயின் ‘மெனோபாஸ்’ அனுபவம் கொடுமையானது. என்
தாய்க்கு 43ம் வயதில் ஒரு தொந்தரவுமின்றி மாத விலக்கு தானாகவே நின்று விட்டது.
எல்லோரையும் போல் அதிக ரத்தப் போக்கோ, மாதம் இருமுறை வருவது என்ற தொல்லை
எதுவுமின்றி ரொம்பச் சாதாரணமாக தனக்கு நின்று விட்டதாக எண்ணி, மகிழ்ந்து
கொண்டிருந்த என் தாயின் எண்ணத்தில் மண்!
ஐந்து வருடம் கழித்துத் திடீரென்று
உதிரப் போக்கு ஆரம்பித்தது. என் தாய்க்கோ விலகுவதா, வேண்டாமா என்றெல்லாம் மனவேதனை,
வயதான சிலரிடம் இது பற்றி விசாரிக்க, அவர்கள் ஏதோ அந்நாளைய மருத்துவப்படி எதையோ
அரைத்துக் குடிக்கச் சொல்லி, அதைக் குடித்தும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. உடம்பில்
அசதிக்கும், பலவீனத்திற்கும் வீட்டு வேலை காரணமாக, டாக்டரிடம் காண்பிக்காமல்
இருந்து விட்டார்.
அச்சமயம் பிரசவத்திற்கு பிறந்த
வீடு வந்த எனக்கு என் அம்மாவின் உடல் நிலை அதிர்ச்சி அளித்தது. நான் சோதனை செய்து
கொள்ளச் சென்ற டாக்டரிடம், உடன் வந்த என் அம்மாவின் உடல் நிலை பற்றி விசாரிக்க,
உடனே சில சோதனைகளைச் செய்த டாக்டர், ‘கர்ப்பப் பையில் உதிரம் தங்கியிருப்பதால்
உடன் டி அண்ட் சி செய்ய வேண்டும். நாள் கடத்தக் கூடாது’ என்று சொல்லி சில மருந்து,
மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். அடுத்த சில நாட்களில் எனக்குக் குழந்தை பிறந்து,
வீட்டு வேலை, குழந்தை கவனிப்பு என்று நாட்கள் பறந்தன.
நான் இருக்கும்போதே டி அண்ட் சி
செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியும், உடம்பு சற்று தேவலை என்று சொல்லித்
தட்டிக் கழித்து விட்டார். பயம் வேறு. ஊசி போட்டுக் கொள்ளவே பயப்படும் குணம்.
நான் ஊருக்குச் சென்ற 15
நாட்களுக்கெல்லாம் உடம்பு மிகவும் சோர்ந்து, அடிக்கடி மயக்கம் வரவே, கவலையடைந்த
என் தந்தை பலவந்தமாக டாக்டரிடம் அழைத்துப் போய் உடன் டி அண்ட் சி செய்ய அட்மிட்
செய்து விட்டார். தானும் அலுவலகத்திற்கு ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு என்
அம்மாவுக்குத் துணையாக இருந்து உதவியதில், என் தாயின் உடலும், மனமும் பழையபடி
சுறுசுறுப்பாகி விட்டதாகவும், சோர்வு, மயக்கம் இவை இல்லை என்றும், இந்த ‘மெனோபாஸ்’
ஒரு கண்டம் என அம்மா எழுதிய கடிதத்திலிருந்து தெரிந்து கொண்ட பின்பே என் மனம்
சரியாகியது. ‘அப்பாவின் அன்பும், ஆதரவும் தான் என் உடம்பு இவ்வளவு சீக்கிரம்
சரியாக உதவியது’ என்ற என் அம்மாவின் கடித வரிகள் என் மனத்தைத் தொட்டன. அந்த நேரம்
நான் என் தந்தையை எண்ணி மிகப் பெருமைப் பட்டேன். ‘ஆடை அமைவதும், கணவன் அமைவதும் அவரவர்
அதிர்ஷ்டம்’ என்பதற்கேற்ப என் அம்மா அந்த விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டம்
செய்திருக்கிறார். ஒவ்வொரு ஆணும் இது போல் இருந்து விட்டால் ‘மெனோபாஸ்’ தொல்லையே
பெண்களுக்கு இருக்காதே!
சாதாரணமாக எந்த ஆணும் இப்பிரச்னை
பெண்களுக்கே உரியது. நாம் என்ன செய்வது என்று அலட்சியப்படுத்தி விடுவதால்தான்
பிரச்னையும் அதிகமாகிறது. மனதிலும், உடலிலும் ஏற்படும் பாதிப்போடு, கணவனும்
குழந்தைகளும் தன்னைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்ற எண்ணம் விபரீதமான
கற்பனைகளுக்கும் முடிவுகளுக்கும் விதை போடுகின்றது. ‘மெனோபாஸ்’ பற்றிப் பெண்கள்
மட்டுமே அறிவதோடன்றி, ஆண்களும் கண்டிப்பாக அறிய வேண்டியது அவசியம். வாழ்க்கையே பிரச்னையாகாதிருக்க
இந்தப் பிரச்னை பற்றி ஆண்களும் அறிந்து கொண்டு, தம் மனைவிகளுக்கு ஆதரவு தர
வேண்டும். வாழ்நாள் முழுவதும் தன் கணவன், தன் குழந்தை என்று ஓடி ஓடி உழைத்து
தனக்கென வாழாது மற்றவர்கள் இன்பத்திலேயே தான் இன்பம் பெறும் ஒரு பெண்ணுக்கு ஒரு
கணவன் இந்த ஆதரவு கூட தராதபோது அவள் மனம் எரிச்சலடைவது இயற்கைதானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக