'மங்கையர் சக்தி மகத்தான
சக்தி' என்ற தலைப்பில் - மங்கையர்
மலர் வெள்ளி விழாவையொட்டி - இளையோர் மலர் பகுதியில் வெளியான கட்டுரை.
எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவரை தோளுக்கு மேல்
உயர்ந்த அவரது மகளுடன் சந்திக்க நேர்ந்தது! அவர் மகளின் திருமணத்திற்கு வரன்
பார்த்துக் கொண்டிருப்பதால் அது பற்றி விசாரித்தோம். அவ்வளவுதான்! அநதப் பெண்ணின்
முன்பாகவே, "அவளுக்கு எதுவும் தெரியாது. ரொம்ப செலவாளி.
இவள் எப்படி கணவன் வீட்டுக்குப் போய் இருக்கப் போகிறாளோ? சொல்வதைக் கேட்பதேயில்லை" என்று ஏகப்பட்ட கம்ப்ளெயிண்ட்கள்! அந்தப்
பெண்ணைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. இத்தனைக்கும் அந்தப் பெண் எம்.பி.ஏ
படித்து, மாதம் ரூ. 25,000 சம்பாதிப்பவள். எப்பொழுதாவது சந்திக்கும், ரொம்ப நெருக்கமில்லாத என்னிடமே அவள் தன் மகளைப் பற்றிக் குறையாகப் பேசியது
எனக்குப் பிடிக்கவில்லை.
நம் குழந்தைகளின் குறைகளை, தவறுகளை தனிமையில் நாம் கண்டிக்கலாம்;
திருத்தலாம்.
ஆனால் அடுத்தவர் எதிரில் இப்படிப் பேசுவது மிகப் பெரும் தவறு என்பதைப் பல
பெற்றோர்கள், முக்கியமாக தாய் மார்கள் அறிவதில்லை. இதனால்
குழந்தைகளுக்கு பெற்றோர் மேல் வெறுப்பு ஏற்படுவதுடன், "நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது?' என்ற மனப் பாங்குதான் ஏற்படும்.
இக்கால இளைஞர்களிடம் என்க்குள்ள ஒரே குறை:
நேரம், காலம் கடந்த செல்ஃபோன் பேச்சு, இடம், காலம்,
நேரம்
இவை பற்றி யோசிக்காமல் இவர்கள் மணிக்கணக்காகப் பேசுவது சற்று கோபத்தைத்தான்
ஏற்படுத்துகிறது. சமீபத்தில் நான் ஜெர்மனி சென்ற போது அந்நாட்டு இளஞர்கள் பழகிய
விதம் என்னைக் கவர்ந்தது. என் மகனுடன் படிக்கும் பன்னாட்டு நண்பர்கள் எங்களைச்
சந்தித்து மிக ஆர்வமாக நம் நாட்டைப் பற்றி பல விஷயங்களைக் கேட்டார்கள். நான்
செய்து கொடுத்த ஆலு பரோட்டா, நவரத்ன குருமா, வெஜிடபிள் பிரியாணி எல்லாம் 'ஸூப்பர் ஸூப்பர்' என்று சாப்பிட்டார்கள்!
அவர்கள் பார்ட்டி என்றால் மது மானங்களும் உண்டு
என்று என் மகன் வாங்கி வைத்திருந்தான். ஆனால் என் கணவருக்கு அந்தப் பழக்கம்
கிடையாது என்றவுடன், அவர்கள் அதற்கு மதிப்புக் கொடுத்து
மதுபானமின்றியே பார்ட்டி கொண்டாடியது எனக்கு மிக வியப்பாக இருந்தது.
எந்த நாட்டு இளைய தலை முறையினராக இருந்தாலும், பெரியவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத் தவறுவதில்லை. ஆனால் பெரியவர்கள்
கண்டிப்பு, அடக்குமுறை, சந்தேகம் என்று அவர்களைக் கேவலப்படுத்தும் போது அவர்களும் வழி தவறி நடக்க
ஆரம்பிக்கிறார்கள். மேலும் வெளி நாட்டு இளைஞர், இளைஞிகள் செல்ஃபோனை மிக அரிதாகப் பயன் படுத்துவதுடன், அநாவசியமாக அதிக நேரம் அதில் பேசுவதில்லை என்பதை அறிந்த போது நம் நாட்டு இளைய
தலைமுறையினத் செல்ஃபோனில் பேசியே நேரம் வீணடிப்பது என் நினைவுக்கு வந்தது.
சமீபத்திய ஒரு செய்தியில் இந்தியாவிலேயேதான்
உலகிலேயே அதிக மொபைல் ஃபோன் உபயோகப்படுத்தப்படுவதாக அறிந்தேன். இக்கால இளைய
தலைமுறையினருக்கு (என் மகன், மகள் உள்பட) என் அறிவுரை, 'நேரம் பொன் போன்றது. அதனை விரயம் செய்யாமல் அறிவுத்திறனுடன் கையாண்டால் உலகையே
வென்று வெற்றிவாகை சூட நம் இளைய தலைமுறையால் முடியும்' என்பதே. எது எப்படியோ மொபைலை உபயோகிப்பவர்களின் காதுகள் அதிகூர்மையாக இருப்பதை
மட்டும் மறுக்க முடியாது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக