Thanjai

Thanjai

திங்கள், 21 மார்ச், 2011

மானஸா தேவி

குமுதம் பக்தி ஸ்பெஷல் நவம்பர் 2002 இதழில் வெளியானது



மகா சக்தியாம் பார்வதிக்கு இந்தியா முழுதும் எத்தனையோ ஆலயங்கள்!

இவற்றில் சக்தி பீடங்களுக்கு தனிப்பட்ட சக்தி உண்டு. அதிலும் ஒன்பது சக்தி பீடங்களை தரிசிப்பதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு யாத்திரை செய்கின்றனர் வட நாட்டவர். அவற்றுள் முக்கியமான ஓர் ஆலயமே மனஸாதேவி ஆலயம்.

தட்ச யாகத்தின் போது உயிரை நீக்கிக் கொண்ட பார்வதியின் உடலை மகாவிஷ்ணு, சக்கரத்தால் சிதைத்தபோது தேவியின் நெற்றி விழுந்த இடத்தில் மனஸாதேவி ஆலயம் உருவாகியிருக்கிறது என்கிறார்கள். நாம் மனதில் நினைத்ததை நிறைவேற்றுபவள் மனஸாதேவி.

மனஸாதேவி சர்ப்பமான வாசுகியின் சகோதரி. இவள் கஸ்யப முனிவரின் மகளாக வளர்ந்து, ஜரத்காரு என்ற முனிவரை மணந்தாள். அவர்களின் மகன் ஆஸ்திக முனிவர். பரீக்ஷித் மகாராஜாவின் இறப்புக்குக் காரணமான தட்சகன் என்ற நாகத்தையும், மற்றுமுள்ள ஸர்ப்ப வம்சத்தையும் அழிக்க யாகம் செய்தான் ஜனமேஜயன். இதனால் நாக வம்சமே அழிந்து விடுமென பயந்த தட்சகன், இந்திரனைச் சரணடைய, இந்திரன், மனஸாதேவியிடம் முறையிட மனஸாதேவியின் மகனான ஆஸ்திக முனிவர், ஜனமேஜயனிடம் தட்சகன் உயிரை யாசகமாகப் பெற்று நாகவம்சத்தைக் காப்பாற்றியதாக தேவி பாகவதம் கூறுகிறது.

முறைப்படி மனஸதேவியைப் பூஜித்தவர்களுக்கு சகல நலனையும் கொடுப்பாள் தேவி என்று மகாவிஷ்ணுவும் உறுதி கூறுகிறார்.

இவ்வாலயம் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது, சில படிகள் ஏறிச் சென்றால் அம்மனின் தரிசனம் கண்களையும், மனதையும் கொள்ளை கொள்கிறது. தங்கள் விருப்பம் நிறைவேறியவர்கள், சுற்றுப் பிரகாரத்திலிருக்கும் மரத்தில் அவற்றை தட்டுகளில் செதுக்கி நிறைய மாட்டியிருப்பதே அன்னையின் அருளுக்கு சாட்சியாக விளங்குகின்றது.

அன்னையைத் தரிசிக்க வரும் பக்தர்கட்கு ஆலயத்தில் இலவச உணவாக ரொட்டியும், வேகவைத்த பருப்பும் அளிக்கப்படுகிறது. தனது பக்தர்களின் குறைகளைக் களைவதோடு பசியையும் நீக்கும் அன்னபூரணித் தாயாக நம்மை வழியனுப்பிகிறாள் தேவி!

சண்டிகருக்கருகில் மணிமஜ்ராவில் அமைந்துள்ள மனஸா தேவியை மானசீகமாக வணங்கி அவள் அருள் பெருவோம்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக