Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

கொஞ்சம் லேட்டாயிடிச்சி....ஹி....ஹி

சினேகிதி ஜூன்  2003 இதழில் வெளியானது



எவ்வளவோ வேண்டாத விஷயங்களை மேல் நாட்டவரிடம் கற்றுக் கொள்கிறோம். ஆனால் நல்ல பழக்கமான ‘பங்க்சுவாலிட்டி’ எனப்படும் நேரம் தவறாமையை மட்டும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவில்லை. ‘இண்டியன் பங்க்சுவாலிட்டி’ என நம்மை நாமே கிண்டல் செய்து கொள்வோம்.

நம் நண்பர் ஒருவர் முக்கிய வேலை நிமித்தம் காரணமாக 10 மணிக்கு வரச் சொன்னால் நாம் அந்த நேரத்திற்குச் செல்வதில்லை, என்ன கொஞ்சம் தாமதமாகப் போனால் என்ன ஆகிவிடும் என எண்ணுகிறோம். தாமதமாக நாம் போகும் நேரம், அவர் வேலையாக வெளியில் போய் விடுவார். ‘கொஞ்சம் ‘வெயிட்’ பண்ணிப் பார்க்கக் கூடாதா?’ என்று ணம் சொல்வது சுலபம். ஆனால் நேர விரயம் பற்றியோ, சரியான நேரத்துக்கு வராதது நம் தவறுதானே என்பது பற்றியோ நாம் சிறிதும் யோசிப்பதில்லை.

ஒரு பெரிய கூட்டமோ, விழாவோ, கலை நிகழ்ச்சியோ, ஏன் ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்குக் கூட நாம் சரியாக செல்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். ஆனால் என்த நிகழ்ச்சியும் சரியான நேரத்துக்கு நம் நாட்டில் ஆரம்பிக்கப் படுவதேயில்லை என்பதே கசப்பான உண்மை.

வெளி நாடுகளில் நேரம் தவறாமை மிக உறுதியாகக் கடை பிடிக்கப்படுகிறது. ஜெர்மனியில் படிக்கும் என் மகன் அங்கிருந்து கிளம்பும் போதே இந்தியாவில் எங்கெங்கு என்னென்ன தேதியில் செல்ல வேண்டும், என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று ஒரு அட்டவணையுடன் தான் வருவான். அதன்படி நேரம் தவறாமல் நடந்து கொள்வது அவன் வழக்கம். இது அவன் வெளி நாட்டு வாழ்க்கையில் கற்றுக் கொண்ட நல்ல பழக்கம்!

எதிர்பாராத சூழ் நிலையில் நாம் ஒரு முக்கிய நிகழ்ச்சி அல்லது சந்திப்பிற்கு தாமதமாகச் செல்ல வேண்டியிருப்பின் எப்படி நடந்து கொள்வது?

நிகழ்ச்சிக்கு வர தாமதமாகும் என்பதை முன்னதாகவே ஒரு ஃபோன் செய்து சொல்லலாம்.

சந்திப்பு என்றால் தாமதமாகக் கூடிய நேரத்தை சொல்லி, அத்தனை நேரம் அவர்களால் காத்திருக்க முடியுமா எனப் பணிவாகக் கேட்கலாம். முடியாத பட்சத்தில் சந்திப்பை வேறு நாளைக்குத் தள்ளிப் போடலாம்.

சென்றபின் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்கலாம்.

தாமதமாக வந்ததற்கான காரணத்தை கதை மாதிரி சொல்லி நேரத்தை வீணாக்காமல், சுருக்கமாக எடுத்துச் சொல்லலாம்.


சிறிதோ, பெரிதோ, குடும்ப விழாக்களோ, பொது நிகழ்ச்சிகளோ நமக்காக பிறரை காக்க வைப்பது அவர்கள் மனதில் நம் மதிப்பைக் குறைக்கும். எப்பொழுதும் குறிப்பிட்ட நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னாலே செல்வது தனி மரியாதையைப் பெற்றுத் தரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக