Thanjai

Thanjai

ஞாயிறு, 20 மார்ச், 2011

பன்ரி...கொட்றி

அவள் விகடன் ஜூன் 2000-இதழில் வெளியானது



மணமான ஆறு மாதத்திலேயே என் கணவருக்கு வடக்கே உத்திரப் பிரதேசத்தில் மதுரா (மாயக் கண்ணனின் பிறப்பிடமான வடமதுரை)வுக்கு மாற்றல்! ‘இந்தி’ என்று தமிழில் மட்டுமே எழுதத் தெரிந்த நான், சற்று பயத்தோடும், ஏகப்பட்ட பிரமிப்போடும், சில இந்திப் புத்தகங்களோடும் பயணமானேன். என் கணவர் அத்தனை இந்திக் கலவரத்திலும், ஒளிந்து ‘ராஷ்ட்ரபாஷா’ வரை படித்தவர்! எனவே அவருக்கு கவலையில்லை!

ஒரு நாள் ஒரு நண்பர் வீட்டு ‘பார்ட்டி’க்கு என் கணவர் அழைத்துப் போக, அங்கு வந்த அத்தனை பெண்களும் ஒரு மதராஸிப் பெண்ணான என்னை அதிசயமாகப் பார்த்து ஆயிரம் கேள்விகள் கேட்க ‘அச்சா’, மாலும் நஹி’ என்ற இரண்டு வார்த்தைகளோடு ‘அசடு வழிந்தேன்! சே என்ன மொழி அது? ‘க’வில் நான்கு வகை, ‘ச’வில் இரண்டு, ‘ட’ வில் நாலு என்று ‘போதுமடா சாமி’ என்றாகி விட்ட்து.

நம் தமிழ் தவிர மற்ற மொழிகளில் இந்த உச்சரிப்பு பிரஸ்னை ‘படா பேஜார்’தான்! இந்தியில் மனிதர்களுக்கு மட்டுமன்றி, விலங்குகள் மற்றும் பொருட்களுக்கும் கூட ‘பால்’ உண்டு. பானி (தண்ணீர்), மிட்டி (மண்), தஹி (தயிர்) இவை பெண்பால்! தூத் (பால்), பத்தர் (கல்) இவை ஆண்பால். இப்படித் திண்டாடி, தட்டுத் தடுமாறிப் பேசி இந்தி கற்றுக் கொள்வதற்குள் என் கணவருக்கு மகாராஷ்டிராவுக்கு மாற்றலாகியது.

அப்புறம் ஒரு வருடம் பெங்களூர் வாசம்! ‘அப்பாடி! பெங்களூரில் நிறய தமிழர்கள் உண்டு. கல்கண்டு தமிழில் கலகலக்கலாம்! எங்கள் வீட்டுக்காரம்மாவோ ‘பச்சைக் கன்னடத்தி!’ அவள் வீடு சென்ற என்னை ‘பன்ரி, குத்துக் கொட்றி’ (‘என்ன மரியாதையில்லாமல் குட்றி எங்கிறாளே, என்ன கேட்கிறாள்’) என்றூ நான் ‘திருதிரு’க்க, நாற்காலியைக் காட்டியதும்தான், சட்டென்று நம் ‘’சென்னைத் தமிழ்’ ‘குந்திக்க’ ஞாபகம் வர அமர்ந்தேன். ‘நிம்ம எஜமானரு ஏனு மாடுதாரு?’ (மாடுக்கு எஜமானரா?!) ‘நிம்ம ஹேஸரு ஏனு?’ (ஏசுவைப் பற்றிக் கேட்கிறாளா!) என்று ‘சரவெடி’ மாதிரி கேள்விகளை தொடுக்க, ஒரு அட்சரம் கூட புரியாமல் ‘புஸ்வாணமாகி’ நான் வீடு திரும்பினேன்.

வெளி மாநிலம் சரி, நம் மாவட்ட்த்துக்குள்ளும் பேச்சு வழக்கு வித்தியாசமாகத்தானே இருக்கிறது? நாகர்கோவிலில் என் பிறந்த வீட்டுக்குப் போனபோது, என் அம்மாவுக்குத் தெரிந்த மாமி வந்து, ‘ஏண்டி, விச்சாரிக்காயோ? உடம்பு வண்ணமே வைக்கவில்லையே?’ என்று கேடக, நான் அர்த்தம் தெரியாமல் முழிக்க, அம்மாதான் பிறகு விளக்கினார். ‘விச்சாரிக்காயோ’ என்றால் ‘நல்லா இருக்கியா>’ என்று அர்த்தமாம். ‘உடம்பு வண்ணமே வைக்கவில்லையே’ என்றால் ‘உடம்பு பெருக்கவே இல்லையே’ என்று பொருளாம்.

விளக்கமாற்றுக்குக்கூட, ‘வார்கோல், சீமாறு, பெருக்குமாறு, துடப்பம்’ என்று ஊருக்கு ஒரு பெயர் இருக்கும்போது மற்ற பேச்சுகளிலும் வித்தியாசம் இருப்பதில் வியப்பில்லயே?


இப்படி மாநிலம்தோறும் சென்றதன் பலன் சில பல மொழிகளைத் தெரிந்து கொள்ளும் சந்தோஷம் கிடைத்தது உண்மை!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக