Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

அஷ்ட விநாயகர்-7

அஷ்ட விநாயகர் – 7

லேன்யாத்ரி – கிரிஜாத்மஜர்


ஞான ஆலயம் நவம்பர், 2003 இதழில் வெளியானது




பூனாவிலிருந்து 94 கிலோ மீட்டர் தூரத்தில் ஜபானார் என்ற இட்த்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில், குக்கடி நதிக்கரையில் லேன்யாத்ரி மலை உச்சியில், பௌத்த கடைவரைக் கோயில்களின் அருகே, தூம்ர வர்ண ரூபமாகக் காட்சி தருபவரே ஸ்ரீகிரிஜாத்மஜர்.

 

உலக உயிர்களின் வாழ்க்கைக்கு சூரிய பகவானே காரணம் என்பதால் பிரம்மா சூரியனை ‘கர்மதியாகேசன்’ எனப் புகழ்ந்தார். அதனால் கர்வம் கொண்ட சூரியன் தும்மியபோது உண்டானவனே அகந்தாசுரன் என்னும் அரக்கன். அவன் க்ருவான சுக்ரரைப் பணிய அவரும் அவனுக்கு கணேச மந்திரம் உப்தேசித்தார். அவன் கணபதியை நோக்கி அம்மந்திரத்தை உச்சரித்தபடி, பல்லாயிரம் ஆண்டு காலம் தவம் செய்ய, கணபதி அவன் முன் தோன்றினார், யாராலும் வெல்ல முடியாத வரம் கொடுத்தார்.

இதனால் இறுமாப்புற்ற அசுரன், மூவுலகையும் தன் வசப்படுத்தி, தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் சிவனையும், திருமாலையும் வேண்ட, அவர்கள் கணபதியை நோக்கி தவமிருக்கும்படி அறிவுறுத்தினார். ஆயிரம் ஆண்டுகள் கணபதியைத் தொடர்ந்து வழிபட்டபின், விநாயகர் அவர்கள் முன் தோன்றி, அகந்தாசுரனை அழிப்பதாகக் கூறினார்.

நாரதர் அகந்தாசுரனிடம் விநாயகருடன் போர் செய்ய வேண்டாமென்றூ தடுத்தும் கேட்காத அகந்தாசுரனை நோக்கி கணேசர் தன் உக்ர பாசத்தை வீச அது அவன் சேனை முழுவதையும் அழித்தது. சுக்ராச்சாரியார் அறிவுரைப்படி அவனும் தூம்ரவர்ண உருவத்திலிருந்த கணபதியைச் சரணடைய, அவர் அவனை மன்னித்து பாதாள லோகம் செல்லப் பணித்தார். அவரே கிரிஜாத்மஜர் என்ற பெயரில் விளங்குபவர்.

மாதா பார்வதி தேவி விநாயகரை மகனாகப் பெற எண்ணி, லேன்யாத்ரியிலுள்ள குகையில் பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருந்தாள். அதனால் மனம் மகிழ்ந்த கணபதி, தான் விரைவில் மகனாகப் பிறப்பதாக வரம் அருளினார்.

ஒரு புரட்டாசி மாத சுத்த சதுர்த்தியன்று பார்வதி தன் உடம்பிலிருந்த அழுக்கை உருட்டி அத்துடன் எண்ணெய் சேர்த்து கணேசரின் உருவத்தைச் செய்து, அதற்கு பூஜை செய்து வந்தபோது, அவ்வுருவம் உயிர் பெற்று, தானே பார்வதியின் மகனாக அவதாரம் செய்திருப்பதாகக் கூற, பார்வதியும் மகிழ்ந்து அக்குழந்தையை அள்ளி  எடுத்துப் பாராட்டி, சீராட்டி வளர்த்தாள். பதினொன்றாம் நாள் அக்குழந்தைக்கு ‘குணேஷ்’ எனப்பெயரிட்டாள். சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களையும் வென்றதால் ‘குணேஷ்’ எனப்பெயரிடப்பட்டது. அதுவே கணே ஷாக மாறியது. சிவபெருமான் ‘கணேஷை நினைத்து எந்தச் செயலை ஆரம்பித்தாலும் வெற்றி கிட்டும்’ என்ற வரத்தை அருளினார்.

கணேசர் லேன்யாத்ரியில் 15 ஆண்டுகள் வளர்ந்தார். இங்கு பல ‘பால லீலை’களைச் செய்தார். சிந்துராசுரன் தன் மரணம் கணபதியின் கையால் என்பதை அறிந்து அவரை அழிக்க க்ரூரன், பலாசுரன், வயோமாசுரன் போன்ற பல அரக்கர்களை அனுப்ப, குழந்தை கணேசர் அத்தனை பேரையும் வதம் செய்தார். பார்வதியின் மற்றொரு பெயர் கிரிஜா. ‘ஆத்மஜ்’ என்றால் மகன். கிரிஜாவின் மகன் என்ற பொருள்பட இத்தல இறைவன் கிரிஜாத்மஜர் எனப்படுகிறார்.

கணேசரின் ஆறு வயதில் விஸ்வகர்மா கணேசரைத் துதித்து அவருக்கு பாசம், பரசு, அங்குசம், தாமரை மலர்களை அளித்தார். ஏழாம் வயதில் அவரது உப நயனம் கௌதம் ரிஷியால் நட்த்தப்பட்டது.

அஷ்ட விநாயகத் தலங்களிலேயே மலையில் அமைந்திருப்பது இந்த ஒரு ஆலயம் மட்டுமே. கணபதி 15 ஆண்டுகள் இம்மலையில் வளர்ந்ததாலும், அன்னை பார்வதி தவம் செய்ததாலும் இம்மலை மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. மலைக்கு ஏறிச் செல்ல 307 படிகள் உள்ளன. மலை ஏறுவது சற்றுக் கடினமே. வயதானோர், ஏற முடியாதோருக்கென ‘டோலி’கள் உள்ளன.

இம்மலையில் 18 குகைகள் உள்ளன. இதில் எட்டாவது குகையில் கிரிஜாத்மஜர் ஆலயம் உள்ளது. குகை முழுவதும் ஒரே கல்லினால் தெற்கு நோக்கி குடையப்பட்டுள்ளது. கர்ப்பக் கிரகத்திற்கு முன்புள்ள சபா மண்டபம் மிகப் பெரியது. 53 அடி நீளமும், 51 அடி அகலமும் கொண்ட்து. இதைத் தாங்க ஒரு தூண் கூட இல்லாதது மிக ஆச்சரியமாக உள்ளது. சபா மண்டபத்தைச் சுற்றிலும் 18 சிறு இருட்டறிகள் உள்ளன. இவை தியானம் செய்ய அமைக்கப்பட்டவை.

 

கர்ப்பக்கிரகம் 7 அடி உயரத்தில் அமைந்துள்ளது, இங்குள்ள விநாயகருக்கு தனி சிலையோ, விக்கிரகமோ கிடையாது. பாறையின் சுவரிலேயே செதுக்கப்பட்டுள்ளது. இந்த இட்த்தில்தான் பார்வதி தவம் செய்து, விநாயகரின் தரிசனம் பெற்றாள். கிரிஜாத்மஜரின் முகம் கிழக்கு நோக்கி உள்ளது. இறைவனின் கழுத்து இடப்பக்கம் திரும்பியிருப்பதால் ஒரு கண் மட்டுமே தெரிகிறது. இது போன்ற வித்யாசமான அமைப்பில் கணபதியை வேறு எங்குமே காண முடியாது. அழகிய அலங்காரத்தில் மனம் லயிக்கிறது.

 

தினமும் கிரிஜாதமஜருக்குச் செய்யப்படும் பஞ்சாம்ருத பூஜை மிக விசே ஷமானது. புரட்டாசி, மாசி மாத சுத்த சதுர்த்தி மிக விசே ஷமாகக் கொண்டாடப்படும். மாசி மாதத்தில் ‘அகண்ட ஹரிநாம் சப்தாகம்’ ஏழு நாட்கள் மிக விமரிசையாக் நட்த்தப்படும். விநாயகர் சதுர்த்தி அன்று விசே ஷ பூஜை அலங்காரம், அபிஷேகங்கள் மிகக் கோலாகலமாக நடைபெறும்.

கணேச புராணத்தில் ஜீர்ணாபூர், லேகன் பர்வதம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இம்மலை தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கீழ் இயங்குகிறது. இங்கு மின் வசதி கிடையாது என்பதால் மாலை ஐந்து மணிக்கு மேல் செல்ல முடியாது.


 

இயற்கை அழகுடன், அமைதியான இவ்விடம் மனதைக் கொள்ளை கொள்கிறது, நிறையக் குரங்குகள் கும்மாளமிடுகின்றன. அருகிலுள்ள ஒரு குகையில் ஒரு பிரம்மாண்டமான ஸ்தூபி உள்ளது. கருங்கல்லாலான இது பீமனின் கதை எனக் கூறப்படுகிறது, மேலே மலை உச்சியில் சிவன் கோயில் உள்ளது. வெயிலுக்கு முன்பாக இம்மலைக்கு செல்வதே உசிதமானது. இங்கிருந்து வீர சிவாஜி பிறந்த சிவனேரிக் கோட்டையைக் காணலாம்.


உமையன்னைக்கு அருள் செய்து, மைந்தனாய்த் தோன்றி, அன்பட்களைக் காக்க லேன்யாத்ரியில் அருள் செய்யும் கிரிஜாத்மஜர் வேண்டியவர்க்கு வேண்டியன  அருள்பவராகப் போற்றப்படுகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக