இருளை விலக்கி ஒளி கொடுப்பது
விளக்கு. அஞ்ஞான இருளை நம் மனதிலிருந்து நீக்கி, ஒளி பொருந்திய ஞானம் தருவது
விளக்கின் ஒளி.
விளக்கிற்கு ஜாதி, மத பேதமில்லை.
எல்லா இடத்து இருளையும் நீக்கும். தினமும் காலை, மாலை இரு வேளையும் வீடுகளில்
தீபம் ஏற்றுவது அவசியம். பெண்கள் செய்யக் கூடிய பூஜைகளில் மிகவுஸ சிறந்தது,
தலைமையானது திருவிளக்கு பூஜை. இதை ஆலயங்களில் பலர் சேர்ந்து செய்யும் போது
கிடைக்கும் பலனும் அதிகம்.
விளக்கை பெண்கள் ஏற்றுவதே சிறப்பு.
விளக்கை கையால் வீசியோ, வாயால் ஊதியோ அணைக்கக் கூடாது. சிறு துளி பாலை விரலால்
தொட்டு ஜோதியில் இட்டு உத்தரவு கொடுக்க வேண்டும். ஆண்கள் விளக்கை ஊதுவதோ, அணைப்பதோ
கூடாது. விளக்குகளில் வெள்ளி விளக்கு, ஐம்பொன் பித்தளை, வெண்கல விளக்குகள்
சிறப்புடையன.
மண்ணினால் செய்யப்பட்ட அகல்
விளக்குகள் மிக விசேஷமானவை. ஆதிகாலத்தில் இவையே உபயோகத்தில் இருந்தன. அகல்,
எண்ணெய், திரி, சுடர் இது நான்கும் சேர்ந்ததே விளக்கு.
இவை அறம், பொருள், இன்பம், வீடு
என்னும் நான்கு பொருள்களையும், சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு சாதன்ங்களையும்
குறிப்பன. ஆலயங்களில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவதால் முக்தி கிடைக்கும்.
Ø விளக்கிற்கு பசு நெய் விட்டு
ஏற்றினால் சகல நன்மைகளும், புத்திர பாக்கியமும் கிட்டும்.
Ø நல்லெண்ணெய் லட்சுமி கடாட்சம்
கிட்டும். சகல பீடைகளும் விலகும்.
Ø தேங்காய் எண்ணெய் தம்பதிகளுக்குள்
ஒற்றுமை ஏற்படுத்தும்.
Ø விளக்கெண்ணெய் தீபம் புகழ்,
வாழ்வில் சுகம், தாம்பத்திய சுகம், உறவினர் ஒற்றுமை ஏற்படுத்தும்.
Ø இலுப்பெண்ணெயில் தீபம் ஏற்றுவது
மிக விசேஷமானது. பாவங்கள் நீங்கி சகல நன்மைகளும், செல்வமும் கிட்டும்.
Ø கடலெண்ணெயில் ஏற்றினால் கடன்,
துக்கம், பாவம் சேரும். ஒரு போதும் கடலெண்ணெயில் தீபம் ஏற்றக் கூடாது.
Ø விளக்கை குங்குமம் இட்டு
அலங்கரித்து ஏற்ற வேண்டும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள், மாலை ஐந்து
முதல் ஆறு மணிக்குள்ளும் தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதங்களில் மாலை
நேரத்திலும், மார்கழி மாதத்தில் விடியற் காலை நேரத்திலும் வாசலில் விளக்கேற்றி
வைப்பது வீட்டிற்கு சுபிட்சம் ஏற்படுத்தும்.
Ø தீபத்திற்கு பஞ்சுத்திரி மிக
நன்று. தாமரைத் தண்டு திரியால் முன்வினை பாவம் நீங்கும். வாழைத் தண்டு திரி
பிள்ளைச் செல்வம் ஏற்படுத்தும், குடும்ப சாபம் நீங்கும். வெள்ளெருக்கு பட்டைத்திரி
தீபம் பெரும் செல்வம் தரும்.
Ø புதிய மஞ்சள் துணி திரி அம்மன்
அருள் சேர்க்கும், காற்று, கருப்பு அண்டாது. சிவப்பு துணி திரி, திருமணத் தடை,
மலடு இவற்றை நீக்கும். புது வெள்ளை வஸ்திரம் வீட்டிற்கு வளம் சேர்க்கும்.
Ø கிழக்கில் தீபமேற்றி வழிபட துன்பம்
அகலும், மேற்கில் கடன் தொல்லை, சனி தோஷம் நீங்கும். வடக்கில் திரண்ட செல்வமும்,
சர்வ மங்களமும் ஏற்படும். தெற்கு யமனுக்குரிய திசையானதால் தெற்கு நோக்கி
விளக்கேற்றுவது பெரும் பாவம்.
மகாலட்சுமிக்கு நெய் விளக்கும்,
மகா விஷ்ணுவுக்கு நல்லெண்ணெயும், பிள்ளையாருக்கு தேங்காயெண்ணெயும் ஏற்றது.
நெய் விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய்,
இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஐந்தும் சேர்ந்து தேவிக்கு ஏற்றி பூஜை செய்தால்
எண்ணிய காரியம் கைகூடும்.
விளக்கை ஒரு முகமாக தினமும்
ஏற்றலாம். இரண்டு முகம் குடும்ப ஒற்றுமையையும், மூன்று முகம் புத்திர சுகமும்,
நான்கு முகம் பசு, பரி இன விருத்தியும், ஐந்து முகம் செல்வமும் பெருக்கும்.
குத்து விளக்கின் தத்துவம்
மகத்தானது. தாமரை போன்ற ஆசனம் – ப்ரம்மா, தண்டு – திருமால், நெய் விடும் அகல் –
ஈசன், திரி முனைகள் – மஹேஸ்வரன், நுனி – சதாசிவன், நெய் – நாதம், திரி – பிந்து,
சுடர் – திருமகள், ஜோதி – ஆதி பராசக்தி, தீப்பிழம்பு – கலைமகள்.
குத்து விளக்கில் அனைத்து
தெய்வங்களும் குடி கொண்டிருப்பதால், பெண்மையின் அம்சங்களான அன்பு, அறிவு, உறுதி,
நிதானம், பொறுமை இவற்றின் பொருள்களான ஐந்து முகங்களை குடும்பப் பெண்கள் ஏற்றுவது
நன்மை பயக்கும். புதியதாகத் திருமணமாகி புகுந்த வீடு வரும் புது மணப் பெண்களுக்கு
சீர் வரிசையில் கண்டிப்பாக குத்து விளக்கு இடம் பெற்றிருக்கும். இவ்வளவு சிறப்பு
வாய்ந்த குத்து விளக்கை பெண்கள் ஏற்றுவதாலேயே பெண்கள் ‘குல விளக்கு’ எனப்
போற்றப்படுகிறார்கள். தினமும் விளக்கு ஏற்றும்போது கீழ்க்கண்ட எளிய சுலோகம் சொல்லி
ஏற்றுவது நலன் தரும்.
சுபம் பவது கல்யாணீ
ஆரோக்யம் புத்ர சம்பதாம்
மம துக்க வினாசாயை
தீபலக்ஷ்மீர் நமோஸ்துதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக