Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

ஆஹா...எலுமிச்சை

லேடீஸ் ஸ்பெஷல் மே 2003 இதழில் வெளியானது



எலுமிச்சம் பழம் உடல் நலத்துக்கு மட்டுமல்லாது, அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. எலுமிச்சை சாதம், ரசம், ஊறுகாய் என்று சமையலில் இதன் பங்கு ஏராளம். வெய்யில் நாட்களில் சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து எலுமிச்சை சாறு குடித்தால், உடல் களைப்பு, சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். அஜீரணம், வாயுத் தொல்லை இவற்றுக்கெல்லாம் இது நல்ல நிவாரணி. இனி இதன் மற்ற உபயோகங்களைப் பார்ப்போம்.

  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு மூடி எலுமிச்சை, தேன், ஆரஞ்சு சாறு சேர்த்து காலையில் குடித்தால் மலச் சிக்கல் நீங்கும். வெறும் வயிற்றில் தேனும், எலுமிச்சை சாறும் இளஞ்சூடான நீரில் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும். 
  • எண்ணெய்ப் பசையுள்ள சருமத்திற்கு, ஒரு டீஸ்பூன் கசகசா பொடி, சிறிது ஆரஞ்சு தோலி பொடி சேர்த்து, எலுமிச்சை சாறு விட்டு பேஸ்ட் போலாக்கி, முகம் முழுவதும் தடவவும். முக்கால்வாசி அளவு காய்ந்ததும், ஒரு ஈரத் துண்டால் ஒற்றி விட்டு, பின் குளிர்ந்த நீரால் முகம் கழுவவும்.
  • தலைமுடி கொட்டுவதை நிறுத்த 4 டேபிள்ஸ்பூன் இளநீருடன் ஒரு எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு தலை முழுவதும் அடிக்கால் வரை பரவும் படி தடவி, ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசவும். இதுபோல் வாரம் இருமுறை செய்யவும்.
  • தலை அரிப்பிற்கு, எண்ணெயுடன், எலுமிச்சை சாறு கலந்து (சம் அளவு) தலையில்  நன்கு தடவி, சற்று ஊறிய பின் குளிக்கவும்.
  • கை, கால் நகங்கள் பளபளக்க, கை, கால்களின் பாதங்களை உப்பு கலந்த நீரில் 10 நிமிடங்கள் வைத்தபின் எலுமிச்சை தோலியால் நன்கு தேய்த்தால், நகத்தினுள் தங்கியிருக்கும் அழுக்குகள் இளகி வெளி வந்துவிடும். 
  • சோர்வடைந்த கண்களுக்கு, 4 டேபிள் ஸ்பூன் குளிர் நீரும், 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து, அதில் பருத்தித் துணியை நனைத்து கண்களை மூடிக்கொண்டு 10 நிமிடம் வைத்திருக்க, கண்கள் புத்துணர்வு பெறும். துணிகளில் இரும்பு கரை படிந்தால், வெந்நீரில் எலுமிச்சை சாறு, உப்பு கலந்து கறை பட்ட இடத்தில் விட்டு கசக்கி, பின் சோப்பு போட்டு துவைக்கவும்.
  • ஃபிரிட்ஜில் துர் நாற்றம் ஏற்படாமலிருக்க, சாறு பிழிந்த எலுமிச்சை துண்டங்களை வைக்கவும்.
  • சாதம் வடிக்கும்போது சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், சாதம் உதிராகவும், ருசியாகவும் இருக்கும்.
  • ஆப்பிள், வாழைப்பழங்களை நறூக்கி அவற்றில் சிறிது எலுமிச்சை சாறு தடவி வைத்தால் அவை கறுக்காது.
  • பொடுகிற்கு, கடுகு எண்ணெயுடன், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து, சற்று ஊறியதும் குளிக்கவும்.
  • பற்களில் மஞ்சள் கறையா? எலுமிச்சை சாற்றுடன் உப்பு சேர்த்து, அதை பேஸ்ட்டுடன் சேர்த்து பல் தேய்க்க, கறை போயே போச்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக