Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

தீபாவளி ஸ்பெஷல்-3

ஆலயம் சினேகிதி – தீபாவளி சிறப்பிதழ் – நவம்பர் 2003 ல் வெளியானது

ஸ்ரீகண்ட் (மஹாராஷ்டிரா)

தேவையானவை:

நல்ல கெட்டியான புளிக்காத தயிர் - 1/4 கிலோ
சர்க்கரை – 200 கிராம்
குங்குமப்பூ – சில இதழ்கள்
பிஸ்தா – சீவியது – 2 டீஸ்பூன்
ஏலப்பொடி கொஞ்சம்.

செய்முறை:

தயிரை ஒரு மஸ்லின் துணியில் கட்டித் தொங்கவிடவும். 3 முதல் 4 மணி நேரத்திற்குப் பின்பு எடுத்தால் நீர் முழுவதும் வடிந்திருக்கும். அத்துடன் சர்க்கரையைப் பொடி செய்து போட்டு, ஏலப்பொடி, பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து ஒரு ஹேண்ட் மிக்ஸரால் கலக்கவும். கப்களில் விட்டு மேலே சீவிய பிஸ்தா சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்துப் பரிமாறாவும்.
மராட்டியத் திருமணங்களில் கட்டாயமாக இடம் பெறும் இனிப்பு இது!

பனானா பாயசம் (மலபார்)

தேவையானவை:

பழுத்த மலை வாழைப் பழம் – 2
சர்க்கரை – 100 கிராம்
தேங்காய் – 1
ஏலப்பொடி
முந்திரி – 15
பேரீச்சை – 100 கிராம்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

வாழைப் பழங்களை சிறு சிறு துண்டுகளாக்கவும். பேரீச்சை, முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறூக்கவும்.
தேங்காயைத் துருவி அரைத்து 2 டம்ளர் பால் எடுக்கவும். அத்துடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். 5 நிமிடம் கொதித்ததும் அதில் நறுக்கிய வாழைப் பழம், வறுத்த பேரீசைத் துண்டுகள் போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்துக் கெட்டியானதும் முந்திரி பருப்பு, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும். சூடான பனானா பாயசம் சுவையிலும் ‘ஏ-ஒன்’னாக இருக்கும்!



தீபாவளி மருந்து
தீபாவளி சமயம் ஜீரணத்திற்காக செய்யப்படும் இந்த மருந்தை சாதாரண நாட்களிலும் செய்து வைத்துக் கொள்ளலாம்.

தேவையானவை:

ஓமம் - ¼ கப்
மிளகு – 3 டீஸ்பூன்
சுக்கு – 1 துண்டு
கண்ட திப்பிலி – 10 குச்சிகள்
அரிசி திப்பிலி – 1 டீஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
ஏலக்காய் – 3
கிராம்பு – 5
நெய் - ¼ கப்
வெல்லம் – 150கிராம்
தேன் -  3 டீஸ்பூன்.

செய்முறை:

ஓமத்தைக் களைந்து கல்லரித்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மிளகு, சீரகம், கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, ஏலம், கிராம்பை வாணலியில் சூடுவர வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். சல்லடையில் சலிக்கவும். கப்பியை ஓமத்துடன் ஊறவைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரை பட்டதும் அதிலேயே இந்தப் பொடியையும் போட்டு அரைக்கவும். தண்ணீர் போதாவிடில், சிறிது சேர்த்துக் கொள்ளவும். (அரைத்த விழுதின் அளவு வெல்லம் சேர்க்க வேண்டும்).

அரைத்த மருந்து விழுதை மிளகு குழம்பு பதத்தில் கரைத்து, அடி கனமான பாத்திரத்தில் வைத்து, கேஸை சின்னதாக்கி, கைவிடாமல் கிளறவும். நீர் வற்றி, மருந்து சாமாங்கள் வெந்து கெட்டியானதும், நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விடவும். நன்கு சேர்ந்ததும் ஒட்டாமல் நெய் பிரியும் சமயம் இறக்கி, தேனைச் சேர்த்துக் கிளறவும். இதை ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும். அஜீரணம், வயிற்றுக் கோளாறுகளுக்கு ஏற்ற மருந்து இது.

மிக்ஸட் நட் மார்வெல்

தேவையானவை:

அவல்  1 கப்
கடலைப் பருப்பு - ¼ கப்
பச்சைப் பயறு - ¼ கப்
நிலக்கடலை – 1 கப்
பொட்டுக் கடலை - ¼ கப்
முந்திரி – 50 கிராம்
திராட்சை – 25 கிராம்
அரிசி மிட்டாய் – 25 கிராம்
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
காரப்பொடி – 2 முதல் 3 டீஸ்பூன் வரை (தேவைக்கேற்ப)
சர்க்கரை – 1 டீஸ்பூன்
கரம் மசாலா (பிடித்தவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்)
கறிவேப்பிலை – 2 கொத்து,
நெய் அல்லது எண்ணெய் – வறுக்க தேவையான அளவு.

செய்முறை:

கடலைப் பருப்பு மற்றும் பச்சைப் பயறை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து விட்டு, எண்ணெய் காய்ந்ததும் பிடிப்பிடியாகப் போட்டு பொரித்தெடுக்கவும். பின்பு அதிலேயே அவலையும் பொரிக்கவும். நிலக்கடலை, முந்திரி, திராட்சை, பொட்டுக் கடலை, கறிவேப்பிலை இவற்றை வரிசையாக் வறுக்கவும்.

நான்கு டீஸ்பூன் நெய்யைக் காய வைத்து அதில் மஞ்சள் பொடி, காரப்பொடி, கரம் மசாலா, உப்பு போட்டு நன்கு கலந்ததும், அதில் மேலே வருத்த எல்லாவற்றையும் போட்டு, சர்க்கரையும் சேர்த்து கலந்து வைக்கவும்.



சக்லி
தீபாவளிக்குச் செய்யப்படும் முக்கியமான காரம் இது. தனியா, ஓமம் சேர்ப்பது இதன் ஸ்பெஷாலிட்டி!

தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு    -      1 கிலோ
பச்சரிசி                -      2 கிலோ
உளுத்தம் பருப்பு    -      1 கப்
பயத்தம் பருப்பு            -      ½ கப்
அவல்                   -      2 கப்
சீரகம்                   -      50 கிராம்
தனியா                 -      50 கிராம்
பொட்டுக்கடலை   -      ½ கப்
ஓமம்                           -      4 டேபிள் ஸ்பூன்
உப்பு, காரப்பொடி, எண்ணெய் – தேவைக்கு.
செய்முறை:
கடலைப் பருப்பு, அரிசியைக் களைந்து சிறிது நேரம் ஊறவைத்துக் காயவிடவும். மற்ற ப்ருப்புகளையும் அவலையும் தனித்தனியாக வாணலியில் பொன்னிறமாக வறுத்து, அத்துடன் சீரகம், பொட்டுக்கடலை, தனியா, ஓமம் மற்றும் காய்ந்த அரிசி-கடலைப் பருப்புக் கலவையையும் போட்டு மிஷினில் நைஸாக அரைக்கவும். அரைத்த மாவுடன் உப்பு, காரப்பொடி சேர்த்து, சிறிது வெண்ணெயும் சேர்த்து, நீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். முள்ளுத் தேங்குழல் ஒற்றைத் துளைத் தட்டில் மாவைப் போட்டு, பிளாஸ்டிக் பேப்பரில் கைமுறுக்கு போல் வட்டமாகச் சுற்றி, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சற்று அடர் சிவப்பு நிறமாக இருக்கும் சக்லி, ருசியில் ‘ஏ’ ஒன்!



தப்படா
இது உத்திரப் பிரதேச ஸ்பெஷல்

தேவையானவை:

கடலைப் பருப்பு – 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
ஓமம்  - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
காரப்பொடி - 11/2 டீஸ்பூன்
டால்டா – 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் (வேகவிடத் தேவையான அளவு).

செய்முறை:

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை மிஷினில் நைஸாக அரைக்கவும். அதில் உப்பு, காரப்பொடி, ஓமம், மஞ்சள் பொடி, டால்டா சேர்த்து, தேவையான நீர் விட்டு நன்கு கெட்டியாகப் பிசையவும். ஒரு சிறிய உருண்டை மாவு எடுத்து, நியூஸ் பேப்பரில் சிறிய தட்டைகளாகத் தட்டி 10 முதல் 15 நிமிடம் காய விடவும். எண்ணெயைக் காய வைத்து, பொன்னிறமாக வேகவிடவும். புதுமையான ருசியுடன் தப்படா சூப்பராக இருக்கும்.



நவரத்ன மிக்ஸர்

தேவையானவை:

வெள்ளை மொச்சைப் பருப்பு – 1 கப்
காராமணி – 1 கப்
பச்சைப் பயறு – 1 கப்
கொள்ளு – 1 கப்
எள் - ½ கப்
கொண்டைக் கடலை – 1 கப்
சோயா - ½ கப்
கொப்பரைத் தேங்காய் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 25

செய்முறை:

எல்லா தானியங்களையும் தனித் தனியாக ஒரு நாள் ஊற வைத்து, வடிகட்டி, ஒரு துணியில் பரப்பி, தனித்தனியே காய விடவும். எள்ளைக் களைந்து வடிகட்டிக் காய வைக்கவும்.

உப்பு மஞ்சள் பொடி, மிளகாய் வற்றலை நீர் விட்டு நைஸாக அரைத்து கூழ் போல் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். கொப்பரையை பல் பல்லாக நறுக்கவும்.

வாயகன்ற இலுப்பச் சட்டி அல்லது வாணலியை அடுப்பில் வைத்து ஒவ்வொரு தானியமாக, நிதானத்துடன் ஓசை வரும் வரை வறுத்து, தாம்பாளத்தில் கொட்டவும். ஈரப்பதம் போனால்தான் கரகரப்பாக இருக்கும்.

எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டி நன்கு கலந்து அரைத்த விழுதைப் போட்டுக் கலக்கவும். மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து, உப்பு, காரம் விழுது கலந்து வைத்துள்ள தானியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு ஈரம் சுண்டி சலசலவென்று சப்தம் வரும்வரை வறுத்து தாம்பாளத்தில் கொட்டவும். ஆறியதும் டப்பாவில் எடுத்து வைக்கவும்.

இதில் விருப்பப்பட்டால் நிலக்கடலை - ¼ கப், முந்திரி – 25 கிராம் வறுத்துப் போட்டுக் கலக்கலாம்.

எண்ணெய் இல்லாத இந்த நவரத்ன மிக்ஸரில் கொள்ளு, சோயா சேர்ந்திருப்பதால், குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பி சாப்பிட ஏற்றது.



தட்டை
தேவையானவை:

புழுங்கலரிசி – 1 கப்
பொட்டுக் கடலை - 1/2 கப்
காரப்பொடி – 3 முதல் 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயப் பொடி
விழுது நெய் அல்லது டால்டா – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – வேகவிடத் தேவையானது
ஊறிய கடலைப் பருப்பு – 3 டீஸ்பூன்.

செய்முறை:

புழுங்கலரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து, களைந்து கிரைண்டரில் நன்கு நைஸாக, கெட்டியாக அரைக்கவும். அத்துடன் பொட்டுக் கடலை மாவு (பொட்டுக் கடலையை சற்று சூடு வர வறுத்து அரைக்கவும்) கடலைப் பருப்பு, காரப்பொடி, உப்பு, பெருங்காயம், நெய் சேர்த்துப் பிசைந்து சிறு தட்டைகளாகத் தட்டி எண்ணெயில் வேகவிட்டு, சிவந்ததும் எடுக்கவும். இது நல்ல கரகரப்பாக, வாயில் போட்ட்தும் கரையும். இதே மாவைத் தேன்குழல் படியில் போட்டுத் தேன் குழலாகவும் பிழியலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக