ஞான பூமி டிசம்பர், 2003 இதழில் வெளியானது
பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பு
மும்பாசுரன் என்ற அரக்கனை தேவி வதம் செய்ய, அவன் வேண்டுதலின் பேரில் ‘மும்பை’
நகரம் தோன்றியது. ஊர்ப் பெயருக்குக் காரணமான மும்பாதேவி ஆலயம் மிகப் பிரசித்தி
பெற்றது. அன்னை மஹாலட்சுமியின் அருள் வீச்சிலே பணக்கார நகரமாக விளங்கும்
மும்பையில் சிவாலயங்களுக்கும் குறைவில்லை. பாபுல் நாத், வால்கேஷ்வர், பூலேஷ்வர்,
அம்பர்நாத் சிவாலயங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.
மும்பையிலிருந்து 60 கி.மீ.
தூரத்தில் அம்பர்நாத் என்ற இடத்தில் அமைந்துள்ள சிவாலயம் தனிப்பட்ட சிறப்பு
வாய்ந்தது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இவ்வாலயம் கலைச்
சிறப்புடன் காட்சியளிக்கிறது. கி.பி.1020 முதல் 1035 வரை ஆண்ட சிலாஹா வம்ச அரசனான
சித்தோராஜா காலத்தில் சாளுக்கியக் கலை நயத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஆலயம் 1061ம்
ஆண்டு அவரது தம்பி மும்பாளிராஜ் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. சிலாஹர்கள்
கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களாதலால், தெற்கு மற்றும் வடக்கிந்திய பாணியில் இந்த
ஆலயத்தின் கட்டமைப்பு அமைந்துள்ளது. சிமெண்ட், சுண்ணாம்பு போன்ற எந்த ஒட்டுப்
பொருளும் உபயோகப் படுத்தாமல், கற்களை ஒன்றினுள் ஒன்று பொருந்துமாறு செதுக்கி
உருவாக்கப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும். இந்த அமைப்பின் காரணமாகவே ஆயிரம்
ஆண்டுகள் கடந்தும் பொலிவுடன் காட்சி தருகிறது.
ஆலயச் சுவர்களில்
செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் நம் கண்களுக்குப் பெரு விருந்து. அழகான தோற்றம், அற்புதமான
உருவமைப்பு, நுணுக்கமான வேலைப்பாடுகள், கந்தர்வர், கின்னரர், தேவர்கள் ,
மண்டையோட்டு மாலை அணிந்த காளீதேவி, தூண்களில் அமைந்துள்ள நளினமான தேவமங்கையர்,
மோகம், குரோதம், லோபம் போன்ற குணங்களை சித்தரிக்கும் அழகிய சிற்பங்கள் அற்புதமான
கலை வண்ணத்தில் நம்மை தேவ லோகத்திற்கே அழைத்துச் செல்கின்றன. நம் இந்தியச் சிற்பக்
கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது இந்த ஆலயம்.
இங்கு கர்ப்பக் கிரஹம் எட்டடி
ஆழத்தில் அமைந்துள்ளது – வித்தியாசமானது. சிறிய மண்டபத்தினுள் நுழைந்து உள்ளே
சென்றால், ஒரு சதுரமான சபா மண்டபம்; அதனுள் 140 படிகள் கீழிறங்கி சென்றாலே
சிவலிங்கத்தைத் தரிசிக்க முடியும்.
மிகக் குறுகலான பாதை. உள்ளே சுயம்பு லிங்கம் கற்பாறையில்
உருவானது. ஆலயத்தை ஒட்டி ஓடும் வால்துனி நதியிலிருந்து எடுக்கப்பட்டது. எந்த
சன்னலும் இல்லாத அந்தப் பாதாள அறை குளு குளுவென ஓரளவு வெளிச்சத்துடன்
அமைந்திருப்பது அதிசயமாக உள்ளது. தரையிலிருந்து சற்றே உயர்ந்த சிறிய சிவலிங்கம்.
இங்கு ஒரு மூலையில் ஒரு சிறிய துளை உள்ளது. அதன் வழியே தினமும் இரவில் ஒரு நாகம்
வந்து இறைவனை வழிபட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது.
சமீப காலமாக ஆலயப் பகுதிகளில்
விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள வால்துனி நதி வறண்டு சாக்கடையாக
மாறியுள்ளது. சரியான பராமரிப்பின்றி ஆலயம் பழுதுபட ஆரம்பித்துள்ள நிலையில், ஆலயத்தின்
தொன்மையும், கலை நுணுக்கச் சிறப்பும் அறியப்பட்டு தற்சமயம் ஆலயம் தொல்துறை
ஆராய்ச்சியாளார் வசம் உள்ளது. இந்தியாவின்
வரலாற்று, கலாசாரப் பெருமை பெற்ற 218 இடங்களில் ஒன்றாக இந்த ஆலயம் யுனெஸ்கோவினால்
குறிக்கப்பட்டுள்ளது.
சுயம்பு லிங்கத்தில் தெய்வீக
ஈர்ப்பு சக்தி உள்ளதை உணர முடிகிறது.
சிவராத்திரி இங்கு மிக
விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற நாட்களில் ஆலயம் வெறிச்சோடி உள்ளது. ஆலயத்திற்கு
வெளியே சிறு பிள்ளையார் சந்நிதி பின் நாளில் உருவாக்கப்பட்டுள்ளது. வேறு எந்த
சந்நிதியும் இல்லை.
அமைதியும், அழகும், கலை
நுணுக்கமும் செறிந்த இவ்வாலயத்தை சுற்றுல துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்தால்,
மும்பையின் முக்கிய ஆலயங்களுள் ஒன்றாகத் திகழ வைக்கமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக