ஞான ஆலயம் மார்ச் 2005 இதழில் வெளியானது.
மேலை நாட்டு நாகரீகத்தில் திளைக்கும்
மும்பையில், அமைதியாக,
இயற்கை
அழைகுடன் ஈசன் அருள் வெள்ளம் பொங்க நிம்ம்தி தரும் ஆலயம் ஒன்று இருக்கிறது.
அதுதான் 'மலபார் ஹில்'லுக்குத் தெற்கில் அனைந்துள்ள பாபுல்நாத் ஆலயம்.
இச்சிவாலயம் கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் மிக விஸ்தாரமாக, அழகாக, சிற்பக் கலை நேர்த்தியுடன் கடலை நோக்கி
அமைந்துள்ளது. பழமையும், அள்வற்ற மகிமையும் பொருந்திய இவ்வாலயம்
கைலாயத்திற்கு இணையாகக் கூறப்படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டுரங்க் என்ற
ஒரு பொற்கொல்லர் இருந்தார். அவரிடமிருந்த மாடுகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்துச்
செல்வான் வேலைக்காரன் பாபுல். அவற்றுள் கபிலா என்ற ஒரு பசுமாடு மட்டும் தினமும்
ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் பொழிவதைக் கண்டான். இவ்விஷயத்தை எஜமானிடம் சொல்ல, அவரும் அவ்விடத்தைத் தோண்ட, அங்கு ஒரு மிகப் பெரிய சிவலிங்கம் இருக்கக்
கண்டார். அவ்விடத்திலேயே ஒரு ஆலயம் அமைத்து அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.
இவ்வாலயம் அமைய பாபுல் ஒரு காரணமாயிருந்ததால், இறைவனுக்கு 'பாபுல் நாத்' என்று பெயர் வழங்கலாயிற்று. பாண்டுரங்க் குஜராத்தைச் சேர்ந்தவர். அவரால்
உருவாக்கப்பட்ட இவ்வாலயம் குஜராத்தி இனத்தாரால் மிக அருமையாக பராமரிக்கப்படுகிறது.
உயரமாக அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு 110 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். ஒரு லிஃப்டும் இயங்குவதால்
முதியோர் மற்றும் ஏறமுடியாதவர்கள் லிஃப்டில் செல்ல வசதி உண்டு. ஆலய வெளித் தோற்றமே
நம் மனதை கொள்ளை கொள்கிறது. நெடிதுயர்ந்து நிற்கும் கோபுரம் சிற்ப
வேலைப்பாடுகளுடன் கலையழகு கொண்டு காட்சியளிக்கிறது.
கர்ப்பக் கிரகத்தில் நுழையுமுன்பு இடப்பக்கம்
சன்னிதி கொண்டுள்ள கஜமுகனை வணங்கி உள்ளே செல்வோம். கருவறையில் நடுநாயகமாக பெரிய
சிவலிங்கம் உள்ளது. நாக கவசம் சாற்றப்பட்டுள்ளது.
சுயம்புவாகத் தோன்றிய ஈசனைக் காணும்போது நம்
மனம் நிச்சலனமாகிறது. அங்கு ஒரு தெய்வீக அலை நிலவுவதை உணர முடிகிறது. சன்னதியிலேயே
தனித்தனி மண்டபங்களில் துர்க்கையும், சிவபெருமான் கணபதியையும், பார்வதியையும் அணைத்த நிலையில் அழகான சிலைகளும் காட்சி தருகின்றன. சிவனின்
மிகப்பெரிய மீசை வித்தியாசமான அமைப்பைக் காட்டுகிறது!
வடநாட்டு முறைப்படி இந்த சிவலிங்கத்திற்கு
எல்லோரும் அவரவரே அபிஷேகம், அர்ச்சனை,
நைவேத்யம்
செய்யலாம். இது போன்று பூஜை செய்யும்போது நம் மனம் இறைவனுடன் ஒன்றுவதை நன்கு உணரமுடியும்.
சன்னதியிலேயே 50, 60 பித்தளைக் குடங்கள் உள்ளன. பூஜை செய்ய
விரும்புவோர், வெளியிலுள்ள குழாயிலிருந்து நீர் பிடித்துக்
கொணர்ந்து முறையாக அபிஷேகம், அர்ச்சனை செய்து, மனத்திருப்தியுடன் செல்கின்றனர். அங்குள்ள ஊழியர்கள் உடனுக்குடன் இறைவனின்
மேலுள்ள பூக்களை அகற்றி, சுத்தம் செய்த வண்ணம் உள்ளது
குறிப்பிடத்தக்கது. ஆலயம் மிக சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.
பாபுல்நாத் ஈசுவரர் மிக வரப்ரசாதி.
மனத்தூய்மையுடன் தம்மை வழிபடுவோர்க்கு வேண்டிய வரம் தந்து அருள்பவர். ஒவ்வொரு
திங்களன்றும் இங்கு இறைவனை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். மாத
சிவராத்திரிகள், கார்த்திகை சோம வாரங்களில் சிறப்பு அபிஷேக
அர்ச்சனைகள் உண்டு. இங்கு ஐந்து அர்ச்சகர்கள் இணைந்து செய்யும் 'பஞ்சாட்சர' பூஜை மிக விசேஷமானது. சிவராத்திரி அன்று
இரவு-பகலாக இங்கு பக்தர்கள் பலமணி நேரம் வரிசையில் நின்று இறைவனை தரிசித்துச்
செல்வர். இங்குள்ள பக்தர்கள் சிவலிங்கத்தை அணைத்து, தலையை லிங்கத்தில் வைத்து வணங்குவார்கள்.
கர்ப்பக் கிரகத்தின் வெளிச்சுவர்களில் பல
கடவுள்களின் அற்புதமான சிற்பங்கள் மிக அழகாகக் காட்சியளிக்கின்றன. ஒவ்வொன்றும்
ஒவ்வொரு அழகு! இங்கு விராடரூப ஸ்ரீகிருஷ்ணரின் சன்னதி பல சிரங்களும், கரங்களும் கொண்டு பகவானின் விசுவரூப தரிசன்த்தைக் காட்டுகிறது. இது எந்த
ஆலயத்திலும் இல்லாத சிறப்பு. காயத்ரி, ல்க்ஷ்மி நாராயணர், ஹனுமன் சன்னதிகளிலுள்ள விக்ரகங்கள் எழிலான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன.
சீதலாதேவியும், நாகதேவதையும் இணைந்த சன்னதி மிக விசேஷமானதாகக் கூறப்படுகிறது.சீதலாதேவி கழுதை
வாகனத்தில் இடக்கையில் மணியும் வல்க்கையில் விசிறியும் கொண்டு காட்சி தருகிறாள்.
நம்மூர் மாரியம்மன் போல் அம்மை நோயை அழிக்கும் தெய்வமாகப் போற்றப் படுகிறாள்.
குழ்ந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள், நோய்கள்,
அம்மை, காலரா இவற்றிலிருந்து மக்களைக் காக்கும் தெய்வம் இவள். கையிலுள்ள மணி
துர்தேவதைகள், தோஷங்களை அண்டாது செய்யும். வலக்கையிலுள்ள
விசிறியால் பக்தர்களை இதமாக விசிறி, அவர்கள் துன்பங்களைப் பறந்தோடச் செய்யும்
இத்தேவிக்கு சிறப்பான வழிபாடு செய்யப்படுகிறது.
வாலுகேஷ்வர், பூலேஷ்வர் என்று பல சிவத்தலங்கள் மும்பையில் இருந்தாலும், தனிப்பெருமையும், சிறப்பும் கொண்டு மகாலட்சுமி, மும்பாதேவிக்கு இணையாக மும்பையில் ஈசனாக விளங்குகிறார் பாபுல்நாத் ஈசன்!
மும்பை வருவோர் தவறாமல் தரிசிக்க வேண்டிய தலம் இது! மும்பை விக்டோரியா டெர்மினஸ்
ஸ்டேஷனிலிருந்து இவ்வாலயத்திற்கு டாக்ஸியில் செல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக