Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

முழங்கால் வலிக்கு


சிநேகிதி நவம்பர் 2002 இதழில் வெளியானது



மிளகாயைவிட மிளகு உடலுக்கு நலம் தரும். பெண்கள் பிரசவத்திற்குப் பின் மிளகு ரசம், மிளகு குழம்பு, மிளகு மருந்து இவற்றை அதிகம் சாப்பிடுவதால், கர்ப்பப் பையின் புண்களை விரைவில் ஆற்றி, சுத்தப்படுத்தும். அஜீரணம், மற்றும் வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.

மிளகு, உப்பு இரண்டையும் சம அளவில் எடுத்து, நன்கு பொடி செய்து பல் ஈறுகளில் தடவி வந்தால், வாய் துர் நாற்றம் நீங்கும். சம அளவு மிளகு, ஜாதிக்காய், சந்தனத்தை அரைத்து, அக்கலவையை முகப்பருக்களில் தடவினால் விரைவில் குணம் தெரியும்.

அஜீரணத்திற்கு 1 டீஸ்பூன் மிளகுப் பொடியை 2 டேபிள் ஸ்பூன் வெல்லத்துடன் நன்கு பிசைந்து சுண்டைக்காய் அளவு சாப்பிடவும். புளித்த ஏப்பம், வயிற்று உப்புசம் இவை உடனே நீங்கும்.

எண்ணெய் பலகாரங்கள் அதிகமாய் சாப்பிட்டால் பசியில்லாமல் வயிறு உப்பியது போலிருக்கும். அதற்கு ¼ டீஸ்பூன் மிளகு, ¼ டீஸ்பூன் ஜீரகத்தை நன்கு பொடி செய்து 2 சிட்டிகை பெருங்காயப் பொடி சேர்த்து 1 டம்ளர் மோரில் கலந்து சாப்பிடவும்.

7 மிளகு, 7 பாதாம் இவற்றை சேர்த்து நன்கு நைஸாக அரைத்து பாலில் சேர்த்து வடிகட்டி தினமும் குடித்து வந்தால், கண்களில் ஒளி கூடி பளீச்சிடும். தொண்டைக்கட்டு, எரிச்சல், வலி இவற்றிற்கு பாலை சுண்டக் காய்ச்சி 1 டீஸ்பூன் மிளகுத்தூள், ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி, பன்ங்கல்கண்டு சேர்த்து சூடாக சாப்பிட்டால் உடனடி நிவாரணம் நிச்சயம்!


முழங்கால் வலி, வீக்கம் இவற்றிற்கு 3 டீஸ்பூன் மிளகு, 6 டீஸ்பூன் ஹாஹி ஜீரா (ஜீரசுத்தி ஒரு வகை, மசாலா சாமாங்களில் சேர்க்கப்படுவது), 6 டீஸ்பூன் சுக்குப் பொடி சேர்த்து  நன்கு நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும். தினமும் ½ டீஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக